வட்டிக்குறைப்பு கூடாது

தங்களின் உழைப்பால் ஓரளவு வருமானம் ஈட்டித் தங்கள் குடும்பத்தைக் காத்திடுகின்ற மத்தியதர மக்கள் தங்களது சிக்கனம் மற்றும் திட்டமிடுதல்களின் மூலம் ஓரளவு சேமிக்கவும் செய்கின்றனர்.

தங்களின் உழைப்பால் ஓரளவு வருமானம் ஈட்டித் தங்கள் குடும்பத்தைக் காத்திடுகின்ற மத்தியதர மக்கள் தங்களது சிக்கனம் மற்றும் திட்டமிடுதல்களின் மூலம் ஓரளவு சேமிக்கவும் செய்கின்றனர்.
உடலில் சக்தி இருக்கும் வரையில் உழைத்து சம்பாதித்துத் தத்தம் குடும்பத்தேவைகளுக்குப் போக மீதி இருக்கும் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் சேமித்து வைத்தால், வயதான காலத்தில் சற்று நிம்மதியாகக் காலம் தள்ளலாம் என்பதே இவர்களது நோக்கமாகும்.
பணி ஓய்விற்குப் பின் பென்ஷன் எனப்படும் ஓய்வூதியத்தைப் பெறுகின்ற வாய்ப்பு எல்லோருக்கும் இருப்பதில்லை. (ஓய்வூதியம் பெறுபவர்களும் அதைத் தங்களது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் கட்டாயம் உள்ளது).
பல வருடங்கள் சிரமப்பட்டு உழைத்துச் சிக்கனம் காத்து சேமித்த பணம் மற்றும் பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் கிராஜுவிட்டி, பி.எஃப். போன்ற தொகைகளில் ஒரு பகுதியை ஓர் அரசு வங்கி அல்லது தபால்நிலையக் கணக்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு வயதான காலத்தில் பிறர் கையை எதிர்பார்க்காமல் வாழ்வதே அவர்களது அதிகபட்சமான கனவாக இருக்கிறது.
அதிக வட்டிக்கு ஆசைப்படாமல்,அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வங்கிகளில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என்று மக்கள் எண்ணிவருகின்ற நிலையில், அதைக கேலி செய்வதுபோல் இருக்கின்றன நமது வங்கிகளின் செயல்பாடுகள். வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே போதுமா? அப்பணம் அதை முதலீடு செய்தவர்களுக்கு ஒரு கண்ணியமான லாபத்தினை (வட்டியை) அளிப்பதுதானே நியாயமாக இருக்கும்.
முன்புபோல், பனிரெண்டு, பதினைந்து சதவீத வட்டியெல்லாம்கூட வேண்டாம். முதலீட்டிற்குக் குறைந்தது ஒரு பத்து சதவீத வட்டியாவது கிடைத்தால்தானே அது முதலீட்டாளரின் நலனை ஓரளவுக்காவது பூர்த்தி செய்யும்.
ஒரு சிறிய கணக்கீட்டைப் பார்க்கலாம்.
பணி ஓய்வு பெற்ற (ஓய்வூதியம் பெறும் வாய்ப்பில்லாத) ஒரு கணவனும் மனைவியும் தனியே அல்லது தமது வாரிசுகளுடன் வசிக்கும் நிலையில் இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் வசம் பன்னிரெண்டு லட்சம் ரூபாய் வங்கி முதலீடு நிலைவைப்பாக (ஃபிக்செட் டெபாசிட்) இருந்து அதற்கு பத்து சதவீதம் வட்டி என்றால், ஆண்டுக்கு ஒருலட்சத்து இருபதாயிரம் ரூபாய் கிடைக்கும்.
அதாவது மாதத்திற்குப் பத்தாயிரம் ரூபாய். வயதான இரண்டு பேருடைய மாதாந்திர உணவுக்கு (மட்டுமே) இது போதுமான தொகையாக இருக்கும்.
