சத்தியாகிரகம்: காந்தி கண்ட நெறி!

உத்தமர் காந்தி "சத்தியாகிரகம்' என்ற புதிய நெறியை, போராட்ட முறையை, உலகுக்குத் தந்தார். அது ஒரு சொல் அல்ல; ஒரு தத்துவம். சத்தியம், அஹிம்சை, அன்பு, அரவணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது அது.

உத்தமர் காந்தி "சத்தியாகிரகம்' என்ற புதிய நெறியை, போராட்ட முறையை, உலகுக்குத் தந்தார். அது ஒரு சொல் அல்ல; ஒரு தத்துவம். சத்தியம், அஹிம்சை, அன்பு, அரவணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது அது.
தென்னாப்பிரிக்காவின் "டிரான்ஸ்வால்' பகுதி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டது. ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்தது அக்காலனி அரசு. அதன்படி அங்கு வாழும் "ஆசியவாசிகள்' ஒவ்வொருவரும் பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் பெயர், முகவரி, சாதி, வயது ஆகிய விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். விரல் ரேகைகளையும் பதிய வேண்டும். அத்தாட்சி மடல் பெற வேண்டும். தவறினால் அபராதம், சிறைவாசம், நாடு கடத்தப்படுதல் - இதுவே தண்டனையாகும். 
ஆசியவாசிகள் அதிர்ந்து போனார்கள். இது அவமானம், தன்மானத்திற்குப் பங்கம் என்றார்கள். கொடுமையான இச்சட்டத்தை எதிர்க்க என்ன வழி? போராட்ட அணுகுமுறையை வகுக்கவே ஆசியவாசிகள், 1906-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் நாள் பழைய எம்பயர் அரங்கில் கூடினார்கள். சுமார் 3,000 பேர் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர், பிரிட்டிஷ் - இந்திய சங்கத்தின் தலைவர் அப்துல் கானி.
அந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், கோட் சூட் அணிந்த குஜராத்தி பாரிஸ்டரான, 37 வயதே நிரம்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எழுந்து நின்று உரையாற்றுகிறார். அந்த உரையில்:
"இந்த அவசரச்சட்ட மசோதா ஒரு கருப்புச்சட்டம். இந்தியர்களுக்கு எதிரானது இது. நம் தன்மானத்தைப் பறிப்பது. இச்சட்டத்திற்கு நாம் கீழ்ப்படிய மாட்டோம். இதனால் நேரிடும் எந்தத் தண்டனையையும் நாம் ஏற்றுக்கொள்வோம். அன்பே நமது வழி; உறுதியே நமக்கு உறுதுணை; வெற்றியே நமது இலக்கு' என்றார்.
அடுத்துப் பேசியவர் "ஹாஜி ஹபீப்' என்ற முஸ்லிம் பெரியவர். "இச்சட்டத்திற்கு நான் ஒரு போதும் பணியமாட்டேன். இதனை எல்லாம் வல்ல அல்லாவின் சாட்சியாகப் பிரதிக்ஞை (உறுதிமொழி) எடுக்கிறேன். ஒவ்வொருவரும் அவ்வாறே சபதம் ஏற்க வேண்டும்' என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
மேடையில் அமைதியாக அமர்ந்திருந்த பாரிஸ்டர் காந்தி "பிரதிக்ஞை' என்ற சொல்லையும், "அல்லாவின் சாட்சியாக' என்ற சொல்லையும் கேட்டவுடன் ஒரு கணம் திகைத்துப்போனார். அடுத்த சில நொடிகளில் அவரது தடுமாற்றம் மறைந்தது. கடவுள் சாட்சியாகப் பிரதிக்ஞை எடுப்பது என்பது ஒரு புனிதமான சத்தியப் பிரமாணம் ஆயிற்றே! இந்தப் போராட்டத்தை நடத்த இறைவனே தனக்குக் காட்டும் வழி இது என அவர் உணர்ந்தார்.
அடுத்து அப்போராட்டத்திற்கு ஒரு பொருத்தமான பெயர் தேடும் முயற்சியில் இறங்கினார். "சரியான பெயரை முன் வைப்பவருக்கு ஒரு சன்மானம் வழங்கப்படும்' - என தமது "இந்தியன் ஒப்பினியன்' இதழ் மூலம் அறிவித்தார். 
