நிலைக்குமா நற்பெயர்?

நற்பெயர் என்பது ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருப்பதில்லை. தங்களின் அரசியல், கலாசார செயற்பாடுகளால், பேச்சுகளால் சிலர் நற்பெயரைப் பறிகொடுத்துவிடுகிறார்கள்
நிலைக்குமா நற்பெயர்?

நற்பெயர் என்பது ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருப்பதில்லை. தங்களின் அரசியல், கலாசார செயற்பாடுகளால், பேச்சுகளால் சிலர் நற்பெயரைப் பறிகொடுத்துவிடுகிறார்கள். தான் என்ற அகந்தையாலும், குடும்பத்தை மேலே கொண்டு வந்துவிட வேண்டுமென்ற பேராசையாலும் அது தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. அது சரித்திரம். 
ஆனால் மனிதர்கள் சரித்திரத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை. எனவே பாடுபட்டு பெற்ற நற்பெயரை பலர் பறிகொடுத்து விடுகிறார்கள்.
நமக்குப் பக்கத்து நாடு பர்மா. அதன் புதுப்பெயர் மியான்மர். அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. 
1928-ஆம் ஆண்டில் மகாகவி பாரதியார் கவிதைகள் சுதந்திர உணர்ச்சியை ஊட்டுகின்றன; மக்களைப் போராட தூண்டுகின்றன என்று அவரது கவிதை நூலுக்குத் தடை போட்டது பிரிட்டிஷ் அரசு. கடைகளில் விற்பனைக்கு இருந்த புத்தகங்களைப் பறிமுதல் செய்தது. 
அதனைக் காரணம் காட்டி தமிழ்நாட்டிலும் பாரதியார் கவிதைகளுக்குத் தடை போடப்பட்டது. அச்சான பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது சட்டப்பேரவையில் பாரதியார் கவிதை நூல் பற்றி பெரும் விவாதம் நடைபெற்றது. அது நீதி கட்சியின் ஆட்சி காலம். விவாதத்தை காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். 
அப்பொழுது அவர் கூறினார்: 'பாரதியார் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் அவரை அரசபை கவிஞராக்கி பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டாடும். பாவம், பாரதியார் அடிமை இந்தியாவில் பிறந்து தமிழில் எழுதினார். அவர் அற்ப ஆயுளில் இறந்து போய்விட்டார். 
தனது மனைவிக்கும், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவர் சொத்தொன்றும் வைத்துவிட்டுப் போகவில்லை. அவர் கவிதைகளை வெளியிட்டு அதில் வரும் சொற்ப வருமானத்தில் மூன்று பேரும் ஜீவிக்கிறார்கள். அவர்கள் ஜீவிதத்தை இந்த அரசு பறிக்கப் போகிறதா?' என்று கேட்டார். 
அவர் கருத்தை சட்டப்பேரவையில் இருந்த பல உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்.
'பாரதியாரின் மனைவி கண்ணீர் விடுவதை மட்டுமல்ல, எந்தப் பெண்ணும் கண்ணீர் விடும்படி அரசாங்கம் எதுவும் செய்யாது' என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பாரதியார் கவிதை நூலுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.
மியான்மர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுவோர் அதிகமாக வாழும் நாடு. அவர்களின் பெளத்த சமயம் இலங்கையில் இருந்து சென்ற தேரா வாதம். 
135 இனக் குழுக்கள் பல்வேறு மொழிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவற்றில் ஒரு குழு ரோஹிங்கயா. அவர்கள் இஸ்லாமியர்கள். வங்காளத்தில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் பேசும் மொழியும், எழுதும் எழுத்தின் வடிவமும் அதனை உறுதிப்படுத்துகின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து நெற்பயிரிடவும், தோட்ட வேலைகள் பார்க்கவும், தேக்கு மரங்கள் வெட்டவும், துறைமுகம், சாலைகளில் பணியாற்றவும் ஏராளமான ஆட்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். 
