விவசாயம் விரும்பு

நம் முன்னோர்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த நீர் மேலாண்மை முறைகளை ஏற்படுத்தி பராமரித்து வந்தனர்.

நம் முன்னோர்கள் ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகச்சிறந்த நீர் மேலாண்மை முறைகளை ஏற்படுத்தி பராமரித்து வந்தனர். மழை நீரை துளியும் வீணாக்காமல் இருக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்களை நாம் தற்போது பராமரித்து வருகிறோமா? 
தமிழகத்தில் மொத்தம் 100 ஆறுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது (தற்போது அவற்றில் பல ஆறுகள் இருந்தற்கான வழித்தடங்களே இல்லாமல் செய்துவிட்டோம்). 
அவற்றில் வந்த மிகுதியான நீர் சிறந்த கால்வாய்கள் மூலம் பெரிய பெரிய ஏரிகளில் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏரிகள் நிறைந்து வழிந்தால் அந்த உபரி நீரானது சிறிய ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை நிரப்பிய பின்னரே அருகில் உள்ள ஆற்றில் கலக்கும். 
1950-ஆம் வருடங்களில் நமது இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்கு 50%-க்கும் மேல் இருந்தது. அச்சமயங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்கு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் என்ற அளவில் இருந்தது. 
அதன் பிறகு, வெளிநாடுகளை பார்த்து தொழில் துறையில் முன்னேற வேண்டி அத்துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனால் சிறிது சிறிதாக விவசாயத்துறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. 
தொழில் துறையின் முன்னேற்றத்திற்காக பல லட்சம் கோடி ரூபாய்களும், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (எஈட)-யில் தொழில் துறையின் பங்களிப்பானது 30%-ஐ தாண்ட முடியவில்லை. ஆனால், தொழில் துறையின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட இயற்கை வளங்கள் ஏராளம். 
1990-ஆம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 ரூபாயாக இருந்தது. 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கால் கொண்டுவரப்பட்ட தாராளமயம் மற்றும் உலகமயம் போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால் விவசாயம் மாயமானது தான் மிச்சம். அதன் பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்து கொண்டிருந்தது. 
மேலும், அந்த காலகட்டங்களில், சேவைத் துறை (நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் நங்ஸ்ரீற்ர்ழ்)-க்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினர். அதன் பயனாக தற்போது நமது நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தியில் (எஈட)-இல் சேவைத் துறையின் பங்கு 55% என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. 
ஏனெனில், நம் நாட்டின் சேவை துறை முற்றிலும் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மட்டுமே நம்பியுள்ளது. அதனால் ரூபாயின் மதிப்பு குறைந்து டாலரின் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். 
எனவே, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை நம் நாட்டு நிறுவனங்களே ஆதரிக்கின்றன. 
அரசாங்கங்களின் ஐந்தாண்டு திட்டங்களைத்தும் தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது எப்படியென்ற கோணத்திலேயே தீட்டப்பட்டன. விவசாயத் துறை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட துறையாகவே கருதப்பட்டது.
கிராமங்களில் விவசாய வேலைகள் பெரும்பாலும் விடியற்காலை நேரங்களிலேயே துவங்கும். ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் இருக்கும் ஒரு மாணவன் அல்லது இளைஞன் விவசாய வேலைகளை முடிப்பதற்கே காலை ஒன்பது மணி ஆகிவிடும். ஆனால், பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி அதற்கு முன்பே தொடங்கிவிடும். 
இதனால், விவசாய வேலையில் தன் தாய்தந்தைக்கு உதவுவது என்பது இயலாத விஷயமாகிறது. இதனால், இளையச் சமுதாயத்திற்கு விவசாயத்தில் ஈடுபட வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. 
மேலும், தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் உள்ள வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற செயலிகளில் விவசாயத்திற்கு ஆதரவாக கருத்துகளை பதியவிடுவதும், ப்ரொஃபைல் படங்களில் விவசாயி என்று வைத்துக்கொள்வதும் விவசாயத்தை வளர்த்துவிடாது என்பதை இளையச் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும். 
ஐ.டி. நிறுவனங்களில் வேலைச் செய்யும் இளைஞர்கள் தங்களின் வாரயிறுதி விடுமுறை நாட்களில் சினிமா, க்ளப், பப் என்று வீணாகச் சுற்றுவதை தவிர்த்து கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவி செய்யலாம். விவசாயக் குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டலாம். 
ஏர் ஓட்டுவது, நடவு நடுதல், அறுவடை செய்வது, வைக்கோல் போர் போடுவது, முதல் போகம், இரண்டாம் போகம், மூன்றாம் போகம், ஆடிப் பட்டம் போன்ற விவசாயம் தொடர்பான வார்த்தைகள்கூட இக்கால தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக விவசாயம் செய்யும் ஒரு ஆண்மகனை கல்யாணம் செய்துகொள்ள எந்த பெண்ணும் மனமுவந்து முன்வருவதில்லை. பிறகு எப்படி விவசாயம் கெளரவமான தொழிலாக இருக்கும்?
2013-14-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 16%. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு 60 ரூபாய். இதை உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும். 
அதாவது, 1950-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 50% இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் நான்கு. ஆனால், 2014-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 16% - இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60. விவசாய உற்பத்திக் குறைந்தால் இந்திய ரூபாயின் மதிப்பும் குறையும். 
நம் முன்னோர்கள் ஏற்படுத்திச் சென்ற நீர்மேலாண்மையை உதாசீனப் படுத்தியதுதான் விவசாயம் வீழ்ச்சியடைய காரணம். 
யாரையும் குறைச் சொல்வதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்பட்டுவிடாது. இளைய சமுதாயமே! விவசாயம் விரும்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com