ஆய்வுக்கூட்டம் எழுப்பும் சிந்தனைகள்

தமிழக ஆளுநர் தமது சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார் என்ற செய்தி, அந்நடவடிக்கை குறித்த இருவித கருத்துகளை ஈர்க்கின்றது.

தமிழக ஆளுநர் தமது சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு மேற்கொண்டார் என்ற செய்தி, அந்நடவடிக்கை குறித்த இருவித கருத்துகளை ஈர்க்கின்றது.
மாநிலம் மற்றும் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் நிலைக்கு மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்லது அமைப்பு, புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்படுத்தும் எந்த நிகழ்வுகளும் தவிர்க்கப்பட வேண்டியவை.
சாமானிய மனிதனின் பார்வையில், இந்நிகழ்வு, "எந்த முன்னுதாரணமும் அற்றது எனும் எண்ணம் முதல், இது தவறான முன்னுதாரணமாகத் திகழ்ந்துவிடக் கூடாது' என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
"நீதி வழங்கப்படுவது மட்டும் அல்ல, வழங்கப்படுவது போன்ற தோற்றமும் அளிக்க வேண்டும்' என்பார்கள். அதுபோல் ஆளுநர், நமது அரசியல்சட்ட வரையறைக்குள் செயல்படுவது மட்டுமல்ல - அத்தகைய தோற்றத்துக்குக் குறைவு வராமல் செயல்படுவதும் அவசியம்.
ஆளுநர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விவாதம் அரசியல் சட்ட நிர்ணய சபையில் எழுந்தபோது, சிலர், "ஆளுநர், மக்களது பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்' என்று முன்மொழிந்தனர். "ஒரே மாநிலத்தில் ஒரு முதல்வர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சட்டப்பேரவை அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பது, இரண்டு அதிகார மையங்களை ஏற்படுத்தி, அவர்களுக்குள் அதிகாரப் போட்டியையும் சச்சரவையும் ஏற்படுத்தும்' என்ற காரணத்தால் அது தவிர்க்கப்பட்டது. ஆளுநர், மைய அரசால் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற முடிவும் எய்தப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆளுநர், அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டார். பின்னர், இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி வழங்கப்பட்டபோது கூட, ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படுவதாக சட்டம் இருந்தது. இருப்பினும், அவருக்கு ஏராளமான - சிறப்பு அதிகாரங்கள் (Discretionary  Powers) இருந்தன .
1937-இல் ராஜாஜி, சென்னை ராஜதானியின் பிரதமராகப் பதவி ஏற்க அழைக்கப்பட்டபோது, தமது பதவி ஏற்பினை சில நாள்கள் தாமதப்படுத்தினார். "ஆளுநர், தேந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவோ அல்லது முரண்பட்டோ செயல்படக் கூடாது' என்பதனை வலியுறுத்தி, அன்றைய வைஸ்ராயின் சாதகமான உறுதி மொழியைப் பெற்ற பின்னரே பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், "ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளின் பேரில்தான் செயல்பட வேண்டும். எனவே, அவரது அதிகாரங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அமைய வேண்டும்' என ராஜாஜி வலியுறுத்தியதுதான்.
இந்தியாவில், மத்திய - மாநில உறவுகள் தொடர்பான விஷயங்களில், அவ்வப்போது எழும் ஒரு நெருடலான விஷயம், ஆளுநர் - அவரது அதிகாரங்கள் குறித்த விஷயம்.
1969-இல் தமது அறிக்கையை சமர்ப்பித்த நிர்வாக சீரமைப்பு ஆணையம் (Administrative Reforms commission), எந்தெந்த விசேஷ அதிகாரங்களை (Discretionary Powers) ஆளுநர்கள் பயன் படுத்தலாம் என்பது குறித்து - (Inter State Council) மாநிலங்கள் கவுன்சில் நிர்ணயிக்கட்டும். அதனை, மத்திய அரசு அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தது. ஆயினும் இதனை இதுவரை எந்த மத்திய அரசும் முன்னெடுத்துச் செல்லவில்லை.
நெருக்கடி நிலைக்குப் பின்னர், எண்பதுகளின் துவக்கத்தில், தென் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, அம் மாநில முதல்வர்கள் கூடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தினை வலியுறுத்தினார்கள். 
அதனையொட்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ஜஸ்டிஸ் சர்க்காரியா தலைமையில் ஓர் ஆணையம் அமைத்து, இந்திய அரசியல் சட்டம், மத்திய - மாநில அதிகாரப் பகிர்வுகள் - உறவுகள் ஆகியனவற்றை ஆய்வுக்குட்படுத்தி, எத்தகைய மாற்றங்கள் அவசியம் என்பன குறித்த சிபாரிசுகளை வழங்கச் சொன்னார். 
ஆளுநர் என்ற ஒரு பதவியே அவசியம் இல்லை என்பது முதல், ஆளுநரின் அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்பட வேண்டும் என்பன வரையிலும் பல்வேறு கருத்துகள் சர்க்காரியா கமிஷன் முன்னர் வைக்கப்பட்டன. 
