எதுவும் மிஞ்சாது...

பாடக்குறிப்பேட்டின் கடைசிப் பக்கங்களில் மாணவர்கள் குறித்த முக்கியமான குறிப்புகளைப் பதிந்து வைப்பதென்பது ஆசிரியர்களின் வாடிக்கை.

பாடக்குறிப்பேட்டின் கடைசிப் பக்கங்களில் மாணவர்கள் குறித்த முக்கியமான குறிப்புகளைப் பதிந்து வைப்பதென்பது ஆசிரியர்களின் வாடிக்கை. அவற்றுள் ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்த ஒருநாள் மின்சாரம் இல்லாமையால் ஒரு லாரி குடி தண்ணீரை 1,500 ரூபாய்க்கு வாங்கிய குறிப்பும் இருந்தது.
பக்கத்தில் இருந்த சக ஆசிரியர் மூலம் ஒரு லாரித் தண்ணீரின் தற்போதைய விலை 1,800 ரூபாய் என்று தெரிந்து கொண்டேன்.
ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியில் ஏறத்தாழ 8,500 லிட்டர் தண்ணீரே நிரப்பப்படும். வரும் வழியில் தளும்பி கீழ் சிந்தும் நீரின் அளவை 500 லிட்டர் எனக் கொண்டால் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 8,000 லிட்டர்தான்.
கொஞ்சம் தூரமான இடம் எனில் இதே தண்ணீரின் விலை 2,000 ரூபாய்க்குப் போகும். இது போக லாரியிலிருந்து தொட்டிக்குத் தண்ணீரை ஏற்றுவதற்கான மின்சாரச் செலவு இருக்கிறது. இதைத் தள்ளுபடி செய்தால்கூட 8,000 லிட்டர் தண்ணீரின் விலை 2,000 ரூபாய் என்றாகிறது. எனில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 25 பைசாவாகிறது.
குடி தண்ணீருக்கு இவ்வளவு செலவா என்ற உரையாடலின் ஒரு புள்ளியில் ஒரு நண்பர் இத இவ்வளவு கணக்குப் பாக்குறியே ஒரு கிலோ நெல்ல உற்பத்தி செய்ய நாங்க எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்குத் தெரியுமா என்று பட்டியலிடத் தொடங்கினார். நாற்றங்கால்களுக்குச் சென்று நாற்று வாங்குவதிலிருந்து, உழுவது, தழையடிப்பது, நடுவது, உரமடிப்பது, களை பிடுங்குவது, மருந்தடிப்பது, அறுப்பது, அடிப்பது என்று கணக்கு சொன்னவரை மறித்து விளையாட்டாக ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் செலவாகும் என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை உலுக்கி எடுத்து விட்டது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த அவர் சொன்னார். "தண்ணிக் கணக்கை எல்லாம் கணக்குப் பார்க்க ஆரம்பிச்சோம்னா குடும்பத்தோடு தொங்கறதத் தவிர எங்களுக்கு வேற வழி இல்ல' என்றார்.
அதிலிருந்து இரண்டு நாட்களாக ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு எத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது. ஆனால் யாரிடமும் பதில் இல்லை. முகநூலில் இந்தக் கேள்வியை வைத்தபோது இதற்கு 1,400 முதல் 1,800 லிட்டர் வரை செலவாகுமென்று கூறினார்கள்.
சரி, ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 1,600 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று கொள்வது என்று முடிவெடுத்தேன். ஒரு கிலோ நெல் உற்பத்திக்கான உரச் செலவு, கூலி, நாற்றுச் செலவு, மருந்து செலவு, ட்ராக்டர் செலவு எல்லாம் கணக்கு செய்கிறோமே, ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு எவ்வளவு ரூபாய் தண்ணீர் செலவாகிறது என்று கணக்குப் பார்ப்போமே என்று தோன்றியது.
தண்ணீருக்கு எப்படி விலை வைப்பது என்ற தயக்கத்தை விலை கொடுத்துதானே தண்ணீரை வாங்குகிறோம் என்ற எதார்த்தம் ஆற்றுப் படுத்தியது.
