கருத்துச் சுதந்திரமே தேசத்தின் ஆன்மா!

'உன் கருத்தை என்னால் ஏற்க முடியாது. ஆனால் உன் கருத்தைச் சொல்ல உனக்கு உள்ள உரிமையை எவரேனும் பறிக்க முற்பட்டால் என் உயிரைத் தந்தேனும் அந்த உரிமையைப் பாதுகாப்பேன்'
கருத்துச் சுதந்திரமே தேசத்தின் ஆன்மா!

'உன் கருத்தை என்னால் ஏற்க முடியாது. ஆனால் உன் கருத்தைச் சொல்ல உனக்கு உள்ள உரிமையை எவரேனும் பறிக்க முற்பட்டால் என் உயிரைத் தந்தேனும் அந்த உரிமையைப் பாதுகாப்பேன்' என்ற வால்டேரின் முழக்கம் ஜனநாயக வெளியில் கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முரசறையக் கூடியது.
என் கருத்தை எவரும் விமர்சிக்கக் கூடாது, எதிர்கேள்வி கேட்கக் கூடாது. மீறினால் அவர்களுக்கு உயிர்வாழ உரிமையில்லை என்பதுதான், ஃபாசிசத்தின் கோரம் ததும்பும் சாரம்.
கருத்துச் சுதந்திரத்திற்காக காலங் காலமாய் களப்பலிகள் நடந்துள்ளன. அடக்குமுறைகளை அஞ்சாதெதிர்த்து, ஒவ்வொரு காலத்திலும், கருத்தியல் யுத்தங்கள் தொடர்ந்துள்ளன.
அண்மையில், இதழாசிரியரும், ஃபாசிசத்தை எதிர்த்து, எழுதுகோல் ஏந்தியவருமான கெளரி லங்கேஷ், பெங்களூருவில் அவரது வீட்டருகே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சமரசமற்ற தனது எழுத்துக்களால் சங் பரிவார அமைப்பினரின் பேரெதிர்ப்பை சம்பாதித்த கெளரி லங்கேஷின் படுகொலையை நாட்டின் தலைவர்களும், கலையுலகினரும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
லங்கேஷ் என்பது லங்கேஸ்வரனான இராவணனைக் குறிக்கும் சொல். அதைத் தனது பெயராகச் சூட்டிக்கொண்டவர் கௌரியின் தந்தை பி. லங்கேஷ். அவர் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும் சிறந்த கவிஞருமாவார்.
கெளரியின் சகோதரி கவிதாவும் விருதுபெற்ற திரைப்பட இயக்குநர். தந்தை நிறுவிய 'லங்கேஷ்' இதழின் ஆசிரியராக கெளரி லங்கேஷ் இருந்து வந்தார்.
அறிவார்ந்த குடும்பப் பின்னணியும், ஆழமான அறிவும், அச்சமற்றுத் தன் கருத்துகளை உச்சமாக வெளிப்படுத்திய உணர்வும் கொண்ட கெளரி லங்கேஷை பயங்கரவாதிகள் கோழைத்தனமாகப் படுகொலை செய்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் காந்தியடிகள் முதல் கெளரி லங்கேஷ் வரை கொடூரமாய்க் கொல்லப்பட்ட சான்றோர் பெருமக்கள் யாவரும், எளிய மக்களின் உரிமை காக்கும் தங்களின் சமத்துவக் கருத்தியலால் தான் சகிப்பின்மை கொண்ட மிருக மனத்தினரால் சாகடிக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.
விதைத்தவர்களை சிதைத்துவிட்டாலும், ஊன்றிய விதைகள் நிலம் பிளந்து எழுந்து வரும். இதை வெறிகொண்டு, நெறிகொன்று அலையும் வேட்டை நாய் மனத்தினர் விளங்கிக் கொள்வதில்லை.
காந்தியின் மார்பைத்தான் கோட்சேயின் துப்பாக்கியால் துளைக்க முடிந்தது. அவரது நிலைபெற்ற பெரும்புகழை அந்தத் தோட்டாக்களால் துளைக்க முடிந்ததா?
சாக்ரடீசுக்கு நஞ்சைக் கொடுத்து சாகடித்தது அதிகாரம். சர்வதேசத்திற்கும் அவனது பெயர் சென்று சேர்ந்துவிட்டதே. நஞ்சில் செத்தவன் நல்லறிஞர்களின் நெஞ்சில் வாழ்கிறானே!
அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசிகளோடு, அதிகார சக்திகள் சான்றோர்களை சாகடித்து வருகின்றன என்கிற குற்றச்சாட்டை முற்றிலும் தவறென்று புறந்தள்ள முடியாது.
'சிவாஜி யார்?' என்ற தனது அற்புதமான நூலின் மூலம் முஸ்லிம்களின் எதிரியாக சித்திரிக்கப்பட்ட மராட்டிய மாவீரன் சிவாஜி முஸ்லிம்களை எவ்வளவு கொண்டாடி அவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கினார், முஸ்லிம்கள் சிவாஜிக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தனர் என்ற உண்மைகளையெல்லாம் வெளிக்கொண்டு வந்தார் அறிஞர் கோவிந்த் பன்சாரே.
அவர் 2015 பிப்ரவரி 19 அன்று தனது மனைவியுடன் நடைப்பயிற்சிக்கு சென்றபோது மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். 82 வயதான கோவிந்த் பன்சாரேவின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
அதே மராட்டிய மாநிலத்தில் 1989-ஆம் ஆண்டு 'மகாராஷ்டிர அந்தாஷ்ரத்தா நிர்மூலன் சமிதி' என்ற பெயரிலான மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கி பல போலிச் சாமியார்களின் வேடத்தை அம்பலப்படுத்திய நரேந்திர தபோல்கர், 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று புணேயில், நடைப்பயிற்சிக்குச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 
மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வர காரணமாக இருந்த தபோல்கர் 'சாதனா' என்ற முற்போக்கு இதழை நடத்தி வந்தார். இவரது கொலைக்கும் இதுவரை நீதியில்லை.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கன்னட இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமையுமான எம்.எம். கலபுர்கி ஆகஸ்ட் 30, 2015 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
கலபுர்கியின் படுகொலை குறித்து எழுதிய கண்டனக் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், 'எல்லா வகையிலும் இது ஓர் அரசியல் படுகொலை, மற்ற அரசியல் கொலைகளுக்கும். எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. எழுத்தாளர்கள் தனி மனிதர்கள். எனவே பாதுகாப்பற்றவர்கள், சமூகமும் அரசாங்கமும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கவேண்டும். 
ஆகவே, ஓர் எழுத்தாளன் தாக்கப்பட்டால் அவ்வரசு அதன் கடமையிலிருந்து வழுவி விட்டதென்றே பொருள். அந்தச் சமூகம் அறமிழந்துவிட்டது என்றே பொருள்.
இதில் அவ்வெழுத்தாளர்களின் கருத்து அல்லது செயல் குறித்த விவாதத்திற்கே இடமில்லை. அத்தகைய விவாதமும் அடிப்படையில் இந்த கீழ்மையை மறைப்பதற்கான முயற்சி மட்டுமே' என்று தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
பிறருக்கு தீங்கு விளைவிக்காத ஆடு, மாடு, குதிரை போன்ற சாதுவான விலங்குகள் அச்சமற்று உலவுவதும், பிற உயிர்களைக் கொல்லும் தன்மை கொண்ட கொடிய விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் பதுங்கிப் பதுங்கி வாழ்வதும் காட்டில் நிலவும் காட்சி.
அறமும், அறிவும் வாய்ந்த அறிஞர்கள் அச்சுறுத்தலோடு வாழ்வதும், அதிபயங்கரப் பேர்வழிகள் அதிகாரத்தின் ஆசீர்வாதங்களோடு பவனி வருவதும் நாட்டில் நிலவும் வீழ்ச்சி.
கொடுங்கோலை எதிர்த்து எழுதுகோல்கள் நிற்பது காலங் காலமாய் நிகழ்வதுதான், ஆனால் கருத்துரிமைக்குக் கடுகளவும் மதிப்பில்லாத முடியாட்சியில் கூட, கருத்தாளர்கள் வெளிப்படுத்திய கம்பீரமும்,வேந்தர்கள் அவர்களிடம் காட்டிய கண்ணியமும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
நாட்டுக்கரசனை எதிர்த்து நின்ற நாவுக்கரசர், 'நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று முழங்கினார்,
'சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியோடு வான் ஆளத் தருவரேனும் 
மங்குவார் அவர் செல்வம்
மதிப்போம் அல்லோம்' என்றார்.
