காஷ்மீர்: பிரச்னையும் தீர்வும்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தேசத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய 3 பகுதிகளை இன்று உள்ளடக்கியுள்ளது. இதன் வடக்குப் பகுதியில் சீனா,
காஷ்மீர்: பிரச்னையும் தீர்வும்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தேசத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய 3 பகுதிகளை இன்று உள்ளடக்கியுள்ளது. இதன் வடக்குப் பகுதியில் சீனா, தெற்கே இந்தியா (ஹிமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்), கிழக்கே திபெத், மேற்கே பாகிஸ்தான் என்று நான்கு நாட்டு எல்லைகளையும் அரவணைக்கும் இந்திய மாநிலம் இது.
ஜம்முவின் பெரும்பான்மையினர் இந்துக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியினர் பெரும்பான்மையினர், லடாக்கில் பௌத்தர்கள் அதிகம்.
நமக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தலும் ஆபத்தும் வருமானால், பெரும்பாலும் காஷ்மீர் வழியாகத்தான் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தியாவின் பாதுகாப்பு என்பது காஷ்மீரின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே தான் நாம் காஷ்மீர் பிரச்சினையை மிகக் கவனமாகக் கையாள வேண்டிய அவசியம் உள்ளது.
2.22 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது இம்மாநிலம். இதன் மக்கள் தொகை 1.25 கோடி. அதாவது இந்திய மக்கள் தொகை 125 கோடி என்பதால், காஷ்மீரின் மக்கள் தொகை அதில் ஒரு சதவீதம் ஆகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாநிலம் இதுவே. இங்கு வாழ்பவர்களில்,
இஸ்லாமியர் 68.31 சதவீதம்
இந்துக்கள்- 28.43 சதவீதம்
சீக்கியர் - 1.87 சதவீதம்
புத்தமதத்தினர் - 0.90 சதவீதம்
கிறிஸ்தவர் - 0.28 சதவீதம்
பிறமதத்தினர் - 0.21 சதவீதம்
உண்மையில் நம் தேசத்தின் கொள்கையான மதச்சார்பின்மையின் அடையாளம் ஜம்மு - காஷ்மீர். நமது பாதுகாப்பு, பண்பாடு, கலாசாரம், பன்முகத்தன்மை அனைத்துக்கும் மேலாக நம் மதச் சார்பின்மை கொள்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது இப்பிரதேசம்.
வரலாற்றுச் சிறப்பும், இயற்கை வளமும் கொண்டது இது. முற்காலத்தில் ஏரியாக இருந்த இப்பகுதி காஷ்யப முனிவரால் பூலோக சொர்க்கமாக மாற்றப்பட்டது என்பது புராணம். இந்து அரசர்கள் பலர் ஆண்டபின், 1526 முதல் இப்பகுதி மொகலாயர் வசமாயிற்று.
அதன்பின் ஆப்கானியர் ஆட்சியைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து தோக்ரா வகுப்பினர், பஞ்சாபியர், மீண்டும் தோக்ரா வகுப்பினர் என்று ஆட்சி மாறிக் கொண்டே இருந்தது. பின் 1947 வரை ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட சுதேச சமஸ்தானமாக விளங்கிறது. ஆட்சியில் அப்போது இருந்தவர் மகாராஜா ஹரிசிங்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்காக பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்திய சுதந்திரச் சட்டம் 1947 (Indian Independence Act 1947) இன் படி, இந்தியாவில் உள்ள சமஸ்தானங்கள், அதனதன் அரசர் அல்லது மகாராஜாவின் விருப்பப்படி, இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம். அல்லது சுதந்திர தனி நாடாகவும் இயங்கலாம் என்பது சட்ட விதி.
அன்று இருந்த 565 சமஸ்தானங்களில், 6 சமஸ்தானங்கள் - திருவனந்தபுரம், போபால், ஜோத்பூர், ஜீனாகத், ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர் - மட்டுமே இந்தியாவுடன் இணைவதை எதிர்த்தன. ஆனாலும் காந்தி, நேருஜி வழி காட்டுதலாலும், மவுண்ட் பேட்டனின் துணையாலும், சர்தார் பட்டேலின் ராஜ தந்திர நடவடிக்கையாலும், காஷ்மீரைத் தவிர உள்ள 5 சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன.
