குணம் நாடுதலும் குற்றம் கடிதலும்

அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் மூன்று முக்கியமானவை. முதல் சம்பவம், குஜராத் மாநிலங்களவைத் தேர்தல். குஜராத் சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு 121 எம்.எல்.ஏ.க்கள்.

அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களில் மூன்று முக்கியமானவை. முதல் சம்பவம், குஜராத் மாநிலங்களவைத் தேர்தல். குஜராத் சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு 121 எம்.எல்.ஏ.க்கள். ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 45 எம்.எம்.ஏ.க்கள் வீதம் பா.ஜ.க. 2 எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்க 90 எம்.எல்.ஏ.க்கள் தேவை. மிச்சமுள்ள 31 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்து மூன்றாவது எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க முடியாது. 
குஜராத் சட்டசபையில் காங்கிரஸின் பலம் 57. நிச்சயமாக காங்கிரஸ் ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க முடியும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாயினர். அவர்களில் இருவர் பா.ஜ.க.விற்கு ஆதரவாக வாக்களித்தனர். அவை செல்லாதவையென காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பா.ஜ.க. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
தேர்தல் ஆணையம், அந்த இரு வாக்குகளும் செல்லாதவைதான் என்று அறிவித்தது. அந்த முடிவால்தான், காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அகமது படேல் வெற்றிபெற முடிந்தது. 
மத்திய ஆளும் கட்சியான பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தை வசப்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது. நடந்ததோ இதற்கு நேர்மாறானது. 
இதில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை, தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின் அதிகாரம் பெற்ற நிறுவனமே தவிர, மத்திய ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கக்கூடிய நிறுவனம் அல்ல என்பதுதான். அகமது படேலின் வெற்றியும், பா.ஜ.க. முயற்சியின் தோல்வியும், இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என உறுதிபடக் கூறலாம்.
இரண்டாவது சம்பவம் முத்தலாக் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அதை 5 மதங்களைச் சேர்ந்த 5 நீதிபதிகள் வழங்கினர் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
நீதியரசர் ஜே.எஸ். கேஹர் சீக்கிய மதத்தையும், நீதியரசர் ரோஹின்டன் ஃபாலி நாரிமன் பார்ஸி மதத்தையும், நீதியரசர் குரியன் ஜோசப் கிறிஸ்தவ மதத்தையும், நீதியரசர் உதய் உமேஷ் லலித் இந்து மதத்தையும், நீதியரசர் அப்துல் நசீர் இஸ்லாம் மதத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்த ஐவரில் மூவர் முத்தலாக் முறை ஆண் - பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்றனர். மற்ற இரு நீதியரசர்களின் தீர்ப்பு இதற்கு மாறானது. பெரும்பான்மைத் தீர்ப்பால் முத்தலாக் முறை இந்தியாவில் ரத்தாகியது.
இது இந்திய இஸ்லாமியப் பெண்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். இனிப்பு வழங்கி அதை அவர்கள் கொண்டாடினார்கள். முத்தலாக்கால்தான் இஸ்லாத்திற்குப் பெருமை என்பதில்லை. அதற்குப் பெருமை தர எத்தனையோ நல்லவை இருக்கின்றன. மிக உன்னதமான ஓரிறைத் தத்துவம் ஒன்றே போதும். 
முத்தலாக் முறையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வதைவிட, அதனைச் சீர்திருத்திக் கடைப்பிடிக்கலாம் என்ற வாதமும் முத்தலாக்கை ஒரு முறை சொல்வதற்கும், மறுமுறை சொல்வதற்கும் ஆறு மாத இடைவெளி உள்ளது எனவும் எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட ஐந்து நீதிபதிகளில் பெரும்பான்மைத் தீர்ப்பு முத்தலாக்கிற்கு எதிராகவே அமைந்து, நாடு முழுவதும் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இந்த வழக்கின் தீர்ப்பை இஸ்லாமிய சகோதரிகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கண்டார்.
இதேபோல் சுபாஷிணி அலி, சீதாராம் யெச்சூரி முதலிய இடதுசாரிகளும் இதை வரவேற்றார்கள். பகுத்தறிவு இயக்கத்தாரும் இதை வரவேற்றார்கள். 
முத்தலாக் ரத்தானதைப் பற்றிக் கருத்துக் கூறிய பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தனது தாய்நாடான பங்களாதேஷிலும், இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிற பாகிஸ்தானிலும் முத்தலாக் முறையை ஒழித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், இப்போதுதான் இந்தியா இதை ஒழிக்கிறது என்பது வியப்பாக உள்ளதெனவும் கூறினார் (முத்தலாக் முறை திருக்குரானில் இல்லை).
அதேசமயம் முத்தலாக் முறை ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை மறைமுகமாகக் கொண்டுவருவதற்கான முயற்சியோ என்பாரும் உள்ளனர். 
மதங்கள் தங்களுடைய விசுவாசிகளைக் காப்பாற்றுவதற்கென்று தனிச்சட்டங்களை வைத்திருக்கின்றன. அதனால், இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் இல்லை.
