காந்தி முதல் கவுரி வரை குண்டுகள்தான் தீர்வா?

சனவரி 30-ஆம் நாள் 1948-ஆம் ஆண்டு காந்தியடிகளின் மார்பை குண்டுகளால் துளைத்தக் கொலைக் கரங்கள் ஓய்ந்துவிடவில்லை.
காந்தி முதல் கவுரி வரை குண்டுகள்தான் தீர்வா?

சனவரி 30-ஆம் நாள் 1948-ஆம் ஆண்டு காந்தியடிகளின் மார்பை குண்டுகளால் துளைத்தக் கொலைக் கரங்கள் ஓய்ந்துவிடவில்லை.
2012-ஆம் ஆண்டு ஆகஸ்டில் புணேவில் நரேந்திர தபோல்கர், 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் கோலாப்பூரில் மார்க்சிய சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே, அதே ஆண்டு ஆகஸ்ட்டில் கருநாடகத்தைச் சேர்ந்த எம்.எம். கலபுர்கி, 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூரில் கவுரி லங்கேஷ் ஆகியோரை அதே கொலைக் கரங்கள் குண்டுகளால் துளைத்துக் கொலை செய்துள்ளன.
காந்தியடிகள் உள்பட மேலே கண்ட கொலையுண்டவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எதிரிகள் ஒருபோதும் இருந்ததில்லை. மாறுபட்ட கருத்து கொண்டவர்கள்கூட அவர்களை உளமாற விரும்பினார்கள். நட்பு கொண்டாடினார்கள். 
ஆனால், இவர்கள் அனைவருமே சுதந்திரமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள். சாதி, சமயம் கடந்து அனைவரிடமும் அன்பு கொண்டாடியவர்கள். ஆனால், மதவெறியை மட்டுமே முழுமையாக எதிர்த்துப் போராடியவர்கள். மானுடத்தை முழுமையாக நேசித்தவர்கள். எவரையும் பகைக்காத இவர்களை எதற்காகப் படுகொலை செய்தார்கள்? 
இவர்கள் ஏந்தியிருந்த வலிமை வாய்ந்த கருத்தாயுதத்தைக் கண்டு அஞ்சியவர்கள் இவர்களைக் கொலை செய்தார்கள்.
'பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு' தனது அறிக்கையில் 1992-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தியாவில் 33 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை வெளியிட்டுள்ளது. ஆனால், பகிரங்கமாக நடைபெற்ற இந்த கொலைகளில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
உலகில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படும் 13 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்பது இந்த நாட்டிற்கும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வெட்கக்கேடாக உறைக்கவில்லை. அதனால்தான் அவர்கள் எதுவும் நடவாததைப் போல அசைவற்றிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பத்திரிகைகளும், 800-க்கு மேற்பட்ட காட்சி ஊடகங்களும் இருந்த போதும் சுதந்திரமான செய்திகள், கருத்துகள் வெளியிடப்படுவதில் பல்வேறு தடைகள் குறுக்கிடுகின்றன. 
இவற்றை எதிர்த்து உண்மையைக் கூறும் துணிவு சிலருக்கு மட்டுமே இருக்கிறது. அத்தகையவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காகத்தான் கவுரி போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நாளை மற்றவர்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்பதை பெரும்பாலான பத்திரிகையாளர்கள் இன்னமும் உணரவில்லை.
இந்தப் படுகொலையைக் கண்டித்து எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அறிவியல் அறிஞர்கள் ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்திய அகாதெமி விருதுகள், பத்ம விருதுகள் ஆகியவற்றை மத்திய அரசிடமே திருப்பிக்கொடுத்து தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். 
ஆனால், இதைக்கண்டு வெட்கப்பட வேண்டிய அரசு அவர்களை ஏளனம் செய்தது. அலட்சியப்படுத்திற்று. மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் படுகொலை செய்திகளை அறிந்தபோது கொண்டாடினார்கள். மகிழ்ந்தார்கள்.
தங்களது கருத்துக்கு எதிரானவர்களின் வாய்களை மூடுவதற்கும், எழுதும் கரத்தை செயலற்றதாக்குவதற்கும் அவர்களைப் படுகொலை செய்வது ஒன்றுதான் வழி என்ற கருத்தோட்டம் சுதந்திரமான சிந்தனையாளர்களுக்கு விடுக்கப்படுகிற அறைகூவலாகும். 
அதுமட்டுமல்ல, சிந்திப்பதையையே அச்சுறுத்தி செயலற்றதாக்குவதாகும். இது ஒரு அப்பட்டமான பாசிசப் போக்காகும். இதை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் சனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த உணர்வோடு வாழ்ந்ததால்தான் கவுரி லங்கேஷ் கொடூரமான சாவை எதிர்கொள்ள நேர்ந்தது. ஒரே நாடு, ஒரே கொள்கை என்பதையும், பசு காவலர்களால் ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மை மக்களும் படுகொலை செய்யப்படுவதையும், இந்து சமயத்தில் நிலவிய சாதி ஆதிக்க முறையையும் கவுரி லங்கேஷ் கடுமையாக எதிர்த்து எழுதினார், பேசினார்.
