இதழியலின் ஊற்றுக்கண்!

மானுடத்தைச் சீவி செதுக்குவதற்கு இரண்டு மகான்கள் தோன்றினர். கிழக்கில் புத்தர், மேற்கில் கார்ல் மார்க்ஸ். புத்தர் ஞானியாவதற்கு மெளனத்தில் ஆழ்ந்தார்.

மானுடத்தைச் சீவி செதுக்குவதற்கு இரண்டு மகான்கள் தோன்றினர். கிழக்கில் புத்தர், மேற்கில் கார்ல் மார்க்ஸ். புத்தர் ஞானியாவதற்கு மெளனத்தில் ஆழ்ந்தார். கார்ல் மார்க்ஸ் ஞானியாவதற்கு மெளனத்தைக் கலைத்தார். புத்தர், உலகம் ஏன் இப்படி இருக்கிறது எனச் சிந்தித்தார். மார்க்ஸ், இப்படி இருக்கிற உலகத்தை எப்படி மாற்றுவது எனச் சிந்
தித்தார்.
செங்கோல்கள், கொடுங்கோல்கள் ஆன காலத்தில், அவற்றை மாற்றுவதற்கு மார்க்ஸ் ஏந்தியது எழுதுகோல்.
1841-இல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பை முடித்த மார்க்ஸ், தமது டாக்டர் பட்டத்திற்காக ஜெனா பல்கலைக்கழகத்தில், இயற்கையின் தத்துவவியல் குறித்து, "டெமாக்ரிட்டிஸýக்கும் எபிக்யூரஸýக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்' எனுந் தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொடுத்தார்.
அக்கட்டுரை அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கியதுடன், ஜெர்மனி முழுவதும் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இறை நம்பிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கியது.
பான் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளராக வேண்டும் என்றுதான் மார்க்ஸ் ஆசைப்பட்டார். ஆனால், ஹெகலியன்களும் முற்போக்குவாதிகளும் அப்பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைப் பார்த்த மார்க்ஸ், பத்திரிகைத் துறையே தனக்கு ஏற்றது என்று அதனைத் தேர்ந்தெடுத்தார். அரசியல், பொருளியல் ஆராய்ச்சிகளை விஞ்ஞானபூர்வமாக நடத்துவதற்கு ஒரு நாத்திகப் பத்திரிகை தேவை என நினைத்தார்.
"ரைன்லாந்து கெஜட்' பத்திரிகையின் ஆசிரியரானார். அதன்பின் பாரிசிலிருந்த ஆர்னால்ட் ரூகே எனும் நண்பரோடு சேர்ந்து "ஜெர்மன் - பிரெஞ்ச் கால அட்டவணை' எனும் பத்திரிகையின் ஆசிரியரானார். இந்த இரண்டு பத்திரிகைகளும் தந்த பயிற்சியும் முதிர்ச்சியும் மார்க்சைப் பிறவிப் பத்திரிகையாளராக மாற்றிக்காட்டின.
பத்திரிகா தர்மத்திற்கு மார்க்ஸ் சொன்ன வரையறை, நூற்றாண்டுகள் கழித்தும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். "வியாபார நிலைக்கு இறங்கிவிடுகின்ற ஒரு பத்திரிகை சுதந்திரமாயிருக்க முடியுமா? ஓர் ஆசிரியன் பணம் சம்பாதிக்க வேண்டியதுதான், எதற்காக? உயிர் வாழ்வதற்காகவும் மேலும், மேலும் தொடர்ந்து எழுதுவதற்காகவும். அவன் பணம் சம்பாதிப்பதற்காக எழுதக்கூடாது, உயிர் வாழ்தலும் கூடாது.
எந்த ஓர் ஆசிரியன் தனது செல்வ நிலைமையை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான கருவியாகப் பத்திரிகையைப் பயன்படுத்துகிறானோ, அவன் தண்டனைக்கு உரியவன். ஏனென்றால், அவன் வியாபாரத்திற்கு அடிமையாகிவிடுகிறான்' என்பதுதான், மார்க்ஸ் வரைந்து கொடுத்த சாசனம் ஆகும்.
மேலும், பத்திரிகையாளருக்கு மார்க்ஸ் கூறிய அறிவுரைகள் இன்றைக்கும், நம் புருவங்களை வளைய வைக்கக்கூடியனவாகும். "சந்தாதாரர்கள் பத்திரிகையின் கொள்கையை நிர்ணயிக்கக்கூடாது. பத்திரிகைதான், சந்தாதாரர்களின் கொள்கையை நிர்ணயிக்க வேண்டும்' என்றவர் சொன்னது, ஒவ்வொரு பத்திரிகாலயத்தின் முகப்பிலும் பொறிக்கப்பட வேண்டிய வாசகம் ஆகும்.
