மதுவிலக்கும் மூன்று தடைகளும்

வருமானத்திற்காகவும் தமது நாட்டுப் பழக்கம் என்பதாலும் சாராயக்கடைகளைத் திறந்த வெள்ளையர் 'கள்' விற்பனைக்கும் ஒப்புதல் அளித்திருந்தனர். சரபோஜி மன்னர் சாராய விற்பனையில் வந்த

வருமானத்திற்காகவும் தமது நாட்டுப் பழக்கம் என்பதாலும் சாராயக்கடைகளைத் திறந்த வெள்ளையர் 'கள்' விற்பனைக்கும் ஒப்புதல் அளித்திருந்தனர். சரபோஜி மன்னர் சாராய விற்பனையில் வந்த வருவாயைக் கொண்டு தஞ்சாவூரில் முதன்முதலில் ஓர் ஆங்கிலப் பள்ளியைத் திறந்தார். வெள்ளையர் ஆட்சி வெளியேறிய பின்னர், காங்கிரஸ் கட்சி ஆட்சியேற்றாலும் மதுவிலக்கை முழுதும் நடைமுறைப்படுத்தவில்லை.
காந்தியடிகள் பிறந்த குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு என்றார்கள். ராஜாஜி தமிழ்நாட்டில் 1952-இல் முதல்வரான போது முழு மதுவிலக்கைக் கொண்டுவந்தார். வருவாய் இழப்பைச் சரிகட்ட 1% விற்பனை வரி கொண்டுவந்தார். 
வெள்ளையர் காலத்தில் பழகியவர்களுக்காக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கும் 'பர்மிட்' (அனுமதி) மதுவிலக்கை நீக்கக்கூடாது என்று காமராஜர், ராஜாஜி, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் எவ்வளவோ கூறியும் கேட்காமல், அன்றைய (1971) முதல்வர் மு.கருணாநிதி இரண்டு மூன்று தலைமுறையாக இளைஞர்கள் அறவே அறியாத கள்ளுக் கடைகளைத் திறந்து, தமிழர்கள் பலரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக வித்திட்டார். 
கள்ளுண்பது சங்க காலத்தில் இருந்தது என்பர். பழைமையோ புதுமையோ நல்லவற்றை மட்டுமே நாம் ஏற்க வேண்டும். பாரதியார் சொல்வது போலத் 'தாத்தா வெட்டிய கேணி என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியாது'. 
உலகமே போற்றும் நம் திருக்குறள் கூறும் 'கள்ளுண்ணாமை'யை நாம் ஒதுக்கலாமா? கள்ளுக் கடைகளைத் திறந்து 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தைப் புறக்கணித்ததால், திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் குமரிமுனையில் 133 அடி உயரம் அமைத்த திருவள்ளுவர் சிலையை ஓரடி குறைக்கலாமா? என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேட்டுள்ளார். 
அதற்கு, மு. கருணாநிதி, 'புலால் உண்பதால் திருக்குறளில் உள்ள 'ஊன் உண்ணாமை'க்காக ஓர் அதிகாரம் என ஒவ்வொன்றுக்கும் குறைக்க முடியுமா?' எனக் கேட்டு அரவமடக்கியுள்ளார். மதுவிலக்கைக் கொண்டுவர முற்பட்ட எம்.ஜி. ஆர்., சிறைகள் நிரம்பியதாலும், சிறைப்பட்ட கணவனுக்காகப் பெண்கள் அழுததாலும் மதுவிலக்கைக் கைவிட்டார்.
மக்கள் படிப்படியாக மதுப்பழக்கத்திற்கு அதிகம் ஆளானதால், தனியார் நடத்திய மதுக்கடைகள் கொள்ளை இலாபம் ஈட்டின. இதனைக் கண்ட ஜெ. ஜெயலலிதா 2003-இல், தமிழக அரசு சார்பில் மது விற்பனைக்கு 'டாஸ்மாக்' நிறுவனம் தொடங்கினார். இவ்வாறு அரசே நேரடி விற்பனையில் இறங்கியதால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம் மிகுந்தது. 