பலர் ரப்பர் மரத்தில் பாலெடுக்கும் வேலையில் சேர்ந்தார்கள். பெரும் மழைக்காடுகள் ரப்பர் தோட்டங்களாக மாறின.
தொழிலாளர்கள் குடியேறியதும் பல்பொருள் அங்காடிகள், வட்டிக் கடைகள் வைக்க நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் சென்றார்கள். 
கழனிகள், ரப்பர் தோட்டங்கள், தேக்கு மரக் காடுகளை வாங்கினார்கள். தேக்கு மரம் நல்ல லாபம் கொடுக்கும் பொருளாக இருந்தது. எனவே அதனைப் பயிராக்கி பெரும் பணம் சம்பாதித்தார்கள். அதனை மறுபடியும் முதலீடு செய்தார்கள். அந்நாட்டைத் தாயகமாகவே கருதினார்கள். புத்தகங்கள், பத்திரிகைகள் வெளியிட்டார்கள். 
1948-ஆம் ஆண்டில் மியான்மர் சுதந்திர நாடாகியது. பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இனக் குழுக்கள் அதிகாரத்திற்குப் போட்டியிட்டன. ரோஹிங்கயாக்கள் இஸ்லாமியர்களுக்கான தனி மாநிலம் கேட்டார்கள். 
பாகிஸ்தானை உருவாக்கிய முகமதுஅலி ஜின்னா, ரோஹிங்கயாக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். இனக் கலவரங்கள் அடிக்கடி நடைபெற்றன.
1962-ஆம் ஆண்டில் ஜெனரல் நீவின் ராணுவ நடவடிக்கையின் மூலமாக ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்டார். ஒரே ஒரு சட்டத்தின் மூலம், நிலம், காடு, கடைகள், தொழிற்சாலைகள், வங்கி என்று நாட்டில் உள்ள அனைத்தையும் அரசுடைமையாக்கினார். 
பெரும் தோட்ட அதிபர்கள், கோடிக்கணக்கில் பணம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒரே நாளில் ஏழையானார்கள். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் நாட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் கப்பல் ஏறி சென்னை துறைமுகத்தில் கரையிறங்கினார்கள். 
கையில் பணம் கிடையாது. எனவே கையோடு கொண்டு வந்த துணிமணிகள், சோப்பு, பவுடர், மணி வகைகள், கண்ணாடி, விளையாட்டுச் சாமான்கள் என்று பலவற்றையும் பாரிமுனை பகுதியில் கடை பரப்பி விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். அதுதான் இப்போதும் இருக்கக்கூடிய பர்மா பஜார்.
1982-ஆம் ஆண்டில் மியான்மரில் புதிய குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொருவருடைய மூலாதாரம் சரி பார்க்கப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டது. 
அதில் ரோஹிங்கயா முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டார்கள். 'அவர்கள் முஸ்லிம்கள். அவர்களை எங்கள் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களோடு சேர்ந்து வாழ இயலாது. ஆனால், அவர்களைக் கொன்று கடலில் வீசமாட்டோம்' என்று மியான்மர் அமைச்சர் ஒருவர் கூறினார்.
ரோஹிங்கயா என்ற அரபு மொழிச் சொல்லுக்குக் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது பொருள். அவர்கள்தான் அல்லல் பட்டு கடலில் படகுகளில் பசியும், பட்டினியுமாகப் புகலிடம் தேடி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பக்கத்து நாடுகளோ, தொலைவில் உள்ள நாடுகளோ ஏற்றுப் புகலிடம் கொடுக்கத் தயாராக இல்லை. 
அதுவும், படிப்பறிவு இல்லாத ஏழை மக்களை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. செல்வ வளம் மிகுந்த இஸ்லாமிய நாடுகள், தங்கள் மதத்தைப் பின்பற்றும் ரோஹிங்கயாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். 
