வேலைவாய்ப்பு எனும் வேள்வி!

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் புதிய திட்ட அறிக்கை எதுவானாலும், அது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு எந்த வகையில், எந்த அளவுக்கு உதவக்கூடும் என்பதை விளக்கிட வேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதனை மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். இது ஒரு நல்ல செய்தி.
இந்தியாவின் இன்றைய தேவை வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியே என்பதை பொருளாதார நிபுணர்கள் மட்டும் அல்லாமல் சமூக அக்கறை கொண்ட அனைவருமே வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களும், பாலிடெக்னிக் போன்ற கல்விக் கூடங்களில் தொழில் பயிற்சி பெற்று வெளிவரும் மாணவர்களும் வேலைக்காக காத்திருக்கும் காலம் அதிகரித்துக் கொண்டே போகுமேயானால், அது வீட்டுக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல. மேலும் சமூக, பொருளாதார பிரச்னைகளுக்கும் அது வித்திடுவதாக அமையும்.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. அத்துடன் ஒப்பிடுகையில், இந்திய பொருளாதார நிலை எவ்வளவோ மேல். இந்தியாவில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) ஏறுமுகத்தில் இருக்கிறது. எந்த நிலையிலும் 7 சதவீதத்துக்கு குறையாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இலக்கான 5 சதவீதத்திற்குள் இருக்கும்.
நிகழாண்டில் பருவமழை நன்றாக இருக்கும் என்று அறிவிப்புகள் வருகின்றன. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2017-18 நிதியாண்டு வளர்ச்சி நிச்சயமாக மனநிறைவு தரக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.
அதேநேரம், இந்த முன்னேற்றம், புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்குமா என்று கேட்டால், அதற்கான பதில் திருப்தி அளிப்பதாக இல்லை. உலக அளவில், ஒரு குறிப்பிட்ட அளவு (உதாரணமாக ஒரு யூனிட்) வளர்ச்சிக்கு சராசரியாக 3 புதிய வேலைகள் உருவாகும் என்றால், இந்தியாவில் 2 புதிய வேலைகள் மட்டுமே உருவாகின்றன என்று சர்வதேச பொருளாதார அமைப்புகள் கணித்துள்ளன.
இந்நிலையில் பிரதமரின் புதிய உத்தரவு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான அணுகுமுறையாகும். ஜி.டி.பி. வளர்ச்சி முக்கியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதைவிட முக்கியம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பது.
பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்தான் பெரும்பாலும் புதிய வேலைகளை உருவாக்க முடியும். ஜி.டி.பி.யில் இது போன்ற தொழிற்சாலைகளின் பங்கு 16 சதவீதம் மட்டுமே. சீனாவில் அதன் பங்கு 35 சதவீதம். இந்தியாவில் 16 சதவீதம். இதனைக் குறைந்தது 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே இந்திய அரசின் தற்போதைய இலக்கு. அதனால்தான், பிரதமரின் "மேக் இன் இந்தியா' "ஸ்டார்ட் அப்' போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வளர்ச்சி ஜி.டி.பி.யில் மட்டும் அல்லாமல், புதிய வேலைகளின் எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய உத்திகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
உதாரணமாக, அதிக அளவில் பணியாட்கள் தேவைப்படும் (Labour intensive) தொழில்களில் கூடுதல் முதலீடு செய்திட வேண்டும். மாறாக, அதிக மூலதனம் தேவைப்படும் (Capital Intensive) தொழில்துறையில் முதலீடு செய்தால் ஜி.டி.பி. மட்டும் உயரும்; கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு உத்தரவாதம் கிடையாது.
சமீப காலங்களில் டிஜிட்டல், கணினி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை வேகமாக வளர்ந்து வருவது கண்கூடு. இது வரவேற்கத்தக்க விஷயம்தான். இதனைப் பயன்படுத்தினால் மட்டுமே, உலக அளவில் வர்த்தகப் போட்டியை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பது உண்மையே.
ஆனால், அதேநேரம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், மனித வளத்தின் தேவை குறைகிறது. மனிதர்களின் தேவையைவிட இயந்திரங்களின் தேவையே அதிகரிக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி மந்தமடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
வங்கித்துறை, சில்லறை வணிகம், சுற்றுலா, மருத்துவத் துறை, உற்பத்தித் துறை, பொறியியல் துறை ஆகியவை புதிய வேலைகள் உருவாக்கத்தில் முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், சமீபகாலமாக இவற்றின் செயல்பாடுகளில் ஒரு மாற்றம் தெரிகிறது.
