பல்லுயிர்ச்சூழல் காப்போம்

உலகில், மனித உயிர்கள் மட்டுமன்றி, நுண்ணியிர்களில் தொடங்கி பூச்சிகள், பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள்

உலகில், மனித உயிர்கள் மட்டுமன்றி, நுண்ணியிர்களில் தொடங்கி பூச்சிகள், பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், தாவர இனங்கள் உள்ளிட்ட பல இனங்கள் வாழ்கின்றன. மலை, கடல், வனம், நீர் நிலைகள், நிலப் பகுதிகள், பனிப் பிரதேசங்கள் உள்ளிட்டவை உயிரினங்கள் வாழும் உயிர்ச் சூழல்கள் ஆகும்.
ஒவ்வொரு உயிர்ச் சூழலிலும் பலவிதமான உயிர்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட உயிரினங்களிலும் பல விதமான உள்பிரிவுகள் உள்ளன. உதாரணமாக பறவையினங்களில் மைனா, மரங்கொத்தி, தூக்கணாங்குருவி, கழுகு, ஆந்தை உள்ளிட்டவை உள்ளன. இப்படி பலவகைப்பட்ட உயிர்ச் சூழலில் பல்வகையான உயிரினங்கள் உள்ளன. இதையே பல்லுயிர்ச் சூழல் என்கிறோம்.
உலகில் சுமார் 100 மில்லியன் உயிர்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொன்றும் தனித்தனியானது எனத் தோன்றினாலும், ஒவ்வோர் உயிரும் பிற உயிர்களைச் சார்ந்தே அமைந்துள்ளது.
நீர், நிலம், காற்று ஆகியவற்றில் வாழும் நுண்ணுயிர்கள் இல்லாவிட்டால், உலகில் பிற உயிர்கள் இருப்பது அரிதாகி விடும். காரணம் நுண்ணியிர்கள் தான் உயிரற்ற பொருள்களிலிருந்து புல் - பூண்டுகளை உருவாக்குகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்கையில், மனித உயிர்கள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது போலவும், மற்ற அனைத்து உயிர்களும் மனித இனத்தின் வசதிக்கேற்ப அழிக்கவும், விரட்டவும் உள்ளதுபோன்றும் மனிதனின் செயல்பாடுகள் உள்ளன.
நகரங்களில் சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகள், நவீனமயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டன. மரங்கள் அழிக்கப்பட்டதால், பறவைகள் தங்களது வாழ்விடங்களை இழந்து இடம்பெயரவும், இனப்பெருக்கம் குறையவும் நேரிட்டது.
பறவைகள் பூச்சியினங்களை உணவாகக் கொள்பவை. சில பூச்சியினங்கள் விவசாயப் பயிர்கள் மற்றும் உணவுப் பொருள்களை சேதப்படுத்துகின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை பறவைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மரங்கள் அழிப்பால் பலவகை பறவை இனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு குறைந்து விட்டது.
வனப் பகுதிகளும், மரங்களும் அழிக்கப்பட்டதால் மழையளவு குறைந்ததுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து விட்டது.
புவிவெப்பமயமாதலால் நிலத்தில் வாழும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களில் 25 விழுக்காடு 2050-ஆம் ஆண்டு அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. புவிவெப்ப உயர்வு காரணமாக கோஸ்டாரிக்கா பகுதியில் தங்கத் தேரை, புள்ளித் தவளை போன்றவை காணாமல் போய்விட்டன.
உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகுவதால், ஏற்கெனவே அழிவின் விளிம்பில் உள்ள பனிக் கரடிகள் உள்ளிட்ட பனிப் பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கு, மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பனிக் கரடிகள் நிலைமைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை என்றபோதிலும், அவற்றின் முக்கிய உணவான சீல் எனும் உயிரினத்தின் இறைச்சி மற்றும் கொழுப்பு கிடைப்பது அரிகாகியுள்ளது.
சீல்களை உண்ண, பனிக்கு அருகிலேயே பனிக் கரடிகள் இருக்க வேண்டும். பனிக் கரடிகள் உண்ணும் சீல்களின் எண்ணிக்கை குறைவதற்கு பனிப்பாறைகள் உருவதும் ஒரு காரணம் என்றபோதிலும், சீல்கள் உண்டு வாழ போதியளவு மீன்கள் இல்லாததாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மீன்கள் குறைந்ததற்கு காரணம், மீன்கள் உண்பதற்கான சிறுவகை மீன்கள் குறைந்து போனதாகும். சிறிய வகை மீன்கள் குறைவதற்குக் காரணம், பாசிகளின் அளவு குறைந்ததே ஆகும். இப்படி சுழற்சியான இழப்பால் அரியவகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன.
கடல் வழிப் போக்குவரத்து அதிகரித்துவிட்ட நிலையில், கப்பல், படகு உள்ளிட்டவற்றில் சிக்கி பல்லாயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. கடலில் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்படும் ரசாயனம், பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்டவை கடலில் கொட்டும்போது கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிகின்றன.
அண்மையில் சென்னை துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டதில், கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் காரணமாக ஏராளமான கடல் ஆமைகள், மீன்கள் மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்தன. கடந்த 2010-ஆம் ஆண்டு மெக்ஸிகா வளைகுடா பகுதியில் ஆழ்கடலில் நடைபெற்ற எண்ணெய் துரப்பணப் பணியின்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருமளவு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. அதனை சீரமைக்க பல நாள்கள் ஆயின. இதனால் கடல் தாவரங்களும் பாதிக்கப்பட்டன.
விவசாய நிலங்களில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்போது, பிற உயிர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் நல்ல விளைச்சல் இருந்தது. மாடுகளைக் கொண்டு உழப்பட்டதால் மண்ணின் தன்மையும் சிறந்த முறையில் இருந்தது.
விவசாயிகளின் நண்பன் என அழைக்கப்படும் மண் புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகளாலும் வேளாண் விளைச்சல் அதிகரித்தது. ஆனால் நவீன மயம் எனக் கூறி டிராக்டர்களைக் கொண்டு உழுவதால் மண் புழுக்களும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளும் அழிந்து மண்ணின் தன்மை மாறத் தொடங்கியது.
பூச்சிக் கொல்லி மருந்துகளால் தேனீக்கள் அழியத் தொடங்கின. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதால்தான் பல தாவர இனங்கள் உருவாகின்றன. தேனீக்கள் அழிந்தால் தாவரங்களும் அழியும் நிலை உள்ளது.
உலகில் உள்ள பல்லுயிர்களும் இயற்கையைப் பாதுகாத்த வண்ணமே உள்ளன. எனவே பல்லுயிர்ச் சூழலை பாதிக்காத வகையில் மனிதனின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

மே 22: உலகப் பல்லுயிர்ச்சூழல் நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com