நசுக்கப்பட்ட மனிதநேயம்

ஆன்மிகவாதி அருகம்புல்போல் ஒற்றை வேரில் தடம்பதித்து நிற்பார். மத வேடத்தில் நிற்போர் ஆலமரத்தின் வேர்கள்போல் பூமிக்குக் கீழே எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவி, அரசியல் வேர்கள்

ஆன்மிகவாதி அருகம்புல்போல் ஒற்றை வேரில் தடம்பதித்து நிற்பார். மத வேடத்தில் நிற்போர் ஆலமரத்தின் வேர்கள்போல் பூமிக்குக் கீழே எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவி, அரசியல் வேர்கள் - சாதி, மத வேர்கள் - மலினப்பட்டுப் போன பால்மரத்து வேர்கள் என எல்லாவற்றையும் பிடித்து இழுத்துக் கொண்டு பின்னிப் பிணைந்து நிற்பர். 
விவேகானந்தர் போன்ற ஆன்மிகவாதிகள், யார் எத்தனை கேள்விகள் கேட்டாலும், நேருக்கு நேர் நின்று பதிலுரைப்பர். ஆனால், கபட வேடதாரிகள் மூத்த பத்திரிகையாளர்கள் கேட்டாலும், உடனே சுட்டுக் கொன்றுவிடுவர். 
தபசியாக ஆவது, செயற்கரும் செயல் ஆகும். எனவேதான் திருவள்ளுவர் "தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்றார். ஆனால், போலித்துறவியாவது, சாதாரணமானவர்களுக்கும் சாத்தியப்படும். வேத காலத்திலேயே இந்திரலோகத்து இந்திரன், ஏமாற்றுவதற்குத் தகுந்த வழி முனிவர் வேடம் எனத் தேர்ந்தெடுத்து, அகலிகையை அடைவதற்குக் கெளதம முனிவர் வேடம் பூண்டு வந்திருக்கிறான். இராவணனும் சீதாப்பிராட்டியைச் சிறையெடுப்பதற்குச் சாமியார் வேடம்தான் தரித்திருக்கிறான்.
புத்தர் தமக்குப் பிறகு எந்தப் பீடத்தையும் ஆசிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. தம்முடைய சீடர்களை, நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கக் கூடாது என எச்சரித்திருக்கிறார். திருவள்ளுவப் பெருந்தகை இரண்டு குறட்பாக்களில் (எண் 273, 274) நடிப்பு மத வேடதாரிகளை நமக்கு அடையாளம் காட்டுகிறார். 
மனத்தை அடக்கும் வலிமையில்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு, பயிரை மேய்ந்தாற்போன்றது என்பது ஒன்று. தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச் செயல்களைச் செய்தல், வேடன் புதரில் மறைந்து நின்று, பறவைகளை வலை வீசிப் பிடித்தலைப் போன்றது என்பது இரண்டு.
திரிகால ஞானி திருமூலர் இரண்டு பாடல்கள் மூலம் (எண்.1656, எண்.2046) நம்மை எச்சரிக்கின்றார். 
= முற்றிய ஞானம் இல்லாதார் தவத்தை மேற்கொண்டு, இந்த நாட்டில் இழிவான செய்கைகளைச் செய்து, பிச்சையேற்று உயிருடன் வாழ்ந்தாலும், அந்த நாடானது பெருமை குன்றும். 
= பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன்; அறிவற்ற செயலைச் செய்பவன்; காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்களை நீங்கப் பெறாதவன்; பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது, பொய்யை உணர்த்துபவன் ஆகிய தன்மைகளை உடையவன் குரு ஆகமாட்டான்.
கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், போலி வேடதாரிகளை இனங்காட்டுவதற்காக ஒரு வரலாற்றையே படைக்கிறார். மெய்ப்பொருள் நாயனார் ஒரு மன்னர்; அதே நேரத்தில் அவர் சிறந்த சிவயோகியும் ஆவார். 
அவரைப் போரில் வெல்ல முடியாத ஒரு மன்னன், கபட சந்நியாசி வேடம் தாங்கி வந்து, அவரைக் கொலை செய்கிறான். அதனைச் சேக்கிழார், "மெய்யெலாம் நீறு பூசி / வேணிகள் முடித்துக் கட்டிக் / கையினிற் படை கரந்த / புத்தகக் கவளி ஏந்தி / மைபொதி விளக்கே என்ன / மனத்தினுள் கறுப்பு வைத்துப் / பொய்த்தவ வேடம் கொண்டு / புகுந்தனன் முத்த நாதன்' எனப் பாடுவார்.
கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மத குருமார்கள் மன்னர்களையே தங்கள் கால்களை முத்தமிட்டுப் பதவியேற்கும்படியாகப் பணித்திருந்தனர். குறிப்பாக ஜெர்மனியில் மக்கள் செய்த பாவங்களைக் கழுவுவதற்குப் பாவ மன்னிப்புச் சீட்டுகளைத் தெருத்தெருவாக மத குருமார்கள் விற்றார்கள். ஜெர்மன் மொழியில் அதற்கு "டெட்ùஸல்' எனப் பெயர். 
அங்கிருந்த மடாலயத்திலேயே ஒரு போதகராக இருந்த மார்ட்டின் லூதர் அங்கு நடந்த கொடுமைகளைக் கண்டு சினந்து எழுந்தார். மார்ட்டின் லூதர் அங்கிருந்த விட்டன்பர்க் பல்லைக்கழகத்தில் இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். வேதப் புத்தகத்திற்கு மாறாக மத குருமார்கள் நிகழ்த்திய பஞ்சமாபாதகங்களை எல்லாம் பொதுமக்களுக்கு முன்பு தோலுரித்துக் காட்டினார். 
அதனால், போலி மத குருமார்கள் மன்னன் ஐந்தாவது சார்லஸூக்குத் துர்புத்திகளைப் புகட்டி, மார்ட்டின் லூதரைக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர். ஆனால், இளவரசன் ஜான் ஹஸ், மார்ட்டின் லூதரைக் கடத்திக் கொண்டுபோய் காப்பாற்றிவிட்டார்.
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் ருசியாவின் ஜார் மன்னர்கள் "தெய்வீக உரிமைக் கொள்கை' எனும் பாதுகாப்பு வளையத்தை வைத்துக்கொண்டு மக்களைச் சித்ரவதை செய்தனர். மத ஸ்தாபனம் ஜார்களைத் தாங்கும் தூணாகவும், அவர்களுடைய கைக்கருவிகளாகவும் இருந்தது. ருசிய தேசம் பரிசுத்த ருசியா என அழைக்கப்பட்டது. ஜார் மன்னன் சிறுவெண்பிதா என அழைக்கப்பட்டார். பரிசுத்த ருசியாவின் சின்னம் கசையடி அல்லது நீண்ட சாட்டை என அறிவிக்கப்பட்டது. யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்.
16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் மத பீடத்தில் இருந்த குருமார்கள் நடத்திய அராஜகங்களைச் சொல்லி முடியாது. "பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது' என்ற கோபர்னிக்கஸின் கண்டுபிடிப்பைக், கலீலீயோ என்ற விஞ்ஞானி எடுத்து மொழிந்ததற்காகக் கல்லால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். சிறையிலும் அடைக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டார். 
அவரைக் கொல்லுவதற்காகத் திருச்சபைக்குக் கூட்டம் துரத்திய பொழுது, தன்வீட்டு ஓட்டைப் பிரித்துக்கொண்டு ஓடித் தப்பித்தார். "பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது' என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானி கோபர்னிக்கஸ் உயிரைப் பற்றிய அச்சத்தால் வெளியே சொல்ல மறுத்து
விட்டார்.
ஸ்பானிஷ் மருத்துவர் செல்விட்டஸ் இரத்த ஓட்டம் பற்றிய அரிய கருத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டார். அதனால், "கால்வின்' எனும் மதப்பிரிவினர் செல்விட்டசைத் தீயிட்டு எரித்துக் கொன்றனர்.
இத்தாலியைச் சேர்ந்த புரூனோ எனும் அறிவியல்வாதி, கோபர்நிக்கஸ் கூற அஞ்சிய கொள்கையை - கலீலீயோ உயிருக்குப் பயந்து அஞ்சியோடிய கொள்கையை - ரோம் நகரத்தின் தெருவீதிகளில் நின்று முழங்கினார். 
"ஒளிகாட்டுபவன்' எனும் நாடகநூலின் மூலம் மதவேடதாரிகளுடைய பஞ்சமா பாதகங்களை எல்லாம் அஞ்சாமல் வெளியிட்டவன் புரூனோ! அதற்காக அவர் ஏழு ஆண்டுகள் ரோம் நகரத்துச் சிறையில் அடைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை என்ற பெயரில் கொடூரமான தண்டனைகளைப் பெற்றார்.
