தேர்வு முறையில் மாற்றம் தேவை

உலக அளவிலும் தேசிய அளவிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் தம் தனிப்பட்ட திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திப் பல்வேறு பெருமிதங்களை ஈட்டிய வரலாறு நிரம்ப உண்டு.

உலக அளவிலும் தேசிய அளவிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் தம் தனிப்பட்ட திறன்களையும் திறமைகளையும் வெளிப்படுத்திப் பல்வேறு பெருமிதங்களை ஈட்டிய வரலாறு நிரம்ப உண்டு. அப்படியிருக்க அண்மைக்காலமாக அவர்கள் நுழைவு மற்றும் போட்டித் தேர்வுகளைக் கண்டு அச்சப்படும் அவலப்போக்கு உள்ளது வேதனைக்குரியதாகக் காணப்படுகிறது. 
மெத்தப்படித்த மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவ, மாணவியரிடையே நம்பிக்கையின்மை ஏற்படுவதும் அதன் காரணமாகப் பலவித விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்தேறி வருவது வாடிக்கையாக உள்ளது.
மாணவரிடையே நன்னெறிப் பண்புகளைத் தற்காலத்திய கல்விமுறை வளர்க்கத் தவறிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. தேசிய அளவிலான கலைத் திட்டத்தில் குறைபாடுகள் இருக்க வாய்ப்புகள் மிகக்குறைவு. 
ஏனெனில், கலைத்திட்டம் உருவாக்கம் என்பது மத்திய, மாநில அரசுகளின் நடுவுநிலையுடன் கல்வியாளர்கள், உளவியல் வல்லுநர்கள், பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள் உள்ளடக்கிய வல்லுநர் குழுவின் அடிப்படையில் வடிவமைக்கப்படுவதாகும். 
அதன்படி, அக்கலைத் திட்டம் பரிந்துரைக்கும் பாடப்பொருள் தரவுகள் அடிப்படையில் மாநிலம் சார்ந்த கருத்துகளை உள்ளடக்கி, பல்வேறுகட்ட பணிமனைகள், கருத்தரங்க முன்மொழிவுகள், பரிந்துரைகள், வரைவுப் பாடத்திட்டங்கள், பொதுமக்கள் கருத்துகள் எனப் பல்வேறு படிநிலைகளைக் கடந்துதான் மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்பட்டு வருகிறது. 
இங்கும் பெரிய அளவிலான பிரச்னைகள் எழுவதற்கான சூழ்நிலை அமைவதென்பது அரிது எனலாம். 
ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் மூலமாக அடையாளம் காணப்படும் சிற்சில குறைபாடுகள் எளிதில் களையத் தக்கவடிவில் இருக்குமேயொழிய, பெருந்திரளான மாணவச் சமுதாயத்தைப் பாதித்துப் பேரிடர் சூழ்நிலையினைத் தோற்றுவிக்கும் காரணியாக அமைந்திடுதல் முயற்கொம்பாகும். இத்தகைய குறைகள்களையும் நடவடிக்கைகள் தொன்றுதொட்டு இருந்துவருவதும் கண்கூடு. 
அடுத்து, பாட பயிற்றுவிப்பு முறைகளில் நல்ல, தரமான, தகுதியுடைய ஆசிரியர் பெருமக்களே ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 
அவ்வப்போது இவர்களுக்குப் பாடம் சார்ந்து பல்வேறு பணியிடைப் பயிற்சிகள் போதுமானதாக வழங்கப்பட்டுக் கற்பித்தல் அணுகுமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் யாவரும் அறிந்த ஒன்றாகும். சிறந்த கற்பித்தலை நிரூபிக்கும் விதமாக ஒவ்வோராண்டும் பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் அளவு கூடிக்கொண்டே செல்வதைக் கொண்டு அறிய முடியும். 
