நதிகள் எங்கே போகின்றன...? 

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பாயும் நொய்யலில், சுமார் 9 கி.மீ. தொலைவுக்கு முட்புதர்களை அகற்றும் பணி தொழில் அமைப்புகளால், பல லட்சம் ரூபாய் செலவில் தற்போது நடைபெற்று வருகிறது

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் பாயும் நொய்யலில், சுமார் 9 கி.மீ. தொலைவுக்கு முட்புதர்களை அகற்றும் பணி தொழில் அமைப்புகளால், பல லட்சம் ரூபாய் செலவில் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியில் மாநகராட்சியும் இணைந்து செயல்படுகிறது. 
இதன் மூலமாக, நொய்யல் ஆறு இப்போது குப்பைகள் இன்றியும், புதர்கள் அகற்றப்பட்டும் அழகாகக் காட்சி தருகிறது. இது பாராட்டத்தக்க பணியே. ஆயினும், அரைக்கிணறு தாண்டும் கதையாகவே இது காணப்படுகிறது. நொய்யலில் காணப்படும் புதர்களை அகற்றி, தூர் வாரிவிட்டால் ஆறு புத்துயிரூட்டப் பட்டுவிடுமா? 
நொய்யல் ஆற்றில் தற்போது புதர்கள் அகற்றப்பட்டுவிட்டாலும், ஓடும் நீரின் தரத்தில் எந்த மாற்றமுமில்லை. அருகில் நெருங்கினாலே முகம் சுளிக்கச் செய்யும் துர்வாடையுடன், கருநீல நிறத்தில் ஆறு ஓடுகிறது. மழை பெய்யும்போது மட்டுமே ஆற்றில் நல்ல நீர் ஓடுகிறது. அதன்பிறகு இரண்டு நாள்களில் ஆறு பழையபடி கழிவுநீர் ஓடையாக மாறிவிடுகிறது. 
உடனடியாக, 'இதற்கு சாய ஆலைகளின் கழிவுநீரே காரணம்' என்று குற்றம் சாட்டுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. சாய ஆலைகளிலிருந்து வெளியாகும் சாயக் கழிவுநீரால் ஆறு மாசுபடுகிறது என்பதும் உண்மை. 
ஈரோட்டில் பாயும் காவிரியிலும், வேலூரில் பாயும் பாலாற்றிலும்கூட, தோல் ஆலைக் கழிவுகளால் ஆறு மாசுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தொழிலகக் கழிவுகளால் நதிகள் நஞ்சாவது ஆபத்தானதே. இருப்பினும், நதிகளின் சீரழிவுக்கு தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமே முழுமையான காரணமா? நிச்சயமாக இல்லை.
திருப்பூரில் இயங்கும் சாய ஆலைகளால் நொய்யல் ஆறு பாதிக்கப்படுவதைத் தடுக்க, நீதிமன்ற உத்தரவுப்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும், மழைக்காலங்களில் ரகசியமாக சாயக் கழிவுநீரை ஆற்றில் திறந்துவிடும் போக்கு தொடர்கிறது. அதையே காரணமாகச் சுட்டிக்காட்டி, நொய்யலின் பாதிப்புக்கு சாய ஆலைகள் மீது முழு பழியையும் சுமத்துவது நியாயமல்ல.
நொய்யல் மட்டுமல்ல, தமிழகத்தில் பாயும் பெரும்பாலான நதிகள் சாக்கடைக் கழிவுகளின் சங்கமமாகத்தான் காட்சி அளிக்கின்றன. மழையை நம்பியுள்ள ஆற்றில் நீர்வரத்துக் குறையும்போது, நகரங்களின் கழிவுநீர் ஓடைகள் ஆற்றில் கலக்கின்றன. தற்போது தமிழக ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, கழிவுநீர் ஓடுகிறது. நதிகளை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறை தனது பொறுப்பை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. நதிகளில் கலக்கும் சாக்கடைக் கழிவுகளே அவற்றை மரணிக்கச் செய்கின்றன என்பதுதான் நிதர்சனம்.
