உடல் மொழி உணர்வோம்

உலகில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் தனித்தன்மை படைத்ததே. குறிப்பாக மனிதன் தோற்றத்தாலும், அறிவு, ஆற்றல் மற்றும் உடல் இயக்கத்தாலும் வேறுபட்டுத்தான் காணப்படுகிறான். 

உலகில் உள்ள ஒவ்வோர் உயிரினமும் தனித்தன்மை படைத்ததே. குறிப்பாக மனிதன் தோற்றத்தாலும், அறிவு, ஆற்றல் மற்றும் உடல் இயக்கத்தாலும் வேறுபட்டுத்தான் காணப்படுகிறான். 
மனிதனைத் தவிர மற்றைய உயிரினங்கள் அனைத்துமே உடல் உணர்த்தும் உடல் மொழிக்கிணங்கவே செயல்படுகின்றன. ஆனால் நாகரிக மனிதன், உடல் அவ்வப்போது வெளிப்படுத்தும் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் தன் மனம்போன போக்கிலேயே சென்று பின்னர் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறான். 
மற்ற உயிரினங்களும் தேவைக்கு மட் டுமே உணவை உண்கின்றன. உடல் நலக்குறைவு ஏற்படின் உணவைத் தவிர்க்கின்றன. உடல் உணர்த்தும் உணர்வுகளைச் சரியாகச் செயல்படுத்தி விடுகின்றன. 
மனிதன் சுயநலத்திற்காக வளர்த்திடும் விலங்குகள், பறவைகளுக்குத்தான் நோய்கள் வருவதும் அதற்கு அவன் வைத்தியம் செய்வதும் உண்டு. இயற்கையில் காடுகளில், கடலில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் இயற்கையின் நியதிப்படி தம் உடலில் தோன்றும் உன்னத உணர்வுகளுக்கேற்ப இயங்கி தங்கள் வாழ்நாள் முழுவதும் சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவுமே கழித்து விடுகின்றன. 
அரிதாக உடல்நலக் குறைவு ஏற்படினும் இயற்கையில் தம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியினால் விரைவில் குணம் பெற்று விடுகின்றன. மனிதன் ஏற்படுத்
திடும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மட்டுமே அவை பெரிதும் பாதிப்புக்குள்ளா
கின்றன.
மனிதன் தன் மனதில் தோன்றும் பேராசையின் காரணமாக உணவு, உடை, பழக்கவழக்கங்களில் இயற்கைக்கு மாறாகத் தன் உடலை ஆட்டுவிக்கின்றான். 
உடலுக்கு ஒவ்வாத எத்தனையோ வகையான உணவுகளை அளவுக்கதிகமாக உண்பதும், பசிக்காத போதும் உண்பதுமே பல நோய்களுக்குக் காரணமாகி விடுகின்றன. 
ஐம்புலன்கள் வாயிலாக உணரக்கூடிய எத்தனையோ வகையான உணர்வுகளில் பெரும்பாலானவற்றை நாம் பொருட்படுத்துவதே இல்லை. பரபரப்பான வாழ்க்கை முறையில் புறத்தோற்றத்தை மட்டுமே அழகு படுத்திக்கொண்டு கடமையாற்றச்சென்று விடுகிறோம். 
குறிப்பாக மாணவர்களும், அலுவலகப் பணி செய்வோரும் அவசர கதியில் சிறுநீர் கழிப்பதைக்கூட உடல் உணர்த்திடும்போது செய்யாமல் பின்னர் அவதிப்படுகின்றனர். பள்ளியில் குழந்தைகள் தாகத்திற்குப் போதுமான அளவு தண்ணீரைக்கூட குடிக்காமல் பல உடல் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.
ஆரம்பகாலத்தில் புகைபிடிப்பதையோ, மது அருந்துவதையோ உடல் ஏற்றுக்கொள்வதில்லை. வலிந்து அப்பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கே அடிமையாகிவிடுகிறோம். 
அதன் கேட்டினை அவ்வப்போது உடல் உணர்த்திடத்தான் செய்யும். ஆனால் அதனைப் பொருட்படுத்துவதே இல்லை என்கிறபோது நோய்க்கு ஆட்படுகிறான். 