தொடக்கக் காலத்தில் கற்றல் கற்பித்தல் அணுகுமுறையின் தலையாயக் குறிக்கோளாக "கற்றலில் முழுமை' என்பது அமைந்திருந்தது. மதிப்பெண்கள் இரண்டாம் பட்சமாகவே இருந்துவந்தது. 
காலப்போக்கில் இந்நிலை மாறத்தொடங்கியது. குறிப்பாக, கல்வியில் தனியார் மற்றும் வணிகநோக்குப் பெருகியதன் விளைவாக "மதிப்பெண் பெறுவதே இலக்கு' என்பதாக நடப்புக் கல்வித் திட்டம் சுருங்கிப்போய்க் கொண்டிருப்பதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. 
பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதேவேளையில், தேர்வுநடைமுறைகளில் சீர்திருத்தங்களைத் தேவையான அளவில் மேற்கொள்ளவும் அரசு முயல வேண்டும். 
ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள பாடப்புத்தகங்களின் பின் பகுதி வினாக்கள் பெரும்பாலும் மெதுவாகக் கற்போருக்குரிய ஒன்றாக இருக்க வேண்டுமேயன்றி எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பது தவிர்க்கப்படுதல் நல்லது. அப்படி இருக்கும்போதுதான் கற்போரால் மற்றவர்களால் கேட்கப்படும் எந்தவொரு வினாவிற்கும் உரிய, உகந்தமுறையில் விடையளிக்க இயலும். 
பாடப்பகுதிகளுக்குச் சரியான விடை எழுதுதல் மட்டும் மாணாக்கரின் பணியன்று. நல்ல வினாக்களை எழுப்பவும் அவர்களுக்குத் தெரிய வேண்டும். 
வினாக்களின் பணியென்பது வெறும் அறிதலையும் புரிதலையும் மட்டுமே சோதிப்பது அல்ல. சிந்தித்து விடையளித்தல், சிக்கல்களுக்குத் தக்க தீர்வு காணுதல், படைப்புத்திறன் வெளிப்பாடு, உபயோகப்படுத்தும் திறன் போன்றவற்றை வளர்க்கத்தக்க கிளர் வினாக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 
முழுமையாகக் கற்றலைப் பூர்த்திசெய்யும் மாணவரால் எந்தவித அடைவுச் சோதனைகளையும் எளிதாக எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். பாடவினாத்தாள் வடிவமைப்பு என்பது வினாத்தாள் வடிவமைக்கும் ஆசிரியருக்கே ஒழிய மாணவனுக்கு அல்ல. 
தவிர, புறவய வினாக்களில் நூறு விழுக்காடு என்பது மெய். அகவய வினாக்களிலும் நூறு விழுக்காடு மதிப்பெண் என்பது அறிவியல் பூர்வமாகச் சாத்தியமற்றது. ஏனெனில், மனித சிந்தனைகள் தனியாள் வேற்றுமை நிறைந்தது. 
அப்படியிக்கும்போது, விடையளித்தலிலும் மாறுபாடுகள் இருப்பது இயல்பு. எல்லோரும் ஒரே மாதிரியாக விடை தருவிப்பதை ஊக்கப்படுத்திட விழைவதென்பது எதிர்மறை விளைவுகளையே தரும். கல்வியானது சிந்தனைமற்றும் சுயபடைப்பாற்றலுக்கு வழிவகுத்திட வேண்டும். 
அவ்வாறின்றி, மூளை மழுங்கடிக்கப்பட்ட பாடப்பிரதிகளை உற்பத்தி செய்வதல்ல. நூற்றுக்கு நூறு எடுத்தே ஆக வேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமில்லை. தரநிலை மதிப்பீட்டில் அதற்கு அவசியமுமில்லை. கற்றலில் மதிப்பீடும் மதிப்பெண்களும் கற்றலின் விளைவுகளின் ஒருபகுதியேயாகும்; முழுமையல்ல.
தோல்விகளுக்கும், ஏமாற்றங்களுக்கும், விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக விளங்கும் பொதுத்தேர்வு முறை திருத்தியெழுதப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com