உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையா?

காவிரி நடுவர்மன்றம் 2007-இல் அளி த்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து கருநாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் அளித்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற
உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையா?

காவிரி நடுவர்மன்றம் 2007-இல் அளி த்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து கருநாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் அளித்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்திய அரசின் தலைமை - வழக்குரைஞர் ரஞ்சித் குமார் வாதிடுகையில் குறிப்பிட்ட கீழ்க்காணும் குறிப்புகள் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.
'நடுவர்மன்றத் தீர்ப்பின் மீதான திருத்தத்தை நாடாளுமன்றமே மேற்கொள்ள முடியும். நடுவர்மன்றத்தின் தீர்ப்பை மாற்றும் அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கே உரியது. உச்சநீதிமன்றத்திற்கு நடுவர்மன்றத்தை மாற்றும் அதிகாரமோ அதன் தீர்ப்பைத் திருத்தும் அதிகாரமோ கிடையாது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து அதன் ஒப்புதலைப் பெற்றப் பிறகே முடிவெடுக்க முடியும். இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு. 
இப்பிரச்னையில் தலையிட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையாக நிறைய குழப்பங்கள் உள்ளன. மத்திய அரசுக்கு 12 சந்தேகங்கள் உள்ளன. அவற்றைப் பட்டியலாக நீதிமன்றத்தில் அளிக்கிறோம்.'
தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ள இக்கருத்துகள் இந்திய அரசின் நிலைப்பாட்டையே தெளிவாகக் காட்டுகின்றன. 
1956-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பன்மாநில ஆற்றுநீர்த் தாவாச் சட்டம், 1956-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நதிநீர் வாரியச் சட்டம் ஆகியவற்றில் கூறப்பட்டிருப்பதற்கு நேர் எதிர்மாறானதும், புறம்பானதுமான வாதங்களையே இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறார். 
பன்மாநில ஆற்றுநீர் தாவாச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு (சி) திட்டவட்டமாகவும் தெளிவாகவும் பின்வருமாறு கூறுகிறது:
'ஆற்று நீர்ப்பங்கீடு குறித்து செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டை ஏதாவது ஒரு மாநிலம் மீறுமானால் பாதிக்கப்பட்ட மாநிலம் நடுவர்மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிடம் கேட்கலாம்.'
அதே சட்டத்தின் நான்காவது பிரிவு (1) பின்வருமாறு கூறுகிறது: 'பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட முடியாது என்ற முடிவுக்கு மத்திய அரசு வருமானால் உடனடியாக நடுவர்மன்றம் ஒன்றை அமைத்து அரசிதழில் அதை அறிவிக்க வேண்டும்.'
ஆனால், 1968 முதல் 1990 வரை 22 ஆண்டு காலமாக தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையே மத்திய அரசின் முயற்சியால் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை. எனவே, 1968-ஆம் ஆண்டு இறுதியிலேயே நடுவர்மன்றம் அமைக்க வேண்டுமென தமிழகம் வற்புறுத்தியும்கூட மத்திய அரசு அமைக்க முன்வரவில்லை. இடைப்பட்ட 22 ஆண்டு காலத்தில் கருநாடகம் காவிரியின் கிளை ஆறுகளில் அணைகளை கட்டி முடித்து 70 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் வசதியைப் பெற்றுவிட்டது.
எனவே, வேறு வழியில்லாமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. 2.6.1990 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் விளைவாகவே மத்திய அரசு நடுவர்மன்றத்தை அமைக்க முன்வந்தது என்ற உண்மையையும் அரசு தலைமை வழக்குரைஞர் மறைத்திருக்கிறார். 
தனது ஆணையின்படி அமைக்கப்பட்ட நடுவர்மன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமென உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்குக் கிடையாது என கூறும் வாதம் நகைப்பிற்கிடமான வாதமாகும்.
மேற்கண்ட சட்டத்தின் 6-ஆவது பிரிவு பின்வருமாறு கூறுகிறது:
'நடுவர்மன்றம் அளித்தத் தீர்ப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டவுடன் நடுவர்மன்றத்தின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட மாநிலங்களைக் கட்டுப்படுத்தும். இத்தீர்ப்பிற்கு உடனடியாகச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.'
மேலே கண்ட சட்டத்திற்கு 2002-இல் இந்திய அரசு கொண்டுவந்த திருத்தம் 6.9.2002-இல் நடைமுறைக்கு வந்தது. இத்திருத்தச்சட்டம் 6(2) பிரிவின்படி நடுவர்மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்தவுடன் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் போன்று இதுவும் மதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நடுவர்மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையோ அல்லது இறுதித் தீர்ப்பையோ செயற்படுத்த கருநாடக அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஆனால், இந்திய அரசு தலையிட்டு கருநாடகத்தைக் கண்டிக்கவோ, தமிழகத்திற்கு நீதி வழங்கவோ முன்வரவில்லை. 2007-ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர்மன்றம் ஆணையிட்டது. அதை அரசிதழில் வெளியிடக்கூட அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு முன்வரவில்லை. எனவே, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் முறையிட்டது. 2012-ஆம் ஆண்டில் தமிழகம் தொடுத்த வழக்கின் விளைவாக உச்சநீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு ஆணைப் பிறப்பித்த பிறகே, 2013-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரசிதழில் அந்த ஆணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைக்கப்படவில்லை. 
