பலமுனைத் தாக்குதலில் பட்டாசு

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதற்கேற்ப தீபாவளி வருவதற்கு முன்பே பட்டாசு பிரச்னை தலைதூக்கி விடுகிறது.
பலமுனைத் தாக்குதலில் பட்டாசு

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதற்கேற்ப தீபாவளி வருவதற்கு முன்பே பட்டாசு பிரச்னை தலைதூக்கி விடுகிறது. சில வருடங்களுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளர்களால் உருவாக்கப்படுகிறது என்ற காரணம் காட்டி பட்டாசைப் புறக்கணியுங்கள் என்று பலமுனை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 
உள்ளூர் சிறுவர்களின் எண்ணிக்கையும் சிவகாசி சுற்றியுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்ததால் அந்தப் பிரச்னையை ஒருவழியாக தீர்த்தது. 
அடுத்த ஆண்டே சீனப் பட்டாசு உருவில் மீண்டும் ஒரு பூதம் கிளம்பிற்று. இந்திய பட்டாசு வகைகள் அலுமினியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி ஜப்பானிய தொழில் நுட்பத்துடன் தயாராகிறது. இப்பட்டாசை பெரியவர்கள் மட்டுமல்ல, சிறு குழந்தைகள் கூட அச்சமின்றி உபயோகிக்கும் அளவுக்கு பாதுகாப்பானது. 
சீன பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரைடு என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது எளிதில் தீப்பற்றும் தன்மை உடையது. சிறு உராய்வு ஏற்பட்டாலே வெடிக்கும். சீன பட்டாசுகளில் 20 கிராம் அளவுக்கு பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடுக்கு இணையாக இந்திய பட்டாசுகளில் 200 கிராம் அளவுக்கு அலுமினியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதி. 
இந்தியா இயற்கையிலேயே வெப்பம் மிகுந்த நாடாக உள்ளது. சீன நாட்டில் நதிகள் அதிகம் உள்ளதால் குளிர் பிரதேசமாக உள்ளது. அதனால் சீன நாட்டிலிருந்து விலை குறைந்த, ஆபத்து மிகுந்த, பொது மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பட்டாசு கள்ளத்தனமாக இறக்குமதியாகி இந்திய சந்தைக்கு வந்தது. 
அது உள்நாட்டு பட்டாசு விற்பனையை குறைத்ததோடு மட்டுமின்றி, அரசின் வரி வருவாயையும் குறைத்தது. இதனை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது. தற்போது இத்தொழில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. மூலம் மீண்டும் ஒரு நெருக்கடியை சந்திக்கிறது. 
சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 821 அங்கீகாரம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 சதவீத அளவிற்கு உள்ள தொழிற்சாலைகள் முன்னணி நிறுவனங்களால் நடத்தப்படும் பெரிய தொழிற்சாலைகள். மீதமுள்ள 750-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் குறைந்தபட்சமாக சுமார் 200 முதல் அதிகபட்சமாக 300 பேர் வரை தொழில் புரிகிறார்கள். 
ஒட்டுமொத்தமாக சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விற்பனை மற்றும் இதர தொழில்கள் மூலம் சுமார் ஐந்து லட்சம் பேர் இத்தொழிலில் பயனடைகிறார்கள்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு ஒன்றரை கோடி ரூபாய் விற்பனைக்குள் வரும் தொழிற்சாலைகளுக்கு வரி கிடையாது. கிட்டத்தட்ட 750-க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த வட்டத்திற்குள் வந்துவிடும். 
மீதமுள்ள சுமார் 80 தொழிற்சாலைகள் மட்டும் 12 சதவீத வாட் வரியையும் வெளிமாநிலங்களில் இரண்டு சதவீத வரியையும் மத்திய அரசிற்கு 14 சதவீத வரியையும் கட்டி வந்தன. தற்போது ஒட்டுமொத்தமாக எல்லா தொழிற்சாலைகளுக்கும் 28 சதவீத வரியை விதித்ததன் மூலம் சிறு, குறு தொழிற்சாலைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. 
பட்டாசு உற்பத்தி 80 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதன் மூலம் கிடைக்கும் விற்பனை வரி தமிழ்நாட்டிற்கு 5 சதவீத அளவிற்கே கிடைக்கிறது. மீதமுள்ள விற்பனை வரி எல்லாம் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகிறது. அங்கு விற்பனை மட்டுமே உள்ளதால் உற்பத்தி, தொழிலாளர்கள் போன்ற பிரச்னை எழு வதில்லை. 
ஜி.எஸ்.டி. அமலுக்கு பின் பட்டாசு விற்பனையிலும் பலவித கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டாசு ஆலைகளிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் தனிநபர்களுக்கு அவர்களின் ஆதார் அடையாள அட்டை நகல், பான் கார்டு நகல் இணைக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனிநபர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுத்தும்.
2015-ஆம் ஆண்டில் தீபாவளியின் போது ஏற்பட்ட புகைமூட்டத்தால் பட்டாசு வெடிக்க தடை கேட்டு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 2016 தீபாவளியை அடுத்து ஒரு வாரத்திற்கு தலைநகர் தில்லியில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை தரப்பட்டது. 
