பெருநிறுவனங்களும் சிறுதொழில்களும்

வங்கிகள் வழங்கும் கடன் தொகையில், 40 சதவீதத் தொகையை சமூக நலன் கருதி சிறு தொழில், விவசாயம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்பது விதி. வங்கிகளின் வாராக்கடன் பெருக்கத்திற்கு

வங்கிகள் வழங்கும் கடன் தொகையில், 40 சதவீதத் தொகையை சமூக நலன் கருதி சிறு தொழில், விவசாயம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிட வேண்டும் என்பது விதி. வங்கிகளின் வாராக்கடன் பெருக்கத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று பலரால் நம்பப்படுகிறது.
அண்மையில் வெளிவந்துள்ள தகவலின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழில் அதிபர்கள் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவதைவிட, சிறு, குறு தொழில்கள், விவசாயக் கடன் பெற்றோர் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்துவது சிறப்பாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் தொழில் அதிபர்களுக்கும் கொடுத்த கடனை வசூலிக்க இயலாமல் தள்ளுபடி (Write off) செய்யப்பட்ட தொகை ரூ.35,587 கோடி.
அதே காலகட்டத்தில், சிறு தொழில்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட முன்னுரிமை கடன்களில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.32,445 கோடி. அதாவது விவசாயக் கடன் தள்ளுபடி ரூ.6,628 கோடி; சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் தள்ளுபடி ரூ.8,106 கோடி; இதர முன்னுரிமை கடன்களின் தள்ளுபடி ரூ.17,711 கோடி; ஆக மொத்தம் ரூ.32,445 கோடி.
அதேபோல் பெருநிறுவனங்களின் வாராக்கடன் தொகையிலிருந்து வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.16,717 கோடி. ஆனால் இதே இனத்தில், முன்னுரிமை கடன் தொகையிலிருந்து வசூலிக்கப்பட்ட தொகை ரூ.25,070 கோடியாகும்.
பெரும் தொழில் கடன்களை வசூலிக்க இயலாமல் 2017-ஆம் நிதி ஆண்டில் இதுவரை ரூ.68,032 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள மாதங்களைக் கடக்கும்போது தள்ளுபடி தொகை மேலும் உயரும். ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் கடன் தள்ளுபடி ரூபாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, வாராக்கடன்களின் தரம், அதற்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பு, வசூலிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளிட்ட அம்சங்களை மறுஆய்வு செய்து (asset quality review) வங்கிக்கு இதனால் ஏற்படக் கூடிய இழப்பை சரி செய்யும் வகையில், வங்கிகளின் லாபத்திலிருந்து உரிய தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளது.
இதில் ஒரு பகுதியை வசூலிப்பது சாத்தியமில்லை என்று கருதினால், வங்கிகளின் Balance Sheet-ஐ ஒழுங்குபடுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்கிறார்கள். இதன் பயனாக வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்களின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது.
கடன் தள்ளுபடி என்பதற்கு கடன் வாங்கியவர் அந்தக் கடனிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்பது பொருள் அல்ல. அவர் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை நிச்சயமாகத் தொடரும். கடனை வசூலிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கையும் தொய்வில்லாமல் தொடரும்.
அதே நேரம் வங்கியின் பேலன்ஸ் ஷீட்டை பொருத்தவரை, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் வராமல் போய்விட்டால், வங்கி தனது லாபத்திலிருந்து, அந்த தொகையை ஒதுக்கி வைத்துள்ளது என்பதையும், டெபாசிட்டர்களுக்கு எந்த நேரமும் பணத்தை திரும்பக் கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டவே மேற்கூறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், மாநில அரசுகள் அறிவிக்கும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கும், வங்கிகள் செயல்படுத்தும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கும் தொடர்பில்லை.
இது ஒருபுறம் இருக்க, வாராக்கடன் பிரச்னை மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், வாராக்கடன் பூதாகரமாக பெருகிவிட்டது.
2008-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த வங்கிக் கடனில் 2.3 சதவீதமாக இருந்த வாராக்கடன் தொகை, 2016-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதாவது ரூ.6.11 லட்சம் கோடியாக வளர்ந்துவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 4.5 சதவீதமாக வாராக்கடன் உள்ளது. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைவரிசை கணிசமானது என்பதுதான் கவலை அளிக்கும் விஷயம்.
இந்த இமாலய சீர்கேட்டை இரும்புக் கரம் கொண்டுதான் சரி செய்ய முடியும். ஆனால், நாம் இதுவரை வட்டித் தள்ளுபடி, கடன் தொகையை குறைத்துக் கொண்டு, ஒரே தவணையில் கணக்கை முடித்துக் கொள்ளுதல் (One time settlement), கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான கால அட்டவணையை திருத்தி அமைத்தல் (Rescheduling) உள்ளிட்ட சலுகைகளை வழங்குதல் போன்ற மென்மையான போக்குகளைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறோம்.
வங்கிகள் ஈட்டும் லாபத்தில் பெரும் பகுதி வாராக்கடனுக்கு நிகராக ஒதுக்கீடு செய்வதில் செலவாகிறது.
