உயர்கல்விக்குத் தேவை உயர் தலைமை!

அண்மையில் அகில இந்திய அளவில் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது.
உயர்கல்விக்குத் தேவை உயர் தலைமை!

அண்மையில் அகில இந்திய அளவில் துணைவேந்தர்கள் மாநாடு ஒன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு மத்திய - மாநில அரசின் நிதி பெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அந்தக் கருத்தரங்கம் 'நிதி, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தன்னாட்சி' என்றத் தலைப்பில் நடைபெற்றது.
ஏறத்தாழ 170-க்கும் குறையாமல் துணைவேந்தர்கள் வந்திருந்தனர். ஒரு சிலர் மலேசியாவிலிருந்தும், நேபாளத்திலிருந்தும் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த மாநாட்டில் விவாதத்திற்கு வைக்கப்பட்ட கருத்துகள் பல. அவற்றில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டவை - ஒன்று, நிதிப்பற்றாக்குறை; இரண்டு, ஆசிரியர்கள் நியமனம்; மூன்று பல்கலைக்கழகச் செயல்பாட்டில் சுயாட்சி. இவை பற்றித்தான் அதிகமான விவாதங்கள் இருந்தன.
அந்த மாநாட்டில் பேசிய ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் நிதிப்பற்றாக்குறை பற்றியும், ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், சுயாட்சி செய்ய இயலாத சூழல் பற்றியும்தான் விவாதித்தனர்.
இந்தத் துணைவேந்தர்களின் கூக்குரல்களை கேட்டுக்கொண்டிருந்த நீதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விஜயகுமார் சுரஸ்வத், தன் உரையில் மிகத் தெளிவாக நிதானமாக நம் உயர்கல்வியின் தாழ்நிலையை அப்பட்டமாக படம்பிடித்துக் காட்டி, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு நம் பல்கலைக்கழகங்கள் சரிவர வழி நடத்தப்படவில்லை என்பதை எடுத்துக்கூறினார்.
தரமற்ற ஆராய்ச்சி, சமூகத் தேவைக்கு தொடர்பில்லா ஆராய்ச்சி, தகுதியில்லா மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமான உயர்கல்விச் சாலைகள், ஊழல் மிகுந்த நிர்வாகம், சமூகத் தணிக்கையற்ற கல்விச் செயல்பாடுகள் என அடுக்கடுக்கான பிரச்னைகளை முன் வைத்து இந்திய உயர்கல்வி நிறுவனங்களை சீர் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனை விளக்கினார். அந்த உரைதான் வழிகாட்டுவதாக இருந்தது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களைப் பெருமளவு ஈர்த்திருக்க வேண்டும். அதைச் செய்ய முடியவில்லை.
அடுத்து குறைந்தபட்சம் நம் நாட்டு மாணவர்களை வெளிநாட்டுக்கு செல்லுவதைத் தடுத்து நிறுத்தி அவர்களை ஈர்த்து இங்கு பயிலும் சூழலையாவது ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிற்கும் நம் நாட்டு மாணவர்களை உயர்படிப்புக்குச் செல்லும் சூழலை உருவாக்கியது நம் உயர்கல்வி நிறுவனங்கள்தான் என்பதை எடுத்துக்கூறி, அதன் காரணம் என்ன என்பதை கண்டறிந்து, அதைக் களைந்து பெருமளவில் நம் நாட்டு முதல்தர மாணவர்களை நம் உயர்கல்வி நிறுவனங்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு மிக முக்கியக் காரணமாக அவர் கூறியது, இந்திய உயர்கல்வி நிறுவன்ங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான எந்த ஆராய்ச்சியும் நடைபெறுவது இல்லை என்பதுதான்.
நம் உயர்கல்வி நிறுவனங்களில் பல வசதிகள் இருந்தும் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்புவதற்குக் காரணம், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அங்குதான் உள்ளது என கூறுகின்றனர்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மேற் பட்டப்படிப்பிற்கு அந்த நிறுவனங்களுக்கு வரத் தயாராக இல்லை. அதிக பணம் செலுத்தி வெளிநாட்டில் படிக்க முயல்கின்றனர். இதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.
நம் உயர்கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில், குறிப்பாக, மாணவர்
கள் வகுப்பறையில் செய்ய வேண்டிய பணிகளை வீட்டில் செய்யச் சொல்லிவிடுகின்றனர். மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டியப் பணிகளை வகுப்பறையில் ஆசிரியர்களின் துணையோடு செய்கின்றனர். இந்த முறைதான் நம் கல்வித் திட்டத்தை பாழ்படுத்தியுள்ளது.
மாணவர்களின் சிந்தனை வளர்ப்புத் திறன் வகுப்பறையில் நடைபெற வேண்டும். அந்த நிகழ்வு நம் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறுவது இல்லை. இதற்கு ஆசிரியர் வகுப்பெடுக்க வேண்டியது கிடையாது. மாணவர்களுக்கு கற்றுக்கொள்ளும் முறைமையை பயிற்றுவிப்பதுதான் ஆசிரியரின் முக்கியமான கடமையாகும்.
இந்தச் செயல்பாட்டை மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வகுப்பறையில் நடத்திட வேண்டும். செய்திகளையோ, புள்ளிவிவரங்களையோ, கருத்துகளையோ மாணவர்களுக்குப் பரிமாறுவது அல்ல. வகுப்பில் பயிற்சிகள் நடத்திட வேண்டும்.
