கழுத்திற்குக் கத்தியாகிய கருவி

கற்கால மனிதன், பரிவர்த்தனைக்கு நன்கு தீட்டப்பட்ட கற்களையே நாணயமாகப் பயன்படுத்தினான். வேட்டையாடிய காலத்தில், கூர்மையான அம்புகளையே செலவாணியாகப் பயன்படுத்தினான்.
கழுத்திற்குக் கத்தியாகிய கருவி

கற்கால மனிதன், பரிவர்த்தனைக்கு நன்கு தீட்டப்பட்ட கற்களையே நாணயமாகப் பயன்படுத்தினான். வேட்டையாடிய காலத்தில், கூர்மையான அம்புகளையே செலவாணியாகப் பயன்படுத்தினான். அதே காலத்தில் அரிய விலங்குகளின் தோல்கள் பண்டமாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. 
விவசாயம் வேர் பிடித்த காலத்தில், நெல்லைக் கொடுத்துவிட்டுக் கள்ளை வாங்கியிருக்கிறான். நம்முடைய பாட்டி காலத்தில் அரிசியைப் போட்டுவிட்டுக் கருவேப்பிலை, கொத்தமல்லி வாங்கியிருக்கிறார்கள். நாணயங்களுக்குப் பதிலாகப் பண்டமாற்றுமுறை இருந்த காலத்தில், மனித வாழ்க்கையில் சாந்தமும் இருந்தது; சாரமும் இருந்தது.
பண்டமாற்றுக்குப் பதிலாக நாணயம் புழக்கத்திற்கு வந்த பிறகுதான், மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணெண்ணெய், நான்கு மனித உயிர்களை எரித்து மண்ணிற்கே கொண்டு சென்றுவிட்டது. வீதியிலே ஒரு பசுங்கன்று அறையப்பட்டதற்காக அரண்மனையிலிருந்த மனுநீதி, வீதிக்கு வந்து நீதி வழங்கினான். 
ஆனால், இன்று ஆட்சித்தலைவரிடத்திலே நான்கு மனுக்களைக் கொடுத்த பிறகும், மண்ணெண்ணெயே வென்றிருக்கிறது. 'காசு நல்ல காரியம் செய்யாது; கண்மூடித் தூங்கக் கருணை காட்டாது' எனும் பழைய திரைப்படப் பாடல் கூட, இன்று மண்ணெண்ணெய் வாடையோடுதான், செவிமடலை நெருடுகிறது.
'பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசித்ததை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்' என்னும் விவிலிய வாக்கு (தீமோத்தேயூ 6:10) இன்றும் சத்திய சாட்சியாக நிற்கிறது. 
அபரிமிதமான செல்வம் வந்துற்றால், அது படுத்தும் பாடுகளை வில்லிபுத்தூராழ்வார், 'செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்; சொல்வது அறிந்து சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்; வெல்வதே நினைவதல்லால், வெம்பகை வலிது என்று எண்ணார்; வல்வினை விளையும் ஓரார், மண்ணில் மேல் வாழு மாந்தர்' என விதுரநீதி பேசுகிறார். மகாகவி பாரதி தமது தந்தையைப் பணத்தாசை வீழ்த்தியதால், 'நாசக் காசினில் ஆசையை நாட்டினான்' என்பார்.
பணத்தினது பேராற்றலைத் தமது லேசர் கண்களால் ஊடுருவிப் பார்த்த கார்ல் மார்க்ஸ், 'பணம் என்பது உலகத்தில் பிரவேசிக்கும் பொழுது, பிறப்பின் அடையாளமாக இரத்தக் குறியுடன்தான் வருகிறது' என மூலதனத்தில் எழுதுகிறார்.
பணம் கேடு செய்கிறது என்பதற்காகப் பணம் இல்லாமல் வாழ முடியுமா? பணத்தைச் சாப்பிட முடியாது; ஆனால், பணம் இல்லாமலும் சாப்பிட முடியாது என்பது பொருளாதாரத்தின் உயிர் நாடி. உழைப்பைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாகப் பணத்தைக் கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பொழுதுதான், தலையிலே மண்ணெண்ணெயும் தண்டவாளத்திலே கழுத்தும் விழுகிறது. 
ஆயுதபூஜையன்று, உழவன் கதிர் அறுக்கும் அரிவாளை அடுக்குவான்; தச்சன் செதுக்குகின்ற உளியையும் அறுக்கும் வாளையும் அடுக்குவான்; சலவைத் தொழிலாளி இஸ்திரிப் பெட்டிக்குப் பொட்டிடுவான்; சவரத் தொழிலாளி கத்திக்கும் கத்தரிக்கோலுக்கும் சந்தனத்தைத் தெளிப்பான். 
