தமிழும் தரவகமும்

கணினி இன்றி வாழ்க்கை இல்லை' என்று கூறும் அளவிற்குக் கணினியின் பயன்பாடு மிகவும் வளர்ந்திருக்கின்ற இக்காலக் கட்டத்தில்

கணினி இன்றி வாழ்க்கை இல்லை' என்று கூறும் அளவிற்குக் கணினியின் பயன்பாடு மிகவும் வளர்ந்திருக்கின்ற இக்காலக் கட்டத்தில் "தரவகம்' / "தரவுத்தொகுப்பு' (ஆங்கிலத்தில் "கார்ப்பஸ்') என்னும் துறை மிக மிகத் தேவையான ஒன்றாக வளர்ந்துள்ளது. தமிழில் கிடைக்கிற சொற்களையும் வாக்கியங்களையும் கணினியில் உள்ளீடு செய்து நிரல்படுத்தி வைப்பதுதான் "தரவகம்'. 
இதில் சொல்வகை விளக்கியும் இருப்பதால் மிகவும் பயன்பாடு உடையது. இதன் அடிப்படையிலேயே "தரவக மொழியியல்' என்னும் துறையும் வளர்ச்சியடைந்து பாடநூல்கள் உருவாக்கத்திற்கும் மொழி கற்பித்தல்}கற்றல் செயற்பாட்டுக்கும் மொழிபெயர்ப்புக்கும், அகராதி உருவாக்கத்திற்கும் கணினி பயன்பாட்டிற்கும் பெரும் துணையாக உள்ளது. 
ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் "தரவகத்தின்' பயன்பாடு கூடுதலாகவே இருக்கின்றது. இந்திய மொழிகளில், குறிப்பாகத் தமிழில் அதன் பயன்பாடு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. 
தமிழ் நாளிதழ்கள், மாத இதழ்கள், நூல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தரவுத்தொகுப்புகளும், பற்பல நிறுவனங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் "பொதுத் தரவுத் தொகுப்புகளும்' எனப் பல்வேறு விதமான "தரவகங்கள்' தமிழில் உள்ளன. 
அவை பெரும்பாலும் மொழியின் "தரவுத்தொகுப்பை' உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளையே அடிப்படையாகக் கொண்டவை. சுமார் 36 மில்லியன் (3.6 கோடி) சொற்கள் கொண்டவை. ஆனால் தமிழ் வளர்ச்சியை மனத்தில் கொண்டு எல்லோரும் தாங்கள் தொகுத்திருப்பதை ஒரே தரவுத் தொகுப்பாகத் கொடுத்தால் தமிழ் மொழியை வேறொரு தளத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். 
இதைத் தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். குறிப்பாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையச் செம்மொழித் தமிழ் நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு மையப் பல்கலைக் கழகம் போன்றவை சேர்ந்து செய்ய வேண்டியிருக்கிறது. 
அதோடு மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் 22 மொழிகளில் தரவுத் தொகுப்புகள் செய்து வருவது பாராட்டுக்குரியது. அத்தரவுத் தொகுப்பையும் பயன்படுத்த வேண்டும்.
ஓர் அகராதியைத் தயாரிக்கும்போது, 10,000 சொற்கள் கொண்டதாக வேண்டும் என்றால் இச்சொற்களை எங்கிருந்து தொகுத்து எடுப்பது? கணினியிலிருக்கும் "தமிழ்த் தரவகத்திலிருந்து' பயன்பாட்டு எண்ணிக்கை கூடுதலாக உள்ள சொற்களை எளிதாகப் பெறலாம். 
வகுப்புவாரியாகப் பாடநூலில் பயன்படுத்த வேண்டிய சொற்களையும் இத்தரவகத்திலிருந்து பெறமுடியும். எனவே, கல்விக்கெனப் பாடநூல்கள் சார்ந்த } குறைந்தபட்சம் ஓர் ஐம்பது ஆண்டுக்காலப் பாடநூல்கள் சார்ந்த } ஒரு தரவுத்தொகுப்பு தேவையாகிறது. இதுபோலவே, பாடநூல் தயாரிப்புக்கு என "மாணவர் தரவகம்' ஒன்றும் உருவாக்கப்பட வேண்டியதும் அவசியம்.
