பயன்பாட்டு மொழியே பாதுகாக்கப்படும்!

இந்தியாவிற்கு தேசிய பறவை இருக்கிறது. அது மயில். தேசிய விலங்கு உண்டு. அது புலி. தேசிய மலர் தாமரை. தேசிய மரம் ஆல மரம். கனி மாங்கனி. நதி பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை.
பயன்பாட்டு மொழியே பாதுகாக்கப்படும்!

இந்தியாவிற்கு தேசிய பறவை இருக்கிறது. அது மயில். தேசிய விலங்கு உண்டு. அது புலி. தேசிய மலர் தாமரை. தேசிய மரம் ஆல மரம். கனி மாங்கனி. நதி பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை. தேசிய கீதம் 'ஜன கண மன' என்று தொடங்கும் வங்க மொழிப் பாடல். எழுதியவர் இரவீந்திரநாத் தாகூர். தேசிய கொடி சிவப்பு, வெள்ளை, பச்சை என்று மூவர்ணங்கள் கொண்ட கொடி. நடுவில் நீல நிறத்தில் சக்கரம். இத்தனை இருந்தும் இந்தியாவிற்கு தேசிய மொழியில்லை.
இந்தியாவின் பழைய மொழிகள் தமிழ், சமஸ்கிருதம், பாலி, மகாதி, பிராகிருதம். சமஸ்கிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இல்லை. ஆனால் அது ஓதப்படும் மொழியாக இருந்தது - இருந்தும் வருகிறது. மகாபாரதம், இராமாயணம், வேதம், உபநிஷதங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், காளிதாசரின் சாகுந்தலம், மேகதூதம் முதலியவை சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. 
சமஸ்கிருதம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் எழுதப்படும் மொழியானது. ருத்ர தாமன் என்ற மன்னன் முதன்முதலாகத் தன் வெற்றியை கல்வெட்டில் பொறித்தான். அதில் இருந்து சமஸ்கிருதம் எழுதப்படும் மொழியாகவும் மாறியது. 
இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள் - மக்களால் பேசப்படாத சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தோன்றின. திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான சமஸ்கிருத சொற்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மொழி, சமஸ்கிருதம் போல பழைய மொழியாக இருப்பதோடு மூவாயிரம் ஆண்டுகளாகப் பேசப்படும் மொழியாகவும், எழுதப்படும் மொழியாகவும் இருந்து வருகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கொள்கை, மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. மொழிவழி மாநிலங்கள் நாட்டிற்குப் பெரும் பிரச்னையாக இருக்கும் என்று ராஜாஜி உள்பட சில தலைவர்கள் சொன்னார்கள். 
ஆனால் அவர்கள் கருத்துகள் ஏற்கப்படவில்லை. பல போராட்டங்கள், உண்ணாவிரதம், உயிர் இழப்புகள், கலவரங்கள் ஏற்பட்ட பிறகு இந்தியா மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
இந்திய அரசியல் சாசனம், சில திருத்தங்கள் செய்து 22 மொழிகளை மாநில ஆட்சி மொழிகள் என்று பட்டியல் இட்டிருக்கிறது. இந்தி மொழி பல மாநிலங்களிலும், சில யூனியன் பிரதேசங்களிலும் ஆட்சி மொழியாக இருக்கிறது. தெலுங்கு மொழி ஆந்திரா, தெலங்கானா என்று இரண்டு மாநிலங்களின் ஆட்சி மொழி. 
வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவற்றில் ஆங்கிலம் ஆட்சி மொழி. தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ். சிந்தி, உருது மொழிகள் எந்த மாநிலத்திற்கும் ஆட்சி மொழியாக இல்லை. ஆனால் இந்திய அரசியல் சாசனத்தில் இடம்பெற்று இருக்கின்றன. சமஸ்கிருத மொழி ஒரு மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லை.
1947-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவாக்கப்பட்டது. அது இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகள் கொண்டது. சிந்தி மொழி பேசிக் கொண்டு லட்சக்கணக்கான இந்துக்கள் சிந்து நதி பாயும் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள். 
மத அடிப்படையில் பாகிஸ்தான் ஏற்பட்டதும், சிந்துப் பகுதி பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. சிந்து மொழி பேசிக் கொண்டு வாழ்ந்த இந்துக்கள் புதிய நாடு தங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை என்று குடிபெயர்ந்து வந்தார்கள். தங்கள் தாய்மொழியான சிந்தி மொழியைப் பேசிக் கொண்டு வாழ ஆரம்பித்தார்கள். 
சிந்தி மொழிக்கென தனி மாநிலம் உருவாக்க முடியவில்லை. ஆனால் சிந்தி மொழியை ஒரு இந்திய மொழியென இந்திய அரசு, இந்திய மொழிகள் பட்டியலில் சேர்த்து இருக்கிறது.
இந்தியாவில் இணைப்பு மொழியாக - ஆட்சி மொழியான இந்தி மொழியுடன் சேர்ந்திருக்கும் ஆங்கில மொழிக்கு அரசியல் சாசன சட்டத்தில் இடமில்லை. ஏனெனில் அது இந்திய மொழி இல்லை. அந்நிய மொழி. இந்தி மொழி மாநில ஆட்சி மொழிகள் பட்டியலில் இருந்தாலும், அது இந்திய யூனியனின் ஒரே ஆட்சிமொழி.
இந்தி மொழி பேசுவோர் பிற மொழி களை பேசுகிறவர்களைவிட அதிகமாக இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழி என்பதால் இந்திய யூனியன் என்று அழைக்கப்படும் மத்திய அரசின் ஆட்சி மொழியானது. அதுதான் ஆட்சி மொழி. 
