வலுவற்ற சட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளாக தில்லியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தில்லி காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தில்லியில் நாளுக்குநாள் பெண்கள் மற்றும்

கடந்த 5 ஆண்டுகளாக தில்லியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தில்லி காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தில்லியில் நாளுக்குநாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. 
குறிப்பாக நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவி ஒரு கும்பலால் பலத்காரம் செய்து ஒடும் பேருந்திலிருந்து தூக்கி விசப்பட்டு பரிதாபமாக பலியான சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பின்னும் இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
குறிப்பாக தலைநகர் தில்லியில் கடந்த 2011-ஆம் ஆண்டு 572 பாலியல் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3 மடங்காக (2,155) அதிகரித்துள்ளது. நிர்பயா தாக்குதல் நடந்த 2012-ஆம் ஆண்டு பாலியல் வன்முறை சம்பவங்கள் 132 சதவீதம் அதிகரித்திருந்தது. 
அதன் பின் ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை 32 சதவீதமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த வகையிலான குற்ற வழக்கின் எண்ணிக்கை 1636-ஆக இருந்தது. பின் அது படிப்படியாக உயர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு 2155-ஐ எட்டியது. நடப்பு ஆண்டு முதல் ஐந்து மாதத்தில் மட்டுமே 836 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த ஆண்டில் 4165 வழக்குகள் பதிவாகின. இது கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்த 727 எண்ணிக்கையை காட்டிலும் 473 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜுன் மாதத்தில் 48 மணி நேரத்துக்குள் 5 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 
இதற்கு காரணம் மத்திய அரசின் அறிவுரை மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும் காவலர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதை உறுதிபடுத்தாததுதான். இந்த குற்ற சம்பவங்கள் குறைவதற்கு, நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டும். 
பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டம் (2012) கொண்டுவரப்பட்டுள்ளதால் பலாத்கார குற்ற புகார்கள் அதிகளவில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படுகிறது. 
கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி குற்றவியல் சட்டத்திருத்தத்தில் (நிர்பயா சட்டம்) புதிதாக சேர்க்கப்பட்ட விதியில் பெண் காவல் அதிகாரிகள் முன் பதிவு செய்யப்படும் பாலியல் குற்றசாட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு 6மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனாலும் அதற்குப் பிறகும் காவல்துறையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக தெரியவில்லை.
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்களிடம் குறைந்துள்ளதால் வழக்குகள் வாபஸ் பெறுவது 2014-ஐவிட (81) 2015-ஆம் ஆண்டு (104) அதிகரித்துள்ளது. 
அதேபோல் குற்றப் புகார் கூறப்படும் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படுகின்றன. 
இது, மற்ற பாலியல் குற்ற புகார்கள் அனைத்தும் பொய் என சித்திரிப்பதோடு பொய்யான குற்றச்சாட்டுகள் என்ற தவறான எண்ணத்தையும் உருவாக்குகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.1,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. 
மேலும் ரூ.3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் கடந்த ஏப்பரல் 3-ஆம் தேதி தெரிவித்தது. பெண்களுக்கென பரிந்துரைக்கப்பட்ட 16 திட்டங்களில் 15 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மகிளா போலீஸ் தன்னார்வலர் கண்காணிப்பு பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எந்தளவுக்கு செயல்படுகின்றன என்பது பற்றி ஆய்வு செய்தால்தான் உண்மை தெரியவரும்.
தேசிய அளவிலான கொள்கையை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என கடந்த மே 26, 2016 தீர்ப்பின்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதோடு வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்குகென 84 மையங்கள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. அவை எந்தளவிற்கு செயல்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் ஏதும் இல்லை. 
பெண்களுக்கென சர்வதேச உதவி எண் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரமும் வெளியிடப்படவில்லை. 
எனினும் குற்ற சம்பவங்களை நிரூபிக்க காவல்துறை தீவிர விசாரனை நடத்தாததும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வழக்குரைஞர்கள் திறமையாக வாதாடததும் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
விழிப்புணர்வு மற்றும் ஊடகங்களின் மூலம் பாலியல் புகார் சம்பவங்கள் வெளிகொணரப்பட்டு அதன் எண்ணிக்கை அதிகரித்தாலும் இன்னும் வெளிச்சத்துக்கு வராத புகார்கள் அதிகளவில் உள்ளன என்பதே உண்மை. 
அரசுகள் அழுத்தம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தினால்தான் தலைநகர் தில்லி மட்டுமல்ல இந்தியா முழுவதுமுள்ள பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களைத் தடுக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com