சட்டத்தால் மட்டுமே சாத்தியமா?

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு அடி உதை.

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது. ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு அடி உதை.
இதுபோல இன்னும் ஏராளமான, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்திகள் அன்றாடம் செய்தித்தாள்களில் வருவதை நாம் படித்திருப் போம். ஆனால், ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் ஏராளம். 
பச்சாதாபம் கருதியும், இத்தகைய செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டால் அதுவே சமுதாயத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கக் காரணமாகி விடுமோ என்ற அச்சத்திலும் கூட ஊடகங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் செய்திகளை தவிர்க்கின்றன. அல்லது உண்மைப் பெயர்களை மாற்றியும் முகங்களை மறைத்தும் செய்திகளை வெளியிடுகின்றன. 
பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லையே. பிறகெப்படி கயவர்கள் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்? அதற்கான துணிச்சல் அவர்களுக்கு எப்படி வருகிறது? 
மது, குடிபோதை என்று ஒரு பக்கம் காரணங்களை பட்டியல் போட்டாலும், மறுபக்கம் வேறு சில காரணங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதுபோன்ற செய்திகள், தகவல்களை கேள்விப்படும்போது அதைப் பற்றி எப்படி சிந்திப்பது என்பதற்கே ஒரு தனிப் பயிற்சி தேவைப்படுகிறது. 
நம் நாட்டில் 40 சதவீதம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்ற கசப்பான உண்மை நம்மை உலுக்கத்தான் செய்கிறது. 6 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் அதிக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 
இதற்குக் காரணம், அவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ள காமுகர்கள் நினைப்பதுதான். இதில், கிட்டத்தட்ட 80 சதவீத குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல அச்சப்படுகிறார்கள் அல்லது என்ன நேர்ந்தது என்றே தெரியாத பிஞ்சுக் குழந்தைகளாக இருக்கிறார்கள். 
அதிகபட்சம், சம்பந்தப்பட்ட நபரை அந்தக் குழந்தை மீண்டும் சந்திக்க முடியாத சந்தர்ப்பத்தை எப்படி ஏற்படுத்தலாம் என்றுதான் யோசிக்கிறார்களே தவிர, அந்த நபரை துணிச்சலாக தண்டிக்கவோ அல்லது காவல்துறையில் புகார் அளிக்கவோ யாரும் முன்வருவதில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வராதவரை இது போன்ற வக்ர புத்திக்காரர்கள் திருந்தப் போவதுமில்லை. 
ஆனால், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வு. காரணம், சட்டப்படியாக மட்டுமே இதற்கு தீர்வு காண்பது கடினம். 
தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற அச்சம் காரணமாக இவற்றை மூடி மறைத்து விடலாம் என்ற மன ஓட்டத்தை பெற்றோர் மாற்றிக்கொள்ள வேண்டும். 
கிடைக்கப் போகும் தண்டனை மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தையிடம் இதுபோல் யாராவது பாலியல் தொந்தரவு செய்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்பதை காமுகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
பல நேரங்களில் நீதிமன்றங்களில் சட்டப்படி தீர்ப்பு கிடைக்குமே தவிர நீதி கிடைக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை நீதிமன்றங்களுக்கு வரவழைத்து விசாரிப்பது வேறு பல விளைவுகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளை மனரீதியாக பாதிக்கவும் செய்யும். 
எனவே, தனிப்பட்ட முறையில் மட்டுமே பாதிக்கப்பட்ட குழுந்தைகளை விசாரிக்க வேண்டும். சிறார் வன்கொடுமை வழக்குகள் நம் நாட்டில் சராசரியாக ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை நடக்கின்றன. 10 வயதில் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிக்கு 15 அல்லது 18 வயதில்தான் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கும். 
வேலைக்குச் செல்லும் பெற்றோர் உள்ள வீட்டில் குழந்தைகளுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கும் இதுபோன்ற கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. 
இதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, பெற்றோர், உறவினர், நண்பர்கள் என பொதுமக்களாகிய நாமும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நம்பிக்கைக்குரியவர்களைத் தவிர வேறு யாரிடமும் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்புக்கு என ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக குழந்தைகள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அவர்கள் மனத்தில் பதியச் செய்ய வேண்டும். தண்டனைகளை கடுமையாக்குவதன் மூலமும் இத்தகைய குற்றங்களை குறைக்கலாம். 
சிறார் பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க இந்தோனேசியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்தல் உள்ளிட்ட கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தை இந்தோனேசியா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. 
ரசாயன முறையில் ஆண்மை நீக்குதல் என்பது மருத்துவ தர்மங்களை மீறுவதாக உள்ளது என அந்நாட்டு மருத்துவ அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், தண்டனைகளுக்கு ஆதரவாக இந்தோனேசிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 
இதுபோல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில் இத்தகைய குற்றங்கள் மிகக் குறைவு. எனவே, நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com