காஷ்மீர் பிரச்சினை மற்ற சமஸ்தானங்களிலிருந்து மாறுபட்டதாக விளங்கியது. மற்றவை இந்திய மாநிலங்களால் சூழப்பட்ட நிலப்பகுதியாக இருந்தது. ஆனால் காஷ்மீர் பகுதியோ, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு எல்லைகளையும் அரவணைத்து நின்றது.
ஆகவே இரு நாடுகளும் உரிமை கோரின. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர். ஆகவே அது பாகிஸ்தானுடன் இணைவதே நியாயம் என்றது பாகிஸ்தான். ஆளும் மன்னரோ (ஹரிசிங்) ஒரு இந்து. அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், அவர் இசைவைப் பெற இரு நாட்டினரும் முயன்றனர்.
ஆனால் அவரோ காஷ்மீர் தனித்து இயங்க வேண்டும். இந்தியாவின் ஸ்விட்சர்லாண்ட் ஆக தனி சுதந்திர நாடாகத் திகழ வேண்டும் என விரும்பினார். எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தினார் மன்னர்.
இச்சூழலில் 1947 அக்டோபர் 22-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த பதான்கள், பாகிஸ்தானிய ராணுவ உதவியோடும் ராணுவ தளவாடங்களோடும் 'பழங்குடியினர் படை எடுப்பு' என்ற பெயரில் காஷ்மீருக்குள் நுழைந்தனர். வன்முறை மூலம் வடகிழக்குப் பகுதியை ஆக்கிரமித்தனர். ஸ்ரீநகரை நோக்கி நகர்ந்தனர்.
நெருக்கடியான இச்சூழலில் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்பின் இந்திய ராணுவம் பதான் படை எடுப்பைத் தடுத்து நிறுத்தியது. ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகள் காக்கப்பட்டன. ஆனாலும் ஏற்கெனவே பதான்கள் கைப்பற்றிய பகுதி ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்பட்டு இன்றுவரை அது பாகிஸ்தான் வசம் உள்ளது.
ஆக்கிரமிப்புப் பகுதியை ராணுவ நடவடிக்கை மூலம் மீட்க வேண்டும் என்ற கருத்தை, கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் ஏற்க மறுத்தார். அது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றார்.
ஐ.நா. சபையை அணுகலாம். அதன்மூலம் ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்றார். ஐ.நா. பாதுகாப்பு சபையோ இந்தியாவுக்கு எதிர் நிலை எடுத்தது. இச்சூழலில் காஷ்மீர் தனித்தன்மையை பன்முகக் கலாச்சாரத்தை, வரலாற்றுப் பின்னணியை, அம்மக்களின் மன உணர்வுகளை மதித்தே மத்திய அரசு - 1947 முதல் 2017 இன்று வரை - 70 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இம்மாநிலத்துக்கென தனி அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 370-ஆம் பிரிவின் படி சில சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் இம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. பிறமாநிலத்தவர் எவரும் இங்கே நிலம், சொத்து வாங்குவதற்கு அனுமதி கிடையாது.
மத்திய அரசின் சிறப்பு நடவடிக்கையால் 2001-இல் கல்வி கற்றவர் 55.5 சதவீதமாக இருந்தது. அது 2011-ல் 68.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் காஷ்மீரின் மக்கள் தொகை - 1 விழுக்காடு மட்டுமே.
ஆனால் மாநிலங்கள் அனைத்துக்கும் மத்திய அரசு வழங்கும் நிதியில் 9.5 சதவீதம் காஷ்மீருக்கே வழங்கப்படுகிறது. அதாவது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு (central Assistance)  2012-2013இல் வழங்கிய மொத்த நிதி உதவி ரூ.1,01,280 கோடி.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிய நிதி உதவி ரூ.9,610 கோடி, மக்கள் விகிதாசாரப்படி பார்த்தால் ரூ.1,012 கோடி நிதி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கியதோ 9.5 மடங்கு.
அதேபோல் மத்திய அரசின் திட்டங்கள் மூலம்  (Centrally Sponsored Schemes)  2012-2013இல் அனைத்து மாநிலங்களும் பெற்ற நிதி உதவி ரூ.1,53,908 கோடி. காஷ்மீர் பெற்ற நிதி உதவி ரூ.3,070 கோடி.