ஆனால், லேவா தேவிக்காரன் குட்டிப் போட்ட வட்டிப் பணத்திற்குச் சாம்பிராணிப் புகை காட்டுவான்! ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரார் முதலைக் கொள்ளையடிக்கும் கந்துவட்டிக்காரனுக்கும் ஈட்டிக்காரனுக்கும் உயிரிரக்கம் தெரியாது; மனிதநேயமும் தெரியாது. 
வட்டித் தொழில் கொடூரமான தொழில் என்று விவிலியம் கண்டிக்கிறது. இசுலாம் வட்டி வாங்குவதைக் கொடிய பாவமாகவே கருதுகிறது; அதனை ஹராமாகவே விலக்கி வைத்திருக்கிறது (திருக்குர்ஆன் - 2: 275, 279).
இந்திய நாட்டில் மட்டுமன்றி, யூதர்கள் வாழுகின்ற நாடுகளில் எல்லாம், வட்டித் தொழில் விழுதுவிட்டு இறங்கியிருக்கிறது. இதனைக் கண்டிப்பதற்காகவே சேக்ஸ்பியர் 'வெனிஸ் நகர வியாபாரி' என்றொரு நாடகத்தையே இயற்றியிருக்கிறார். 
திருமூலர், வட்டி வாங்குபவர்கள் வஞ்சகம் நிறைந்த பாதகர்கள் என்பதை (260) ஒரு பாடல் மூலம் தெரிவிக்கின்றார். இன்னும் வட்டித் தொழிலின் கொடூரத்தை நன்குணர்ந்த வள்ளலார், 'வட்டியே பெருக்கிக் கொட்டியே, ஏழைமனை கவர் - சூதெல்லாம் அடைத்த பெட்டியே! எட்டியே! மண்ணாங்கட்டியே (பாடல் 3361) என்று ஏசும் அளவுக்குச் செல்கிறார். 
மேலும், அவர்களை சபிக்கும் அளவுக்குச் சென்று, 'வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்! பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர்! வயிற்றுப் பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டியே இருந்தீர்! பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்! பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்! எட்டிபோல் வாழ்கின்றீர் (பாடல் 5561) என்பதன் மூலம் இடித்துரைக்கிறார்.
இந்தியாவில் நிலப்பிரபுத்துவ ஆட்சித் தொடங்கியதே வட்டித் தொழிலின் மூலம்தான் என்று பண்டித ஜவாஹர்லால் நேரு, கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதுகின்றார். 'கிராமங்களில் பணம் கொடுக்கல் - வாங்கல் 'பனியாக்கள்' (லேவாதேவி செய்பவர்கள்) கையில் இருந்தது. கிராமங்களின் பணத்தேவையை அவர்களே கவனித்துக் கொண்டார்கள். 
உழவுத் தொழில் செய்தோர், அவர்களிடம் தங்கள் தேவைக்கு நிலங்களை அடமானம் வைத்துக் கடன் வாங்கினர். வறுமையின் காரணமாய்ப் பணத்தைத் திரும்பித் தர இயலாதவர்களாகி, நிலத்தை இழந்துவிட்டுப் போயினர். இந்த விதம்தான், பணம் கொடுக்கல் - வாங்கலில்; ஈடுபட்டோர், நிலப்பிரபுக்களாய் மாறினர் என்பது நேருவின் கருத்து.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கொத்தடிமைத்தனம் ஏற்பட்டதற்கும், ஆண்டான் - அடிமைத்தனம் ஏற்பட்டதற்கும் காரணம், வட்டித் தொழிலே எனச் சொல்லுகிறார் முகர்ஜி. 'விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களில் பலர் பண்ணையடிமைகள்; கடன் வாங்கியதன் மூலம் நிலச் சொந்தக்காரர்களின் பரம்பரை அடிமையானார்கள். அந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படுவதில்லை. தலைமுறை தலைமுறையாக அதே கடன் அவர்கள் பேரிலேயே இருக்கிறது. 
கடன் கொடுத்தவன் இறந்தாலும், நிலத்தை விற்றாலும், பண்ணையடிமைகள் நிலச்சுவான்தார்க்குக் கைமாற்றிக் கொடுக்கப்படுகிறார்கள். பம்பாயில் இருக்கும் தூப்ளாக்களும், கோலிகளும், இப்படி அடிமையானவர்களே! தென்மேற்கு சென்னையில் ஈழவர்கள், புலையர்கள், செருமான்கள், ஹோலியர்கள் இப்படி கடன் வாங்கி, அடிமையானவர்களே! 
