வழிமாறும் வழிபாடுகள்

மனிதன் தனக்குத் தேவையான சக்திகளைப் பெறுவதற்குரிய வேண்டுதல் புரியும் இடமாகத்தான் தொடக்க காலங்களில் கோயில்கள் விளங்கின.

மனிதன் தனக்குத் தேவையான சக்திகளைப் பெறுவதற்குரிய வேண்டுதல் புரியும் இடமாகத்தான் தொடக்க காலங்களில் கோயில்கள் விளங்கின. பின்னாள் தன் மனத்தில் நிறைந்திருந்த மாயைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கும் - அமைதி அடைவதற்கும் அது மனநல மருத்துவமனையாகவே மாறியது.
வழிபடுதல் என்றால் முறையான பாதையில் பயணித்தல் என்பதுதான் உண்மைப் பொருள். முன்னோர் வகுத்த வழியில் பயணிக்கிறேன் என்பதுதான் வழிபடுதலாகிய ஆலயம் தொழுவதின் அடிப்படை நோக்கமே.
இறையை இயற்கை வடிவாகக் கண்டு உணர்ந்து மனத்தின் உள்நிறுத்தி தானும் அதுவாக முழுமையாக ஆகிவிட முயற்சித்தலே வழிபாட்டின் இலக்கு. அதனால்தான் மனித்தப் பிறவியும் வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.
ஆலயத்தில் ஆன்மாவை இலயப்படுத்த பல வழிமுறைகள் உண்டு. முதலில் உடற்பயிற்சியிலிருந்து தொடங்குகிறது வழிபாடு. கூப்பி வணங்குதல் தொடங்கி கும்பிட்டு வீழ்தல் வரையிலும் யோகக் கலையின் அத்தனை முறைகளையும் ஆலயத்தில் முறையாகப் பின்பற்ற இயலும். 
ஆலயம் நுழைவதற்கு முன்னரே நீர்நிலைகளில் தங்களது உடலைச் சுத்தம் செய்து கொள்வதோடு அந்தந்தத் தலங்களின் தீர்த்தத்தை அமுதம் என அள்ளிப் பருகிக் கொள்வது வழிபாட்டின் முதற்கடமை. 
ஓங்கி உயர்ந்த கோபுர வாயில் ஒருவித காற்றுவடிப்பானா இருந்து உள்நுழைகிற நமக்கு உயிர்வளியை நெஞ்சமெல்லாம் நிரப்பித் தந்து விடுகிறது. அங்கேயே நமது உடலின் அலுப்பெல்லாம் தீர்ந்து விடுகிறது.
அடுத்துக் கருங்கற் பாறைகளால் செப்பம் செய்யப்பட்ட கருவறைச் சுற்றுகளில் வலம் வருவது அடுத்த நடைப் பயிற்சி. ஆலயம் சுற்றி வந்த பின்னால் குளத்தங்கரையிலோ அல்லது மரத்தடியிலோ உயிர்வளியை நன்றாக அடிவயிறுவரை உள்ளிருத்துவதற்காக சம்மணமிட்டு அமர்வது அமைதி நிலைப்படுதல். இப்படியான பல பயிற்சிகள் உண்டு.
இரு கை விரல்களால் இடவலம் மாற்றிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுகிற தோப்புக் கரணப் பயிற்சி மூளைக்கும் உடலுக்கும் நல்ல பயிற்சி தருவதோடு குண்டலினிக்கும் காரணமாகிறது என்கிறது யோகக் கலை.
ஆலயங்களில் வழங்கப்படும் உணவுகள் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டவை. பெருமாள் ஆலயங்களில் வழங்கப்படும் துளசி இலை, சிவன் ஆலயங்களில் தரும் வில்வ இலை, அருகம்புல் இவையெல்லாம் நோயையும் கிருமிகளையும் நீக்கும் வல்லமை கொண்டவை.
பூக்கள் மருத்துவ குணம் கொண்டவை. அவை வெறும் பூசைக்கு மட்டும் உரியதன்று. பூக்களைக் கையால் தொடுவதாலும், அவற்றைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதாலும் பலவித நலன்கள் ஏற்படுகின்றன. நம்மைச் சுற்றிலும் நறுமணச் சூழலை ஏற்படுத்துகின்றன. 