ஆனால் இப்போதுநிலை வைப்புகளுக்கு, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஏழு சதவீதத்திற்கும் குறைவாகவே வட்டி அளிக்கின்றன. மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக அரைசதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது.
மேலும், வருட வட்டி வருமானத்திற்கு டி.டி.எஸ். எனப்படும் வரி பிடித்தமும் செய்யப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், ஒருவர் பன்னிரெண்டு லட்ச ரூபாய் வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பட்சத்தில் அவருக்கு மாத வருமானமாக ஏழாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கிறது.
இத்தொகை வயதான தம்பதிகளின் உணவுச் செலவுக்கே போதாத நிலையில் மருத்துவம் போன்ற இதர செலவுகளுக்கு அவர்கள் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பதே நிதர்சனம்.
நடுத்தர, கீழ்நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவருக்கு சுமார் பன்னிரெண்டு லட்ச ரூபாய் சேமிப்பு இருப்பதற்கான வாய்ப்பும் குறைவு. அப்படியே இருந்தாலும், அந்த முதலீட்டைக் காலமெல்லாம் வங்கியில் வைத்திருக்கும் வாய்ப்பு அதைவிடக் குறைவு என்பதை நினைவில் கொண்டால், இந்த வட்டிவிகிதமெல்லாம் போதவே போதாது என்பது தெளிவாகும்.
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்கள் ஐந்து வருடங்களில் இரட்டிப்பாகும் காலமும் மலையேறிவிட்டது. இந்நிலையில், நிலைவைப்புகளுக்குக் குறைந்த பட்சம் பத்து சதவீதம் வட்டியாவது அளிப்பதுதான் நியாயமான வங்கிச் செயல்பாடாக இருக்கும்.
ஓய்வு பெற்றோர் வாழ்க்கைநலன் மட்டுமலாமல், நன்கொடைகள் மூலம் இயங்கும் முதியோர் இல்லங்கள், அன்னதான திட்டங்கள் போன்றவையும் இத்தகைய வட்டிக்குறைப்பினால் பாதிப்படைவது கண்கூடு.
நன்கொடைகளை நிலைவைப்பாக ஒரு வங்கியில் முதலீடு செய்து, அதன் மாதாந்திர வட்டியைக் கொண்டு நற்பணிகளைச் செய்யும் தொண்டுநிறுவனங்கள் இனிமேல் தங்கள் பணியைத் தொடர மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டால்தான் தொழிற்துறையின் வளர்ச்சி மேலோங்கும் என்ற காரணத்தினால் கடன்களுக்கான வட்டி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. தாராளமாக வங்கிக் கடன் கிடைப்பதால் தொழில்வளம் பெருகி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றெல்லாம் கூறப்படுகிறது.
அதற்காக, கடனுக்கான வட்டி குறைக்கப் படும்போதெல்லாம், உடன் விளைவாக முதலீடுகளுக்கான வட்டியும் குறைக்கப்பட்டு வருவதை எப்படி நியாயப் படுத்த முடியும்?
வாராக் கடனை ஒழுங்காக வசூலித்தாலே நமது வங்கிகள் லாபம் பார்க்கலாம். கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றுபவர்களைத் தப்பவிட்டுவிட்டு, எளியமக்களை வட்டிக்குறைப்புகளாலும், சேவைக்கட்டண உயர்வுகளாலும் தண்டிப்பது
சரியல்ல.
ஏற்கெனவே வங்கிகள் தங்களின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் அபராதத் தொகைகளைத் தாறுமாறாக ஏற்றியிருக்கின்றன.
இப்படியேபோனால், நமது பணத்தை வைத்திருப்பதற்காக வங்கிகளுக்கு நாம் வட்டியோ வரியோ தர வேண்டிய காலம் வந்துவிடும் போலிருக்கிறது.
நிதி அமைச்சகம் ஒரு கருணையுள்ள தந்தையின் நிலையில் இருந்து சிந்தித்துத் தனது கொள்கைமுடிவுகளை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com