வாராக்கடனில் ஒரு சிறு பகுதி வேண்டுமானால் கடனாளியின் சக்திக்கு மீறிய காரணங்களால் ஏற்படக்கூடும். உதாரணமாக, உள்நாட்டுப் பொருளாதார மந்தநிலை, சர்வதேசப் பொருளாதார தேக்கநிலை ஆகியவை காரணமாக இருக்கக்கூடும். பெரும்பாலான கடனாளிகள் பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலையில் இருந்தும்கூட, வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாதவர்கள் (Wilful defaulter) அதிகம் பேர் உள்ளனர்.
கடந்த காலங்களில் வாராக்கடனை வசூலிப்பதில் காலதாமதம் ஆனதற்கு நீதிமன்றங்களில் நேரக்கூடிய அளவுக்கதிகமான காலதாமதம் ஒரு காரணமாக இருந்தது. இதனால் வங்கிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
2002-ஆம் ஆண்டு சர்ஃபாஸி சட்டம் வந்த பிறகு இதில் ஓரளவு நிவாரணம் கிடைத்தது. ஆனால், பெரிய அளவில் நிலைமை சீரடையவில்லை என்பதுதான் வங்கியாளர்களின் அனுபவம்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய திவால் சட்டம் (இன்ஸால்வென்ஸி மற்றும் பேங்க்ரப்ட்ஸி சட்டம்) மற்றும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வங்கி விதிமுறைகள் (திருத்தம்) சட்டம் (Bank Regulations - Amendment Act) வங்கிகளின் வாராக்கடன்களை விரைந்து வசூலிக்க பேருதவியாக இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி ஆணையின்படி, மிக மோசமான 12 வாராக் கடன் நிறுவனங்களின் மீது ஏற்கெனவே திவால் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்குகள் தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் (நேஷனல் கம்பெனி லா டிரி
பூனல் - என்.சி.எல்.டி.) என்கிற அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.
ஆறு மாதத்தில் வழக்கு தீர்த்து வைக்கப்படும் என்பது இந்த வழிமுறையின் சிறப்பு. ஒருவேளை ஆறு மாதத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயலாத பட்சத்தில் மேலும் மூன்று மாதம் அவகாசம் தரப்படுகிறது.
மேற்கூறிய கால அவகாசத்துக்குள் கடனைத் திரும்பச் செலுத்தாவிடில், நிறுவனம் வேறு ஒருவர் கைக்கு மாறிவிடும் என்கிற அச்சத்தினால் கடனாளி எப்படியும் பணத்தைச் செலுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இதில் வேறு ஒரு பெரும் குறைபாடு இருப்பதாக ரிசர்வ் வங்கியும், பொருளாதார வல்லுநர்களும், வங்கி அலுவலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். வழக்கு என்.சி.எல்.டி.யின் முன்பு சமரசத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டியிருப்பதால் வங்கிகள் கடன் தொகையில் பெரும் தொகையை விட்டுக் கொடுக்கும்படி நேரக்கூடும் என்பதே அந்த அச்சம். இதனால், வாராக்கடன் சுமை குறைந்தாலும், வங்கிகளுக்கு இழப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.
அதற்கு ஏற்ப, என்.சி.எல்.டி.யின் முன் வந்துள்ள முதல் வழக்கிலேயே, அதாவது, Symergies - Dooray Automotive கணக்கில் அந்த நிறுவனம் கடன் வழங்கிய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.900 கோடி. என்.சி.எல்.டி. முன்னிலையில் ஏற்பட்டுள்ள தீர்மானம் என்னவெனில் மேற்கூறிய நிறுவனம் கடன் வழங்கியவர்களுக்கு ரூ.54 கோடி கொடுத்து கணக்கை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்பதாகும்.
இதில் ரூ.20 கோடியை உடனடியாக கொடுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.34
கோடியை வரும் ஐந்து ஆண்டுகளில் பல தவணையாக கொடுக்கலாம்.
கடன் வழங்கியவர்களுக்கு ரூ.900 கோடிக்கு பதில் வெறும் ரூ.54 கோடி மட்டுமே கிடைக்கும். அதாவது, மொத்த கடனில் ஆறு சதவீதம் கிடைக்கும்.
என்னே ஒரு தீர்மானம்!
இந்த நிறுவனத்துக்கு ஆரம்பத்தில் கடன் வழங்கிய வங்கிகள் ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ஆப் இந்தியா, எஸ்.பி.ஐ., இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, ஆந்திரா வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகியவை.
அடுத்த கட்டமாக, Synergies castings, Asset Reconstruction Co. (India) Synergies Castings, J P Morgon chase ஆகியவை கடன் வழங்கியவர்கள் (Lenders) ஆனார்கள். இறுதியாக MILLENNIUM, SYNERGIES CASTING, ALCHEMIST ஆகியோர் கடன் வழங்கியவர்கள் ஆனார்கள்.
இந்த விஷயத்தின் மறு பக்கம் என்னவெனில் ஈஞஞதஅவ நிறுவனம் திவால் ஆகியிருந்தால், 1500 பேர் வேலை இழந்திருப்பார்கள் என்றும் கடன் வழங்கியவர்களுக்கு வெறும் ரூ.7 கோடி மட்டுமே கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், திவால் சட்டத்தின்படி, முதல் தீர்மானமே இப்படி இருக்கிறது. இனி அடுத்து வரும் வழக்குகளில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com