சிகிச்சைக்கு சிகிச்சை தேவை!

நம் நாட்டின் மருத்துவர்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்கிறார்களா அல்லது எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்கள் மருத்துவப் பணியை செய்கிறார்களா

நம் நாட்டின் மருத்துவர்கள், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்கிறார்களா அல்லது எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்கள் மருத்துவப் பணியை செய்கிறார்களா என்ற விவாதம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான 'மெர்சல்' எனும் தமிழ் திரைப்படத்தில் இது பற்றிய வசனம் ஒன்று இருந்ததை மருத்துவர் சங்கங்கள் எதிர்த்துள்ளன. ஆனால், உண்மையான கள நிலைமையை ஆராய்ந்தால், நல்ல சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் மருத்துவர்கள் மிகச் சிலரும், பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணி செய்யும் மருத்துவர்கள் வெகுபலரும் இருப்பது தெரியவரும்.
தனியார் மருத்துவமனைகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்ட பின்னர் பணம் ஒன்றே குறிக்கோள் என்ற வியாபார நோக்கில் இதுபோன்ற மருத்துவமனைகள் செயல்படுவதால், அவற்றில் பணிபுரியும் மருத்துவர்களும் இதுபோன்ற நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் எனலாம். இதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், இதுபற்றி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் இதுபற்றிய ஒரு சிறப்பான கட்டுரையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.
அந்தக் கட்டுரையில் தனது சகாவான ஒரு மருத்துவர், கர்னூல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் தனது மருத்துவத் தொழிலை செய்து வருவதாகவும், அவரை ஒரு நோயாளி அணுகியபோது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரூ.500 கட்டணம் எனவும் கூறினாராம். அந்த நோயாளி வசதி படைத்தவர் என்பதால், தன்னை ஒரு நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அந்த கிராம மருத்துவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 
அதற்கிணங்கிய அந்த மருத்துவர் அவரை ஒரு நகர மருத்துவமனைக்குத் தனது பரிந்துரையுடன் அனுப்பியுள்ளார். சில நாள்கள் கழித்து அந்த நகர மருத்துவமனையிலிருந்து கிராம மருத்துவருக்கு ரூ.1,000 கமிஷன் தொகையாக வந்துள்ளது. அதாவது, ஒரு நோயாளியை தங்களது பெரிய மருத்துவமனைக்குப் பரிந்துரைத்து அனுப்பியதற்கு அந்த மருத்துவருக்கு ஒரு தொகை வழங்கப்படுகிறது.
இதுபோன்று கமிஷனுக்காகப் பல மருத்துவர்களும் நோயாளிகளை பெரிய மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்கள். தனது மருத்துவமனையில் அந்த நோயாளியின் சிகிச்சைக்கோ, அறுவை சிகிச்சைக்கோ பெறும் கட்டணத்தை விடவும், அவரைப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பும்போது கிடைக்கும் கமிஷன் அதிகமானது எனும்போது, சுலபமாக சம்பாதிக்க முடிகிறது என்று நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. எல்லா ஊரகப்புற மருத்துவர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்றாலும், இன்றைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அத்தகைய எண்ணம் அதிகரித்து வருகிறது என்பதை அவர்கள் மனசாட்சியே சொல்லும்.
இதுபோலவே விஜயவாடாவில், கல்லீரல் சிகிச்சைக்காக ஒரு நோயாளி ஒரு மருத்துவரை சந்தித்தபோது, அவருக்கு மருத்துவம் செய்ய ரூ.2,000 ஆகும் எனக் கூறியுள்ளார். அவர் ஒரு பெரிய மருத்துவமனைக்குச் செல்ல விரும்பியதால், அவரை அப்படிப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மருத்துவருக்கு அந்தப் பெரிய மருத்துவமனையால் ரூ.6,000 வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு, அந்தக் கட்டுரையை எழுதிய மருத்துவர், இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை எனத் தனது சகாக்களான மருத்துவர்களைக் கண்டித்துள்ளார். தனது பணத்தை சரியான அளவில் செலவு செய்து தரமான மருத்துவ சிகிச்சையை நோயாளிகள் பெறுகிறார்களா எனக் கேட்கிறார் அவர். 
நமது நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 29 கோடி பேர் மருத்துவச் செலவு செய்வதால் மட்டும் ஏழ்மை நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற அவரது பதிவைப் பல ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கொடூரத்தை மருத்துவர்கள் கைவிட வேண்டும் எனவும், இந்திய மருத்துவக் கழகம் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வாதிடுகிறார்.
உடல்நலக் குறைவால் மருத்துவர்களிடம் வரும் எல்லோருக்குமே, தேவை இல்லாத மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. காரணம், இதுபோன்ற மருத்துவப் பரிசோதனைகளில் கிடைக்கும் கட்டணங்களில் ஒரு பகுதி மருத்துவர்களுக்குக் கமிஷனாக வழங்கப்படுகிறது என்பதுதான்.