இன்னும் கம்யூனிசவாதியாகிய மார்க்ஸ் தொழிலாளர்களை நோக்கி, "தொழிற்சங்கம் அமைப்பதற்குப் பதிலாக ஒரு பத்திரிகையைத் தொடங்கி, அதன் மூலம் கருத்துகளைப் பிரசாரம் செய்யுங்கள்' என எச்சரிக்கின்றார்.
"ரைன்லாந்து கெஜட்' பத்திரிகையில், மெத்தனப் போக்கிலும், மேட்டிமைத்தனத்திலும் மிதந்து கொண்டிருந்த சட்டமன்றப் பிரதிநிதிகளின் தோலுரித்துக் காட்டினார். அதிகார வர்க்கத்தின் அட்டூழியங்களையும், பிரபுக்களின் எதேச்சாதிகாரங்களையும், பிரஷ்ய அரசாங்கத்தின் கொடுங்கோன்மையையும் குத்
தூசிக் கொண்டு, நார் நாராகக் கிழித்துப் போட்டார்.
மேலும், விவசாயிகள் படும் அல்லல்களையும், அவலங்களையும் எக்ஸ்ரே படம்போல் எடுத்துப் போட்டார். மார்க்சினுடைய எழுத்துக்களின் வீரியம், ஐரோப்பா முழுவதும் ஓர் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆவேசம் கொண்ட பிரஷ்ய அரசாங்கம், பத்திரிகையைக் கடுமையான தணிக்கைக்குக் கொண்டு வந்தது.
ரைன் மாநிலத்தில் இருந்த பில்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழக்காடுகள் தனிப்பட்ட பிரபுக்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. அக்காடுகளில் பழங்குடி மக்களின் பிள்ளைகள் அப்பழங்களைப் பொறுக்கி எடுத்து விற்பர். தாங்களும் உண்பர். பழங்குடி மக்கள், பழக்காடுகளில் புகுந்து விறகுகளையும் சுள்ளிகளையும் அள்ளி வருவர்.
இவற்றைத் தடுப்பதற்கு ரைன் மாநிலச் சட்டமன்றம், 1842-ஆம் ஆண்டு ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தது. இது மார்க்சின் மூளை நரம்புகளை முறுக்கேற்றியது. எழுதுகோலை எடுத்தார். "சுதந்திரத்தை அனுபவித்துள்ள எவரும், அதற்காகப் போராடும்படியே அறிவுறுத்துவர். ஈட்டிகளை மட்டும் வைத்தன்று கோடாரிகளைக் கொண்டும் போராடும்படி அறிவுறுத்துவர்' என ரைன்லாந்து கெஜட்டில், பிரம்மாஸ்த்திரங்களைத் தொடுத்தார். கார்ல் மார்க்சின் எழுத்துக்கள், இரண்டுபட்டுக் கிடந்த சர்வாதிகாரிகளை எல்லாம் ஒன்று திரட்டியது.
சின்னஞ்சிறு விவசாயிகளை, அரசாங்கம் அபரிமிதமான வரிகளை விதித்து நலியச் செய்தது. கந்து வட்டிக்காரர்கள் கிடுக்கிப் பிடிபோட்டுக் குரல்வளையை நெரித்தனர். மார்க்ஸ் திராவக எழுத்தால், நிலப்பிரபுத்துவத்தைத் துவட்டி எடுத்தார். எதேச்சதிகாரிகள் பத்திரிகையைத் தடை செய்வதென்று முடிவு எடுத்தனர்.
ரைன்லாந்து கெஜட்டின் மற்றைய பங்குதாரர்கள் அரசாங்கத்திற்குப் பணிந்துபோய், பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தத் தயாரானார்கள். ஆனால், மார்க்ஸ் ஏகபோக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதைக் கைவிட்டு, அரசாங்கத்திற்குத் துதிபாடும் போக்கை விரும்பவில்லை. அதனால், மார்க்ஸ் அப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியப் பதவியிலிருந்து விலகினார்.
பாரிசிலிருந்த தம் நண்பர் ஆர்னால்டு ரூகேவுடன் சேர்ந்து, "ஜெர்மன் - பிரெஞ்ச் கால அட்டவணை' எனும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அப்பத்திரிகையில், தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் இன்றியமையாமையைப் பற்றி அழுத்தம் திருத்தமாக எழுதினார். புரட்சிக் கோட்பாட்டைத் தொழிலாளர் வர்க்கம் பின்பற்றுமேயானால், உலகம் முழுவதிலுமுள்ள சுரண்டலை ஒழித்துவிடலாம் என்பதைக் காரண காரியங்களோடு பதிவு செய்தார்.