இந்தக் கசப்பான உண்மையை மறைக்கவே, தொழிலகக் கழிவுகள் நதியில் கலப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம். இது ஓர் எளிய தற்காப்பு உத்தி. நாம் ஒவ்வொருவருமே நதியில் கலக்கும் சாக்கடைக் கழிவைத் தடுக்காமல் பொறுப்பற்று வேடிக்கை பார்க்கிறோம். 
நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் நமது தெரு முனையைக் கடந்துவிட்டால் போதும் நமக்கு. அதன்பிறகு அக்கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்கள் வாயிலாக எங்கு சென்று சேர்கிறது என்று நாம் சிந்தித்திருக்கிறோமா?
நமது ஆறுகளும் ஓடைகளும், சாக்கடைக் கழிவுநீர் இறுதியாகச் சென்று கலக்கும் புகலிடமாகி விட்டன. சாக்கடையாகிவிட்ட ஆறுகளை கூவம் நதி என்று விமர்சிப்பதும் வழக்கமாகிவிட்டது. 
சென்னையின் அடையாளமாகிவிட்ட இதே கூவம் நதியில், மீன்பிடி தொழிலும் படகுப் போக்குவரத்தும் 70 ஆண்டுகளுக்கு முன்னர்வரை நடைபெற்றிருக்கின்றன. இந்த நதி சென்னை மக்களின் தாகம் தீர்த்தது என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது. சென்னையில் ஓடும் மற்றொரு நதியான அடையாறும் இதேபோன்ற மோசமான நிலையில்தான் உள்ளது. 
கூவம் நதியின் நீரை பரிசோதனை செய்ததில், அதில் ஆபத்தான உலோகப் பொருள்களும், வேதிப்பொருள்களும், சுகாதாரக் கேடு விளைவிக்கும் கிருமிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. தொழிலகக் கழிவுகளும் வீட்டுக் கழிவுகளும் கலந்து இந்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
சாக்கடைக் கழிவுநீரை எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல் ஆற்றில் விடுவதை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் எந்தக் கவலையுமின்றிச் செய்கின்றன. கிராம ஊராட்சிகள் துவங்கி, சென்னை மாநகராட்சி வரை எங்கும் இதுதான் நிலைமை. இதுவே நமது நதிகளின் நாசத்துக்குக் காரணம். 
பிரிட்டன் தலைநகரான லண்டனில் பாயும் தேம்ஸ் நதியும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இதேபோல மாநகர சாக்கடைக் கழிவுகளின் ஓடையாகத்தான் இருந்தது. 
நதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அந்நாட்டு அரசும், மக்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் இன்று தேம்ஸ் நதி புத்துயிர் பெற்றுவிட்டது. லண்டனின் கெளரவ அடையாளமாக தேம்ஸ் நதி தற்போது மாறியிருக்கிறது. இதற்கு பிரிட்டன் அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளும், அதை ஏற்றுக்கொண்டு விதிமுறைகளை நேர்மையாகக் கடைப்பிடித்த மக்களும்தான் காரணம். 
நதி, இயற்கையின் வரம். அதைக் காப்பாற்ற பல்லாயிரம் கோடி செலவிடுவதில் தவறில்லை. அதனால்தான் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தில் நதிகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்படுகிறது. அதேசமயம், அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்களின் செயல்பாடு இருப்பதும் அவசியம். 
முதலில் சாக்கடைக் கால்வாயில் குப்பைகளைக் கொட்டும் அலட்சிய மனப்பான்மை மாற வேண்டும். நமது மக்களுக்கு ஆறுகள் புத்துயிரூட்டப்படுவதன் அவசியத்தை விளக்க வேண்டும். பிறகு அரசை வலியுறுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும்.
நொய்யல் ஆற்றை சீரமைக்க களமிறங்கியுள்ள அன்பர்கள், மாநில அளவில் முன்னோடியாக விளங்குகிறார்கள். அவர்கள், ஆற்றில் ஒரு சொட்டு சாக்கடைக் கழிவுநீரும்கூட கலக்காத நிலையை உறுதிப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே நதிகளைக் காக்கும். 
நாளைய சந்ததிக்கு நமது நதிகளையும் நீர்நிலைகளையும் பத்திரமாக ஒப்படைத்துச் செல்வது நமது கடமை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com