பள்ளிப் பாதுகாப்பு அவசியம்

தான் படிக்கும் பள்ளிக்குள் சிரித்த முகத்துடன் சென்ற ஒரு மாணவன், அடுத்த கால் மணி நேரத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.

தான் படிக்கும் பள்ளிக்குள் சிரித்த முகத்துடன் சென்ற ஒரு மாணவன், அடுத்த கால் மணி நேரத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.
ஹரியாணா மாநிலம் குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்ற மாணவன் பிரத்யுமன் தாக்கூருக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
பள்ளி கழிப்பறைக்குள் சென்ற பிரத்யுமன், பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் உதவியாளர் அசோக்குமார் என்பவரின் பாலியல் வன்முறைக்கு உடன்பட மறுத்ததால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அசோக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச பள்ளியிலேயே மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பள்ளிகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. வெறும் பணம் கொழிக்கும் இடமாக மட்டுமே தனியார் பள்ளிகள் மாறியதுதான் இதற்குக் காரணம். 
ஒரு மாணவன் வீட்டில் இருப்பதைவிட பள்ளியில்தான் அதிக நேரம் செலவிடுகிறான். ஆனால் அங்கு அவன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. லட்சக்கணக்கில் கட்டணமாக வசூலிக்கும் குருகிராம் ரயான் பள்ளியில் முதல்வர் பதவியே பல மாதங்களாக காலியாகத்தான் இருந்திருக்கிறது. 
மாணவர்களுக்கும், வெளியில் இருந்து வரும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஒரே கழிப்பறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியின் கழிப்பறை சுவர்களில் துளைகள் உள்ளன. அவற்றை கயிற்றைக் கொண்டு அடைத்துள்ளனர்.
ஆனால் பள்ளியின் வெளிப்புறம் மட்டும் பிரம்மாண்ட மாளிகை தோற்றம். இது யாரை ஏமாற்ற?
பள்ளிக் கழிப்பறையில் படிந்த பிரத்யுமனின் ரத்தக் கறைகளை உடனடியாக கழுவி, பள்ளியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று பாதுகாத்த ரயான் பள்ளி நிர்வாகிகள், கழுத்தறுபட்ட மாணவனைக் காப்பாற்றாமல் விட்டுள்ளனர். 
இது பள்ளிகளில் மனிதநேயம் மரித்து போயுள்ளதை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. இதே மனநிலைதான் இன்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளி நிர்வாகத்தில் நிலவுகிறது.
பிரபல பள்ளியில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று கௌரவமாக சொல்வதற்காகவே சில பெற்றோர் இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கின்றனர். பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்தான் கற்பிக்க வேண்டும். எது நல்லது, எது தீயது என்பதையும், பெற்றோரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும்.
அத்துமீறி அந்நியர்கள் பாசமாக தொட்டு பேசி பழகினாலோ, பிடிக்காததை செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள ஆசிரியர்கள், பெரியவர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவ்வப்போது குழந்தைகளுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தவிர பள்ளிகளில் வெறும் பணம் செலுத்தும் இயந்திரமாக மட்டும் பெற்றோர்கள் இருந்துவிடாமல் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேள்விகள் கேட்க வேண்டும். 
அதேபோல் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள், பெற்றோரின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்த வேண்டும். பள்ளிகளின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 
கற்பிப்பு பணியில் ஈடுபடாத பிற பணியாளர்களின் முழு விவரங்களை சரி பார்க்க தனிப் பிரிவை பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். வெளியாள்கள் பள்ளிக்குள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும். பேருந்து ஓட்டுநர், கேன்டீன் ஆகியவற்றில் பணியாற்றுபவர்களுக்கு குற்றப்பின்னணி இருந்தால் உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும். 
பள்ளிப் பேருந்துகளில் உதவியாளர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் அடங்கிய குழுக்கள் அமைத்து கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை மட்டும் இயற்றிவிட்டால் போதாது. பள்ளிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பும் இதைவிட மோசமாக உள்ளது. ஆகையால், அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
தலைநகர் தில்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்துக்கு பிறகுதான் பாலியல் வன்முறைக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டது; வழக்குகள் விரைவுபடுத்தப்பட்டன. 
அதேபோல் தில்லி அருகே உள்ள குருகிராமில் நடைபெற்றுள்ள மாணவன் பிரத்யுமனின் கொலைச் சம்பவம் பள்ளிகளில் பாதுகாப்பை கடுமையாக்குவதற்கு வழிகோலட்டும்.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால் பாதுகாப்பு நெறிமுறைகளை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்படலாம். 
இத்தனைக்கும் பிறகும் தனியார் பள்ளிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற மறுத்தால், தற்போது குருகிராம் பள்ளியின் நிர்வாகத்தை ஹரியாணா அரசே மூன்று மாதங்களுக்கு ஏற்று நடத்துவதைப்போல், தனியார் நிர்வாகத்தை கையகப்படுத்தவும் அரசு தயங்கக் கூடாது. அந்தப் பள்ளிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும். 
மாணவன் பிரத்யுமனின் கொலையை பாடமாக எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து அதை குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்துவது மிகவும் அவசரமும் அவசியமுமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com