மேலும் போக்குவரத்து பாதிப்பில் அதிக விபத்துகளும் ஏற்பட்டது. அப்போது பழைய வழக்குதாரர்கள் தில்லி உச்சநீதிமன்றத்தில் ஜூலை 2016-இல் மீண்டும் தடை கோரினர். 
இவ்வழக்கில் என்.சி.ஆர். என்று அழைக்கப்படும் டெல்லியைச் சுற்றியுள்ள தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு நிரந்தர தடை விதித்து தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 
இதை எதிர்த்து பட்டாசு தொழிற்சாலைகள் மூலம் தொடரப்பட்ட வழக்கில் சென்ற ஆண்டு கொடுக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தீர்வாக நீதிபதி மதன் பி லோகுர், தீபக் குப்தா தலைமையிலான இரு நீதிபதி அமர்வு 2017 செப்டம்பர் 12 அன்று அடுத்த உத்தரவு வரும்வரை விற்பனைக்கு தடையில்லை என தீர்ப்பு கூறியது. 
மேலும் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் மனிதர்களை பாதிக்கும் லித்தினியம், அர்சரிக், ஈயம், பாதரசம் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தக் கூடாது. ஏற்கனவே அனுமதி பெற்ற விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள சரக்கை விற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடைகளின் அனுமதியை பாதியாக குறைக்க வேண்டும். இதை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி தருணங்களில் மட்டுமே இப்பிரச்னை எழுப்பப்படுவதும் பின்னர் அது குளத்தில் எறியப்பட்ட கல் போல் அமிழ்ந்து போவதும் தொடர்கதையாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் ஆண்டு முழுவதும் தயாரிக்கப்படும் பட்டாசு தீபாவளியின் போது மட்டுமே விற்பனை செய்யப்படும். 
ஆனால் தற்போது ஆண்டு முழுவதுமே விற்பனை உள்ளது. பட்டாசு தற்போது தீபாவளியின் போது மட்டும் வெடிக்கப்படுவதில்லை. உள்ளூர் கோயில் திருவிழா, தேர்தல் வெற்றி, திருமணங்கள், விளையாட்டு ஆரவாரம், கிறிஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்கள், சாவு ஊர்வலங்கள் என எல்லாவற்றிற்குமே பட்டாசு வெடிக்கப்படுகிறது. ஆனால் பிரச்னை எழுவதோ தீபாவளியின் போது மட்டுமே. 
சென்ற ஆண்டு ஏற்பட்ட கடுமையான புகைமூட்டத்திற்கு என்ன காரணம் என்பதற்கு ஆதாரமாக அமெரிக்காவின் நாசா வெளியிட்ட சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் ஒரு உண்மை தெரியவந்தது. 
அதன்படி தில்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் 32 மில்லியன் அளவுக்கு கோதுமை, நெல் பதர்கள் எரிக்கப்பட்டது. 
அதன் காரணமாகவும், தில்லியிலுள்ள 9,000 ஹோட்டல்களின் தந்தூரி கரியடுப்புகளின் புகையும், அங்கு செயல்படும் 14 அனல்மின் நிலையங்களின் புகையும், கோடிக்கணக்கில் பெருகிவரும் வாகனப்புகை, கழிவுகளை எரித்தல், குளிர்காலம் காரணமாக பொதுமக்களின் கரியடுப்பு புகை, இதைத் தவிர மருத்துவக் கழிவுகளின் எரிப்பு காரணமாக எழுந்த புகை என பல்வேறு காரணங்களாலும் இந்த புகைமூட்டம் அதிகமாக இருந்தது. 
எல்லா ஆண்டும் அந்தத் தருணங்களில் பெய்யும் மழையும் சென்ற ஆண்டு பொய்த்துப் போனதால் கூடுதல் புகை மூட்டத்திற்கு இதுவும் காரணமாக அமைந்தது.
தீபாவளி பட்டாசு புகை மட்டுமே காரணம் என்றால் இதே தருணத்தில் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி பகுதிகளிலும் இதே புகைமூட்டம் இருந்திருக்கிறது. இதனை நாசாவின் சாட்டிலைட் புகைப்படம் தெளிவாக விளக்குகிறது. 
இந்தியாவின் பட்டாசு புகை காரணம் என்றால் பாகிஸ்தானில் என்ன காரணம்? ஆக, தீபாவளி நேரத்தில் மட்டும் ஏதாவது ஒரு புதுப்புது காரணம் காட்டி தொடர்ச்சியாக இத்தொழிலின் மீது பலமுனைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. 
இந்த தீபாவளி விற்பனையை கைவிட முடியாது என்ற நிலையில் வேறு வழியில்லாமல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வியாபாரிகளும் 28 சதவீத வரி செலுத்தி பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். அது நுகர்வோரிடம் செல்லும் போது 40 சதவீத விலை உயர்வு. 
பொதுமக்கள் பட்டாசுகளை வாங்குகிறார்களா? அல்லது மலிவு விலை சீன பட்டாசு தாக்கத்தால் சிவகாசி பட்டாசை புறக்கணிக்கப் போகிறார்களா என்பது விரைவில் தெரியவரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com