விவசாயத்தை அழிக்கும் விலங்குகள்

சில காப்பி வனப் பிரதேசங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகளின் அட்டகாசங்களைச் சொல்லி மாளாது.

சில காப்பி வனப் பிரதேசங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகளின் அட்டகாசங்களைச் சொல்லி மாளாது. யானை, புலி, சிறுத்தை, காட்டுப் பன்றி, மயில் போன்றவைப் பயிர்களை அழிப்பதுடன், சமயங்களில் விவசாயிகளையே கொன்று விடுவதும் உண்டு. 
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைத்தொடர், சிறுமலைத்தொடர் அருகில் உள்ள கிராமங்களில் காட்டுப் பன்றியும் மயில்களும் விவசாயம் செய்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை அழிக்கின்றன. பன்றி குழி பறிக்கும். பயிர்களுடன் வேர்களையும் தின்றுவிடும். கதிர் வைத்ததும் மயில் வேட்டையாடும். விவசாயி மயிலை வேட்டையாடினால் சிறை செல்ல நேரிடும். 
பயிர்ப் பாதுகாப்பு என்று பயிர்களுக்கு நோய் வராமலிருக்க பூச்சி மருந்து அடிக்க போதிக்கப்படுகிறது. நோய் வந்த பின்னும் பூச்சி மருந்து அடிக்க கற்றுத்தரப்படுவதுண்டு. ஆனால் ஒட்டுமொத்தப் பயிரையும் அழிக்கும் காட்டு விலங்களிலிருந்து பயிரைக் காக்கும் வழிபற்றி யோசிப்பதும் பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வர வேண்டும். 
கொடைக்கானல் மலைத்தொடர் (பழனி மலைத்தொடர்) வரிசையின் கீழ் வரும் கிராமங்களில் மயில் வராமல் தடுக்கக் கலர் கலராகப் பளபளக்கும் பழைய பாலியெஸ்டர் புடவைகளை வேலியில் கட்டி வைக்கிறார்கள். காற்றில் சல சலவென்று புடவைகள் பறக்கும்போது மயில் பயந்து உள்ளே நுழையாது. இப்படி ஒரு உத்தியை திண்டுக்கல் விவசாயிகள் கையாள்கின்றனர். 
யானைகளிடமிருந்து தென்னை மரங்களைக் காப்பாற்ற ஆளியாறு பாசனப் பகுதி பொள்ளாச்சி - பாலக்காடு எல்லைப்புற விவசாயிகளில் சிலர் வேலிப்பயிராகப் பனை மரங்களை நெருக்கமாக நடுகிறார்கள். தென்னிந்தியாவைவிட இமயமலைக் காடுகளை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகம் உள்ளது. 
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சரவை வழங்கும் புள்ளிவிவர அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 15 மாநிலங்களில் 1,224 விவசாயிகள் யானை தாங்கி இறந்துள்ளனர். யானைகளுடன் நேருக்கு நேர் நின்று போராடியதில் ஒவ்வோர் ஆண்டும் 100 யானைகள் கொல்லப்படுகின்றன. 400 விவசாயிகள் உயிர் துறக்கின்றனர்.
யானைகள் வாழ்விடங்களை ஒட்டிய சில கிராமங்களில் உள்ளவர்கள் யானைகளிடமிருந்து தங்கள் பயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள மாற்றுப் பயிர்த் திட்டத்தை மேற்கொள்கிறார்கள். ஒடிஸா மாநிலத்தில் யானைக்கு பயந்து நெல், காய்கறி சாகுபடியை நிறுத்திவிட்டு எலுமிச்சை பயிரிடுகிறார்கள். 
சில கிராமங்களில் இந்த முயற்சி வெற்றியளித்துள்ளது. எலுமிச்சைச் செடியை முகர்ந்து பார்த்துவிட்டு சேதப்படுத்தாமல் வந்த வழியில் யானைகள் சென்றுவிடுவதாக ஒடிஸா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
உதாரணமாக, பிம்ரிபால் கிராமத்தில் வாழும் குமுத்சந்திர பிரதான் என்ற விவசாயி முன்கூட்டிய திட்டமிட்டுப் பத்தாண்டுகளுக்கு முன்பே காய்கறி, நெல் சாகுபடிக்கு மாற்றாகத் தனது ஏழு ஏக்கர் நிலத்தில் 1,100 எலுமிச்சை மரங்களை நட்டதில் இப்போது தான் ஆண்டுதோறும் 25 லட்ச ரூபாய் வருமானம் பெறுவதாகத் தெரிவிக்கிறார்.