ஒரு ஹிந்துப் பெண்ணைக் கணவன் கைவிட்டால் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தாக்கல் செய்ய முடிகிறது. இஸ்லாமியப் பெண்ணோ அதுபோலச் செய்ய முடிவதில்லை. 
"ஒரே கிரிமினல் சட்டம் போல ஒரே சிவில் சட்டமும் இருக்க வேண்டும் என்பதற்கான தருணம் வந்துள்ளது' என்கிற வரலாற்றுப் பேரறிஞரும், இடதுசாரிச் சிந்தனையாளருமான ரோமிலா தாப்பரின் கருத்து குறிப்பிடத்தக்கது. 
மூன்றாவது சம்பவம், ஹரியாணா மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, தேரா சச்சா செளதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற கொடுமையை இரண்டு பெண்கள் கடிதமாக எழுதினார்கள். இதை ஆய்வு செய்யுமாறு உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. 
சுமார் 15 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து 2017 ஆகஸ்ட் மாதத்தில் வழங்கிய தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளிதான் என்று அறிவித்தது - ஆனால் தண்டனையை அறிவிக்கவில்லை. 
காரணம், ராம் ரஹீம் சிங்கிற்கு பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட்டுமல்லாமல், ராஜஸ்தான் முதலிய பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அதிகமான பக்தர்கள் உள்ளனர்.
பாமரக் குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் தொலைக்காட்சிப் பேட்டிகளின் மூலமாகவும், சினிமாவில் நடித்ததன் மூலமாகவும் மிகப் பிரபலமான ஆன்மிகவாதியானார். இவருக்குச் சுமார் 7 கோடி பக்தர்கள் உள்ளனர். இவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் 2002-லும் பா.ஜ.க. 2009-லும் ஹரியாணாவில் ஆட்சியைப் பிடித்தன. 
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பால் குர்மீத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 
தீர்ப்பளிப்பதற்கே முடியாத அளவில் சண்டீகரில் திரண்ட பக்தர்கள் சாலைகளுக்குத் தீவைப்பு முதலியவற்றில் இறங்கினார்கள். 
அதனால், பஞ்ச்குலா சிறைச்சாலைக்கு ஹெலிகாப்டர் மூலமாகவே குர்மீத் ராம் ரஹீம் சிங் கொண்டு செல்லப்பட்டார். 
20 ஆண்டுக் காலச் சிறைத்தண்டனை தரப்பட்டு ரோட்டக் சிறையில் அடைக்கப்
பட்டார்.
தீர்ப்பு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சண்டீகரில் திரண்டது நீதிமன்றத்தையே அச்சுறுத்துவதாக அமைந்தது. ஹரியாணா மாநில அரசு, இந்த வெறிக்கும்பலை அடக்குவதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம், ஹரியாணாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததற்கு இவருடைய வாக்கு வங்கியின் பங்களிப்பும் உண்டு என்பதுதான்.
தற்போது குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா ஆசிரமத்தின் தலைவர் அல்ல. ரோட்டக் சிறையில் ஒரு கைதி. 
பா.ஜ.க. மத்திய ஆட்சி இந்துத்துவாவுக்கு ஆதரவான ஆட்சி என்று கூறுகிற இடதுசாரிகளின் விமர்சனத்தை இத்தீர்ப்பு கேள்விக்குறியாக்கி உள்ளது. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவை பா.ஜ.க. தக்க வைப்பதாக இருந்தால், அவருடைய சிறைத்தண்டனையைத் தவிர்க்க ரகசியமாகச் செயல்பட்டிருக்க முடியும். 
அப்படி நடந்து கொண்டிருக்குமானால், அவர் நிரபராதி என்று விடுதலையாகியிருப்பார். அல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று வழக்குத் தள்ளுபடியாகியிருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்தத் தீர்ப்பில் எதிர்க்கட்சிகள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு ஹரியாணாவின் பா.ஜ.க. முதலமைச்சர் கட்டர், சட்டம் ஒழுங்குப் பிரச்னையைச் சரியாகக் கையாளவில்லை என்பது மட்டுமே. 
இக்குற்றச்சாட்டு ஹரியாணா மாநில அரசு நிர்வாகத்தின்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டே தவிர, இந்துத்துவாவுக்கு ஆதரவாக மாநில ஆட்சி செயல்பட்டது என்பதற்கான குற்றச்சாட்டு அல்ல. குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் செல்வாக்கு எவ்வளவு அதிகமானதாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பதை மாநில பா.ஜ.க. ஆட்சி நிரூபித்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சி வரவேற்றுமிருக்கிறது.
இம்மூன்று சம்பவங்களின் மூலம் மத்திய ஆட்சி, தேர்தல் ஆணையத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்றோ, நீதிபதிகளைத் தவறாகப் பயன்படுத்தியது என்றோ, சிறப்பு நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது என்றோ எதிர்க்கட்சிகளால் குற்றம் சுமத்த முடியவில்லை. 
இம்மூன்று நிகழ்வுகளும் தேசத்தின் நலன், ஆட்சியின் நடுநிலைமை போன்ற மத்திய ஆட்சியின் குணநலத் தளத்தில் இடம்பெறுகின்றன. 
சென்ற மூன்று ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் வேலை வாய்ப்புப் பெருகவில்லை. பண மதிப்பை ரத்து செய்தும் பலன் இல்லை. பசு இறைச்சித் தடைச்சட்டத்தால் நடந்த அத்து மீறல்கள் போன்றவை மத்திய ஆட்சியின் குற்றம் கடிதல் தளத்தில் இடம்பெறத் தக்கவையாகும்.
நடுநிலை ஆட்சிக்கான நற்குணங்களை எதிர்க்கட்சிகள் எப்போதும் வரவேற்பதில்லை. ஆனால், ஆட்சியின் குற்றங்களைக் கடிதல் மட்டும் நீடிப்பது தார்மிகமாகுமா? 

கட்டுரையாளர்: பத்திரிகையாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com