சென்னையின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை ஒன்றில் 65 வயது நோயாளி ஒருவர் சேர்க்கப்பட்டு, மூன்று நாள்கள் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கான மொத்த செலவு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம். நோய் குணமாகி வீட்டிற்கு வந்தபின் அவரை சந்தித்த உறவினர் ஒருவர் கூறியது ஆச்சரியமளிப்பது. அவரது நோய் மிகச் சாதாரணமான ஒன்று எனவும், அவர் உள்நோயாளியாக இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் கூறியுள்ளார். சிகிச்சை பெற்றவருக்கு ஒரே அதிர்ச்சி.
அந்த உறவினர் ஒரு சிறந்த மருத்துவர். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, ரூ.1,38,000 ஏன் கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்பதை அவர் உடனே புரிந்து கொண்டுவிட்டார். உள்நோயாளியாக இருந்தவருக்கு அறை வாடகை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளே அதிகமாக ஆகியுள்ளன என்பதை மருத்துவரான அந்த உறவினர் விளக்கியபோதுதான் தெரிந்தது மருத்துவமனைகள் எப்படி ஏமாற்றுகின்றன என்பது. 
இதைப்போலவே, மற்றுமொரு பெரிய தனியார் மருத்துவமனையில் ஒருவர் நெஞ்சு வலி எனக்கூறி உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். எல்லா மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவருக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதால் 'பைபாஸ்' எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடித்தது. ஒன்பது நாள் கழித்து குணமாகி வீடு திரும்பினார். அவருக்கான மொத்த செலவு ரூபாய் 9 லட்சத்து 40 ஆயிரம். 
அதே நேரத்தில், அவருக்குத் தெரிந்த ஒருவர் அதே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமாகி, ஏழு நாள்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். அவருக்கான மொத்த செலவு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மட்டுமே.
இது எப்படி என ரகசியமாக அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவரிடம் விசாரித்தபோது, 'நீங்கள் மருத்துவமனைக்கு வந்து சேரும்போது, உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு படிவத்தில் பூர்த்தி செய்யச் சொல்வார்கள். உங்களுக்கு மற்ற நோயாளிகளுடன் தங்கும் பொது வார்டு வேண்டுமா அல்லது தனி அறை வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் இருக்கும். 
இதை நீங்கள் பூர்த்தி செய்து கொடுக்கும்போதே நீங்கள் பணக்காரரா, நடுத்தர வர்க்கத்தவரா என்பது தெரிந்துவிடும். அதை அடிப்படையாகக் கொண்டு உங்களது அறை, உணவு வகைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்களுக்குத் தெரிந்த அந்த நண்பர் பொது வார்டில் தங்கி, சில பரிசோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் அவருக்குக் குறைந்த செலவே ஆகியிருக்கிறது' என்கிற பதில் கிடைத்தது.
அதிகப் பணம் செலவு செய்யத் தகுதி இருப்பவர்கள் இதுபோன்ற மருத்துவமனைகளுக்குச் சென்று பணம் செலவு செய்து குணப்படுத்திக் கொள்ளலாமே, அதில் என்ன தவறு எனக் கேட்கலாம். லாப நோக்கில் மருத்துவச் செலவுகளைப் பெருக்கும் கலாசாரம் பெரிய மருத்துவமனைகளில் தொடங்கி சிறிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்கள் மத்தியிலும் ஊடுருவுகிறதே என்பதுதான் நமது கவலை.
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா உணவு விடுதிகளிலும் சைவ உணவு வெறும் ரூ.10 அல்லது ரூ.15 என்றுதான் இருந்தது. அது 'கஃபே'க்களும், 'விலாஸ்'களும் இருந்த காலம். 'பவன்'கள் வரத்தொடங்கி சைவ உணவுக்கான கட்டணத்தை இருமடங்காக்கிய பிறகு, எல்லா விடுதிகளும் அதே கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கி, இப்போது ரூ.80, ரூ.100 என்று ஆகிவிட்டிருப்பதைப் போலத்தான் இதுவும்.
பல கோடி செலவழித்துப் படிக்கிறோம், வங்கிகளில் கடன் வாங்கிப் பல கோடிகள் முதலீடு செய்து மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அதை நோயாளிகளிடம்தானே வசூலித்தாக வேண்டும் என்பதுதான் இதுபோல அடாவடியாகவும், முறைகேடாகவும் கட்டணம் வசூலிக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தரும் விளக்கம். 
இவர்களால், வங்கிக் கடனில் வாங்கப்படும் விலையுயர்ந்த உபகரணங்களை, அரசு மக்களின் வரிப்பணத்தில் வாங்கி, அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த முடியும். 
ஆனால், கிராமங்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் சென்று வேலை பார்க்கவும், ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் எத்தனை மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு, இன்றைய இளைய தலைமுறை மருத்துவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை. திருவள்ளுவருக்கு இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் எழுதினார் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!

கட்டுரையாளர்: 
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com