தொடக்கப்பள்ளி முதல் முதுகலைப் பட்டக்கல்வி வரையிலான தமிழ்மொழியைக் கற்றுக் கொடுக்கும் அல்லது தமிழ் வாயிலாகக் கற்றுக் கொடுக்கும் பாடநூல்களிலிருந்தும் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படும் அச்சு, ஒலி, ஒளி, ஊடகங்களிலும் பயன்படுத்தப்படும் "தரவுகள்'} சொற்களும் வாக்கியங்களும்} தொகுக்கப்பட வேண்டும். 
இவ்வாறான தொகுப்பு மட்டுமே கல்விக்கான தரவுத்தொகுப்பாக இருக்க முடியும். இத்தரவுத் தொகுப்பைப் பயன்படுத்திப் பாடநூல்கள் எழுதும்போது பாடநூல்களில் ஒரு பொதுமையைக் கொண்டு வர முடியும்.
பாடப்பொருள்கள், அதாவது, பாட நூல்கள், ஒலி/ஒளிப் பேழைகள், பல வகையான ஊடகங்கள் போன்றவற்றின் தயாரிப்பின் போது கொள்கைகளாக வருகின்ற தெரிவு செய்தல், படியமைப்பு செய்தல், வழங்குதல், மதிப்பீடு செய்தல் ஆகிய நான்கிற்காகவும் தெரிவு செய்யப்படுகின்ற சொற்களஞ்சியமும் பனுவல்களும் இயற்கையாக எல்லோரும் பயன்படுத்தும் மொழியை அடிப்படையாகக் கொள்வதில்லை. 
எடுத்துக்காட்டாக, ஒரே தலைப்பில் இருவேறு ஆசிரியர்கள் பாடம் எழுதும் போது ஏற்படுகின்ற வேறுபாடுகளுக்கு அவர்களின் பட்டறிவும் மொழியறிவும் பயன்படுத்தும் சொற்களும் வாக்கிய அமைப்புகளும்தாம் காரணங்களாகின்றன. ஆனால் "தரவகத்தை' அடிப்படையாகக் கொள்ளும்போது இவ்வாறு அமைவதற்கு வாய்ப்பில்லை.
இத்தரவகங்களின் வாயிலாக மொழியை ஆராயும் "தரவக மொழியியல்' இன்று மொழிக் கல்வியில் கற்பித்தல் } கற்றல் செயல்பாடு, கல்வியியல், அகராதியியல், மொழி பெயர்ப்பியல், அதிலும் சிறப்பாக இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற துறைகளுக்கு மிகவும் உதவும்.
சொல்வகை அடையாளப்படுத்தல் (ஆங்கிலத்தில் டஞந ற்ஹஞ்ஞ்ண்ய்ஞ்) என்னும் கூறு கல்வியில் மிக முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. 
இலக்கணக் கூறுகளின் வகைகளை அறிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் இலக்கண அறிவை வளர்ப்பதோடு அவற்றைப் பயன்படுத்துகின்ற அறிவை, அனுபவத்தை மாணவர்கள் தரவுத்தொகுப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம். 
எடுத்துக்காட்டாக, 'கை' என்னும் சொல்லை எடுத்துக் கொண்டால் கை, கைப்பிடி, கைபிடி, கையாடு, கைவை, கையொப்பம், கைராசி, கையூட்டு, கையாலாகாத, கைமேல் பலன், போன்ற பல சொற்களும் அவற்றின் பயன்பாடும் மாணவர்களுக்குக் கிடைக்கும்.
பல கூறுகளை இட்டுக்கட்டிய வாக்கிய அமைப்புகளாக இல்லாமல் இயற்கையாகப் பயன்படுத்தும் சூழல்களின் வழி மாணவர்கள் அறிந்து கொள்ளத் தரவுத்தொகுப்பு மிகவும் உதவும். 
பாடநூல்களில் 7}ஆம் வகுப்புவரை மாணவர்களின் மொழியறிவு, மொழித்திறன்களுக்கேற்ப பாடங்கள் எழுதப்படுகின்றன. அவற்றின் வாக்கிய அமைப்புகள், பத்திகள், முழுப் பனுவல்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டவை.
