வேண்டாம் இந்த விபரீதம்

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என

திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வந்தபோது அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் அரசியல் மற்றும் சாதித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. 
அவற்றில் ஈ.வெ. ராமசாமி பெரியார், வ.உ. சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் பெயர்களும் அடங்கும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்த பின்பு தொடர்ந்து வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு பெரிய மாவட்டங்களையும், போக்குவரத்துக் கழகங்களையும் பிரித்து சாதித் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.
1979-இல் தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்ற எம்.ஜி. ராமச்சந்திரன், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தெருக்களுக்கு சூட்டப்பட்டிருந்த சாதித் தலைவர்களின் பெயர்களை நீக்க உத்தரவிட்டார். 
ஆனால், மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதன் முறையாக முதல்வர் பதவி வகித்த 1991 முதல் 1996 வரையில் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் சாதித் தலைவர்களின் பெயர்கள் அதிகமாக சூட்டப்பட்டன. 
அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் பெரும்பான்மை சாதியினரின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு சாதித் தலைவர்களின் பெயர்களை சூட்டுவதில் ஆர்வம் காட்டியது. 
1997-இல் தி.மு.க. ஆட்சியின்போது, விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியான தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரை அரசு அறிவித்தது. அறிவிப்பு வெளியான உடனே தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. 
வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரைத் தாங்கிச் செல்லும் பேருந்துகளில் பயணிப்பதில்லை என்று முக்குலத்தோர் அறிவித்தனர். 
அதனைத் தொடர்ந்து அந்த போக்குவரத்துக் கழக பேருந்துகள் மீது ஆங்காங்கே கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சாதிகளுக்கு இடையே மோதல் வெடித்தது, கலவரங்கள் ஏற்பட்டன. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இரு தரப்பையும் சேர்ந்த ஐந்து பேர் வரையில் இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 1995-இல் நடைபெற்ற காவல்துறை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு தென் மாவட்டங்களில் தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக இரு சாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. 
1995 முதல் 1998 வரையில் மட்டும் இரு தரப்பிலும் சுமார் 250 பேர் வரை மாறிமாறி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. 
அத்தகைய பதற்றமான சூழ்நிலையில், விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்டது, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போலாயிற்று. 
இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி. அந்தக் கூட்டத்தில், இனிமேல் மாவட்டங்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் அரசியல் மற்றும் சாதித் தலைவர்களின் பெயரை சூட்டுவதில்லை என முடிவு செய்தார். 
ஆனால், இப்போது அந்த முடிவை தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மீறி, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட உரிய நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருப்பது பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை விமான நிலையம் அமைந்துள்ள இடத்தில், முதலாவதாக 1932-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமான ஓடுபாதை அமைக்க சின்ன உடைப்பை கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் சுமார் 1,000 ஏக்கர் நிலத்தை அளித்தார்களாம். 
அதன் பின்பு படிப்படியாக அந்த இடம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது விமான நிலையமாக உருப்பெற்றுள்ளது. எனவே, அந்த விமான நிலையத்துக்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்பதில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மருத்துவர் க. கிருஷ்ணசாமி, தொல். திருமாவளவன் ஆகியோர் உறுதியாக உள்ளனர். 
ஆனால், சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என முக்குலத்தோர் மட்டுமின்றி ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் இப்போது மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்தும் கூட.
தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய அளவிலான சாதிக் கலவரங்கள் இல்லை. அவ்வப்போது சாதி தலைவர்களின் சிலைகளுக்கு விஷமிகள் செய்யும் அவமரியாதையால் ஆங்காங்கே பதற்றம் ஏற்படுவதுண்டு. ஆனாலும், நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது. 
முத்துராமலிங்கத் தேவரும், இம்மானுவேல் சேகரனும் தலைவர்களாக உயர்ந்தவர்கள். எனினும் அவர்களை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தும் போக்கு இன்னும் மாறாத சூழ்நிலையில் மீண்டும் அவர்களின் பெயர்களை சூட்ட முனைவது பொது அமைதியை சீர்குலைக்கும் செயலாகவே அமையும். 
எனவே, அத்தகைய விபரீதத்தை இனியும் எந்த அரசும், அரசியல் கட்சியும் செய்யாமல் இருப்பதே அமைதிக்கு வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com