இயற்கை விவசாயத்தில் சிறு விவசாயிகள்

இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் முழுமையடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. செக்கருடைத் தலைவர்களும், நாம் தமிழர், நல்ல தமிழர் தலைவர்களும் நம்மாழ்வாரைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர்
இயற்கை விவசாயத்தில் சிறு விவசாயிகள்

இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் முழுமையடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. செக்கருடைத் தலைவர்களும், நாம் தமிழர், நல்ல தமிழர் தலைவர்களும் நம்மாழ்வாரைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர். முகநூலை கவனித்தால், தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் தூள் பறப்பதுபோல் ஒரு தோற்றம். 
சென்னை நகரில் நிறைய இயற்கை அங்காடிகள் தோன்றிவிட்டன. ஆன்லைன் வழங்கலும் உண்டாம். இருப்பினும், நம்பகத் தன்மையுள்ள நல்ல பாரம்பரிய விதைகளுக்கு வழியில்லை. விதைத் திருவிழாவில் வழங்கப்படும் விதைகள் முளைப்பதே இல்லை. 
உண்மையில் ஒட்டன்சத்திரமாகட்டும், கும்பகோணம் ஆகட்டும், சென்னை கோயம்பேடு ஆகட்டும், கோயம்புத்தூர் ஆகட்டும், அங்குள்ள காய்கறி அங்காடிகளில் நள்ளிரவிலிருந்து விடியும் வரை லாரி லாரியாகக் கொட்டிக் குவிக்கப்படும் காய்கறிகள், எவ்வளவு? 
மாம்பலத்தை மறந்து விடக்கூடாது. நடேசன் தெருவில் நடக்கவே முடியாது. காய்கறிகள் பிரமாதம். அவையெல்லாம் இயற்கைதானா? பச்செனத் தெரியும் காய்கறிகளும், கீரைகளும், நீண்ட புடலங்காய்களும், வெண்டை, கத்தரி, கோஸ், வெங்காயம், தக்காளி எல்லாமே இயற்கைதான். எப்படி விளைந்தன? யூரியா போடுவார்கள், பொட்டாஷ் தூவுவார்கள், நோய் வந்தால் மானோ குரோட்டோபஸ் அடிப்பார்கள். அந்தக் காய்கறிகளைக் கையில் வாங்கிப் பையில் போடும் மக்கள், அவை விளைந்து வந்த சரித்திரத்தை நினைப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை மாறி இயற்கை விவசாயம் வளர வேண்டும் என்பது நியதி.
உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது என்ன? 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் பெரியவர் எஸ்.ஆர். சுந்தரராமன் 'தமிழ்நாடு உழவர் தொழில்நுட்பக் கழகம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அவருடைய நண்பர்களின் துணையுடன் இயற்கை விவசாயத்திற்கு ஏற்றபடி முறையான பயிற்சி வழங்கினார். அதில் கலந்து கொண்ட நான் பயிற்சியாளராகவும், பயிற்றுநராகவும் பெற்ற அனுபவத்தில், பத்தாண்டுகளுக்கு முன் நானும் லாப நோக்கம் இல்லாமல் எனது பண்ணையில் பயிற்சி வழங்கினேன்.
அது நாள் வரை விழிப்புணர்வுப் பிரசாரம் மட்டுமே செய்து வந்த நம்மாழ்வார், மணப்பாறை - குளித்தலை செல்லும் வழியில் உள்ள சுருமான்பட்டியில் 'வானகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, மூன்றாவதாக இவரும் இயற்கை விவசாயப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். அவர் பெயருக்குள்ள விளம்பரம் சிறப்பாக வேலை செய்தது. விவசாயிகளுக்கு மட்டுமல்ல, எல்லா இளைஞர்களுக்கும் குறிப்பாக நிலமே இல்லாதவர்களுக்கும் சேர்த்தே பயிற்சி வழங்கப்பட்டது. நிலம் உள்ளவர்கள் இயற்கை விவசாயம் செய்யத் தயாராகலாம். நிலமே இல்லாத இளைஞர்கள் என்ன செய்வார்கள்? செய்கிறார்கள். நம்மாழ்வாரின் மறைவு இன்னமும் இந்த இளைஞர்களின் நல்வாய்ப்பு. நம்மாழ்வாருடைய படத்திற்கு மாலை, மரியாதை செய்து, ஆங்காங்கே புற்றீசல் போல் இயற்கை அங்காடிகளும், இடுபொருள் வியாபாரத்தையும் தொடங்கி, பிரமிக்கச் செய்து விட்டார்கள். ரெடிமேட் மிக்ஸ் போல் பஞ்சகவ்யம், தேங்காய்ப்பால், மோர் கரைசல், பூச்சி விரட்டிக் கரைசல் என்று படுஜோராக விற்பனை. 
