அழிப்போம் ஆயுதங்களை

'இரண்டாம் உலகப் போரில் முக்கிய ஆயுதமாக அணுகுண்டு இருந்தது. இனி மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனிதர்கள் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி போரிடுவார்கள்?'

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்:
'இரண்டாம் உலகப் போரில் முக்கிய ஆயுதமாக அணுகுண்டு இருந்தது. இனி மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனிதர்கள் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி போரிடுவார்கள்?'
இந்தக் கேள்வி காதுகளைத் துளைத்தவுடன், முகத்தின் தோலெல்லாம் சோகத்தில் சுருங்க, ஐன்ஸ்டீன் சொன்னார்:
'போரிடுவதா? அதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். தற்போதைய அணு ஆயுதங்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்ல; புல் - பூண்டுகள் கூட அழிந்துவிடும். அதன்பின் சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒருவகை மனித இனம் தோன்றினால், அவர்கள் கற்கால மனிதர்களைப் போன்று கல், வில், வேல், அம்புகளோடு போரிடலாம்'. அய்ய்ய்யோ!
ஐன்ஸ்டீனின் இந்த அச்சத்தை -இந்த அபாயத்தை அதிகரிக்கிறது வட கொரிய அதிபர் கிம் - ஜங் - வுன்னின் அறிவிப்பு!
'ஜப்பானை கடலுக்குள் மூழ்கடிப்போம்; அமெரிக்காவை எரித்து சாம்பல் மேடாக்குவோம்' என்று அவர் அறிவித்திருப்பது உலகின் அடிவயிற்றைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் எதிர்ப்பையும், உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி, வட கொரியா ஏற்கெனவே ஐந்து முறை அணுஆயுதப் பரிசோதனை மேற்கொண்டது. 
அண்மையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகளை ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை செலுத்திப் பரிசோதித்தது.
அமெரிக்கா, இன்றைய தேதிவரை உற்பத்தி செய்துவைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,750 முதல் 6,970 வரை என்கிறார்கள்.
70-களில் பாகிஸ்தானை ஊட்டி வளர்த்து இந்தியாவுக்கு எதிராக மோத விட்டதும் அமெரிக்காதான். இப்பொழுதும் பாகிஸ்தான் வசம் 120 முதல் 130 வரையிலான அணு ஆயுதங்கள் உள்ளன. தற்போது நேட்டோ ஒப்பந்தப்படி, அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு 10 -20 அணு ஆயுதங்களை வழங்கியிருக்கிறது.
ஜெர்மனிக்கு 20, துருக்கிக்கு 60 என அணு ஆயுதங்களைத் தானம் வழங்கியுள்ளது.
இத்தாலிக்கு 10 தான் கொடுத்துள்ளேன் என்று அமெரிக்கா சொன்னாலும், 50 அணு ஆயுதங்களை கொடுத்துள்ளது என்கின்றன அந்நாட்டுப் பத்திரிகைகள். 
அதேபோல, நெதர்லாந்துக்கும், 10 முதல் 20 அணு ஆயுதங்களைக் கொடுத்து 'கோயில் மாடு' மாதிரி வளர்த்து வருகிறது அமெரிக்கா.
அமெரிக்காதான் இப்படியென்றால், ரஷியாவும் தற்போது அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. பெலாரசுக்கு 81, கஜகிஸ்தானுக்கு 1,400, உக்ரைனுக்கு 50 என அணு ஆயுதங்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது. 
மற்றொரு கம்யூனிச நாடான சீனா மிகவும் கமுக்கமாக 260 அணு ஆயுதங்களை அடைகாத்து வருவதாகச் சொல்கிறார்கள். இவ்வளவு அணு ஆயுதங்கள் போதாதென்று பிரிட்டனும் 150 முதல் 215 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாம்!
பிரான்ஸும் 290 முதல் 300 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளது! பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன், ஈரானும் 100 அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பதாக உலக நாடுகள் கைகாட்டுகின்றன.
இப்படி, பூமியின் தலைக்கு மேலே, இன்றைய தேதி வரை தொங்கிக் கொண்டிருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 10,144.
இந்நிலையில், 'காந்தி தேசமான' நமது இந்தியாவும் 110 முதல் 120 அணு ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளது! 
சக நாடுகளுடன் நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படுத்தி நாட்டில் வளமும் வளர்ச்சியும் ஏற்படுத்துவதற்கு பதிலாக, பட்ஜெட்டில் பாதிப்பணத்தை ஆயுதங்கள் செய்வதற்கும், வாங்குவதற்குமே செலவழிக்கிறார்கள், பல ஆட்சியாளர்கள்!
உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், ஆயுதமே பலம் என்று நம்புகிறார்கள்!
ஆரம்ப காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள், தம் உரிமைக்காக போராடியபோது அதை அடக்குவதற்காக, சிங்கள ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்தார்கள்? மியான்மரில் ஆங்சாங் - சூ - கி, ஆட்சியாளர்களின் ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்தபோது என்ன நடந்தது? 
இந்தோனேஷியாவில் சுகர்னோவை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள்? கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மான் ஜனநாயக உரிமை கேட்டு எழுந்தபோது, பாகிஸ்தான் அதிபர் எவ்வளவு அடக்குமுறையை ஏவினார்?
மற்றும் சில ஆட்சியாளர்கள் தனது ஆட்சியின் எல்லையை அதிகரிக்கும் வகையில், அண்டை நாடுகளுடன் போர் தொடுப்பார்கள். கிறிஸ்துவுக்கு முன்பிருந்த ரோமானிய சாம்ராஜ்ய காலத்திலிருந்து அதுதானே நடக்கிறது! கிரேக்க சாம்ராஜ்யம் அப்படித்தானே விரிவடைந்தது! 
மெளரியப் பேரரசு அப்படித்தானே உருவானது! அசோகரும், கூட ஆதிக்க எல்லையை அதிகரிக்கத்தானே கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்! நம் சேர, சோழ, பாண்டியர்களும் ஆதிக்கத்தை விரிவுபடுத்தித் தானே, கங்கைகொண்டான், கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர்பெற்றார்கள்! 
ஹிட்லரும், முசோலினியும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது, தமது ஆட்சி எல்லையை அதிகரிக்கத்தானே! தற்போது சீனா, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயல்வதும், தென் சீனக் கடலில் ஜப்பான், வியத்நாமை விழுங்க முயல்வதும் அதற்கு உதாரணங்கள் அல்லவா?
ஆட்சியாளர்களின் அதிகாரப் பசிக்கு உணவாக விளங்கும் ஆயுதங்களை அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
அழிவுக்கு வழிவகுக்கும் அணு ஆயுதங்களுக்கு எதிராக, ஏன் அனைத்து வகை ஆயுதங்களுக்கும் எதிராகவும் உலக மக்கள் அனைவரும் ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்!
இன்றைக்கு எழுப்பாவிடில், நாளைக்கு குரல் எழுப்ப, நாம் இருக்க மாட்டோம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com