அவசரச்சட்டம் எனும் அருமருந்து

வங்கி நடவடிக்கை முறைப்படுத்துதல் சட்டத்தில்(Banking regulation act 1949) திருத்தம் செய்வதற்காக,
அவசரச்சட்டம் எனும் அருமருந்து

வங்கி நடவடிக்கை முறைப்படுத்துதல் சட்டத்தில்(Banking regulation act 1949) திருத்தம் செய்வதற்காக, மத்திய அரசால் சமீபத்தில் இயற்றப்பட்ட அவசரச் சட்டம், நலிந்திருக்கும் வங்கிகள் என்ற ஆலமரங்களின் துளிர்களை உயிர்ப்பிக்கும் மழைத் துளிகள் என்று பொருளாதார வட்டாரங்களில் நம்பப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக, இந்த ஆலமரங்களின் ஆணிவேர்கள் சுருங்கி, ஓங்கி வளர்ந்த மரங்களை சாய்த்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம், வசூலிக்கப்படாத வாராக்கடன்களாகும்.
இந்த அவசரச் சட்டத்தின் பிரிவுகள், வங்கிகளின் வாராக்கடன்களை ஆராய்ந்து, சீரமைக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது. கடனாளிகளின் சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கைகளை வங்கிகளுக்கு வலியுறுத்துவதற்கும் இந்த சட்டம், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரத்தை அளிக்கிறது.
கடன்களை வசூலிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிபுணர் குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவது போன்ற கூடுதல் அதிகாரங்களும் இதில் அடங்கும்.
வாராக்கடன்களின் ஒரு பகுதிக்கு பிணையமாக வங்கிகளிடம் தேங்கியிருக்கும் சொத்துகளின் பெரும்பகுதி, விற்று பணமாக்கப்படாமலேயே (Monetization of securities) நீண்ட காலமாக தேங்கி கிடப்பது, அக்கடன்களின் வசூலுக்கு தடையாக உள்ளது. இதற்கான காரணங்களில், சொத்து மதிப்பீடு பற்றிய நுண் திறமையின்மையும், சொத்து விற்பனைக்கு பிறகு, கடனாளி மற்றும் சி.பி.ஐ. போன்ற அரசாங்க புலனாய்வு மற்றும் தணிக்கை அமைப்புகள் எழுப்பும் சந்தேகங்களும் அடங்கும்.
வங்கி அதிகாரிகளின் பய உணர்வை(Fear psychosis)   போக்கி, வாராக்கடன் வசூலில் அவர்களின் செயல் திறனை வலுப்படுத்த, வங்கிக் கடன் பெறும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை இந்த குழுக்கள் சேகரிக்கும். வாராக்கடன் சார்ந்த சொத்துகள் விற்பனையில் வங்கி அதிகாரிகள் எடுக்கும் நாணயமான முடிவுகளுக்கு ஒரு கேடயமாக இக்குழு செயல்படும்.
ஊழல் தடுப்புச் சட்டத்திலும், வங்கிகளின் நேர்மையான செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதற்குத் தேவையான சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
'வங்கி வாராக்கடன் வசூல் நடவடிக்கைகளில் போதிய முன்னேற்றம் இல்லை. வங்கிகளின் நிர்வாக சுதந்திரம் என்ற பெயரில், செயலற்ற நிலைமையை தொடர்ந்து அனுமதிப்பது, பொருளாதர வளர்ச்சியை முடக்குவதாகும். தடைகளை உடைத்து, கடன் வசூலுக்கான சாதகமான சூழலை உருவாக்குவதுதான் இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம்' என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருப்பது, நிலைமையின் வீரியத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
வங்கி தணிக்கைகள் மூலம் வாராக்கடன்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான ஒதுக்கீடுகளை செய்வதற்கான பரிந்துரைகளை மட்டும் செய்துகொண்டிருந்த ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், அவசரச் சட்டத்தின் மூலம், அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கிறது.
இனி வருங்காலங்களில், வாராக்கடன்களை வசூல் செய்து, அவற்றை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில், வங்கிகளுக்கு வழிகாட்டும் கடமையும் பொறுப்பும் ரிசர்வ் வங்கியையே சாரும்.
அவசரச் சட்டம் என்பது வங்கிகளின் வாராக்கடன் எனும், நோயின் தாக்குதலை குறைக்க எடுக்கப்பட்டிருக்கும் ஒருவகை மருந்துதான். அந்த மருந்தை நோயாளி, எந்த வகையில் பயன்படுத்துகிறார் என்பதில்தான் அதன் முழுப்பலனும் கிடைக்கும் வாய்ப்பு அடங்கியிருக்கிறது.
2001 முதல், வங்கி வாராக்கடன் வசூல் சம்பந்தமாக. ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறது.
2001-இல், பெரிய நிறுவனங்களின், 10 கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன்களை சீரமைத்து, அந்தக் கடன்களை வசூல் செய்யும் வழிமுறைகளை அமல்படுத்த, 'பெரும் கடன்களின் சீரமைப்பு திட்டம்' (Corporarte debt restructure)  என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வாராக்கடன்களை தள்ளிப் போடவும், அவற்றை நஷ்ட கணக்கிலிருந்து மறைக்கவுமே இந்தத் திட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.
இதனால், அந்த குடைக்கு கீழ் கொண்டு வரப்பட்ட பெரும் தொகைகள் வசூல் வலைக்குள் அகப்படாமல், திட்டத்தின் தோல்விக்கு வழி வகுத்தன. இந்த தோல்வியில், வங்கி நிர்வாகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
2014-இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'கடன் சீரமைப்பு திட்ட'த்தின்படி (Strategic debt restructuring)  நிலுவையில் இருக்கும் வாராக்கடனில் ஒரு பகுதியை பங்குகளாகவும், கடன் பத்திரங்களாகவும் மாற்றி அமைத்து, வங்கிகளுக்கு, கடனாளி நிறுவனத்தின் நிர்வாகத்தில் 51 சதவீத பங்கு அளிக்கும்படி வழி வகை செய்யப்பட்டது.