ஒடிஸா மாநில அரசு யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள நெல் - காய்கறிகளுக்கு மாற்றாக வேறு சில பயிர்களையும் சிபாரிசு செய்கிறது. மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்ற பயிர்களை யானை விரும்பாது என்று கூறி, அவற்றை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்
படுத்துகின்றது.
பசுமைப் புரட்சியால் முதல் நிலை மாநிலங்களாக விளங்கிய பஞ்சாபிலும் தமிழ்நாட்டிலும் பாரம்பரிய கோதுமை, நெல் ரக சாகுபடி முற்றிலும் அழிந்தபோது, ஒடிஸாவும், மேற்கு வங்கமும் பாரம்பரிய ரகங்களை அழிக்காமல் காப்பாற்றியிருப்பதால் தமிழ்நாட்டில் பல இயற்கை விவசாயிகள் ஒடிஸா, மேற்கு வங்கம் சென்று பாரம்பரிய நெல் விதைகள் வாங்கி வரு
கிறார்கள். 
ஒடிஸாவில் நிறைய வாசனை அரிசிகளும், குறுகியகால நெல் விதைகளும் கிடைக்கின்றன. அவுன் என்ற வாசனை அரிசி ஒடிஸாவில் உண்டு. அப்படிப்பட்ட வாசனை அரிசியைப் பயன்படுத்தும்படி 17 ஆண்டுகளுக்கு முன்பே வனவிலங்கு நலத்துறை திட்டம் வகுத்தது. 
அதன் பலனாக விவசாயத்தில் விலங்கினத் தாக்குதல் கட்டுப்படுத்தப் படுவதுடன் சிறப்பு ரக அரிசிகளின் பெருக்கமும் காப்பாற்றப்படுகிறது.
மணம் நிரம்பிய அரிசி என்றால், பிரியாணி அரிசிதான் நினைவுக்கு வரும். பாசுமதி அரிசிதான் பிரியாணி அரிசி. உத்தரகாண்ட், ஹிமாசலப் பிரதேசம், காஷ்மீர் போன்ற மலைப் பிரதேசங்களில் நிறைய விளைகிறது. இமயமலைத் தொடர் காடுகளில் உள்ள யானைகளுக்கு பாசுமதி வாசனை உவப்பாக இருக்குமென்று தோன்றவில்லை. 
எனினும் ஒடிஸா தென்கனால் மாவட்டத்தில் வன எல்லை கிராமங்களான கனகா, கஜூரியா கிராமங்களில் அவுன் என்ற வாசனை ரகம் யானையை விரட்டுமாம்.
யானைகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற பருவத்திற்கு ஏற்ப குறுகிய காலப் பயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக யானைகள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழாது. இடம் பெயர்ந்து செல்லும். வங்கத்திலிருந்து ஒடிஸாவுக்கும் மீண்டும் ஒடிஸாவிலிருந்து வங்கத்திற்கும் இடம் பெயரும். 
ஒடிஸா, வங்கம் ஆகிய பிரதேசங்களில் யானைகளிடமிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற பல்வேறு குறுகிய கால நெல் வகைகளுடன் கடுகு, மசூர், பாசிப்பயிறு, உளுந்து போன்ற பருப்பு வகைப் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
யானைகளுக்கு எலுமிச்சையும் பிடிக்காது. எலுமிச்சைப் புல்லும் பிடிக்காது. எலுமிச்சைப் புல்லிலிருந்து சிட்ரோ நெல்லா (இஐபதஞசஉககஅ) என்ற வாசனை எண்ணெய் தயாராகிறது. இந்த வாசனை எண்ணெய் கொண்டு விரட்டிக்கும், குளியல் சோப்புக்கு வாசனை ஏற்றவும் பயனாவதால் விற்பனை அதிகம். 