மூளையைக் கசக்கிப் பிழியும் பயிற்சிகள் தந்து, மாணவர்கள் கற்றுக்கொள்வதை அவர்களுக்கு காண்பிப்பதில்தான் ஆசிரியரின் திறன் உள்ளது. ஆசிரியர் தம் அறிவை மாணவர்களுக்கு காட்டுவது அல்ல ஆசிரியப் பணி. மாணவர்களுக்கு அறிவை வளர்த்துக்கொள்ளும் முறைமையை கற்றுக்கொடுத்து, அவர்களின் ஆற்றலைப் பெருக்குவதற்கு உதவி செய்வதுதான் ஆசிரியப் பணி.
நம் நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் நடத்தப்படும் ஆய்வுகளால் சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் கிடைக்காது. அவ்வளவும் வெற்றுக் காகிதங்களாகவே இருக்கின்றன.
ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடத்தில் சுமார் 500 ஆய்வுப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதை அந்தப் பல்கலைக்கழகத்தின் சாதனையாக, அந்தப் பல்கலைக்கழக துணைவேந்தர் தன் பட்டமளிப்பு விழா அறிக்கையில் குறிப்பிட்டுப் பேசி பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர் அது குறித்து ஒரு கேள்வியைக் கேட்டார். இந்தப் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு வழங்கப்பட்ட 500 ஆய்வுப்பட்டம் பெற்றவர்களில் யாராவது ஒருவர் தான் செய்த ஆராய்ச்சியில் எதாவது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது என்று கூற முடியுமா?
அந்தக் கூட்டத்தில் இந்தக் கேள்விக்கு ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. அந்தச் சூழலைப் பார்த்த சிறப்பு விருந்தினர், நம் ஆராய்ச்சி என்பது வெறும் காகிதப்புலிதான். அதற்குமேல் ஒன்றும் கிடையாது என்று கூறினார்.
இது நம் நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களின் ஆராய்ச்சி எப்படி உள்ளது என்பதைப் படம்பிடித்து காட்டியுள்ளது. இதை நாம் நம் மனதில் நிறுத்தி, இந்தச் சூழலை
எப்படி மாற்ற வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதே உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை எந்தத் துணைவேந்தருக்கும் வரவில்லை என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று. இன்றைக்கு நம் பல்கலைக்கழகங்களில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளையும் மனித வளத்தையும் வைத்துகொண்டே மிகப்பெரிய சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.
நிதிக்கு அரசையே எதிர்பார்ப்பது என்பது, நம் பல்கலைக்கழகங்கள் மற்ற திசையில் இருக்கும் நிதியைப் பற்றி எந்தப் பார்வையும் இல்லாமல் இருப்பதையே உணர்த்துகின்றது. சந்தைக்குத் தேவையான ஆராய்ச்சியை நடத்த நம் பல்கலைக்கழகங்கள் தயாராக இருந்தால் நிதிப்பற்றாக்குறை கிடையாது. அதைப் பற்றிய சிந்தனை நம் பல்கலைக்கழகங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அடுத்து நம் உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர்களில் 78 விழுக்காட்டினர் வேலைக்குத் தகுதியில்லாதவர்கள் என்று அறிக்கைகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன. இதனை மாற்ற நாம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் யாரையாவது காரணம் காட்டி நாம் தப்பித்துக்கொள்ள முனைவது நல்ல தலைமைத்துவத்திற்கு அழகு அல்ல.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் உலகத்தரத்திற்கு உயர்கல்வியை இட்டுச் செல்ல தகுதிவாய்ந்த தலைவர்கள் நம் பல்கலைக்கழகங்களில் இல்லை.
அறிவுத்தளத்தில் உயர்நிலையில் உள்ளவரையும், ஒழுக்கம் மற்றும் நாணயமான நடத்தையைக் கொண்டவர்களையும் பொதுவாழ்வில் கடுமையான ஒழுக்கங்களுடன் நடந்து கொள்பவர்களையும் நாம் நம் உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தலைவராக நியமிப்பது இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்றுள்ள சூழலில் பணம் இல்லை என்பதோ, தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதோ பிரச்னை அல்ல, நல்ல தலைமை இல்லை என்பதுதான் இன்றைய பிரச்னை.
தரமான ஆசிரியர்களை ஊழலின்றி நியமிப்பதும், தேவையான நிதியைப் பெருக்குவதும், உலகத்தரமான கல்வியை தருவதும் நல்ல தலைமைதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தங்களுடைய பிரச்னைகளை மனுதாரர்கள்போல் அடுக்கி புலம்பித் தவித்தனர். அத்தனைக்கும் பதிலளிக்கும் வகையில் தேவை நல்ல தலைமை என்பதை நாசூக்காக வியஜ்குமார் சுரஸ்வத் கூறிச் சென்றது அந்த மாநாட்டில் முத்தாய்ப்புப் பேச்சாக இருந்தது.
உயர்கல்வி உயர உயர்தலைமை தேவை. அதுதான் உயர்கல்வியை உயர்த்தும். நம் அரசுத் தலைமை இதை உணருமா?

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com