சட்டம் தேவையா, சட்ட மாற்றம் தேவையா?

ஜெயலலிதா மறைவு, ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகல், சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க அ.இ.அ.தி.மு.க. சார்பாக ஆளுநரிடம் கடிதம்.

ஜெயலலிதா மறைவு, ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகல், சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க அ.இ.அ.தி.மு.க. சார்பாக ஆளுநரிடம் கடிதம். பிகார் மாநிலத்தில் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக் கோரிக் கடிதம் கொடுத்த மூன்று மணி நேரத்தில் அங்கே ஆளுநர் முடிவு எடுக்கிறார். ஆனால், தமிழகத்தில், ஆளுநர் நாள்கணக்கில் காலம் கடத்துகிறார். 
இந்நிலையில், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பில் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் நீதிமன்றம் தண்டனை அறிவித்தது. இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியை முதல்வராகப் பொறுப்பேற்க அனுமதிக்க, இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. சார்பாக ஆளுநரிடம் கடிதம் தரப்படுகிறது. 
தனது பதவியை ராஜிநாமா செய்த ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அணி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. மீண்டும் ஆளுநர் மௌனம் காத்து, காலம் கடத்துகிறார். 
பிறகு, என்ன தோன்றியதோ, எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர். அவரது அமைச்சரவை பதவி ஏற்கிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் 12 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அ.தி.மு.க. அதிருப்தி அணியின் வேண்டுகோளின்படி பேரவையின் பெரும்பான்மையின்மை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுகிறார். 
பலப்பரீட்சையில் அ.தி.மு.க. தலைமைக் கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 பேர் எதிர்த்து வாக்களிக்கின்றனர். ஆனாலும்கூட இவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டம் பாயவில்லை.
பல மாதங்களுக்குப் பின் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைகின்றன. டி.டி.வி. தினகரன் ஆதரவு அணி உருவாகி 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநரிடம் முதல்வர் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவித்துக் கடிதம் கொடுக்கிறார்கள். ஆளுநர் அதை உட்கட்சி பிரச்னை எனக் கூறி கிடப்பில் போடுகிறார். 
எதிர்க்கட்சியான தி.மு.க., ஆளுநரிடம் பழனிச்சாமி அரசு பெரும்பான்மையின்மையை நிரூபிக்கக் கோரி மனு கொடுத்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடுக்கின்றனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், 19 சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடவடிக்கையை ஏன் கட்சி மாறுதலாகக் கருதக் கூடாது என அறிவிக்கை கொடுத்து அரசியலமைப்பு சட்ட 10-ஆவது அட்டவணை 1985, 52-ஆவது திருத்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சி மாறுதல் காரணம் கொண்டு, தகுதியின்மையாக்குதல் விதியின் கீழ் 18 உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்கிறார். 
ஒருவர் அணி மாறியதால் அவரை சபாநாயகர் காப்பாற்றி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இதோடு கூட, குட்காவை சட்டப்பேரவைக்குக் கொண்டு வந்த பிரச்னையில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 20 பேரையும் அவைக்குழு நடவடிக்கையை வைத்துத் தகுதி நீக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்படுகிறது. 
முன்யோசனையாக தி.மு.க. நீதிமன்றம் சென்றதால் தகுதி நீக்கம் தாற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டது. எந்த நேரமும் இது நிகழலாம்.
இவை அனைத்தும் தமிழக ஆட்சியில் உள்ளவர்களின் தொடர் முயற்சியாலும் மத்தியில் உள்ள பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பேரவாவினால் அவர்கள் வழங்கிய ஆசியுடனும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சசிகலா ஆட்சி அமைக்கக் கோரியபோது காலம் தாழ்த்தினார் ஆளுநர். பிகார் மாநிலத்திலோ மூன்று மணி நேரத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணியினர் 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உத்தரவிடப்பட்ட பெரும்பான்மை நிரூபிப்பு, தினகரன் அணியினர் 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெரும்பான்மை நிரூபிப்பு உத்தரவு ஆளுநரால் வழங்கப்படவில்லை.
சபாநாயகர் முன்னிலையிலோ, சட்டப்பேரவையிலோ கட்சி மாறுதல், கொறடா உத்தரவிற்குக் கட்டுப்படாமை இப்படி எதுவுமே நிகழாத நிலையிலும், மேலும், எதிர்க்கட்சி எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளாத நிலையிலும், ஆளுநரே அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்று 19 சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை கிடப்பில் போட்ட நிலையிலும் சபாநாயகர் எப்படி இதனை கட்சி மாறுதல் என எடுத்துத் தகுதி நீக்கம் செய்தார் என்று புரியவில்லை. 
