மனிதப் பேரிடர் மாசு

தில்லியில் பனியுடன் நச்சு மாசு கலந்து அடர் பனிப்புகை மூட்டமாக நிலவி வருகிறது. எதிரே யார் நிற்கிறார்கள் என்பது கூடத் தெரியாத அளவுக்குப் பனிப்புகை மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தில்லியில் பனியுடன் நச்சு மாசு கலந்து அடர் பனிப்புகை மூட்டமாக நிலவி வருகிறது. எதிரே யார் நிற்கிறார்கள் என்பது கூடத் தெரியாத அளவுக்குப் பனிப்புகை மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இது தலைநகர் தில்லிக்கு மட்டும் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. ஏனென்றால், இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு காற்று, நீர் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று அண்மையில் வெளியான ஆய்வுத் தகவல் இதை பொய்யாக்குகிறது.
தில்லியில் கண்கூடாகத் தெரியும் பனிப்புகை மாசு பிற மாநிலங்களில் கண்களுக்குத் தெரியாமல் காற்றில் கலந்துள்ளன. 2015-இல் மட்டும் உலகம் முழுவதும் 90 லட்சம் பேர் காற்று, நீர் மாசுகளால் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் உலகில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில் 25,15,518 பேரும் (24.5%), சீனாவில் 18,38,251 பேரும் (19.5%), பாகிஸ்தானில் 3,11,189 பேரும் (21.9%), வங்கதேசத்தில் 2,60,836 பேரும் (26.6%), நைஜீரியாவில் 2,57,093 பேரும் (18.7%), இந்தோனேசியாவில் 2,11,896 பேரும் (13.5%), ரஷியாவில் 1,72,536 பேரும் (8.6%), அமெரிக்காவில் 1,55,155 பேரும் (5.7%) உயிரிழந்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
உலகம் முழுவதும் புகைப்பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையை விட ஒன்றரை மடங்கு அதிகமானோர் நீர், காற்று மாசுக்களால் உயிரிழக்கின்றனர். 
நிலத்தில் ஏற்பட்ட மாசுக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கக் கூடும். இந்த ஆய்வுத் தகவல்கள் மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட நாமும் ஏதோ ஒருவழியில் காரணமாக இருக்கிறோம் என்பதுதான்.
சிறு நஞ்சுபோல் மாசுகள் நம்முடைய அன்றாட வாழ்வில் புகுந்து மனிதனின் சராசரி வாழ்நாளைக் குறைத்து விடுகிறது. இந்தியாவில் மாசு மிக்க நகரங்களில் தில்லி முதலிடத்திலும், காஜியாபாத், அலாகாபாத், பரேலி ஆகிய நகரங்களும் உள்ளன. இந்தப் பட்டியலில் மும்பையைத் தொடர்ந்து சென்னையும் இடம்பெறத் தொடங்கிவிட்டது.
தில்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்பதற்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்தும் பலன் தரவில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நச்சு மாசு அதிகரித்தது. தில்லியின் காற்று மாசுக்கு ஹரியாணா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளும், தில்லியில் அதிகரித்து வரும் வாகனங்களின் புகை மாசும், பழுதடைந்த சாலைகளில் இருந்து கிளம்பும் தூசுகளும்தான் முக்கிய காரணம் என்று ஐஐடி ஆய்வுகள் கூறுகின்றன. 
விவசாயக் கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும், தில்லியில் கார் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும், 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கும், கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும், வாகன நிறுத்தக் கட்டணம் நான்கு மடங்கு உயர்த்த வேண்டும் என காற்று மாசுவைக் கட்டுப்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றம் ஆகியவை 100-க்கும் மேற்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டன. ஆனாலும், இந்த உத்தரவுகளை சரிவர செயல்படுத்தாததால் பலன் கிடைக்கவில்லை.
இதற்கு மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கிய காரணம். இதுபோன்ற உத்தரவுகளைச் செயல்படுத்த மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, மத்திய அரசு கவுன்சில் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மாசு பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். 
1952-ஆம் ஆண்டு லண்டன் நகரில் வெறும் 5 நாள் ஏற்பட்ட கடும் பனிப்புகை மூட்டத்தால் சுவாசக் கோளாறு பிரச்னையால் நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான அளவில் நிலக்கரியை எரித்ததால் ஏற்பட்ட மாசு, சல்ஃபர் ஆசிடாக மாறி பனியுடன் கலந்ததே இந்த பாதிப்புக்குக் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தில்லியில், காற்றின் தரமும் அதே அளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் பனிக்காலங்களில் மாசு அதிகரிக்கும்போது மட்டும் கூச்சல்போடுவதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. காற்றுமாசுவைத் தடுக்க நீண்ட நெடிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, தில்லியில் சுமார் 1 கோடி பதிவு பெற்ற வாகனங்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. 30 சதவீதம்தான் கார்கள் உள்ளன. 
இதனால்தான் முன்பு அமலாக்கப்பட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டத்தால் மாசு பெருமளவில் குறையவில்லை. ஆகையால், இனி தில்லியில் புதிய வாகனங்கள் பதிவை கடுமையாக்குவதுடன், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 'கேட்டலிடிக் கன்வர்டர்' எனும் தொழில்நுட்பத்தை நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 
இதனால், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் நச்சுத்தன்மையை இந்தத் தொழில்நுட்பம் மூலம் அழித்துவிடலாம். வாகன மாசு கட்டுப்பாட்டு பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக்கலாம். 
பட்டாசுகளில் இருந்து நச்சுப் புகையை வெளியேற்றும் ரசாயனங்களுக்குப் பதிலாக, ஆட்கொல்லி கொசுக்களை ஒழிக்கும் புகை வெளியேறும் வகையில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆராய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டியது அரசின் கடமை. 
அதற்கு ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். இந்தக் கடமையையும், பொறுப்பையும் தட்டிக்கழித்தால், 1952-ஆம் ஆண்டு லண்டன் நகர் சந்தித்த மனிதப் பேரிடரைப் போன்று இந்தியாவும் சந்திக்க நேரிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com