முதுமைக்குத் துணையாவோம்!

நம்நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களின் வயது

நம்நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களின் வயது 70-ஐ தாண்டி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரணம் பிற நாடுகளில் வயது முதிர்ந்த மக்களின் மேல் அரசும், அரசு சாரா தொண்டு மையங்கள் பலவும் மிகுந்த சிரத்தையுடன் பல நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் சுகமான வாழ்க்கையை வாழ வழி செய்துள்ளன.
1950-ஆம் ஆண்டில் நம் நாட்டு மக்களின் சராசரி வயது 36 ஆண்டுகள். 2011-ஆம் ஆண்டில் இந்த சராசரி வயது 65-ஆக உயர்ந்தது. இந்த நிலைமையிலும் 1947-க்கு முன் பிறந்தவர்கள் 70 வயதுக்கும் மேல் வாழ்ந்தால் நல்ல பழக்க வழக்கங்களுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பவர்கள் இவர்கள் என்ற உண்மை வெளியாகிறது. இவர்களுக்கு வயோதிக வாழ்க்கை தரமானதாக அமைய மற்றவர்களின் உதவி தேவை என்பது நிதர்சனம்.
நம் நாட்டில், 2011-ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின்படி 131 கோடியே 10 லட்சம் மக்களில் 3 கோடியே 97 லட்சம் மக்கள் 70 வயதைத் தாண்டியவர்களாக இருந்தனர். இவர்களில் 1 கோடியே 94 லட்சம் பேர் ஆண்கள்; 2 கோடியே 3 லட்சம் பேர் பெண்கள்.
சுமார் 70 சதவீத முதியவர்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தவர்கள். நம் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் எல்லாரும் மறந்துவிட்டுவிட்ட ஒரு அம்சம், முதியவர்களின் வாழ்க்கையை தரமாக வைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் பற்றியதுதான்.
நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் முதியவர்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இல்லை என்பது 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், கோவா மற்றும் ஆந்திர மாநிலங்களின் மக்கள்தொகை இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம். அங்கே வாழும் 70-வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை நம் நாட்டின் முதுமக்களில் 25 சதவீதம்.
ஆனால், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 25 சதவீதம். ஆனால் இங்கே வாழும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இந்தியாவின் முதியவர்கள் தொகையில் 20 சதவீதமே!
மற்ற நாடுகளைக் கூர்ந்து கவனித்தால் நம்மை விடவும் அவர்கள் முதியவர்களுக்கு நல்ல வாழ்க்கையை வழங்கும் பல நடவடிக்கைகளை எடுத்திருப்பது புலப்படும். "உலகில் முதியவர்களின் கணிப்பு' எனும் 2014-ஆம் ஆண்டின் கணக்கீடு 96 நாடுகளில் நடத்தப்பட்டது.
இந்தியா அந்த 96 நாடுகளில் 71-ஆவது இடத்தில் இருந்தது. இந்த கணக்கீட்டில் ஆராயப்பட்ட முக்கியமான அம்சங்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் அல்லது வேறு வருமானம், அவர்களது சுகாதாரத்தைக் காக்கும் மருத்துவ உதவிகள், வாழத் தகுந்த வீடுகள், வெளியே சென்று வர கிடைக்கும் வசதிகள், குடும்பம் மற்றும் சமூகம் அளிக்கும் மரியாதை மற்றும் உதவிகள் ஆகியன அடங்கும்.
இந்த கணக்கெடுப்பில், நம் நாட்டிலுள்ள 10 முதியவர்களில் 4 பேர், அதாவது 40 சதவீதத்தினர் அவர்களது குடும்பத்தினராலேயே துன்புறுத்தப்படுவது தெரியவந்தது. டாக்டர் மாலா கபூர் எனும் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 70 வயது டாக்டர் சிங் எனும் ஓய்வுபெற்ற மருத்துவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்ததை குறிப்பிடுகிறார். அவருக்கு வேண்டிய நேரத்தில் உணவு பரிமாறப் படாமல் துன்புறுகிறார்.
சில நேரங்களில் உணவு உண்ணாமலேயே இரவில் தூங்கப் போக வேண்டிய துர்பாக்கியம். சீக்கிரமாக படுக்கப் போய், காலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் அவர் மருத்துவரான காலம் முதல் பழகிப் போன ஒன்று. அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத மூத்த குடிமகனாக வாழ்ந்து கஷ்டப்படும் நிலைமை!
சாந்தாவுக்கு இப்போது 75 வயது. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பின் தன் கணவரை இழந்தார். அப்போது இவரது இரண்டாவது மகன் மூன்று மாத குழந்தை. இரண்டு மகன்களையும் கல்வி கற்க வைத்து நல்ல முறையில் வளர்த்தார் சாந்தா.
தற்சமயம் தன் இரண்டாவது மகன் வீட்டில் வசித்து வருகிறார். மூத்த மகன் நல்ல முறையில் பணம் சம்பாதித்து செழிப்புடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஆனால், தன் தாயை தன் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
அவர் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்களுக்கு உதவ நீர் குளிரேற்றும் ஒரு நிலையத்தை நிறுவினார். அதை ஆரம்பிக்க ஒரு விழா எடுக்கப்பட்டது. பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது தாயாரை அந்த விழாவிற்கு வரும்படி அழைத்தார்.