முன்பு இவற்றுக்கு அன்றாடம் தேவைப்படும் பராமரிப்பு சேவைகளை (Maintanance Service) பெறுவதற்கு உரிய வசதிகளை அந்தந்த தொழிற்சாலைகள் பெற்றிருந்தன. ஆனால் தற்போது அப்படி அல்லாமல், அந்தப் பராமரிப்பு சேவைகளைப் பெறுவதற்கு வெளிப்புற நிறுவனங்களை (Out sourcing) நாடுகின்றன.
இந்த புதிய நடைமுறையினால், தொழில் துறையில் வேலைகள் எந்த அளவு அதிகரிக்கின்றன என்பதை துல்லியமாக கணக்கிட முடிவதில்லை. இரண்டு தரப்பிலும் சேர்ந்து, உரிய எண்ணிக்கையில் புதிய வேலைகள் உருவானால் சரி. இது கண்காணிக்கப்பட வேண்டிய விஷயம்.
இயந்திர மயம் என்றாலே, மனிதர்களின் வேலை குறையும் என்பது வெளிப்படை. உலக அளவில் நிகழ்கிறது இது. இதில் எதிர்நீச்சலுக்கு இடம் இல்லை. அதே நேரம், புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கு மனிதர்கள்தான் தேவை என்பதையும் மறுக்க இயலாது.
மோட்டார் தொழிற்கூடத்தில் ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டால் அதன்மூலம் வெளியில் ஒரு டஜன் நபர்களுக்கு மறைமுக வேலை கிடைக்கிறது என்கிறார்கள். உதாரணமாக, Uber போன்ற அமைப்புகள் மிகச் சிலரையே பணியில் அமர்த்துகின்றன. அதேநேரம், இந்த அமைப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்திட சிறு, குறு நிறுவனங்களில் அதிக அளவில் புதிய வேலைகள் உருவாகின்றன.
காரணம், இவர்களின் முதலீடு குறைவு, தொழில்நுட்பமும் குறைவு. மனித உழைப்பு மட்டுமே இங்கு தேவைப்படுகிறது. மேலும் சுயதொழில் செய்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆக, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்றவற்றால் வேலைவாய்ப்புகள் குறைகின்றன. இதனை சமாளிக்க ஒரே வழி சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதுதான்.
இந்நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் தேவையான அளவு கடன் தொகை கொடுக்க வேண்டும். ஒரு புள்ளிவிவரத்தின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கடன் தொகையைவிட ரூ.50,000 கோடி குறைவாக கொடுத்திருக்கின்றன வங்கிகள். எனவே, தேவைப்படும் மீதித் தொகையை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் வெளியாரிடம் அதிகவட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
சிறு தொழில் கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ஏட்டளவில் மட்டுமே உள்ளது. இது செயல் வடிவம் பெற வேண்டும்.
ஏற்கெனவே நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதத்தை சிறு, குறு தொழில்கள்தான் வழங்குகின்றன. இதை மேலும் அதிகப்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும்.
அரசுத்துறையும், பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் தேவைகளில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தையாவது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்திட வேண்டும். அதற்கான தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். முன்பு இதற்கான விதிமுறை இருந்தது. காலப்போக்கில் அது கை விடப்பட்டது.
நாட்டில் 90 சதவீத தொழிலாளர்கள் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணி செய்கிறார்கள். இவர்களைப் படிப்படியாக அமைப்பு ரீதியிலான தொழில்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அவர்களின் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகளை முறைப்
படுத்த முடியும்.
பணிகளில் ஈடுபடுவதற்கு முன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் முறை (Skill Development Scheme) அண்மைக்காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், "வேலை கிடைக்கவில்லை' என்ற குரல் ஒருபுறமும், "வேலைக்கேற்ற ஆள் கிடைக்கவில்லை' என்ற குரல் மற்றொரு புறமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
படிப்பு முடிந்தவுடன் வேலையில் தன்னை இணைத்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் தன்னை தயார் செய்துகொள்வது அவசியம். ஆகையால் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும்.
மனிதர்களுக்குப் போட்டியாக கம்யூட்டர்களும் ரோபோக்களும் வரத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் அவை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்நிலையில், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உத்திகளை நாம் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மட்டும் அல்லாமல் சமூக அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகளும் இம்மாபெரும் வேள்வியில் பங்கு கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com