இந்தப் புல்லினம் விரைந்து வளரும். ஐந்தாண்டுக்குப் பலன் தரும். இந்தப் புல் கடினமான இலைகளை உடையதால் யானை உண்ணாது. தமிழ்நாட்டிலும் வனப்பகுதியை ஒட்டிய சில கிராமங்களில் எலுமிச்சைப் புல் பயிராகிறது. பிரித்தெடுக்கும் இயந்திரத்தை நிர்மாணித்து அதன் கொள்திறனுக்கு ஏற்ப சாகுபடி தொடர்ந்து நிகழ வேண்டும். 
இருப்பினும் ஜார்க்கண்ட் பகுதியில், வனப் பிரதேச எல்லைப்புற கிராமங்களில் எலுமிச்சைப் புல் சாகுபடி வெற்றிகரமாக நிகழ்கிறது. ஒரு லிட்டர் எலுமிச்சை எண்ணெய் விலை ரூ.2,500. எலுமிச்சை எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் அதிக அளவில் நிறுவப்படுமானால் ஒடிஸா, ஜார்க்கண்ட் விவசாயிகளுக்கு நன்மை உண்டு.
கர்நாடக மாநிலத்தில் யானைப் பிரச்னை பூதாகரமாயுள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், கேழ்வரகு போன்ற ஜீவாதாரப் பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதில் நிறைய சிரமங்கள் உள்ளன. முன்பெல்லாம் காபி பயிரிட்டு வந்தார்கள். ஆனால், இப்போது கர்நாடக மாநிலத்தில் காபிக்கும் ஆபத்தாம்.
மனிதனைப்போல் யானைகளும் உணவு விஷயத்தில் யோசிக்கத் தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் காபிப் பயிரை யானை தின்னாது. 
மாற்றுப் பயிர்களைக் காணும்போது முதலில் உண்ணத் தயங்கும் யானை, மெல்ல மெல்ல ருசித்துத் தன் உடலுக்குச் சேர்கிறதா என்று சிந்திக்கிறது. பிறகு சரியென்று உணர்ந்து உண்ணத் தொடங்குகிறது. இப்போது குடகு மாவட்டத்தில் சில இடங்களில் யானைகள் காபிப் பயிரைத் தின்னத் தொடங்கிவிட்டன. 
சிங்கம்,புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் பயிர்களை சேதப்படுத்தாது. மனிதர்களை அடித்துத் தின்றுவிடும். காட்டில் வசிக்கும் விலங்குகளுக்குப் போதிய உணவும் நீரும் காட்டில் கிட்டுமானால், காடுகளை ஒட்டிய கிராமங்களுக்கு அவை வராது.
யானைப் பிரச்னை தமிழ்நாட்டில் பொள்ளாச்சி - பாலக்காடு வனப் பகுதியில் உண்டு. இவற்றைவிட அதிகமாகத் தொல்லை தருவது குரங்குகளும், மயில்களும். விவசாயிகளின் நண்பன் பாம்பு என்பது உண்மைதான். எலி பிடிப்பதால் பாம்பு வரவேற்கப்படுகிறது. 
மயில், கீரி போன்றவை பாம்பின் எதிரிகள். விவசாயிகளில் சிலர் வயலில் திரியும் கீரி, உடும்பு, முயல் ஆகியவற்றைக் கிட்டி வைத்துப் பிடித்துத் தின்று விடுகின்றனர். இதனால் நல்ல பாம்பு, கட்டு விரியன் போன்ற விஷப் பாம்புகள் பெருகிவிட்டன. 
மனிதர்களை மட்டுமல்ல, பசுமாடுகளையும் விஷப் பாம்புகள் தீண்டி விடுகின்றன. பாம்பு கடித்து மரணமுறும் விவசாயிகளுக்கும் பசு மாடுகளுக்கும் கணக்கே இல்லை. பாம்பு, மயில் போன்றவற்றை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்பதால் பாம்பின் தோலுக்காகப் பாம்பு பிடிக்கும் மக்கள் அத்தொழிலைக் கைவிட்டு விட்டனர்.
குரங்கு, மயில், விஷப்பாம்பு ஆகியவற்றை உயிரியல் பூங்காக்கள் அமைத்து அங்கு வளர்க்க திட்டமிடலாம். உயிரியல் பூங்காக்கள் வளர வளர சிற்சில வனவிலங்குகளையும் அங்கு சேர்ப்பிக்கலாம். பார்க்க வருபவர்களிடம் கட்டணம் வசூலித்து செலவையும் சமாளிக்கலாம். இதைப் பற்றியெல்லாம் யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com