பெரும்பாலான இயற்கை அங்காடிகளில் காய்கறி, பழ விற்பனை இருக்காது. உலர்ந்த பொருள்கள், தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊறி உலர்ந்த நெல்லிக்காய், சிறுதானியங்கள் வகையறா, சிற்சில சித்த - ஆயுர்வேத மருந்துகள், பல்வேறு மளிகை சாமான்கள் என்று குட்டிக்குட்டிக் கடைகள் மலர்ந்துள்ளன. 
பாரம்பரியமான மளிகைக் கடைகளில் நியாயமான லாபம் வைத்து விற்பது ஏற்புடையது. பாரம்பரிய அரிசிக்கு மருத்துவ குணம் உண்டு என்று கூறி, கிலோ ரூ.50, என்று விற்கப்பட வேண்டிய அரிசி கிலோ ரூ.200 என்று விற்கப்படுவதுண்டு. செங்கார், பெருங்கார் போன்ற சிவப்பு அரிசியை 'மாப்பிள்ளை சம்பா' என்று கூறி புற்றுநோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நிவாரணம் என்று விற்கும் சாமர்த்தியம் உள்ளவர்கள். 
நிஜமான மாப்பிள்ளை சம்பா ஒரு காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான நிலப்பகுதியில் சாகுபடி செய்தார்கள். புட்டு, அவல் உபயோகத்திற்கு ஏற்றது. இட்லி, தோசை செய்யலாம். மாப்பிள்ளை சம்பா புழுங்கிய காலகட்டத்தில்கூட, அதன் மருத்துவப் பயன் குறித்து நம் முன்னோர் பேசியதாகத் தெரியவில்லை.
பாரம்பரிய அரிசி விளைவது நமது மாநிலமா? ஒடிஸாவா? மேற்கு வங்கமா? என்ற கேள்விகள் உண்டு. அதுதான் போகட்டும். நாட்டு மாட்டுப் பால் வியாபாரம், மூத்திர வியாபாரம் இன்னமும் கொடுமை. 
கறந்த பாலாயிருந்தாலும் ஏ1 பால் கூடாதாம். ஏ2 பால்தான் சாப்பிடணுமாம். ஏ1 கலப்பினம். ஏ2 நாட்டு மாடு. இப்படி ஒரு விஞ்ஞான வியாபாரத்தை இயற்கை வியாபாரிகள் தொடங்கிவிட்டார்கள். ஏ2 பால் சாப்பிடுங்கள், நோயே வராது. அதற்காக ஒரு லிட்டர் பால் ரூ.150 என்றா விற்பது? கறந்த பால் கறந்தபடி கிடைப்பதே அரிது. அட, இயற்கை விவசாயம் செய்துகொண்டு சுத்தமான அடர்தீவனம் தந்து கிர் மற்றும் சாகிவால் எக்ஸ் ஜெர்சி கலப்பினம் வழங்கும் கறந்த பாலுக்கு எங்கள் கிராமத்தில் எனக்குக் கிட்டும் விலை ரூ.20 தான். அப்படியே ஒரு பேச்சுக்கு ஏ2 பால் ஒசத்தி என்றாலும், ரூ.50-க்கு மேல் விற்பது தர்மமாகுமா? 
சிறு தானியங்கள் கிலோ ரூ.150, மாப்பிள்ளை சம்பா ரூ.150, ஏ2 பால் லிட்டர் ரூ.150 என்று விற்றால், ஏழைகளாலும் நடுத்தர மக்களாலும் வாங்க முடியுமா? நம்மாழ்வார், 'வியாபாரமாகப் பார்க்காதீர்கள்' என்றல்லவா கூறினார்.
'இயற்கை விவசாயம் காலூன்ற வேண்டுமானால் ஒவ்வொரு விவசாயியும் அவரவர் தோட்டத்தை இடுபொருள் தொழிற்சாலையாக மாற்றுங்கள்...' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் நான் உரக்கக் குரல் கொடுத்ததுண்டு. அதற்காக பஞ்சகவ்யத்தையும் நாட்டுப் பசு மூத்திரத்தையும் பாட்டிலில் போட்டு 500 மில்லி ரூ.100 என்றா விற்பது? 
