ஏழைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை!

தேசிய சுகாதாரக் கொள்கை இதற்கு முன் 2002-இல் வெளியிடப்பட்டது. இப்போது நான்கு முக்கியமான வகைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக 2017-இல் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை கூறுகிறது.

தேசிய சுகாதாரக் கொள்கை இதற்கு முன் 2002-இல் வெளியிடப்பட்டது. இப்போது நான்கு முக்கியமான வகைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக 2017-இல் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை கூறுகிறது.
 தாய் - சேய் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ள போதிலும், தொற்றா நோய்கள் மற்றும் சில வகை நோய்த் தொற்றுகளால் சுமை அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, வலுவான சுகாதார நலன் காக்கும் தொழில் துறை மலர்ந்துள்ளது.
 மூன்றாவதாக, மருத்துவத்துக்காகப் பெரும் தொகை செலவு செய்வதன் காரணமாக, கடனாளியாவது ஏழ்மை அதிகரிக்க முக்கிய காரணியாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நான்காவதாக, மற்றொருபுறம் பொருளாதார வளர்ச்சியால் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளது.
 சுகாதாரத் துறைக்கு நிதி அதிகம் ஒதுக்க வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. தனிநபர் வருவாய் 1000 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக உள்ள நாடுகளில் 18 சதவீதமும், 1000 முதல் 15 ஆயிரம் டாலர் வருவாய் உள்ள நாடுகளில் 22 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
 இந்தியாவில் இந்த வரி விகிதம் ஜிடிபியில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என நிபுணர் குழு சுட்டிக்காட்டி உள்ளது. இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், சுகாதாரத் துறைக்கு அரசின் பொருளாதாரப் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும், செல்வந்தர்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இந்தியாவில் இது சாத்தியமானதே.
 ஆனால், கள நிலவரம் இதற்கு நேர்மாறாக உள்ளது. அரசின் பங்களிப்பு அதிகரிப்பதற்கு பதிலாக, தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார் மருத்துவமனைகள் ஊக்குவிக்கப்பட்டதால், கடன் சுமை அதிகமானாலும் தனியார் மருத்துவமனைகளையே பொதுமக்கள் நாடுகின்றனர்.
 இந்தியாவில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 72 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 79 சதவீதம் பேரும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர் என 2014 ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
 உள்நோயாளிகள் பிரிவிலும் ஊரகப் பகுதிகளில் 58 சதவீதம் பேரும், நகர்ப்புற பகுதிகளில் 68 சதவீதம் பேரும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றுள்ளனர்.
 மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை அறிவித்தபோதிலும், 86 சதவீதம் ஊரக மக்களும், 82 சதவீதம் நகர்ப்புற மக்களும் எந்தவிதமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் இல்லை.
 ஊரகப் பகுதிகளில் 68 சதவீதம் பேர் மருத்துவ செலவுகளுக்குக் குடும்ப வருமானம் அல்லது சேமிப்பையே சார்ந்துள்ளனர். 25 சதவீதம் பேர் கடன் வாங்கி மருத்துவ செலவை சமாளிக்கின்றனர். நகர்ப்புற பகுதிகளில் 75 சதவீதம் பேர் வருமானம் அல்லது சேமிப்பையும், 18 சதவீதம் பேர் கடனையும் சார்ந்துள்ளனர்.
 குழந்தைப் பிறப்பில் ஊரகப் பகுதிகளில் 20 சதவீதமும், நகர்ப்புற பகுதிகளில் 11 சதவீதமும் மருத்துவமனைகளில் நிகழ்வதில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஊரகப் பகுதிகளில் குழந்தைப் பிறப்புக்கு சராசரியாக ரூ.5,544-ம், நகர்ப்புற பகுதிகளில் ரூ.11,685-ம் செலவழிக்கப்படுகிறது. இது ஏழைகளைப் பொருத்தவரை பெரும் சுமையாகும்.
 ஊரகப் பகுதிகளில் 7.7 சதவீதம் முதியோரும், நகர்ப்புற பகுதிகளில் 8.1 சதவீதம் முதியோரும் உள்ளனர். இவர்களில் ஊரகப் பகுதிகளில் 82 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 80 சதவீதத்தினரும் பொருளாதாரத் தேவைகளுக்குத் தங்கள் வாரிசுகளை சார்ந்துள்ளனர்.
 இயற்கையாகவே, ஏழைகள் தங்கள் சொற்ப வருமானத்தில் பெற்றோர்களின் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
 பெரு மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களின் கூட்டு காரணமாக, பல லட்சக்கணக்கான நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் நோயுறும்போது ஏழ்மைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 3.5 கோடி பேர் நோய்கள் காரணமாக ஏழ்மை நிலைக்கு ஆளாவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 ஆனால், 1990-க்குப் பிறகு, அரசுகளின் ஆதரவுக் கொள்கையால் தனியார் மருத்துவமனைகள் வளம் கொழிப்பவையாக ஆகியுள்ளன. ஒரு மருத்துவரில் இருந்து தொடங்கி பன்னாட்டு அமைப்புகள் உள்பட பல பெரிய மருத்துவமனைகள் வரை கணக்கிட்டால், நம் நாட்டில் சுமார் 10.4 லட்சம் மருத்துவமனைகள் உள்ளன.
 இந்தியாவில் மருத்துவத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2017-இல் அதன் வருவாய் 16,000 கோடி டாலர். 2020-இல் இது 28 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்தியாவில் 2000 முதல் 2017 வரை மருத்துவத் துறையில் 434 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வந்தவர்களின் எண்ணிக்கை 2015-இல் 1.30 லட்சம். இது 2016-இல் 2 லட்சமாக அதிகரித்தது.
 இதுபோன்றதொரு வளர்ச்சி தனியார் துறையினருக்கு லாபம் அளிப்பதாக இருக்கலாம். ஆனால், தனிநபரின் சுகாதாரத்தை மேம்படுத்தாது. மாறாக, இந்த வளர்ச்சி மருத்துவத் துறையில் முறைகேடுகளை அதிகரிக்கவே செய்யும்.
 மருத்துவத் துறையை பணம் படைத்தவர்களின் கரங்களில் இருந்து விடுவிப்பதுடன், காப்பீட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தாமல் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துவதே இப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com