ஒரு கிலோ நெல் விளைய 1,600 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு லிட்டர் தண்ணீரின் குறைந்த பட்ச மொத்தக் கொள்முதல் விலை 25 பைசா. எனில், 1,600 லிட்டர் தண்ணீரின் விலை 400 ரூபாய்.
ஆக, ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு ஆகும் தண்ணீரின் செலவு 400 ரூபாய். அடிமாட்டு விலைக்குக் குறைத்துப் பேசினாலும் 200 ரூபாய்க்குக் குறையாது.
தோராயமாக ஒரு கிலோ அரிசி எடுக்க இரண்டு கிலோ நெல்லாவது தேவைப்படும். அந்த வகையில் பார்த்தால் ஒரு கிலோ அரிசிக்கு ஏறத்தாழ 3,200 லிட்டர் தண்ணீர் செலவாகும். எனில் ஒரு கிலோ அரிசி தயாரிக்கச் செலவாகும் தண்ணீரின் சந்தை விலை 800 ரூபாய் ஆகும்.
ஏற்கெனவே நெல்லுக்குக் குறைத்த அளவில் அடிமாட்டு விலைக்கு குறைத்துப் பார்த்தாலும் இந்தச் செலவு 400 ரூபாய் என்ற விலைக்கு வந்து நிற்கும்.
ஆக எவ்வளவு குறைத்துப் பார்த்தாலும் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்வதற்குச் செலவாகும் தண்ணீரின் சந்தை விலை 400 ரூபாய்.
இதுவரை எந்த விவசாயியும் இந்தச் செலவைக் கணக்கில் கொள்வதில்லை. இந்தச் செலவைக் கணக்கில் எடுக்காமல் பார்த்தால்கூட உழக்களவும் மிஞ்சுவதில்லை என்று சொல்கிறார்கள்.
ஆனால் உழுதவன் கணக்குப் பார்த்தால் உசிரே மிஞ்சுவதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தமாக இருக்கிறது. நீருக்கு மட்டுமே 400 ரூபாய் செலவு செய்து தான் உற்பத்தி செய்த அரிசியை
40 ரூபாய்க்கும் குறைச்சலான விலைக்கு விற்கவேண்டிய அவலமான நிலைதான் அவனுக்கு.
எனில், தண்ணீர் விலையையும் கணக்கெடுத்தால் விவசாயியின் நிலை எவ்வளவு மோசமாகும். உழவன் தண்ணீரைக் காசு கொடுத்தா வாங்கி விவசாயம் பார்க்கிறான் என்ற கேள்விக்கு இங்கே இடம் உண்டுதான்.
நிலத்தடி நீரை கிணறு மூலமாகவோ ஆழ்துளைக் கிணறு மூலமாகவோ பயன்படுத்தும் விவசாயி மின்சாரம் அல்லது டீசல் இவற்றில் ஒன்றுக்காக மட்டும்தான் செலவு செய்ய நேரிடுகிறது என்பதும் உண்மைதான்.
ஒரு விவசாயி நாற்றங்கால் அமைப்பதிலிருந்து அடித்து மூட்டை கட்டுவது வரை ஆகும் செலவு எதையும் செய்யாமல் ஒரு கிலோ அரிசி உற்பத்திக்காகும் 3,200 லிட்டர் தண்ணீரை மட்டும் லாரியில் பிடித்து விற்றால் 800 ரூபாய் அவனுக்குக் கிடைக்கும். எல்லாச் செலவும் போக எப்படியும் 400 ரூபாய் கிடைக்கும்.
இது போக விவசாயத்திற்கான அனைத்துவகை செலவுகளும் மிச்சம் என்ற வகையில் லாபம் இன்னும் அதிகரிக்கக் கூடும். இதை நோக்கி விவசாயி நகரத் தொடங்கினால் நமது நிலை என்னவாகும்?
அதற்கு முன் அரசாங்கமும் அக்கறையுள்ளவர்களும் சிந்தித்துத் தெளிவான ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com