இறுதியாக அவருக்கு 16.02.1600 அன்று மரண தண்டனை விதித்தனர். ரோம் நகரத்தின் நாற்சந்தியான பியாஸா டெய்பியொரிலில் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, மதக் கருத்துகளை மறுத்த பாவி எனக் குற்றம் சாட்டி, கை கால்கள் கட்டப்பட்டதோடு, நாக்கையும் மடித்துக் கட்டினர், "பூமி சுற்றுகிறது என்பதைச் சொல்லிவிடக் கூடாது' என்பதற்காக. உடன் புரூனோவை தீயிட்டு எரித்தனர்.
கி.பி. 1914-ஆம் ஆண்டு ருசியாவை "நிக்கோலஸ்' என்ற ஜார் மன்னன் ஆண்டான். அவனொரு முட்டாள்; அவன் மனைவி ஜரினா ஒரு அடிமுட்டாள். அப்பொழுது ஆட்சியில் ராஜரிஷியாக இருந்தவன் "கிரெகரி ரஷ்புடின்' எனும் அராஜகவாதி! மகாராணியையே வசப்படுத்திய கயவன். எதிரிகளைப் பார்வையாலேயே பொசுக்கிப் போடும் ஆற்றல் (மெஸ்மெரிசம்) பெற்றவன். அவனைப் பார்த்து கையூட்டுக் கொடுத்தால், அரசாங்கத்தில் யாரும் எந்தப் பதவியையும் பெறலாம். 
அவனது சுட்டுவிரல் அசைந்தால் மகாராணியின் கண்ணசையும்; மகாராணியின் கண்ணசைந்தால் ஜார் மன்னன் கையெழுத்துப் போடுவான். ரஷ்புடின் ஒரு காலத்தில் குதிரையைத் திருடிவிட்டுக் கைதானவன். அந்த ராஜரிஷியின் அட்டகாசங்களைத் தாங்க முடியாத எதிரிகள் பலர் ஒன்று சேர்ந்து, ரஷ்புடினை இரவு விருந்துக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றுவிடுவர்.
இப்படி மதவேடதாரிகளின் நடமாட்டம் உலகம் முழுவதும் இருப்பதால், அவர்களின் வன்கொடுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, பக்தர்கள் இடைத்தரகர்களை அணுகாமல், நேரடியாக இறைவனிடம் முறையிடுவதுதான். 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கண்ணிழந்த நிலையில் திருவெண்பாக்கத்துக்கு வந்து, உள்ளிருக்கும் இறைவனைப் பார்த்து, "நீ இருக்கின்றாயா' எனக்கேட்டார். அதற்கு இறைவன் "இருக்கின்றேன், போ' என்கிறார் (கோயிலுள் உளாயே என்ன, உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே : 902-ஆவது பாசுரம்).
வைணவத்தில் திருக்கச்சி நம்பிகள் தினமும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குக் காலையில் வந்து, பெருமாளிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இரவுதான் பூந்தமல்லிக்குத் திரும்புவார். 
திருக்கச்சி நம்பிகளிடம் இருந்த சீடர் ஒருவர், "சுவாமி! நீங்கள் நாளும் வரதராஜப் பெருமாளிடம் பேசிவிட்டு வருகிறீர்கள். அப்படிப் பேசும்போது எனக்கு வைகுந்தத்தில் இடமுண்டா? எனக்கேட்டுச் சொல்லுங்கள்' என வேண்டுகோள் வைக்கிறார். திருக்கச்சி நம்பிகளும் மறுநாள் பெருமாளிடம் கேட்டு வந்து சாதகமான பதிலைச் சொல்லுகிறார்.
இயேசுபெருமான் வாழ்க்கையின் கடைசியில் சிலுவையில் அறையப்படும்போது, "ஆண்டவரே! என்னைக் கைவிட்டு விட்டீரே! ஆண்டவரே, என்னைக் கைவிட்டு விட்டீரே' என்று இறைவனிடம்தான் வேண்டுகிறார். 
இராமகிருஷ்ண பரமஹம்சர் தட்சினேஸ்வரத்திலுள்ள மகாகாளி தேவியிடம் அனுதினமும் பேசக்கூடியவர். மக்கள் திருந்தாவிட்டால், நல்ல ஆட்சியாளர்களும் கிடைக்கமாட்டார்கள்; நல்ல நீதிமான்களும் கிடைக்கமாட்டார்கள்; நல்ல அருளாளர்களும் கிடைக்கமாட்டார்கள்! 

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com