காஷ்மீரத்தில் 2007-08இல் ரூ.27,448-ஆக இருந்த தனிநபர் வருமானம், 2012-2013இல் ரூ.50,806-ஆக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 2 மடங்கு உயர்ந்துள்ளது.
2007-08 பட்ஜெட்படி மாநில மொத்த வருவாய் ரூ.14,807 கோடி. 2012-13இல் மாநில மொத்த வருவாய் ரூ.32,606 கோடி. அதாவது மாநில வருவாய் இருமடங்காக உயர்ந்துள்ளது.
2007-08இல் மாநில பொருள் உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ.37,099 கோடி. 2012-13 ல் மாநில பொருள் உற்பத்தியின் மொத்த மதிப்பு ரூ.76,115 கோடி. அதுவும் 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளின் வளர்ச்சிக்கான கவனத்தைக் குறைத்துக் குறைத்துக் கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் வளர்ச்சிக்கு அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தி வருகிறது மத்திய அரசு.
இவ்வாறு ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு அளவுக்கு அதிகமாகவே மத்திய அரசு உதவிகளை வழங்கி வருகிறது. அதன் பயனாக - கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை, வேலைவாய்ப்பு - ஆகிய அனைத்துத் தளங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ண இன்று வரை தயாராக இல்லை என்பதே உண்மை நிலை. மனமாற்றம் இயற்கையாகவே ஏற்பட வேண்டும். உதவி செய்வதன் மூலம் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.
இன்றைய நிலைக்கு முக்கிய காரணம், அவர்களது மொழி, பண்பாடு மற்றும் கலாசாரப் பின்னணி தனியானது, வித்தியாசமானது. பழக்கவழக்கங்களிலும் மரபிலும் இந்தியாவில் உள்ள இந்துக்களிலிருந்து காஷ்மீர் இந்துக்கள் வேறுபட்டவர்கள்.
பாகிஸ்தான் முஸ்லீம்களிலிருந்து, காஷ்மீர் முஸ்லீம்களின் பின்னணி முற்றிலும் மாறுபட்டது. இவ்வாறு அங்கு வாழும் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இருநாடுகளின் கலாசாரங்களிலிருந்து விலகியே நிற்கின்றார்கள்.
காஷ்மீரை இழப்பது தேசத்தின் பாதுகாப்பையே அடமானம் வைப்பதாகும் - எனச் கருதுகிறது இந்தியா. காஷ்மீரை மீட்போம், இஸ்லாத்தை காப்போம் - என்கிறது பாகிஸ்தான்.
காஷ்மீரின் பிரிவினைவாதிகளோ சுதந்திர நாடு கோரிக்கையை முன் வைக்கிறார்கள். தீவிரவாதிகளோ ராணுவத்தையும், மக்களையும் தாக்கி, அராஜகத்தின் மூலம் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க விரும்புகிறார்கள்.
மக்களோ குழம்பிய மன நிலையில் இருக்கிறார்கள். வாக்கெடுப்பு என்று வந்துவிட்டால், மத உணர்வு தூண்டப்பட்டால் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை.
இச்சூழலில் மத்திய அரசு ஓர் உயர்மட்டக் குழுவை நியமிக்க வேண்டும். அதில் தேசத்தின் முதிர்ந்த தலைவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வெளி உறவுத்துறையின் மேதைகள், சமூகக் சிந்தனையாளர்கள் இடம் பெற வேண்டும். அக்குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அதன்பின்பு, பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், காஷ்மீரின் அனைத்துக் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடல் நடத்த வேண்டும். ஒரு சுமுகமான எல்லோருக்கும் ஏற்புடைய தீர்வை உருவாக்க வேண்டும்.
அத்தீர்வை இறுதியில் பாகிஸ்தான் அரசின் முன்வைத்துப் பேச வேண்டும். அவர்களது கருத்துக்களையும் எந்த அளவு ஏற்கலாம் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
சுருங்கச் சொல்வதென்றால், எல்லோரையும் சந்திக்க வேண்டும். எல்லோர் கருத்துக்களையும் கேட்க வேண்டும் இணக்கமான கருத்தை உருவாக்க வேண்டும். அதனைச் செயல்படுத்துவதற்கு நேர்மையும் துணிவும் வேண்டும்.
இவ்வழிதான் காஷ்மீர் பிரச்னைக்கு சரியான தீர்வு காணும் வழியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com