மற்றும் அரசியல் - பொருளாதாரம் பற்றிய வரையறைகள் எனும் தலைப்பில் பிரடெரிக் ஏங்கெல்சும் காரசாரமான ஒரு கட்டுரை வரைந்திருந்தார். பத்திரிகையில் பொதிந்து கிடந்த தீக்கங்குகளை ஊடுருவிப் பார்த்த பிரஷ்ய அரசு, மார்க்ஸ், ஆர்னால்டு ரூகே, கவிஞர் ஹெய்ன் ஆகியோர், அந்த நாட்டிற்குள் நுழையக்கூடாது என்றும், நுழைந்தால் கைது செய்யும்படியும் ஆணை பிறப்பித்தது. பத்திரிகையின் பிரதிகளை அந்த நாட்டின் எல்லையிலேயே பறிமுதல் செய்தது.
ஜெர்மன் - பிரெஞ்ச் பத்திரிகை தடைசெய்யப்பட்டவுடன், தாகம் தணியாத கார்ல் மார்க்ஸ், "வோர்வாட்ஸ்' பத்திரிகையில் தம் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். விவசாயிகளும் நெசவாளிகளும் எப்படி அடக்குமுறை ஆதிக்கத்தால் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் கனல் பறக்கும் வரிகளில் தீட்டினார்.
அவருடைய எழுத்துக்கள் சில தொழிற்சாலைகளில், தொழிலாளர்களின் தீவிரவாதத்திற்கு வித்திட்டன. தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பிரெஞ்சு அரசாங்கம் 24 மணி நேரத்திற்குள், மார்க்ஸ் பிரான்சை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. அதனால், மார்க்ஸ் தரித்திரத்தோடும் குடும்பத்தோடும் பெல்ஜியத்திற்குப் புலம் பெயர்ந்தார்.
மார்க்ஸ் பிரஷ்யாவின் குடிமகன் என்பதால், மன்னராட்சி நிலவிய பெல்ஜியத்தின் இராணுவத்தினர், அங்கு அவரை வேவு பார்க்கத் தொடங்கினர். அதனால், பிரஷ்யாவின் குடியுரிமையைத் துறந்து, இங்கிலாந்து போக முடிவு செய்தார். எல்லா நாட்டு மக்களுக்கும் குடியுரிமை வேண்டும் எனப் போராடியவர், எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லாது போனார்.
பணத்தினுடைய பன்முகத்தன்மைகளை எழுதிய மார்க்ஸ், தம் சொந்த வாழ்க்கையில் எந்தப் பணத்தையும் சம்பாதிக்காமலே மரித்துப் போனார். இடையில் நியூயார்க் ட்ரைபூன் (சங்ஜ் வர்ழ்ந் பழ்ண்க்ஷன்ய்ங்) எனும் பத்திரிகையில் அவர் எழுதிய எழுத்துருக்களுக்கு அப்பத்திரிகை தந்த ஊதியம், குடும்பத்தின் அடுப்பை எரிய வைத்தது. என்றாலும், அப்பத்திரிகைக்குத் தம்முடைய கருத்துருவை அனுப்புவதற்கு அஞ்சல் தலைகள் வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் தவித்ததும் உண்டு.
"உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு உங்கள் கைவிலங்குகளைத் தவிர வேறில்லை' எனக் கம்யூனிஸ்டு தேர்தல் அறிக்கையில் ஓங்கி ஒலித்ததற்குக் காரணம், பத்திரிகைத் துறையில் அவர் சந்தித்த சவால்களும் இழப்புகளுமே. கார்ல் மார்க்ஸ் விரும்பி ஏற்றது இதழியல் துறை. ஆனால் ஏகாதிபத்தியம் அவரைக் கொண்டு சேர்ந்தது பொருளியல் துறை.
மார்க்சுக்கு ஜெர்மனி ஒழுங்கான ஒரு திட்டத்தை வகுக்கக்கூடிய ஆற்றலைத் தந்தது. பிரான்ஸ் அவரை ஒரு புரட்சியாளனாக்கியது. இங்கிலாந்து அவரை ஓர் அறிஞனாக்கியது எனப் பெட்ராண்டு ரஸ்ஸல் குறிப்பிட்டார். இவை அனைத்திற்கும் மூலாதாரம், மூலதனத்திற்கும் மூலாதாரம் இதழியலே எனலாம்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com