ஆயினும் அரசியல் அமைப்பில், ஆளுநருக்குரிய இடம் அப்படியே நிலைக்க வேண்டும் என்றும், அதிக மாறுதல்கள் அவசியம் இல்லை என்றும் கமிஷன் தமது அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், ஆளுநரின் அதிகாரம் குறித்த சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி - சுட்டிக்காட்டியது. அவற்றில் முக்கியம் வாய்ந்தவை என ஜஸ்டிஸ் சர்க்காரியா கூறுவன:
1. மந்திரி சபை எடுக்கும் நிர்வாக முடிவுகள், சட்ட மசோதாக்கள் மற்றும் ஆளுநருக்குத் தேவைப்படும் தகவல்களை அளிக்க வேண்டிய கடமை சட்ட ரீதியாக முதல் அமைச்சருக்கு இருக்கிறது. 
2. ஆளுநர், தமது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும். இருப்பினும் அவருக்கென சில சிறப்பு அதிகாரங்கள் உண்டு. ஆனால், அவையும் கூட, 163 - (1), (2) ஆகிய பிரிவுகள் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. 
மக்களாட்சி முறையில் ஆளுநரின் அதிகாரம் என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை பாதிப்பதாகவோ, குறைப்பதாகவோ, தலையிடுவதாகவோ இருக்கக் கூடாது. ஆளுநரின் சிறப்பு அதிகாரங்கள் என்பது மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. 
ஆளுநரின் நடவடிக்கைகள், நம்பிக்கையின் அடிப்படையிலும், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும் எவ்வித அச்சத்துக்கும் இடமளிப்பதாக அமையாது, அந்த சிறப்பு அதிகாரங்கள் பிரயோகிக்கப்படவேண்டும்.
3. ஆளுநர், தமது அரசு தமக்கு ஆலோசனை வழங்க இயலாத சூழலில் அல்லது அரசே இல்லாத சூழலில் தமது சிறப்பு அதிகாரங்களை செயல்படுத்தலாம். சட்டப்பேரவையில் அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் - அதன் ஆலோசனைக்கு எதிராகச் செயல்படலாம். 
அரசு, அரசியல் சட்டத்துக்குட்பட்டு செயல்படாத சூழலில், அதனைக் கலைக்க சிபாரிசு செய்வது போன்ற சமயங்களில், தமது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் என்பனவற்றைத் தவிர்த்து, பொதுவாக, ஆளுநர் தமது அரசின் - அமைச்சரவையின், ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும்.
4. ஆளுநர் தமது அதிகாரத்தினை தனி மனிதர் என்ற முறையில் செயல்படுத்த முடியாது. மாநில அரசுகள், தங்களது நிர்வாக முடிவுகளை ஆளுநரின் பெயரால் செயல்படுத்துகின்றன. ஆளுநரின் பெயரால் இவை செயல்படுத்தப்பட்டாலும், அவற்றின் சாதக பாதகங்களுக்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். 
இவை குறித்த வழக்குகளைத் தொடரவும் - அல்லது வழக்கு தொடரப்பட்டால் சந்திக்கவும் வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உண்டே தவிர, ஆளுநருக்கு இல்லை (அதாவது, மாநில மக்களுக்காக செயலாற்றும் பொறுப்பும் அதற்கான விளைவுக்கான தார்மீக பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு - ஆளுநருக்கு இல்லை). இவை குறித்து பல பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
இவை தவிர, ஜஸ்டிஸ் சர்க்கரியாவின் மிக முக்கியமான சிபாரிசுகளில் ஒன்று, மத்திய ஆளும் கட்சியைச் சார்ந்த ஒருவர், ஆளுநராக நியமிக்கப்படுவது - அதிலும் குறிப்பாக, வேறு கட்சி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் நியமனம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இவை, இன்றைய சூழலுக்குப் போதுமான வெளிச்சம் பாய்ச்சுவதாகவே இருக்கின்றன.
பல ஆண்டுகளாக இருந்த அரசுகளினின்றும் கொள்கை ரீதியாக மாறுபட்ட அரசியல் கட்சி, இன்று மைய அரசினை நிறுவியிருக்கிறது. 
மக்களின் ஆதரவு பெற்ற இவ்வரசு, சில அடிப்படை மாற்றங்கள் அவசியம் எனக் கருதுமானால், முறையாக நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், பொதுமக்களிடமும் விவாதித்து, அரசியல் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்த பின்னர், நடைமுறைப்படுத்துவது பொருத்தமாக அமையும். மாறாக, அவர்களது அரசியல் பரிசோதனைகளுக்குத் தமிழ்நாடு சோதைனைக்கூடமாக மாற்றப்படக் கூடாது.
"இப்போதைய சமூக - பொருளாதார முன்னேற்றங்களை மனத்தில் கொண்டும், இந்திய ஒற்றுமையினையும் மக்களின் நலனையும் உறுதி செய்யும் வகையிலும், இந்திய அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்டும், மத்திய - மாநில தற்போதைய உறவுகளைப் பரிசீலித்து, பொருத்தமான - அவசியமான மாற்றங்களை சிபாரிசு செய்ய வேண்டும்' என சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது அன்றைய பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இன்றைய சூழல் கூட, இத்தகைய பரிசீலனையின் தேவையை உணர்த்துவதற்காகவே இருக்கிறது.
மேலும், இந்தச் சமயத்தில், நமது அரசியல் சட்டம் - "இந்திய மக்களாகிய நாம்தான் (We the People of India) உண்மையான அதிகாரம் உடையவர்கள் என்று பறைசாற்றுவது நினைவுக்கு வருவதை மறுப்பதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com