அப்படியென்றால், பேரவையில் எல்லோர் முன்பும் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்படாமல் மீறி வாக்களித்த ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 12 சட்டப்பேரவை உறுப்பினர்களின் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? 
234 உறுப்பினர்களில் 233 உறுப்பினர்கள் இருக்க, பெரும்பான்மைக்கு 117 வேண்டும். பதவி நீக்கத்துக்குப் பிறகு, தற்போது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பதவி நீக்கத்தின் மூலம் 215-ஆகக் குறைத்துள்ளனர். 
பெரும்பான்மைக்கான எண்ணிக்கை அதனால் 108 ஆகக் குறைந்துள்ளது. (இன்னும் குட்கா விவகாரத்தில் 20 பேர் மீது கை வைத்தால் இன்னமும் குறையும்). ஆட்சியை நீடிப்பதற்கான முயற்சிதான் இது என்பது தெளிவு.
10-ஆவது அட்டவணைப்படி சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதுதான். 2011-இல் கர்நாடகா சட்டப்பேரவை, எடியூரப்பா வழக்கில், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவளிக்காத 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை இதே சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்த முன் உதாரணங்கள் இருந்தாலும், இவ்வழக்கில் தீர்ப்பு உடனடியாக வந்துவிடுமா என்ன? 
அதற்குப் பின் உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு, அதன் பிறகு உச்சநீதிமன்றமும் உச்சநீதிமன்ற மேல்முறையீடு என்பதெல்லாம் இருக்கிறது. அதற்குள் 2019 வந்துவிடும்.
கட்சித்தாவல் சட்டம் எப்போதுமே நடுநிலையாக இருந்தது இல்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே; அதுவும், மத்தியில் ஆளும் கட்சியின் ஆசி பெற்ற ஆளும் கட்சிக்கே சாதகமாக இருந்து வருகிறது. 
எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானளாவிய அதிகாரம் படைத்ததாகக் கூறிக்கொண்ட பி.எச். பாண்டியனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், மத்தியில் ஆள்பவர்களின் ஆசி இல்லாததனால் ஜானகி அரசு ஒரு சில மாதத்தில் கலைக்கப்பட்டது.
முந்தைய ஜெயலலிதா அரசில் விஜயகாந்தின் தே.மு.தி.க. உறுப்பினர்கள் அ.தி.மு.க. பக்கம் சாய்ந்தும், ஆளுங்கட்சியின் ஆசியினால் அவர்கள் பதவி பறிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வந்தனர்.
உத்ரகாண்டின் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசிற்கு ஆபத்து ஏற்பட்ட போது, காங்கிரஸைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து அரசுக்கு வெளிப்படையாக சதி செய்தனர். 
இதனால், காங்கிரஸ் கட்சியால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என்று தள்ளுபடி செய்தது. இங்கும் தினகரன் அணி எந்த மாற்றுக் கட்சியினருடனும் கூட்டணி வைக்கவில்லை என்பது தெளிவு.
1986-இல் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரண்டு உறுப்பினர்கள் இதே சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட வழக்குகள், சூழ்நிலைகள் தெரிந்தும் இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான முடிவை சபாநாயகர் எடுத்ததாக வைத்துக் கொண்டாலும், இதற்காக சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவிக்கத்தான் முடியுமே தவிர, அவரை தண்டித்துவிட சட்டம் கிடையாது.
பி.எச். பாண்டியன் சொல்வது போல, இந்தப் பிரச்னையில் அவருக்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
சுயேச்சைகளுக்கும் கட்சித் தாவல் தடை சட்டம் பொருந்தும். கோவாவிலும், மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாகக் காங்கிரஸ் உருவாகி இருக்க, சுயேச்சைகளை இணைத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சி அமைத்திருக்கிறது. 
சுயேச்சைகள் பிற கட்சியில் இணைந்தால் பதவி போகும். ஆட்சியில் இணைந்தால் இந்தச் சட்டம் என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது; செய்ய முடியாது.
இந்தச் சட்டம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சி மாறுதல் என்னும் குதிரை பேரத்தைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதைக் கட்டுப்படுத்தியதா என்றால் இல்லை. 
மாறாக இந்தச் சட்டம் உட்கட்சி ஜனநாயகத்தை சீரழிக்கவும் ஆளுங்கட்சியின் தலைவரின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சாதகமாகப் பயன்படவும், ஒரே குற்றத்தைச் செய்த இருவேறு நபர்களில் ஒருவரை தண்டிக்கவும், ஒருவரை தண்டிக்காமல் விடவும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 
இந்த நிலையில் சட்டம் தேவைதானா? அல்லது இந்தச் சட்டத்தில் மாற்றம் தேவையா என்று முடிவெடுக்கும் கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com