புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

புதிய இந்தியாவை 2022-இல் பார்க்க வேண்டும். அந்த இந்தியாவில் வறுமை இருக்காது. லஞ்சம் இருக்காது. பசி இருக்காது. பட்டினி இருக்காது.

புதிய இந்தியாவை 2022-இல் பார்க்க வேண்டும். அந்த இந்தியாவில் வறுமை இருக்காது. லஞ்சம் இருக்காது. பசி இருக்காது. பட்டினி இருக்காது. பிணி இருக்காது. சாதி சமய மாச்சரியமிருக்காது. பீதியும் பிணக்கும் இருக்காது. பிரிவினை இருக்காது. ஒதுக்குதலும் ஒடுக்குதலும் இருக்காது. தாழ்விருக்காது. தளர்ச்சி இருக்காது. அசுத்தம் இல்லை. அந்த இந்தியா அனைவருக்குமான இந்தியா. 
அனைத்துத்தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைத்து மானுட வாழ்க்கை பற்றி விழிப்புணர்வு பெற்று, அறிவியல்பூர்வ, மதிக்கத்தக்க, மரியாதையுடைய மானுட வாழ்வை வாழ்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவிடும். அனைவரும் அதிகாரம் பெற்றவர்களாக, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்திட வசதிகள் செய்துதரப்பட்டுவிடும். 
இப்படித்தான் நான் நம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள புது இந்தியாவை கற்பனை செய்து பார்க்கத் தோன்றுகிறது. இந்தக் கனவு யாருக்குத்தான் இருக்காது? அந்த இந்தியா சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஆனால் அதை இன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் மட்டுமே சாதிக்க முடியுமா என்றால் சாதிக்க முடியாது என்பதுதான் பதில். 
மத்திய அரசாங்கம் அறிவிக்கின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும் அல்லது உருவாக்கும் எந்தச் சட்டமாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த மக்களைத் தயார் செய்வதும், மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை திறமையாக செயல்பட வைக்கத் தயார்படுத்துவதுதான் மிக முக்கியச் செயல்பாடுகள். 
ஏனென்றால் மத்திய அரசு, எவ்வளவு சிறந்த சட்டங்களைப் போட்டாலும், திட்டங்களை உருவாக்கினாலும் அவற்றை நடைமுறைப்படுத்த வலுவான மாநில அரசும், அதற்கு இணையாக வலுவான உள்ளாட்சி அமைப்பும் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
இவற்றைவிட மிக முக்கியமாக மக்களைத் தயார் செய்ய வேண்டும். நாம் சந்திக்கின்ற பிரச்னைகளுக்கு தீர்வு என்பது சரியான அரசுக் கட்டமைப்பை உருவாகுவதில்தான் உள்ளது. 
1960-களில் இந்திய அரசாங்க நிர்வாக கட்டமைப்புகளையும், நடைமுறைகளையும் ஆய்வு செய்த பால் அப்பல்பி என்ற நிர்வாகவியல் அறிஞர் இதனைத் தன் அறிக்கையில் குறிப்பிட்டு அன்றைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பித்தார். 
அரசுக் கட்டமைப்பு என்பது மத்திய அரசு மட்டும் அல்ல. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைக்க பல நிலைகளில் அரசாங்க நிர்வாக அமைப்புகள் திறமையுடன் செயல்பட வேண்டும். 
அது எப்படி சாத்தியப்படும்? இன்று நிலவும் அதிகாரக் குவிப்பிற்குப் பதிலாக அதிகாரப் பகிர்வை மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேவையான அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். வலுவான அரசாங்க அமைப்புகளை மூன்று நிலைகளிலும் ஏற்படுத்தி மத்திய அரசின் திட்டங்களை தீவிரமாக மக்கள் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும். 
இவற்றைச் செய்யாவிட்டால் மத்திய அரசின் திட்டங்கள் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் இன்றைய மத்திய அரசு 'நாங்கள் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் பயன் அளிக்க மாநில அரசுகள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்று கூறுகிறது. 
இதனை தாரக மந்திரமாக பிரதம அமைச்சரிலிருந்து அனைத்து அமைச்சர்களும் கூறி வருகின்றனர். இன்றைய இந்தியாவில் பல மாநிலங்களில், மாநில அரசு இயந்திரங்களிலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளிலும் சரி பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வலுவான நிர்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் எதார்த்தமான சூழல் என்பதை மறந்துவிடக் கூடாது. 
இது இரண்டாவது மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த அதிகாரக்குவிப்பு என்பது இந்தியாவில் நீண்ட நாள்களுக்கு முன்பே துவங்கிவிட்ட ஒன்று என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதிகாரப்பரவல் என்ற கோஷத்தை முழங்கிக்கொண்டே அதிகாரப் பறிப்பினைத் தொடர்ந்து செய்து வந்துள்ளது. அது இப்போது அதிகாரக்குவிப்பைத் தடுப்பதற்கு ஆள் இன்றி, உலகமயப் பொருளாதாரத்தின் பின்னணியில் வளர்ச்சி, முன்னேற்றம் மேம்பாடு என்று முழங்குகிறது. 
சந்தைக்கான சீர்திருத்தம் எனச் சொல்லி அதிகாரப் பறிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடு. ஒரு நாட்டில் அரசு ஆளுகையின் மூலம் மக்களுக்குச் செய்யப்படும் சேவை முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டுமென்றால் ஒட்டுமொத்த அதிகாரக் குவியலும் இருக்கக் கூடாது, அதேபோல் ஒட்டுமொத்த அதிகாரப்பரவலும் இருக்கக் கூடாது. 