மத்திய அரசின் கீழ் செயல்படும் ராணுவம், வெளிநாட்டுத் தொடர்புகள், சட்டம், நீதி, அஞ்சல் துறை, நெடுஞ்சாலை, கப்பல், ரயில் துறை, வங்கிகள் உள்பட நிதியமைச்சகம் - என்று நாடு முழுவதற்குமான கட்டமைப்பை உருவாக்கும் மொழியாகவும், செயற்படுத்தும் மொழியாகவும் இந்தி மொழி இருக்கிறது.
கடி போலி என்ற மொழியை சுவீகரித்துக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தி மொழி உருவாகியது. மொகலாயர்கள் காலத்தில் இந்தியில் பாரசீக, அரபு மொழி சொற்கள் இந்தியில் அதிகமாகக் கலந்தன. 
அதனால் அதனை இந்துஸ்தானி மொழி என்றார்கள்.
மகாத்மா காந்தி இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானியை ஆக்க வேண்டும் என்று சொல்லி வந்தார். அது இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்குமென்று கருதினார். ஆனால் காலப் போக்கில் இந்துஸ்தானியில் அதிகமாக இருந்த பாரசீக, அரபு மொழி சொற்கள் நீக்கப்பட்டு சமஸ்கிருத சொற்கள் சேர்க்கப்பட்டன. 
அதோடு வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த போஜ்பூரி, மைதிலி, ராஜஸ்தானி, மார்வாடி, ஹரியாண்வி, பஹாடி - என்று பல சிறிய மொழிகளை இந்தி மொழிக்குள் கொண்டு வந்து 45 சதவீதத்தினர் பேசும் மொழியென்கிறார்கள். ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 25 சதவீதத்தினர்தான். அதுதான் பெரும்பான்மை. 
இந்தப் பெரும்பான்மையை இந்தியா முழுவதற்கும் பரப்ப - இந்தி மொழி இயக்குநரகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தாராளமாக நிதி வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய ஆட்சிமொழியாக இந்தி மொழியை வளர்க்கவும், பரப்பவும் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கவும், இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்தின் செயற்பாட்டைக் குறைக்கவும் ஆலோசனை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் 20 பேர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள். 10 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள். மத்திய உள்துறை அமைச்சர் இக்குழுவின் தலைவர்.
நாடாளுமன்ற நிலைக் குழுவின் - பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். மற்றவர்கள் அதன் ஆதரவாளர்கள். எல்லோரும் கூடி யதார்த்தத்தைத் தெரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார்கள். அது இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களையும், இந்தி மொழி தெரியாதவர்களையும் வெறுப்படைய செய்கிறது. மக்கள் மீது எதையும் திணிக்கக் கூடாது என்பதுதான் ஜனநாயகம். 
இது இந்தியாவில் மட்டும் நடப்பது இல்லை. உலகத்தின் பல நாடுகளில் மொழி திணிப்பு என்பது நடக்கிறது. பல சமயங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரும்பான்மையான மொழியை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் போடப்படுகிறது.
அதிகாரத்தை அபகரித்துக் கொள்ள விழையும் அரசியல் கட்சிகள் மொழியை கையில் எடுத்துக் கொள்வதும் உண்டு. ஜெர்மனியில் ஓர் அரசியல் கட்சி, 'ஜெர்மனியில் குடியேறி வாழ்கிற பிறமொழி பேசுவோர் ஜெர்மன் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்; அலுவலகத்தில் அந்த மொழியிலேயே பேச வேண்டும்; அது மட்டுமல்ல, மனைவி மக்களை ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள வைத்து வீட்டிலும், நண்பர்களோடும் ஜெர்மானிய மொழியில் பேச வேண்டும்' என்று பிரசாரம் செய்து வருகிறது.
மொழி, ஒரு தேசத்தை உருவாக்கவில்லை. ஒரு மொழியை அதிகமானவர்கள் கூடி பேசுவதால் தேசம் உருவாகிறது. ஆனாலும் ஒரு மொழி பேசுவோர் எப்பொழுதும் ஒரு நாட்டிலேயே இருப்பதில்லை. புலம் பெயர்ந்து சென்று வேறுவேறு மொழியைக் கற்றுக் கொள்கிறார்கள். தாய்மொழியை கைவிடுகிறார்கள்.
மொழியென்பது மனிதர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களின் பயன்பாட்டிற்கானது. பொறியியல், மருத்துவம், சட்டம், நீதி, நிர்வாகம், உயர்தர ஆராய்ச்சிக்கானது. வாணிகம், சமூக உறவுகள், அரசியல் பொருளாதாரத்தோடு சேர்ந்திருப்பது. 
ஒரு மொழி எவ்வளவிற்கு எவ்வளவு பயன்பாட்டிற்கு உரியதாக இருக்கிறதோ அந்த அளவிற்குப் படிக்கப்படும். பயன்பாட்டிற்குப் பயன்படாத மொழி ஆட்சி மொழி, தேசிய மொழி, செம்மொழி, தாய்மொழி- என்று எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி பெருமளவில் படிக்கப்பட மாட்டாது.
மக்கள் தங்களின் குழந்தைகள் எம்மொழியில் கல்வி கற்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அம் மொழியில் கல்வி கற்க வைக்கிறார்கள். ஓர் அரசைவிட குடிமக்கள் தெளிவாகவும், புத்திசாலித்தனத்தோடும் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது இந்தியாவில் மொழிகள் பற்றிய விஷயத்தில் மிகவும் பொருந்திப் போகிறது.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com