காந்தியின் ஒன்றுவிட்ட மருமகனின் மகன் லால் காந்தி - "சதாகிரகம்' என்ற சொல்லைப் பரிந்துரைத்திருந்தார். அதன் பொருள் "ஒரு நல்ல காரியத்தில் பற்றுறுதி' என்பது, அதனை பாரிஸ்டர் காந்தி "சத்தியாகிரகம்' என மாற்றி அமைத்தார். சத்தியம் என்ற சொல்லில் அன்பும், உண்மையும் அடங்கும். "ஆக்ரஹ' என்ற சொல்லில் உறுதியான நிலைப்பாடு உள்ளடக்கம். சத்தியத்திலிருந்தும், அகிம்சையிலிருந்தும் பிறக்கும் சக்தியே - சத்தியாகிரகம். 
சத்தியாகிரகம் என்பது அமைதியான, நுட்பமான, நவீனமான போராட்ட அணுகுமுறை. ஒரு சத்தியாகிரகி ஆரம்பத்திலேயே அதனைக் கையாளக்கூடாது. முதலில் எதிராளியிடம் பேச வேண்டும். அன்பால் அவரைக் கவர வேண்டும். தான் அவருக்கு எதிரானவன் அல்ல என்பதை உணரச் செய்ய வேண்டும். எதிராளியை வீழ்த்துவது நோக்கமல்ல; தவறுகளிலிருந்து அவரை விலக்கி வைக்க முயல வேண்டும். அழிப்பதல்ல நோக்கம்; மனமாற்றத்தை ஏற்படுத்துவதே. 
அன்பாலும், அறிவுபூர்வமான பேச்சாலும், மனித இதயத்தின் நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்புவதாலும், நம்பிக்கை தரும் நடத்தையாலும் அனைத்து ஆரம்ப வழிமுறைகளாலும் தோல்வி கண்டால்தான் சத்தியாகிரக வழிமுறையை கடைசி ஆயுதமாகக் கையாள வேண்டும்.
சத்தியாகிரகி பயம், அச்சத்தைத் தூக்கி எறிய வேண்டும்; எதிராளியை நம்ப வேண்டும். மனிதனின் இயற்கையான நல் இயல்புகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவனது சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது.
சத்தியாகிரகம் நான்கு அடிப்படைக் கருத்துகளை வலியுறுத்துகின்றன. அவை 1. ஆன்ம பலத்தை பயன்படுத்தும் வழி 
2. ஆள்பலம், ஆயுதபலததைத் தவிர்ப்பது 3. தன்னையே வருத்திக்கொண்டு, எதிராளியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துவது 4. சத்தியாகிரகம் சொல் அல்ல; அது ஒரு தத்துவம்; அது ஒரு வளரும் விஞ்ஞானம்.
அண்ணலின் எண்ணப்படி, சத்தியாகிரகம் பல வழிகள்அல்லது பல வடிவங்களைக் கொண்டது. அண்ணலே தன் ஆய்வின் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது அவற்றை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தார். அவற்றில் மூன்று வழிகளைப் பரிசோதனை செய்தார். அவை: 
அ. ஒத்துழையாமை இயக்கம்
ஆ. சட்ட மறுப்பு இயக்கம்
இ. உண்ணாவிரதம்
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர் புதிய புதிய அனுபவங்களைப் பெற்றார்; அப்போராட்டம் புதிய பரிமாணங்களையும் பெற்றது.
உதாரணமாக குஜராத்தின் கோடா மாவட்டத்தில் 1918-இல் அண்ணல் காந்தியால் தொடங்கப்பட்ட "விவசாயிகள் வரிகொடா இயக்கம்' முழு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. ஆனால் 1930-இல் "உப்பு சத்தியாகிரக'மும், 1942-இல் "வெள்ளையனே வெளியேறு' போராட்டமும் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்தன. காரணம் இடையில் பெற்ற அனுபவங்களும், எல்லா மக்களும் போராட்ட அவசியத்தை புரிந்து கொண்டதும்தான்.