அந்தந்த நாட்டின் சமூகப் பொருளாதார, கலாசாரச் சூழலுக்கு ஏற்ற அரசாங்க அடுக்குகளுக்குத் தேவையான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அரசாங்கங்கள் இணைந்து செயல்பட தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியா போன்று வேறுபாடுகளும், வித்தியாசங்களும், ஏற்றத்தாழ்வுகளும் அதிக அளவில் இருக்கும் நாடுகளில் சீரான முறையில் அதிகாரப் பகிர்வு நடைபெற வேண்டும். 
சுதந்திரம் பெற்றதிலிருந்து அதிகாரப் பகிர்வு என்பது முறையாக நடைபெறவில்லை என்பது அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று. சர்க்காரியா கமிஷன், பூஞ்ச் கமிட்டி என இரு முறை மத்திய - மாநில உறவுமுறைகள் பற்றிய ஆய்வு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டிருந்தாலும், இந்த இரண்டு அறிக்கைகளிலும் கூறப்பட்ட பரிந்துரை எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் ஒரு சோகமான செய்தி. 
இந்த அறிக்கைகளில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி இருந்தாலே மாநில அரசுகளின் நிர்வாகக் கட்டமைப்பு மேம்பட்டிருக்கும். 
கடந்தகால அனுபவம் நமக்கு ஒன்றைச் சொல்கிறது. வலுவிழந்த மத்திய அரசின் தலைமை பல சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவந்தபோதும், அவற்றுக்காக அதிக நிதி ஒதுக்கியபோதும், அவை அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை பார்த்து வந்துள்ளோம். 
எந்த மாதிரியான விளைவை அந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருக்க வேண்டுமோ அந்த விளைவுகளை அவற்றால் ஏற்படுத்த முடியவில்லை. கடந்தகால மத்திய அரசு திட்டங்கள் மூலம் மிகப்பெரிய புரட்சியையே செய்தது, அதுவும் சட்டங்கள் மூலமாகவும் மிக அதிக அளவு நிதியுடனும். 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், வேலை உறுதியளிப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், வீதிகளில் தொழில்புரிவோர் பாதுகாப்புச் சட்டம், துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வுத் திட்டம் எனப் பல்வேறு நலத்திட்டங்கள் உலகப் பார்வையை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டன. 
ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சிகளைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவு மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த விளைவுகளை அந்தத் திட்டங்கள் ஏற்படுத்தவில்லை. எனவே இந்த அனுபவத்திலிருந்து இன்றைய மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 
எந்த மத்திய அரசின் திட்டமும் முறையாகச் செயல்பட மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புக்களும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அந்த இரண்டுமே மத்திய அரசின் கைப்பாவையாக மாறும் சூழல்தான் தென்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். 
பொருளாதார வளர்ச்சிக்காக பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் அரசு, ஏழைகளின் நிலை உயரவும் பல சீர்திருத்தங்களைச் செய்ய முனைய வேண்டும். ஒரே நேரத்தில் 2000-க்கு மேற்பட்ட உளுத்துப்போன சட்டங்களை தூக்கி எறிந்தார் நம் பிரதமர். பாராட்டப்பட வேண்டியதுதான். 
அதேபோல் ஏழ்மையை அகற்றிடவும் அல்லது வறுமையைக் குறைத்திடவும், பங்கீட்டு நிதியை முறையாகச் செலவு செய்திட பல சீர்திருத்தங்கள் மாநில அரசிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் செய்யப்பட்டாக வேண்டும். எப்படியெல்லாம் நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது நிர்வாகச் சீர்திருத்த அறிக்கை. 
நம் மாநில அரசிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆளுகை என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. அவற்றை சீர்திருத்தி, எளிமைப்படுத்த வேண்டும். மத்திய அரசிடமிருந்து நலத்திட்டப் பணிகளுக்கு எப்படி நிதி வருகிறது, அதைக் கண்காணிப்பது எப்படி என்பதை சாதாரண மனிதனும் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். 
நலத்திட்டங்களுக்கு வரும் நிதி எப்படி, எப்போது, யார் மூலம், யாருக்கு வந்து யார் மூலம் செலவு செய்யப்படுகிறது என்பது பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிய வேண்டும். சீர்திருத்துவதும், எளிமைப்படுத்துவதும் பொதுமக்கள் எளிதாக ஆளுகையை புரிந்துகொள்ளும் வகையில் செய்யப்பட்டால் மட்டுமே பொதுமக்களை அதிகாரப்படுத்த முடியும். 
இன்றும் ஏழைகளுக்கான திட்டங்களுக்கு குறைவில்லை. ஆனால் அவை அனைத்தும் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரியவில்லை. 14-ஆவது நிதிக்குழுவுக்கு வழங்கப்படும் நிதியும், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் நிதியும் மட்டுமே கிராமங்களுக்குக் கிடைக்கும் பெருந்தொகையாகும். 
இவற்றைத் தாண்டி எண்ணற்ற திட்டங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன என்பதற்கான வழித்தடங்களைக் கண்டறிவது மிகவும் சிரமமான ஒன்று. அந்த வழித்தடங்களை கண்டுபிடிக்கும் அளவிற்கு நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்படுமேயானால் மத்திய அரசு எண்ணும் குறிக்கோளை எய்த முடியும் என்பது உறுதி. 
எனவே வலுவான மாநில அரசாங்கம், வலுவான உள்ளாட்சி அரசாங்கம், வெளிப்படையான ஆளுகை மற்றும் நிர்வாகம், எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் இவை அனைத்தும் கூடி வந்தால்தான் புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com