மக்களைக் குடிப்பழக்கத்திற்கு உள்ளாக்கி, 45 ஆண்டுகள் பழக்கியவரே (தொடங்கிவைத்த கருணாநிதியே) குடித்தீமைகள் முற்றிச் சீரழிவின் விளிம்பில் தமிழினம் உள்ளபோது, 'முடிவுக்கு வரவேண்டும்' என்கிறார் என்றால், எந்த அளவுக்கு மனித இனத்துக்கும் மக்கள் சமுதாயத்திற்கும் குடியால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
45 ஆண்டுகளுக்கு மேலாக மதுவுக்கும், போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிப் போய்விட்ட தமிழ்நாட்டில் மதுவிலக்கை செயலாக்குவது மிகவும் கடினமான பணிதான். பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்கள் என்றோ, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என்றோ விட்டுவிட முடியாது. 
மதுக்குடியால் மக்கள் சீரழிவதைத் தடுக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஓர் அரசின் கடமை. குடித்துவிட்டுக் கிடப்பதால் உழவுத் தொழிலுக்கு வேண்டிய கூலித் தொழிலாளிகள் கிடைப்பதில்லை. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால்தான் பெரும்பான்மை விபத்துகளும் இறப்புகளும் நடக்கின்றன. 
ஒழுக்கம், பண்பாடு, வருமானம், உடல் நலம் போன்றவற்றை இழந்து, இன்றைய தமிழ்நாட்டு மக்களில் பலர் சீரழிந்து வருகின்றனர். காவல்துறை, மருத்துவத்துறைப் புள்ளிவிவரங்கள் இதனை உறுதிசெய்யும். 
எனவே, மிகப்பெரிய அழிவு வந்து பழிசேரும் முன் மதுவிலக்கைக் கொண்டு வருவதுதான் தமிழ்நாட்டைக் காப்பாற்றும்; இப்போது உள்ள தமிழ்நாட்டு அரசையும் காப்பாற்றும். ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவது கடினம் என்பதால்தான் ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 
ஏனென்றால், மதுவிலக்கைக் கொண்டு வருவதில் மூன்று தடைகள் உள்ளன. ஒன்று தமிழக அரசுக்கு மதுக்கடைகளால் வரும் மிகப்பெரிய வருவாயை இழக்க நேரும். இரண்டாவது, மது உற்பத்தி ஆலை நடத்தும் முதலாளிகளும், கடை ஏலம் எடுத்துள்ள வணிகர்களும் பாதிக்கப்படுவர். 
மூன்றாவது, மதுக்குடியில் பழக்கமாகிவிட்டவர்களும் குடிக்காமல் வாழமுடியாது என முழுதும் அடிமையாகிப் போனவர்களும் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே, படிப்படியாகத்தான் மதுவிலக்கைக் கொண்டு வர முடியும். 
மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் நடைமுறைக்குக் கொண்டுவரவே முடியாது; குறுகிய காலத் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்குக் கேரளம் வழிகாட்டியுள்ளது. 
மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், நேரத்தைக் குறைத்தல், வயது எல்லையை அதிகமாக்குதல், அடையாள அட்டை அல்லது 'பர்மிட்' முறை, மருத்துவமனைகளில் குடி நோயாளிப் பிரிவு தொடங்குதல் ஆகியவற்றால் ஓராண்டுக்குள் மதுவிலக்கை முழுதும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
தீயவழியால் அரசுக்கு வருவாய் வருவதைவிட, குடிப்பதால் உழைப்பை மறந்த மக்களை உழைக்கச் செய்வதால், அரசுக்கு வருமானம் அதிகமாகத்தான் செய்யும். ராஜாஜி கொண்டுவந்தது போல 1% விற்பனை வரியை விதிக்கலாம்; இவ்வரி மற்ற பொது மக்களைப் பாதிக்காமல் மது குடிப்போர் மேலேயே சாரும் வண்ணம் உயர்வகை மதுக்களுக்கு விதிக்கலாம்; இதனால் குடிப்பது குறைய வாய்ப்பிருக்கிறது. 
தமிழ்நாடு சிறப்படைய உடனடியாக மதுவிலக்குக் கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com