சாந்தாவும் அந்த விழாவிற்கு சென்றார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் விலகியே நின்ற மகனைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியமுற்றனர். சாந்தா விழா முடியு முன்னரேயே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்.
கம்லேஷ் 65 வயது நிரம்பிய வசதியான குடும்பத்தை சார்ந்த பெண். இவருக்கு ஐந்து மகன்கள். மிகவும் வசதியுடன் வாழும் இவர்கள் தங்கள் தாய் தந்தையரை தங்களுடன் வைத்துக் கொள்ளாததால், கம்லேஷ் 15 ஆண்டுகளாக நோய்வாய்பட்டு படுக்கையிலேயே இருக்கும் தன் கணவரை கவனித்துக் கொண்டு தனியாக வாழ்கிறார்.
தனியாக வாழும் முதியவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. கிராமங்களைவிடவும் நகரங்களில் இது பெரிய பிரச்னை. மும்பை நகரிலுள்ள முதியவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அந்நகரின் போலீஸ் துறை கையிலெடுத்துள்ளது.
சுமார் 39,000 முதியவர்கள் போலீஸ் நிலையங்களில் தங்களுக்குப் பாதுகாப்பு கோரி விண்ணப்பங்களை அளித்துள்ளனர். அவர்களில் 4,200 பேர் தனிமையில் வசிப்பவர்கள். குடும்பத்தாருடன் வசிப்பவர்களும், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களும்கூட போலீஸ் பாதுகாப்பு கோருவதற்குக் காரணம், வீட்டில் உள்ளவர்கள் இவர்களை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிடும்போதும், முதியோர் இல்லங்களில் வேலை செய்பவர்களிடமிருந்தும் உடன் வசிப்பவர்களிடமிருந்தும் பாதுகாப்பு தேவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
மும்பை நகரின் ஒவ்வொரு போலீஸ் காவலரும் ஒரு முதியவரை தத்து எடுத்து பாதுகாக்க வேண்டும் என அம் மாநிலத்தின் போலீஸ் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்ற 8 ஆண்டுகளாக தனியாக வசிக்கும் முதியவர் டோல்க்கவாலாவின் ஒரே மகன் துபாய் நாட்டில் தன் குடும்பத்துடன் வாழ்கிறார். மும்பை நகருக்கு எப்போதாவது வரும்போது தன் தந்தையை சந்திப்பார், அவ்வளவுதான்.
இவர்போன்ற தனிமையில் வசிக்கும் முதியவர்களை குறிப்பிட்ட போலீஸ்காரர் அடிக்கடி சந்தித்து அவர்களது பாதுகாப்பான மனநிலையை உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் கூறியது எல்லாராலும் வரவேற்கப்பட்டது.
இதுபோல் யாராலும் கவனிக்கப்படாமல் வாழும் முதியவர்கள் உள்ள இந்தியாவில் நல்ல முறையில் தங்கள் பெற்றோரையும், தாத்தா, பாட்டி போன்ற உறவினர்களையும் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துப் போற்றுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கலாகாது.
2013-ஆம் ஆண்டு, காஷ்மீர் மாநிலத்தில், ஃபெரோஸ் உன்ஃதிர் என்னும் பெரியவர் தனக்கு வயது 141 எனக் கூறினார். அரசின் ஆவணங்களின்படி அவர் பிறந்தது 1872-ஆம் ஆண்டு. அன்றைய கணக்கீட்டில் உலகில் அதிக வயதில் வாழும் முதியவர் அவரே. அவர் 82 வயதான தனது ஐந்தாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.
2013-ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில், காந்திநகருக்கு அருகேயுள்ள உனாவா கிராமத்தில், 101 வயது நிரம்பிய பிரன்பாய் ஹரிபாய் படேல் எனும் முதிய பெண்மணிக்கு 103 வயது நிரம்பிய ஜித்தாபென் பிரனாபாய் படேல் எனும் கணவரும், 50 மகன்கள், மகள்கள், பேரன்கள், அவர்களது குழந்தைகள் என்ற மிகப்பெரிய குடும்பம் இருந்தது.
இந்தியாவில் மிக அதிக நாட்கள் வாழ்ந்த கணவன் - மனைவி இவர்களே எனக் கூறப்பட்டது. 85 ஆண்டு மணவாழ்க்கையையும் அன்புடன் நேசிக்கும் குழந்தைகளையும் கொண்ட பெற்றோர் இவர்கள். இவர்களது கொள்ளுப் பேரக் குழந்தைகள் இவர்களுக்கு "சிறந்த தம்பதி' என்ற பெயரில் ஒரு விழாவை நடத்தினர். யார் துணையுமின்றி, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பேணிக் கொள்ளும் அதிசய தம்பதி அவர்கள்.
ஆக நாம் நம் குடும்பத்து முதியவர்களை அன்புடன் கவனித்துப் பேணும்போது, அந்த நற்குணங்கள் நமது குழந்தைகளுக்கும் ஊடுருவி நம்மை அவர்கள் பிற்காலங்களில் கவனிப்பார்கள் என்பது இந்திய கலாசாரம்.
இது பெருவாரியானவர்களிடம் இருந்தபோதும், சிலரிடம் இல்லாதமையால் தனிமையில் விடப்படும் முதியவர்களும் நம் தேசத்தில் உண்டு. அவர்களை பேணிக் காப்பது அரசின் கடமை என்பது நிதர்சனமான உண்மை!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com