கட்டுப்படுத்தப்பட்ட பனுவல்களிலிருந்து பரந்த வானில் பறப்பதற்கான படியமைப்பு எட்டாம் வகுப்பிலிருந்து தொடங்குகிறது. 
"பேச்சுத் தரவுத்தொகுப்பு' முழுவதுமாகக் கிடைக்கும் போது பல்வேறு சமுதாய}வட்டார வழக்கு வேறுபாடுகளை அறிந்துகொள்ளவும் சொற்களின் பயன்பாட்டு வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவும் இத்தரவகம் உதவும்.
இத்தரவகத்திலிருந்து ஒரு "பொதுமைப் படுத்தப்பட்ட அல்லது நிலைபேறு பெறும் தமிழ் வழக்கை'ச் சிறப்பாக உருவாக்க முடியும். அது பாடநூலாக்கத்திற்கு மிகவும் உதவும். 
"மாணவர் தரவகம்' எனப்படுவது அவர்கள் செய்கின்ற பிழைகளையும் சேர்த்து அமையும். இதனால் அந்த மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், மீண்டும் கற்பித்தலுக்கான அணுகுமுறைகள் போன்ற பலவற்றையும் மீள்பார்வை செய்யவும் பயன்படும். 
அவர்கள் செய்கின்ற பிழைகளைக் கண்டறிந்து விட்டால் பாடப் பொருள்களிலும் கற்பிக்கும் உத்திகளிலும் பயிற்சிகளிலும் மாற்றங்களை எளிதாக ஏற்படுத்தி விடலாம். 
இத்தரவுத் தொகுப்பையும் பல கல்விநிலைகளில் அமைத்துக் கொள்ளலாம். இது புதிய அணுகுமுறைக்கும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கும் முதற்படிக்கட்டாக அமையும். இன்னொன்று "இணை தரவுத்தொகுப்பு'. 
இந்த இணை தரவுத்தொகுப்பும் உருவாக்கப்பட்டால் தாய்மொழி } பயில்மொழிக்கிடையிலான இலக்கண மற்றும் பயன்பாட்டு வேறுபாடுகளையும் மொழிக்கூறுகளின் பல்வேறு பயன்பாடுகளையும் அறிந்து கொள்ள இயலும். ஆங்கிலம் போன்ற இரண்டாம் மொழிக் கற்றலுக்கும் பயன்படும்.
இத்தரவகங்களை உறுதியாகவும் நம்பகத்தன்மையுள்ளதாகவும் மாற்றி எப்படி மொழிக்கல்விக்குப் பயனாக்குவது.
= புதியதொரு இணைய தளத்தை உருவாக்குதல்.
= தரவுத்தொகுப்பு பற்றிய செய்திகளையும் அணுகுமுறைகளையும் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தருதல் } அதுவும் ஆசிரியர், மாணவர் போன்றோருக்கு உதவும் வண்ணம் தருதல்.
= புதிய ஆய்வு முடிவுகளையும் தரவுச் சேர்க்கைகளையும் அவ்வப்போது உள்ளீடு செய்தல்.
= புதிதாக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம், பாடப்பொருள்கள் பற்றிய சுருக்கத்தை வெளியிடல்.
= தரவுத்தொகுப்பைக் கற்றல் } கற்பித்தல் செயல்பாட்டில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான குறிப்புகள். 
எடுத்துக்காட்டாக, பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும் பயனாகும். "பிழைகள் அடையாளப்படுத்தப்பட்ட மாணவர் தரவகம்' மாணவர்களின் மொழித் திறன்களை மேம்படுத்தும்
தமிழ்நாடு அரசு புதிய பாடத்திட்டத்தைச் சிறப்பாக உருவாக்கும் முன்னெடுக்கும் இந்நேரத்தில் கணினியாக்கப்பட்ட "பொதுத் தமிழ்த் தரவகமும்', "மாணவர் தரவகமும்' மொழித் திறன்கள், வெளிப்பாடுகள், பாடத்திட்டம், பாடப்பொருள்கள் போன்றவற்றை மேம்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com