மீண்டும் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதின் விளைவாக 2016 செப்டம்பரில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒருங்கிணைப்புக் குழுவையும் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகும்கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. தமிழகத்திற்கு காங்கிரஸ் இழைத்த அநீதியையே பா.ஜ.க.வும் தொடர்கிறது.
மறுபடியும் தமிழகம் உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தற்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராதது ஏன்?' என்று மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில்தான் மத்திய அரசின் வழக்குரைஞர் முதலில் குறிப்பிட்ட வாதத்தை முன்வைத்து இப்பிரச்னையில் தலையிட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியிருக்கிறார். கடந்த ஆறு ஆண்டு காலமாக இப்பிரச்னையை ஆறப்போட்டு அமைதி காத்த மத்திய அரசு, இப்போது இத்தகைய வாதத்தை முன்வைப்பது தமிழகத்திற்கு மேலும் மேலும் அநீதி இழைக்கும் போக்காகும்.
'நடுவர்மன்றத் தீர்ப்பினை திருத்தவோ மாற்றவோ நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும்' என்ற வாதம் நதிநீர் வாரியச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைகளைத் திரித்துக்கூறும் வாதமாகும்.
1956-ஆம் ஆண்டு நதிநீர் வாரியச் சட்டத்தின் 17-ஆவது பிரிவில் கீழ்காணுமாறு சொல்லப்பட்டிருக்கிறது. 'நதிநீர் வாரியத்தின் செயற்பாடுகளுக்கும் செலவுகளுக்கும் தேவையான நிதியை ஒதுக்கும் சட்ட முன்வடிவை ஒவ்வொரு நிதியாண்டிலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, இச்சட்டத்தின் எந்த இடத்திலும் நதிநீர் வாரியத்தை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு எனக் கூறப்படவில்லை.'
1956-ஆம் ஆண்டு நதிநீர் வாரியச் சட்டப்படி பன்மாநில ஆறுகளுக்கும் ஆற்றுப் படுகைகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரியங்களை அமைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இச்சட்டம் வழங்கியிருக்கிறது. இவ்வாறு வாரியங்கள் அமைக்கப்பட்டவுடன் அரசிதழில் வெளியிட வேண்டும். உடனடியாக அது நடைமுறைக்கு வந்துவிடும். இதுதான் அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 
மத்திய அரசின் நிருவாக அதிகாரத்தின் கீழ் வாரியம் அமைக்கப்பட வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்தின் மூலம் வாரியம் அமைக்கப்பட வேண்டும் என இதில் கூறவில்லை. வாரியம் அமைக்கப்பட்ட பிறகு அதற்கான நிதியை ஒதுக்கும் அதிகாரம் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உண்மை மறைக்கப்பட்டுத் திரித்துக் கூறப்படுகிறது. 
2007-ஆம் ஆண்டிலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என நடுவர்மன்றம் ஆணையிட்டு, அதன் பிறகு உச்சநீதிமன்றம் 2012-ஆம் ஆண்டில் அதே ஆணையை உறுதி செய்தபிறகுகூட முன்பிருந்த காங்கிரஸ் அரசோ இப்போது இருக்கும் பா.ஜ.க. அரசோ அதை நிறைவேற்ற முன்வரவில்லை. 
மாறாக நடுவர்மன்றத்தின் தீர்ப்பு குறித்து புதிதாக 12 சந்தேகங்கள் உள்ளதாக இத்தனை ஆண்டுகள் கழித்து இந்திய அரசு சார்பில் கூறப்படும் வாதம் சட்டத்திற்குப் புறம்பானது.
கருநாடகத்தில் தங்கள் ஆட்சி தொடர வேண்டும் என்று அன்றைய மத்திய காங்கிரசு அரசு காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்குத் தொடர்ந்து வஞ்சனை செய்தது. தற்போது மத்திய பா.ஜ.க. அரசும் அதே வழியில் செயல்படுகிறது.
இந்திய அரசின் இலட்சினையில் 'சத்யமேவ ஜெயதே' எனப் பொறித்துக்கொண்டால் மட்டும் போதாது, தனது செயற்பாட்டில் அதை நிலைநிறுத்திக் காட்ட வேண்டும்.
கடந்த 56 ஆண்டு காலமாகத் தொடர் ந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை அளிக்காமல் தமிழக உழவர்களை வஞ்சிக்கும் கருநாடகத்தைக் கண்டிக்கவும் தமிழகத்திற்கு நீதி வழங்கவும் வேண்டிய மத்திய அரசு, தனது கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது. 'அறநெறி வழுவாத அரசே நல்லரசு' என திருவள்ளுவர் கூறியுள்ளார்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com