மண்ணைக் கலந்து மண்புழுக் கழிவு என்று பாக்கெட் போட்டு அதையும் ரூ.100 என்று விற்பது என்ன நியாயம்? நாட்டு மாட்டு மூத்திரம் புற்றுநோய் மருந்தாம். அதைக் கொதிக்க வைத்து வடித்து எடுத்தார்களா? நாட்டு மாடு வளர்ப்பவர்களைத் தேடிப்போய் மாட்டின் பின்பகுதியை கவனித்து, நீர் வீழ்ச்சி போல் விழும்போது இரண்டு கையையும் ஏந்தி வயிறு முட்டக் குடிக்கலாம். இலவசமாக, இளஞ்சூட்டில்.
ஆகக்கூடி, தமிழ்நாட்டில் இயற்கை வழி அங்காடிகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அந்த அளவுக்கு இயற்கை விவசாயம் தமிழ் மண்ணில் செய்வதாகத் தெரியவில்லை. வசதியுள்ள சில விவசாயிகளுக்கு மாற்று வருமானம் இருப்பதால் இயற்கை விவசாயம் செய்யலாம். 
பெரிய பெரிய பன்னாட்டு கார்ப்பரேட்டு நிறுவனங்களில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் லட்சக்கணக்கில் பணம் சேர்த்து, பின் கட்டாய ஓய்வு பெற்றும், புதிதாக நிலம் வாங்கி ஈடுபடுவோர் உண்டு. ஆனால், சிறு, குறு விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டார்களா? இங்கொன்றும் அங்கொன்றும் என்று சில சிறு விவசாயிகள் இயற்கை வழி கீரை, காய்கறி சாகுபடி செய்வது மிகவும் குறைவு. அது போகட்டும்.
ரசாயன விவசாயம் மண்ணை மலடாக்குகிறது. பூச்சி மருந்துகளால் நஞ்சு மிகுந்துவிட்டது என்று வாக்குமூலம் வழங்கும் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறு விவசாயிகளுக்கென்று எதுவும் திட்டம் வகுத்துள்ளதா?
நகர்ப்புறங்களில் நல்ல வருமானம் உள்ளவர்களுக்குரிய நஞ்சில்லா அங்காடிகள் பெருகியுள்ளன? ஏழை - நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி கணக்கில் கொள்ளப்படாததைப் போலவே, சிறு விவசாயிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் சிறு விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த தனிப்பட்ட நிதி ஒதுக்கீடும் ஊக்கமும் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் 'பரம்பரா கட் க்ருஷி யோஜனா' என்ற மைய அரசின் சிறு விவசாயிகளின் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தை, மாநிலம் செயல்வடிவமாக்கியுள்ளது. 
ஒடிஸா, மேற்கு வங்கத்திலும் பாரம்பரிய நெல் ரகங்களைக் காப்பாற்றவும், இயற்கை வழி விவசாயத்திற்கும் நிதி ஒதுக்கி செயலாற்றுகிறது. வரலாறு காணாத வறட்சி மாநிலமான ராஜஸ்தான் பாலைவனப் பிரதேசம் இன்று வளம் கொழிக்கும் விவசாய மாநிலமாக மாறிவிட்டது. அந்த அளவில் அங்கு மழைநீர் சேமிப்பும், காடு வளர்ப்பும் பல்கிப் பெருகி பருப்பு, சிறுதானிய உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மாநிலம். மழைநீர் சேமிப்பு, வன வளர்ப்பு, இயற்கை விவசாயத்துடன் பருப்பு என சிறுதானிய சாகுபடியைச் சிறு விவசாயிகள் சிறப்புடன் செய்கின்றனர். இதில் அமீர்கானின் 'சத்யமேவ ஜெயதே' இயக்கத்தின் பங்கேற்பும் சிறப்பு. 
அமீர்கான் இயக்கம் நூற்றுக்கணக்கான கிராமங்களை தத்தெடுத்து, மண்வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் போற்றி வளர்க்கிறது. ஆனால், தமிழ் நடிகர்கள்? கோடி கோடியாகப் பணம் சேர்த்து ஆங்கிலக் கல்வி பயில்விக்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் கட்டிக் கல்வியை விலை பேசலாம். 
அரசியலில் ஈடுபட்டு முதல்வராக வரத் துடிக்கலாம். விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கலாம். எந்த நடிகராவது, சினிமா இயக்குநராவது அமீர்கானைப் பின்பற்றி பல கிராமங்களைத் தத்தெடுத்து சிறு - குறு விவசாயிகளை இயற்கை வழிக்கு மாற்ற முன் வருவார்களா? தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திற்கும் சிறு விவசாயிகளுக்கும் தொடர்பற்ற நிலையே தொடர்கிறது.
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com