புவிச் சக்கரவர்த்தியான குலோத்துங்கனைப் பொருந்தாமல் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடினான்:
'மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ,
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ, உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு'
எதிர்க்கட்சிகளும், இதழியலும் இல்லாத முடியாட்சி காலத்திலும் கூட, கருத்துரிமைக்குக் களம் அமைத்த சான்றோர்களையும், அவர்களை மதித்துப் போற்றிய வேந்தர்களையும் பற்றிய செய்திகளை பல்வேறு இலக்கியங்கள் நமக்கு சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால் மக்களாட்சியின் மகத்துவம் பேசும் இக்காலத்தில்தான், தவறுகளை சுட்டிக் காட்டுவோர் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்,
'என் மக்களுக்காகப் போராடுவது குற்றம் என்று நீங்கள் சொன்னால், அந்தக் குற்றத்தை கோடி முறைசெய்யத் தயாராக இருக்கிறேன்' என்று வெள்ளையரின் நீதிமன்றத்தில் வெகுண்டுரைத்த அண்ணல் காந்தியை இன்னல் இன்றி பாதுகாத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். 
ஆனால் சுதந்திர இந்தியா, தன் தந்தையை சுட்டுக் கொன்றது. புதிய இந்தியாவோ தனது புத்திமிகு புத்திரர்களைக் கொன்றுகொண்டிருக்கிறது.
வெறியர்களிடம் வேதாந்த விளக்கம் பேசமுடியாதுதான். அதேநேரம், 'கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்' என்கிறார் வள்ளுவர்.
கொடியவர்களை கொலைத் தண்டனை போன்ற கடுந்தண்டனையால், வேந்தன் தண்டிப்பது பயிரைக் காப்பாற்ற களையைக் களைவதற்கு நிகரானது என்கிறார்.
கொலைகளை வளர்க்கும் களைகளைக் களைவதில் கலக்கமும், தயக்கமும் ஏன் தொடர்கிறது?
கொல்லப்பட்டவர்கள் ஆள்வோரைக் குறைகூறிக் கொண்டிருந்தவர்கள் என்பது தான் காரணமா?
'செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு' என்கிறது திருக்குறள்.
காதுக்கு கசப்பு தரும் விமர்சனங்களையும் பொறுமையாக ஏற்கின்ற அரசனின் குடை நிழலில் உலகம் தங்கும் என்பது பொருள்.
'தேரா மன்னா' என்றழைத்த கண்ணகியின் கடுஞ்சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்த பாண்டிய நெடுஞ்செழியன், அநீதி இழைத்துவிட்ட குற்றவுணர்வால் தனது ஆருயிர் நீத்தாலும் வரலாற்றில் நிலைக்கிறான்.
அதிகாரம் சதமென்று கருதி தன்னை ஏற்றுக்கொள்ளாத மாற்றுக் கருத்தினரைக் கூற்றுக் கிரையாக்கிக் கோரத் தாண்டவம் ஆடிய ஹிட்லர், முசோலினி போன்றோர் வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டார்கள்.
கருத்துச் சுதந்திரம் ஒரு தேசத்தின் ஆன்மாவிற்கு நிகரானது.
சோற்றுக்கில்லாததால் மக்கள் சுதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. தன்னுரிமையும், மண்ணுரிமையும் காக்கவே நம் முன்னோர்கள் இன்னுயிரைத் தந்து இவ்விடுதலையைப் பெற்றார்கள்.
கருத்துச் சுதந்திரம் போனால் நமது
சுதந்திரம் கருத்துப் போகும்.
கருத்துரிமைப் போராளிகளைப் பாதுகாப்பதும் தேசப் பாதுகாப்பின் ஓரம்சம்தான். தூவல்களும், தூரிகைகளும் ஒருபோதும் துப்பாக்கிகளின் முன்னால் மண்டியிடாது. 
கருத்துரிமையின் மாண்பைக் காப்பதுதான் 'மாண்புமிகு' மாந்தர்களின் முதன்மைக் கடமையாகும்.

கட்டுரையாளர்
பேராசிரியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com