ஒன்றுபட வேண்டிய தருணம்

பசுமைச் சூழலை உருவாக்கும் முயற்சியில் பல்துறை வல்லுநர்களும் மற்றும் அறிவியலும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது

பசுமைச் சூழலை உருவாக்கும் முயற்சியில் பல்துறை வல்லுநர்களும் மற்றும் அறிவியலும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. பல்வேறு துறைகளின் அறிஞர்கள், அதாவது விலங்கியல், பயிரியல் ஆராய்ச்சியாளர்கள், வேளாண் மற்றும் கால்நடைத்துறை விஞ்ஞானிகள், சமூகவியல், உளவியல் ஆய்வாளர்கள் இன்னோரன்ன பிரிவுகளில் குறிப்பாக சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்வோர் ஒன்றுபட்டு நிறைவேற்ற வேண்டிய கடமை பசுமைச் சூழலை உருவாக்குவதாகும்.
மக்கட்தொகைப் பெருக்கம், காலநிலை மாறுபாடு, புவி வெப்பமயமாதல், குறைந்த அல்லது அளவுக்கு அதிகமான மழையினால் பெருவெள்ளம் ஏற்படுதல், பனிமலைகள் உருகுதல் எனப் பல்வேறு காரணங்கள் இயற்கைச்சூழல் பாதிக்கப்படுவதில் வரிசைகட்டி நிற்கின்றன. 
வரலாற்றுப் பார்வையில் நாம் அறிவது என்னவென்றால், இனப்பெருக்க சக்தி (Fecundity), எதார்த்த இனப்பெருக்க நிலை (Fertility) போன்ற காரணிகளுக்கு அப்பாற்பட்டு மருத்துவத்தின் மகத்துவமும், அதன் விளைவாக மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்ததும் மக்கட்தொகைப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைந்தன. 
பெருகிய மக்கட் கூட்டம் இயற்கையோடு இணைந்து வாழத் தலைப்படாமல் இருந்ததால் பசுமைச் சூழல் பெருமளவு பாழ்பட்டது.
மாபெரும் ஜனத்திரள் இயற்கை வளங்களின் மேல் பெருஞ்சுமையை ஏற்படுத்துவதென்பது இன்றுவரை தொடர்கிறது. எரிபொருளுக்காகவும், மரச் சாமான்களுக்காகவும், ஆசனங்கள் போன்றவற்றை தயார் செய்யவும் மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் வெட்டப்பட்டன. உலக யுத்தங்களின் போது பெருமளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் மிக அதிக அளவிற்கு உலகமெங்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டது இந்தக் காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தது. 
விடுதலையடைவதற்கு முன் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, சீரற்ற பொருளாதார நிலையை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தது. வாழ்வியல் சூழலால் பூமிக்கடியில் கிடைக்கும் எரிபொருள் வேகமாக நுகரப்பட்டது. 
வனங்கள் அழிக்கப்படும் நிர்ப்பந்தம் நடந்தேறியது. இதனால் இயற்கை வளங்களின் பாதிப்பை மட்டுமல்லாமல், காலநிலை மாற்றங்களையும், வாழ்வாதாரத்தைக் குலைக்கும் பொருளாதார சீர்கேட்டையும் இந்தியா சந்திக்க நேர்ந்தது.
நாடு விடுதலை அடைந்த பின் இந்தியாவின் பசுமைச் சூழலை மேம்படச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முக்கியமானது "வனமகோத்ஸவா' ஆகும். 
1950-ஆம் ஆண்டு உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கே.எம்.முன்ஷியால் ஓர் இயக்கமாகத் தொடங்கப்பட்ட இந்த மரம் நடுவிழா, ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் கொண்டாடப்படுகிறது. 
"வனமகோத்ஸவா' வாரத்தின்போது இந்த மண்ணின் மைந்தர்கள் மரங்களை 
நடவேண்டும் என்பது அவரவர்களின் கடமையாக எதிர்பார்க்கப்பட்டது. 
அன்று தொடங்கி இன்றுவரை பல லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டிருந்தாலும், 2011-ஆம் ஆண்டு கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியைத் தாக்கி உயிர் சேதத்தையும் ஏற்படுத்திய தானே புயல், 2016-ஆம் ஆண்டு சென்னையை நிலைகுலையவைத்த வர்தா புயல் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இயற்கை இடர்பாடுகள் ஒருபுறமிருக்க, தனி மனிதத் தவறுகள் எந்த அளவுக்குப் பிரச்னைகளை உருவாக்கியிருக்கின்றன என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர், நிலைகளின் அருகே வீடுகள் கட்டுவதும் ஆற்றின் வழியையும், நீர்வழிப் பாதைகளையும் மறித்து குடியிருப்புகள் உருவாக்குவதும் தவறு என்ற புரிதலுக்கு நாம் கொடுத்த விலை அதிகம்.
2015-ஆம் ஆண்டின் இறுதியில் சென்னை மாநகரம் வெள்ளக்காடாகக் காட்சியளித்தபோது, பல்வேறு மாநில, மத்திய அரசுத்துறைகளும், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், திரைப்படத்துறையினரும் பேரிடர் மேலாண்மையை நன்றாகவே செயல்படுத்தினர்.
அனைத்து முகமைகளும் ஒரு முனைப்போடு செயலாற்றிய வகையில் ஏற்பட்ட குழு மனப்பான்மையைப் பாராட்டியே தீரவேண்டும். இயற்கை பேரிடர்களின்போது குழுமனப்பான்மை குறிப்பாக, இளைஞர்களின் சக்தி எப்படி இருக்கும் என்பதை முதன்முறையாக இரு ஆண்டுகளுக்கு முன் உணர்ந்து கொண்டோம்.
இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு கல்வி நிலையங்கள், இயற்கை இன்னல்களை எதிர்கொள்வதையும், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகளையும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயிற்றுவித்தல் என்பது காலத்தின் கட்டாயம். 
கடல் சீற்றம்கொண்டு மக்கள் வாழும் நிலப்பரப்பில் மேவிடும்போதும், நில அதிர்வின்போதும், மழைக்கால வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும்போதும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதே வாழ்க்கைக் கல்வியை அர்த்தப்படுத்தும் என்பதை கல்வியாளர்கள் உணர்ந்துகொள்ளும் தருணம் வந்துவிட்டது.
கடல் அலைகள் சீற்றம் தணிக்க தூண்டில் வளைவுகள், அப்படியே நிலப்பரப்பின் மீது கடல் உள்ளே வந்தால் பெரும் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க அலையாத்திக் காடுகளை உருவாக்கி, நல்லமுறையில் பராமரிப்பது, இவையெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகவும் முக்கியமான கடமைகளாகும்.
இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மற்றுமொரு முக்கியக் கடமை உள்ளது. நாட்டின் சில இடங்கள் மிகையான நீர்வரத்தால் வெள்ள அபாயத்தில் தவிப்பதும்; வேறு சில இடங்கள் நீரின்றி வறட்சியின் பிடியில் சிக்குவதும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. நாட்டின் நதிகளை இணைப்பது குறித்தத் திட்டம் சிந்தனை அளவிலேதான் பற்பல ஆண்டுகளாக இருக்கிறது.
நாடு விடுதலை அடைந்த தருணத்தில் இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், விவசாயம் எனும் ஒரு துறையின் மூலமாகவே இந்தியா வல்லரசாகி இருக்கக்கூடும். 
வல்லரசாக ஆகும் எண்ணம் கைகூடவிருக்கும் இந்த வேளையில், நதிகளை இணைக்கும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com