விவசாயிகள் காலாகாலமாக அடிமைப்பட்டு இருப்பதை ஆராய்ந்த சைமன் கமிஷன் ரிப்போர்ட், விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையோர் லேவாதேவிக்காரர்களிடம் கடன்பட்டுக் கிடப்பதே இதற்குக் காரணம் எனக் கூறுகின்றது. 
ஏழை, எளியவர்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படும்பொழுது, கைகொடுத்து உதவுபவர்கள் லேவாதேவிக்காரர்கள்தாம்! அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர்களுக்கும் கடன் கொடுத்து உதவுபவர்கள், கந்து வட்டிக்காரர்கள்தாம்! என்றாலும், செய்கின்ற கடனுதவி மனிதநேயத்தை - உறவை வளர்ப்பதற்குப் பதிலாக, வாங்கியவர்களின் கழுத்தை அறுக்க வந்த கத்தியாகப் பணம் மாறிவிடுகிறது.
வட்டிக்கடனில் - வட்டிக்கடலில் விவசாயிகள் மூழ்கிப் போவதற்குரிய காரணத்தை ஆராய வந்தார், டாக்டர் ஹெரால்ட்மான் எனும் பொருளாதார நிபுணர். தக்காணத்தில் ஒரு கிராமத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். ஒரு கிராமத்தில் ஒரு விவசாயிக்கு ரூ.8,338 ஆண்டுக்கு நிகர லாபமாகக் கிடைத்தது. அதில் ரூ.2,515-ஐ வட்டி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் செலவழிக்கப்பட்டது. 
நிலத்திலிருந்து கிடைக்கும் மொத்த லாபங்களில் 24.5 சதவீதம் கடனுடைய வட்டிக்காகச் செலவழிக்கப்படுகிறது. இரண்டாவது கிராமத்தில் நிலத்திலிருந்து கிடைத்த ஆண்டு வருமானம் ரூ.15,807. அதில் வட்டிக்காக ரூ.6,755 கரைந்து போயிற்று. அதாவது நில வருமானத்தில் ஐந்தில் இரண்டு பங்கு, லேவாதேவிக்காரனுக்குப் போயிற்று என்பது ஓர் அயல்நாட்டு ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் கண்டறிந்த உண்மை.
அண்மைக் காலமாக தமிழ்நாட்டுச் செய்தித்தாள்கள் மையினால் அச்சடிக்கப்படுவதில்லை; கந்துவட்டிக்காரர்களும், கரண்ட் வட்டிக்காரர்களும், சிந்துவிக்கும் ரத்தத்தினாலேயே அச்சடிக்கப்படுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகளில் காட்டப்படும் அகோரமான காட்சிகள், ஈட்டிக்காரர்களால் குடும்பம் குடும்பமாக நெரிக்கப்படும் குரல்வளைகளால் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
பண்டமாற்று முறையில் நடந்த வணிகத்தில் ஏ.டி.எம். கார்டுகள் கிடையாது. ஆனால், கழுத்து வலிக்கச் சுமந்து வரும் தயிர்ப்பானையைக் கைகொடுத்து இறக்கி வைக்கும் வீட்டுக்காரரின் இதயம் இருந்தது; ஓட்டை உடைசல் ஈயம்பித்தளைக்குப் பேரீச்சம் பழம் எனக் கடும் வெயிலில் கால் சுட நடந்துவரும் உழைப்பாளிக்கு, அவன் தாகம் தீர ஒரு சொம்புத் தண்ணீரை ஏந்தித்தரும் ஒரு தாயின் ஈவிரக்கம் இருந்தது. 
கொடுத்த கடனைக் காட்டிலும் கொடுக்காத ரொக்கத்திற்கும் சேர்த்து கையெழுத்து வாங்கும் கந்து வட்டிக்காரர்களுக்கு, அன்றாடம் காய்ச்சிகள் அள்ளிக் கொடுக்கும் வட்டியை எண்ணி வாங்குவதற்கு நாக்கில் எச்சில் மட்டுமே இருக்கிறது. 
ஆட்டின் உரோமத்தைக் கத்தரித்தால், அடுத்த ஆறு மாதத்தில் உரோமம் வளர்ந்துவிடும். ஆட்டினுடைய தோலையே உரித்தால், ஆடு செத்துப் போய்விடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com