கருநாடகத்தைச் சேர்ந்தவராக அவர் விளங்கியபோதிலும், காவிரிப் பிரச்னையில் கருநாடகத்தில் வாழ்ந்த தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டபோது உடனடியாக பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று ஆறுதல் கூறினார். கன்னட வெறியைக் கடுமையாகக் கண்டித்தார். 
தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' என்னும் நெடுங்கதையை தமிழ்நாட்டிலேயே சிலர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, அந்நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்து அம்மக்கள் மத்தியில் பரப்பிய அவரது துணிவு இனம், மொழி கடந்ததாகும்.
கருநாடகத்தில் நக்சலைட்டுகளை வேட்டையாடுவது என்ற பெயரால் போலி மோதல்களை மேற்கொண்டு பல இளைஞர்களை காவல்துறை சுட்டுக்கொன்றபோது, எதற்கும் அஞ்சாமலும், நக்சலைட்டுகள் மறைந்து வாழும் பகுதிக்கே சென்று அவர்களுடன் கலந்து பேசி அவர்களை சனநாயக அரசியலுக்கு அழைத்துவந்தப் பெருமை கவுரியைச் சாரும்.
இந்தியாவின் அரசியல் சட்டத்தின் 3-ஆம் பகுதி மக்களின் அடிப்படை உரிமைகள் எவை எவை என்பதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் வரையறுத்துக் கூறியுள்ளது. 
இப்பகுதியின் 14-ஆவது பிரிவு 'இந்திய ஆட்சி நிலவரைக்குள் சட்டத்தின் முன்னர் சமன்மையையும், சட்டம் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுத்தல் ஆகாது' என்று கூறுகிறது.
அதே பகுதியின் 15-ஆவது பிரிவு சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுவதைத் தடை செய்கிறது.
16-ஆவது பிரிவு குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு, சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது.
அரசியல் சட்டம் அளித்துள்ள மேலே கண்ட உரிமைகளை வலியுறுத்தி எழுதி அவற்றை மக்களிடம் கொண்டு சென்றதற்காகப் பாராட்டப்பட வேண்டிய கவுரி லங்கேஷ் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரைப்போல சுதந்திர சிந்தனைப் படைத்த மற்றவர்களும் இதே நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
காந்தியடிகள் நாட்டின் அடிமை விலங்கை ஒடிக்க தனது வாழ்நாளை ஒப்படைத்து மக்களின் பேராதரவோடு வெற்றி கண்டவர். விடுதலை பெற்ற நாட்டில் சனநாயகம் தழைத்து வேரூன்ற வேண்டும் என கருதினார். அவரைப் பின்பற்றிய தலைவர்கள் அவர் கண்ட கனவிற்கு அரசியல் சட்ட வடிவம் கொடுத்து அக்கனவை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 
ஆனால், இந்திய நாடு விடுதலைபெற்று ஏழு மாதங்கள் கழிவதற்குள் நாட்டின் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியடிகள் படுகொலைக்கு ஆளானார். எந்த ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து அவர் போராடினாரோ அந்த ஆங்கிலேயே ஆட்சி அவரைப் பத்திரமாகப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியது. 
ஆனால், மதவெறி, அவரை மாய்த்தது. காந்தியடிகளோடு இது நின்றுவிடவில்லை. இன்றும் தொடர்ந்து கவுரியின் உயிர் வரை காவுகொண்டிருக்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாடு என போற்றப்படும் இந்தியாவில் சனநாயகம் நம் கண்முன்னாலேயே சரிந்துகொண்டிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.
சனநாயக ரீதியில் அவரவர்கள் கருத்தை வெளியிடும் உரிமை மறுக்கப்படுமானால் சர்வதிகாரத்தை நோக்கி நாம் விரைந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருளாகும். 
நமது அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிற உரிமைகள் ஏட்டளவில் மட்டுமே இருக்க வேண்டும். நடைமுறையில் ஒருபோதும் இருக்கக் கூடாது. அப்படி இருக்க விட்டால் தங்களது மதவெறிக் கருத்துகளுக்கு அபாயம் நேரிடும் என்று அஞ்சியவர்கள் கவுரியின் கதையை முடித்துவிட்டார்கள். 
ஆனால் வெறிகொண்ட அவர்களுக்கு ஒரு உண்மை புரியவில்லை. கருநாடகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்குக்கூட தெரியாமல் வாழ்ந்த கவுரி லங்கேஷ், இன்றைக்கு இந்தியா எங்கும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்படும் நபராக, சுதந்திரமான எழுத்து, பேச்சு ஆகியவற்றின் அடையாளமாக நெடிதுயர்ந்து நிற்கிறார் என்பதை அந்த கொலைவெறியர்களும் அவர்களுக்குப் பின்னே நின்று இயக்கியவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். 
புரிந்து கொள்ளவில்லையேல் மக்கள் புரிய வைப்பார்கள்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com