காந்திஜியின் சித்தாந்தங்களை, அணுகுமுறைகளை பலர் புரிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் குழப்பமடைகிறார்கள். காந்திய வழிமுறை என்பது நடைமுறை சாத்தியமானது. வன்முறை கூடாது என்பார் காந்தி. ஆனால் ஒருவன் அடிமையாய் வாழ்வதைத்தவிர வேறு வழியே இல்லை என்றால், அவன் ஆயுதம் ஏந்திப் போராடுவதை மன்னிப்பேன் என்கிறார்.
அதேபோல் ஒரு பெண் தனது கற்புக்குக் களங்கம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், தன்னைக் காத்துக் கொள்வதற்கு வன்
முறையைக் கையாள்வதில் தவறில்லை என்
கிறார் அவர்.
அண்ணலின் தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் சிறிய அளவிலானது. 30,000 மக்கள் உரிமை சார்ந்தது. அது வெற்றி பெற்றது. அடுத்து இந்தியாவின் விடுதலைப்போரில், "உப்பு சத்தியாகிரகம்' (1930), "வெள்ளையனே வெளியேறு போராட்டம்' (1942) ஆகியவை 30 கோடி மக்களின் உரிமை சார்ந்தது. அதிலும் வெற்றி பெற்றார். 
அடுத்து அண்ணல் உலக அளவில் சத்தியாகிரகத்தைத் தொடங்க விரும்பினார். ஆனால் அதனை நிறைவேற்ற இறைவன் அருள்கிட்டவில்லை.
அண்ணலின் இதயத்தை அதிகமாகப் பாதித்தது 1945-இல் நடைபெற்ற ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டுத் தாக்குதல்தான். அந்த சமயத்தில் ஒரு நாள் பண்டித ஜவாஹர்லாலை அழைத்தார் அண்ணல். நேருஜி அமர்ந்தவுடன், காந்திஜி தன் கண்களில் கண்ணீர் மல்கச் சொல்லுகிறார்: 
"இந்தக் கொடுமையான அழிவுச்செயல் இறைவனின் மீதும், அஹிம்சையின் மீதும் என் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அஹிம்சை எனும் மந்திரத்தை உலகமெலாம் பரப்புவதற்கும், அணு ஆயுத உற்பத்திக்கு எதிரான சத்தியாகிரகத்தை அவனியெலாம் நடத்துவதற்கும் தான் ஆண்டவன் என்னைப் படைத்திருக்கிறான். இறைவனின் எண்ணத்தை நான் நிறைவேறுவேன்' என்றார்.
இந்தத் தகவலை பண்டித ஜவாஹர்லால் நேரு, 1949-இல் விஞ்ஞானி ஐன்ஸ்டினைச் சந்தித்தபோது அவரிடம் கூறுகிறார். 
அச்சந்திப்பின்போது ஐன்ஸ்டின் எழுதப்படாத ஒரு பேப்பரை எடுத்தார். அதன் இடப்பக்கத்தில் வரிசையாகத் தேதிகளை எழுதினார். அதன் வலப்பக்கத்தில் 
அத்தேதிகளில் நடத்தப்பட்ட அணு சோதனைகளை எழுதினார். அதே நாள்களில் அண்ணல் காந்தி தனது சத்தியாகிரகப் போரை, எவ்வாறு ஒவ்வொரு கட்ட
மாகப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார் என்பதையும் எழுதினார். என்ன அதிசயம்! அணுஆயுத பரிசோதனை நடந்த நாட்களும், அண்ணலின் அகிம்சைப் பரிசோதனை நடந்த நாள்களும், ஒன்றாகவே இருந்தன! 
குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஐன்ஸ்டினும் அவரது சக விஞ்ஞானிகளும் அணுவைப் பிளப்பதில் வெற்றி கண்ட நாளில்தான், பாரிஸ்டர் காந்தி தென்னாப்பிரிக்க சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பில் வெற்றியடைந்த நாளில்தான், அண்ணல் காந்தி "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கினார்.
மனித முயற்சி அழிவை நோக்கியது. இறைவனின் முயற்சியோ அதனைத் தடுப்பது; மனிதனைக் காப்பது. இறுதி வெற்றி இறைவனுடையதே. ஆழமான இந்த நம்பிக்கைதான் மகாத்மாவின் வெற்றிக்குக் காரணம்!
மனித சமுதாயம் அமைதியாக வாழ்வதற்கு அதுவே வழி!

இன்று (அக். 2) காந்தி ஜயந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com