ஒரு காலத்தில் ஆண்களும் கழுத்தில் மாலைகளை அணிந்திருந்தனர். சிலர் தங்கள் காதுகளிலும் பூக்களைச் செருகியிருப்பர். இவை இப்போது நாகரிகக் குறைவாகக் கருதப்படுகிறது.
இருப்பவர்கள் தங்கள் பொருள்களைப் படையலாக்கி இறைவனின் பெயரால் இல்லாதவர்களுக்கு வழங்கும் அறக்கூடமாகவும் ஆலயங்கள் விளங்கின. அங்கே மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் பலவும் உணவும் அன்பும் பெற்று நன்கு வாழ்ந்தன.
இப்படியாக உடலுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களிலிருந்து தொடங்கி மனத்திற்குள் புகுந்திருக்கும் மாயைத் துயரங்கள் வரைக்கும் எல்லாவற்றுக்கும் தீர்வு தந்து நலத்தை வழங்கும் ஆலயங்களை அணுகுவதும் அங்கு மேற்குறித்த பயிற்சிகளைப் பின்பற்றுவதும்தானே உண்மையான வழிபாடு.
ஆனால் இன்றைய நிலையில் ஆலயங்கள் விற்பனை நிலையங்களாகவும் வணிகக் கூடங்களாகவும் மட்டுமே விளங்குகின்றன. பெரும்பாலான ஆலயங்கள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இன்றி நோயைப் பரப்பும் கழிவுகள் நிறைந்தனவாக உள்ளன. 
பளபளக்கும் சலவைக் கற்களாலும் வண்ண வண்ண ஒளிவிளக்குகளாலும் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகளா
லும் கூட்டம் நிரம்பி வழியும் செயற்கையான ஆலயங்களே இன்றைக்கு நிறைய உள்ளன.
இதுபோன்ற ஆலயங்களுக்குச் செல்லும் மக்களும் வங்கிகளில் பணம் செலுத்தச் செல்வதைப் போலக் கடமைக்காக வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் எண்ணம் பக்தியில் ஈடுபடுவதில்லை. 
எத்தனைதான் கைபேசியை ஆலயத்துக்குள் உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினாலும் தவிர்க்க முடியாமலும் தவிர்க்க விரும்பாமலும் அதைப் பயன்படுத்துபவர்களே அதிகம்.
சுற்றுலாத் தலங்களைப் போல ஆலயங்களைக் கருதிக்கொண்டு சுயபடம் எடுப்போரும் குழுப்படம் எடுப்போரும் கும்மாளக் கூச்சல் இடுகின்றனர். 
ஆலயத்தில் விற்கப்படும் சிற்றுண்டிகளை வாங்கி நினைத்த இடத்தில் அமர்ந்து உண்டுவிட்டு கழிவுகளைக் காற்றில் பறக்க விடும் அவலம். அங்கு ஈக்கள் தொடங்கி அழுக்குகளால் உருவாகும் கொசுக்கள் வரைக்கும் பெருகி வாழ்கின்றன.
கூட்டம் அதிகமாக இருக்கும் ஆலயங்கள் இவ்வாறென்றால், ஆளரவமற்ற ஆலயங்கள் நிலையோ துயரம் நிறைந்தவை. வெளவால்களும் கோட்டான்களும் குடியேறியிருக்கும் அங்கே ஒட்டடைகளுக்கும் பஞ்சமில்லை. 
அந்த ஆலயங்களுக்குள்ளே அரிய கல்வெட்டுகள் தமிழக வரலாற்றைச் சுமந்து கொண்டிருக்கின்றன. அதன்மீது வரலாற்றின் பெருமை அறியாத சிலர் தங்களது பெயர்களைக் கரிக்கோட்டில் கிறுக்கி வைப்பதை என்னென்பது?
அறக்கூடங்களாகவும் கலைக்கூடங்களாக விளங்கிய ஆலயங்கள் இன்றைய சூழலில் ஒருபுறம் வணிகத்தலமாகவும் மற்றொருபுறம் பாழடைந்தும் சீரழிந்தும் வருவது காலக் கொடுமையல்லாமல் வேறென்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com