18 மாத கால அவகாசத்தில், வங்கிகள் புது நிர்வாகத்தை இனம் கண்டு, அதனிடம் பொறுப்பை ஒப்படைத்து கடனை வசூலிக்கும் உக்தியில் படுதோல்வி கண்டன என்று சொல்லலாம். வலுவிழந்த சொத்துகளை பிணையமாக பெற்ற வாராக்கடன்கள், வசூலாகாது என அறிந்தும், அவற்றைத் திட்டத்திற்குள் நுழைத்து, வங்கிகள் குளிர் காய்ந்ததும், நிறுவனத்தை யாருக்கும் விற்கவிடாமல் தடுக்கும் உத்திகளை கடனாளிகள் கையாண்டதும் இந்த திட்ட தோல்விக்கான முக்கிய காரணங்கள்.
2016-இல், 'மேம்படுத்தப்பட்ட சீரமைப்பு திட்டம்'(Sustainable structuring of stressed assets-S4)  வசூலுக்கு சாத்தியமான கடனை பிரித்து, மற்ற பகுதியை பங்கு மற்றும் கடன்பத்திரங்களாக மாற்றும் வழி முறைக்கு வித்திட்டது. வங்கிகள் சமர்ப்பிக்கும் திட்ட வரைவுகளை, வங்கிகளின் கூட்டமைப்பின்(Indian Banks Association)  கீழ் இயங்கும் குழு பரிசீலனை செய்து, திட்ட செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கும்.
கடந்த காலங்களில் நேர்ந்த தவறுகள் மீண்டும் தலை தூக்காமல், திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்தான் இதன் வெற்றி அமைந்திருக்கிறது. இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ஆறு மாதங்களாகியும், வெகு சில கடன் திட்டங்களே இதுவரை அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
180 நாட்களுக்குள், திட்ட வரைவுகளை குழுவின் அனுமதியுடன் வங்கிகள் நடைமுறைபடுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் காலக்கெடு போதாது என்பது வங்கிகளின் கருத்தாகும். 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் நிலுவையிலுள்ள நிறுவனங்கள் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்குள் நுழைய முடியும்.
மேலும், திட்ட நடைமுறைக்கு ஒத்து வராத வாராக்கடன்களை திட்டத்திற்குள் நுழைத்து, அனுமதிக்கு சமர்ப்பிக்கும் வங்கிகளின் செயல்பாடுகள் குறைந்தால், தகுதியுள்ள திட்டங்களை ஆராய்ந்து, அனுமதி வழங்குவதற்கு, நிபுணர் குழுவுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்பது வங்கி துறை நிபுணர்களின் கருத்தாகும்.
வாராக்கடன் பற்றிய தகவல்களை வங்கிகள் கடந்த காலங்கள் போல் மறைக்கும் போக்கை தடுக்க, ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கும், வங்கிகளின் கணிப்பிற்கும் இடையே நிலவும் வேறுபாடுகளை (Details of divergence in Notes to accounts) நிதிநிலை அறிக்கையில் வங்கிகள் வெளிப்படையாக பதிவிடும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய செயல்பாடாகும்.
அவசரச் சட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை தவிர, சட்டத்தை நடைமுறை படுத்துவதில் நிலவும் பல சிக்கல்களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
வங்கிகளில் நிலவும் சிவப்பு நாடா முறை, ரிசர்வ் வங்கியிலும் பெரிய அளவில் நிலவுகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு வழிகாட்டுதலுக்கான பதிலை பெற வங்கிகள் தற்போது பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருப்பது இதற்கு ஒரு உதாரணமாக காட்டப்படுகிறது. ரிசர்வ் வங்கியில், பல நிலைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததுதான் இம்மாதிரி நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம்.
பொருளாதார விவகாரங்களில் மட்டும் இதுவரை நிபுணத்துவம் பெற்ற ரிசர்வ் வங்கியால், திடீரென்று, வங்கிகள் சம்பந்தப்பட்ட வியாபார நுணுக்கங்கள் நிறைந்த முடிவுகளை(Commerical decisions) திறன்பட எடுக்க முடியுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை நீக்க, நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும். இந்த குழுவில், அரசியல் சார்ந்த நியமனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
வாராக்கடன் சார்ந்த பிணைய சொத்து விற்பனைகளை வேகப்படுத்துவதை தவிர, வரும் காலங்களில் வாராக்கடன்கள் வளர்வதை தடுக்கும் நடவடிக்கைகளையும் வங்கிகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கடன் மனுக்கள் பரிசீலனை முறைகளை மேம்படுத்தி, பணியாளர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்குவதன் மூலம் வாராக்கடன்களை முளையிலேயே கிள்ளி எறியலாம். நீண்ட காலமாக, நஷ்டத்தில் இயங்கும் கிளைகளை மூடுவது, அநாவசிய செலவுகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளும், வங்கிகளின் நஷ்ட கணக்கை குறைக்க உதவும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையுடன் கூடிய வழிகாட்டுதல் ஓர் அருமருந்தாகும். அந்த மருந்தை சரியான முறையில் பயன்படுத்தி, தங்களை பீடித்திருக்கும் வாராக்கடன் எனும் பெரு நோயிலிருந்து வங்கிகள் மீண்டு வரவேண்டும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com