ஆனால், எந்த நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஒவ்வொரு நாடும் அவர்கள் தங்கள் நாட்டு வளத்தையும் வேலைவாய்ப்புகளையும் பறித்துவிடுவார்கள் என்று பயப்படுகிறது.
மியான்மரின் அதிக அதிகாரம் படைத்த தலைவர் ஆங் சான் சூகி சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் தலைவரின் மகள். ஜனநாயகப் போராளி. தன் நாட்டில் ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டுமென்பதற்காகப் பதினைந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர். 
1991-ஆம் ஆண்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்து அமைதியான முறையில் போராடியவர் என்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் வழிகாட்டுதலில்தான் மியான்மர் ஆட்சி நடைபெறுகிறது.
அவர் மியான்மரில் நடைபெறும் இனக் கலவரத்தை அடக்கி, ரோஹிங்கயாக்கள் அமைதியாக வாழ செயல்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் மெளனம் காத்தார். அவரின் நீண்ட மெளனம் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 
அரசியல்வாதிகள், குடியரசுத் தலைவர்கள், பிரதம மந்திரிகள் எல்லாம் தன் நாடு, தன் இன மக்கள், தம் மொழி பேசுவோர், தம் மதம் பின்பற்றுவோர் பாதிக்கப்படாத வரையில் நியாயம் பேசிக் கொண்டு இருப்பார்கள். பிரச்னை வரும்போது மெளனம் காத்துவிடுவார்கள். அது மனிதர்களின் பொது பண்பு.
ஆங் சான் சூகி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். படிக்கும்போதே அரசியல், மனித உரிமைகள் மீது ஈடுபாடுகொண்டு செயல்பட்டார். எனவே அவரின் படம் ஒன்றை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரி முகப்பில் மாட்டியிருந்தார்கள். 
மியான்மரில் நடக்கும் இனக் கலவரங்கள், மக்கள் புகலிடம் தேடி ஓடுவது பற்றி அவர் ஒன்றும் பேசாததால் அக்கல்லூரி நிர்வாகம் அவரது படத்தை அகற்றிவிட்டது. கல்லூரியில் படம் வைக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று அறிக்கையும் வெளியிட்டது.
பல அரசியல் தலைவர்கள், போராளிகள் தாங்கள் பெற்ற நற்பெயரை உயிரோடு இருக்கும்போதே பறிகொடுத்துவிடுகிறார்கள். இறந்த பின்னர் சிலர் இழந்துவிடுகிறார்கள். வெகு சிலரே தாங்கள் இறந்த பின்னரும் நற்பெயரோடு ஜீவிதமாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்தவர். அவர் தேர்தல் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே அவர் தீர்ப்பையே செல்லாததாக்கினார். 
இந்தியா பெரும் ஆபத்தில் இருக்கிறது என்று கூறி, அதனைக் காக்க வேண்டுமென்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக நல ஆர்வலர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் களப்பணியாளர்கள் என்று பலரையும் பிடித்து சிறையில் அடைத்தார். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பனவற்றை எல்லாம் பறித்தார்.
அவர் தன் நற்பெயரை மட்டுமல்ல, அவரது முன்னோர்களான மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு பெற்றிருந்த நற்பெயர்களைக்கூட கெட்ட பெயர்களாக்கி விட்டார். பல நாடுகளிலும் மக்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் என்று நற்பெயர் பெற்றிருந்தவர்கள் மரணத்திற்குப் பிறகு கொடிய வெறி பிடித்த சர்வாதிகாரிகள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். அதற்கு மக்கள் காரணமில்லை.
அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால் பொதுமக்கள் மீது ராணுவம், போலீஸ் ஆகியவற்றை ஏவி தேச துரோகச் சட்டம், குண்டர் சட்டம் போட்டு தன்னை அசைக்கவே முடியாது என்று சவால் விட்டுக்கொண்டு இருந்தவர்கள். பதவி பறிபோனதும் நற்பெயரை இழந்து விடுகிறார்கள். அது சரித்திரமாக இருந்து வருகிறது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com