நதிகள் நாட்டின் நரம்புகள் 

மனிதர்களின் உடம்பில் ஓடும் நாடி நரம்புகள் குருதியைக் கொண்டு செல்வது போல நாட்டில் ஓடும் நதிகள் தண்ணீரைக் கொண்டு செல்கின்றன.
நதிகள் நாட்டின் நரம்புகள் 

மனிதர்களின் உடம்பில் ஓடும் நாடி நரம்புகள் குருதியைக் கொண்டு செல்வது போல நாட்டில் ஓடும் நதிகள் தண்ணீரைக் கொண்டு செல்கின்றன. இந்த நதிகள் இப்போது சுற்றுப்புறச் சூழல் காரணமாக மாசடைந்து வருகின்றன. இதனால் தேசத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டது.
'நதிகளை மீட்போம்' என்ற பெயரில் தேசிய அளவிலான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள நதிகளையும், மண்ணையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு பேரணி தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கமே மரங்களை நடுவதன் மூலம் நதிகளைப் பாதுகாப்பதாகும்.
எதிர்காலத்தில் நாம் இருப்போமோ எனத் தெரியாது. ஆனால் நம் தலைமுறையினருக்கு தண்ணீரும், தண்ணீர் தரும் நதிகளும் இருந்தாக வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் நாடெங்கும் நடைபெற வேண்டும்.
மழையில்லாமல் வறட்சியால் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மழையைப் பொருத்தவரை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும். நமது நாட்டில் வடமாநிலங்கள் மழை வெள்ளத்தால் மிதக்கும்போது, தென் மாநிலங்கள் குடிதண்ணீருக்காகத் தவிக்கின்றன.
இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே மண்ணையும், தண்ணீரையும் காக்க மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தக் கோரிக்கை நமக்குப் புதிதல்ல. கடந்த 2002-ஆம் ஆண்டு இதே பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டதுதான். அப்போது தீவிர செயல்திட்டமாக உருவாக்கப்பட்ட இது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முடங்கிவிட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டன. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களின் நதிகளுக்குத் திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
நதிகள் இணைப்புத் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு அப்போது ஒரு குழுவையும் அமைத்தது. அந்தக் குழு இரண்டு விதங்களில் நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
தீபகற்ப நதிகளை இணைப்பது ஒரு திட்டம். இந்தத் திட்டத்தில் மகாநதி மற்றும் கோதாவரி நதிகளில் வெள்ளப் பெருக்கால் வீணாகும் தண்ணீரை பெண்ணாறு, கிருஷ்ணா, வைகை, காவிரி உள்ளிட்ட 16 நதிகளுக்குத் திருப்பி விடுவது.
அப்படி நதிகளை இணைத்து, தெற்கு நீர்த் தொகுப்பு என்ற அமைப்பு மூலம் இந்தியாவின் தென்பகுதிக்கு வற்றாத நீர்வளம் கிடைக்கச் செய்வது முதல் திட்டம்.
இரண்டாவது திட்டம், வட இந்தியாவில் ஓடும் கங்கை மற்றும் பிரம்மபுத்ராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுத்து, நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் வகை செய்யும் விதத்தில் அந்த இரு பெரிய மாநதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது என்பதாகும்.
இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்ற மொத்தம் ரூ.5 லட்சம் கோடி செலவாகும் என்று அந்தத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த நதிகள் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
கடந்த 2012 பிப்ரவரி 27 அன்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.
'நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் தற்போது அதிக செலவு பிடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே நதிகள் இணைப்புத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அத்துடன் நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தயாரிக்கவும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஒரு குழுவையும் உச்சநீதிமன்றமே நியமித்தது. அப்போதும் இந்தத் திட்டம் தொடங்கவில்லை.
நமது நாட்டில் மொத்த நீர் வளத்தில் 30 விழுக்காடுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 70 விழுக்காடு நீர் கடலில் கலந்து வீணாகிறது.
நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதிதாக 3 கோடியே 40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்பது நதிநீர் வல்லுநர்களின் கருத்தாகும்.
கங்கையையும், காவிரியையும் இணைக்கும் தேசிய திட்டத்தை நிறைவேற்ற பெருமளவு நிதி தேவைப்படும் என்பதால் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் அண்மையில் அறிவித்தார்.
2009-ஆம் ஆண்டு சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்தைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும், இந்தத் திட்டத்தினால் சாதகங்களை விடப் பாதகங்களே அதிகம் என்றும் கூறிவிட்டுச் சென்றார். அவரது நிலைப்பாட்டின் காரணமாகவே கங்கையையும், காவிரியையும் இணைக்கும் தேசியத் திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டது.
கங்கையையும், காவிரியையும் இணைப்பதற்கு பதிலாக இப்போது வடக்கில் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகள் ஆகியவற்றை இணைக்கும் திட்டம் தனியாகவும், தென்னிந்திய தீபகற்பத்தில் உருவாகும் நதிகளை இணைக்கும் திட்டம் தனியாகவும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பன்சால் அறிவித்தார். இந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட வில்லை.
நிதி ஆதாரம் போதிய அளவு இல்லை என்பதனால் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது. வாராக்கடனும், வரவேண்டிய கருப்புப் பணமும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திடப் போதுமானது என்று சமூக சிந்தனையாளர்கள் கூறியது இவர்களது காதுகளில் விழவில்லையா?
காவிரியும், வைகையும் பாயும் தமிழ்நாடு இன்னும் 25 ஆண்டுகளில் பாலைவனமாக மாறும் ஆபத்து உள்ளதாக நீரியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கையை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
நாட்டில் உள்ள அனைத்து பெரிய நதிகளையும் நாட்டுடைமையாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு காவிரி நீருக்காக பல காலமாகப் போராடி வருகிறது. கடந்த ஜூலை 5 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. தமிழ் நாட்டின் நியாயமான நீர்ப்பங்கை காவிரியில் விடும்படி கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு.
காவிரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பெண்ணையாறு ஆகிய ஐந்து பெரிய ஆறுகளும், நொய்யல், பவானி, அமராவதி ஆகிய சிறிய ஆறுகளும் சீரழிந்து கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், சாக்கடைநீர், குப்பைகள் இவை கொட்டப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தண்ணீர் பிரச்னை மிகவும் முக்கியமான பிரச்னையாகும். எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் காரணியாக இது இருக்கும் என்று நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படாத அரசுகள் எதிர்காலத்தில் மக்களால் புறக்கணிக்கப்படுவர் என்றும், மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான நீர்வளத்தைச் சரிவர அளிக்கத் தவறும் அரசுகள் வரும் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் என்றும் நீர்வள மாநாட்டில் அவர் பேசியுள்ளார்.
மணல் கொள்ளை மற்றும் கனிமவளக் கொள்ளையால் ஆறுகள் எல்லாம் நீர் ஆதாரங்களை இழந்து கொண்டிருக்கின்றன. எப்படியாவது, பணம் பண்ண வேண்டும் என்ற சமூக விரோதிகளின் பேராசை தேசத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாட்டுக்கு விடுதலை கிடையாதா?
உச்சநீதிமன்ற ஆணையின்படி நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. தேசிய தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரும் வலியுறுத்தியுள்ளார்.
இறந்து கொண்டிருக்கும் நதிகளை மீட்காமல் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியாது. நதிகள் எல்லாம் நாட்டின் நரம்புகளாகும். குருதி ஓட்டம் நின்றுவிட்டால் எல்லோருடைய ஆட்டமும் நின்றுவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com