இரவு நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது வரும் வாசனையை மூக்கு உணர்ந்து உணர்த்தத் தவறுவதில்லை, காது கேட்பதை நிறுத்துவதில்லை, மூக்கு பிறந்தது முதல் இறக்கும் வரை சுவாசிக்க மறப்பதில்லை. 
மனிதன் கண்டுபிடித்த எண்ணற்ற நவீன சாதனங்கள் அனைத்தும் இந்த உடல் இயக்கத்திற்கு ஈடு இணை ஆகுமா? அத்தகைய உடலிலிருந்து அவ்வப்போது எழும் உடல் மொழியினை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நடந்து கொள்வதே உடலுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.
ஓர் உணவுப்பொருளை வாயின் அருகில் கொண்டு செல்லும் போதே அது ஒவ்வாத அல்லது கெட்டுப்போன உணவாயின் மூக்கு நுகர்வினால் அதனைக் காட்டிக்கொடுக்கும். 
அதனையும் மீறி வாயில் போட்டால் நாக்கு அதனை ஏற்க மறுக்கும், அதையும் மீறி வயிற்றுக்குள் அனுப்பினால் வயிற்றில் பொருமல், வலி உண்டாகி முடியாதபட்சத்தில் அதனை வாந்தியாக வெளியேற்றித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் உடலுக்கு உண்டு.
கடுமையான வெயில் காலத்திலும், கடுங்குளிரிலும், உடல் தனது வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது என்பதே உடல் செய்யும் அற்புதங்களில் ஒன்றாகும். பல லட்சம் செலவில் விஞ்ஞானிகள் உருவாக்கிய ரோபோக்கள் இயற்கையான மனித உடல் இயக்கத்தின் ஒரு சதவீத இயக்கங்களைக்கூடச் செய்ய முடிவதில்லை என்பதே உண்மை. 
பருவ நிலைக்கேற்பத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதும், உண்ட உணவைப் பல மாறுதல்களுக்கு உட்படுத்தி சக்தியாக மாற்றுவதும், உடலில் தோன்றும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றுவதும், நோய் ஏற்படின் அதனை நீக்கத் தனது நோய் எதிர்ப்பு சக்தியை பிரயோகித்து குணப்படுத்துவதும் உடலுக்கே உரித்தான உன்னத இயல்புகளாகும். 
விலங்குகளும், பறவைகளும் மனிதன் உணர முடியாத எண்ணற்ற உணர்வுகளை அறியும் ஆற்றல் வாய்ந்தவை. பேரழிவை ஏற்படுத்திய சுனாமியை முன் கூட்டியே உணர்ந்து அவை தம் இருப்பிடத்தை மாற்றிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டன. 
பூகம்பம் ஏற்படுவதையும், எரிமலை வெடிக்க இருப்பதையும், மழை வருவதையும் முன்கூட்டிய உணர்ந்து செயல்படும் உயிரினங்கள் இருக்கின்றன. 
அபாரமான மோப்பசக்தியுடைய நாய், பல்வேறு வகையான வாசனைகளைத் தன் மோப்ப சக்தியால் உணர்ந்து வெளிப்படுத்துவதாலேயே இந்த நவீன உலகத்திலும் அதனைப் பயன்படுத்திக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும், மறைத்து வைக்கப்பட்டுள்ள குண்டுகளைக் கண்டறியவும் பயன்படுத்தி வருகின்றனர். 
மனிதனின் மோப்ப சக்தியும் அபாரமானதுதான் காட்டில் இயற்கையில் வாழ்ந்திடும் ஆதிவாசிகள் வாசனையை வைத்தும், சில அறிகுறிகளைப்பார்த்தும் விலங்குகளின் நடமாட்டத்தையும், இயற்கையின் செயல்பாடுகளையும் அறியும் ஆற்றல் படைத்தவர்களாய் உள்ளனர். 
நமது உடலும், மனமும் அனைத்து நவீன சாதனங்களையும் விட மிக உன்னதமானது என்பதை நாம் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com