புல்லட் ரயிலா? மெட்ரோ ரயிலா?

அண்மையில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நமது பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் ஆமதாபாத் -மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர்.

அண்மையில் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நமது பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் ஆமதாபாத் -மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். இந்தியர்களாகிய நாமும் இந்த நிகழ்ச்சியை உணர்ச்சி மேலிட்டு வரவேற்றோம். 
ஆனால், இன்றைய ரயில்வேத் துறையின் செயல்பாடுகளைப் பார்த்தால் புல்லட் ரயில் திட்டம் நமக்குத் தேவைதானா என்று நினைக்கத் தோன்றுகிறது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று விளங்கும் சீனாவும், ஜப்பானும் தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்க முற்பட்டு வருகின்றன என்பதுதான் உண்மை.
சமீபகாலமாக நம் நாட்டில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாவதும் ரயில் விபத்தில் மனித உயிர்கள் பலியாவதும் அதிகரித்து வருகின்றன. வழக்கமான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையிலேயே விபத்துகள் தொடர்கதையாக இருக்கும்போது புல்லட் ரயில் தேவைதானா என்ற எண்ணம் நம்மிடையே எழுகின்றனது. ரயில் விபத்துகள் இருக்கட்டும் இன்றும் பெரும்பாலான ரயில்நிலையங்களில் நம்மால் அடிப்படை வசதிகளைக்கூட செய்துதர முடியவில்லை.
ரயில்கள் வருகை, புறப்பாடுகளில் தாமதம், திடீரென சில ரயில்சேவைகளின் ரத்து என பல செயல்களும் பயணிகளுக்கு எரிச்சலூட்டும் வகையிலேயே உள்ளன. 
இந்தியாவைப் பொருத்தவரை ரயில் பெட்டிகளில் தூய்மையை பராமரிப்பது, ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.
பெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தூய்மையைப் பராமரிக்கலாம். ஆனால் மற்ற ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள்கூட செய்துதரப்படவில்லை என்பதுதான் உண்மை. 
பிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்ட ரயில் பாதைகளில்தான் நாம் இன்னும் ரயில்களை இயக்கிக்கொண்டிருக்கிறோம். புதிய ரயில்பாதை அமைத்தல், தண்டவாளங்களை முறையாகப் பராமரித்தல் என்பதில் நாம் போதிய கவனம் செலுத்தவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது வழக்கம். அப்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து முன்னுரிமை கொடுக்கும்போது மக்களுக்கு அவற்றால் பயன்கிடைக்குமா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும். 
மக்களின் வரிப்பணம் வீணாகக்கூடாது, அரசு செலவிடும் ஒவ்வொரு காசுக்கும் கணக்குச் சொல்ல வேண்டும் என்ற நிலை இருக்க வேண்டும். மக்கள் பெருமையாக பேசவேண்டும் என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருளாதார வளமும் நிபுணர்களும் இருந்தும் புல்லட் ரயில் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக புல்லட் ரயில்களை இயக்கி வரும் சீனா, தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதன் காரணமாக புல்லட் ரயில்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு வழக்கமான அதிவேக ரயில்களை மட்டும் இயக்கலாமா என்று யோசித்து வருகிறது.
இந்தியா தீவிரமாக முனைப்புக் காட்டி வரும் ஆமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான தொலைவு 500 கி.மீ. 12 ரயில்நிலையங்களில் இது நின்று செல்லும் என்றும் மூன்று மணி நேரத்தில் இந்த புல்லட் ரயில் ஆமதாபாதிலிருந்து மும்பை சென்றுவிடும் என்றும் சொல்லப்படுகிறது. 
ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டப் பணிகள் முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், இவை பூர்த்தியாகும்போது செலவு தொகை இன்னமும் கூடத்தான் செய்யுமே தவிர குறையாது.
இந்த புல்லட் ரயிலில் 800 பேர் பயணம் செய்யலாம் என்றும், 500 கி.மீ. தொலைவுக்கான ரயில் கட்டணம் விமானக் கட்டணத்தைவிட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
சொல்லப்போனால் இந்த ரயில் சாதாரண மக்களுக்கானது அல்ல. பணக்காரர்கள் மட்டுமே இதில் பயணிக்க முடியும். நம்நாட்டில் தினமும் தினமும் 2.30 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். 
ஆமதாபாத்-மும்பை இடையிலான விமான பயணநேரம் ரயில் பயண நேரத்தைவிட குறைவுதான். அப்படியிருக்கையில் அதிக கட்டணம் கொடுத்து இதில் பயணம் செய்ய எத்தனைப் பேர் முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியே.
நமது நாட்டு மக்களுக்கு இன்றையத் தேவை குறைந்த செலவில் நிறைவான சேவை. நமது நாட்டில் பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 
உதாரணமாக தில்லி மெட்ரோ ரயிலில் தினமும் 27.6 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சுற்றுலாப் பயணிகள், அலுவலகம் செல்வோர், பொருள்கள் வாங்க பல்வேறு இடங்களுக்குச் செல்வோர் இதில் அடங்குவர். 
ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு 100 கோடி பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புல்லட் ரயிலைவிட மெட்ரோ ரயில் திட்டத்தில் கவனம் செலுத்துவதான் இப்போதையத் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.
மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக புதுமையான திட்டங்களை அறிவிப்பதைவிட மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களை அறிவிப்பதுதான் புத்திசாலித்தனம். 
ரயில் போக்குவரத்தை மாற்றியமைப்பது, விபத்துகளை குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆகியவற்றில்தான் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். 
பெரும்பாலான ரயில் விபத்துகள் மனிதத் தவறுகளாலேயே நடைபெறுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் ஊழியர்கள் பற்றாக்குறைதான். இதை நிவர்த்தி செய்ய வேண்டும். 
ரயில்கள் குறித்த நேரத்தில் வந்து செல்வது, தண்டவாளங்களை பராமரிப்பது, பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்தும் தருவது ஆகிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு விபத்து இல்லா பயணத்தை உறுதிசெய்தால்தான் மக்கள் புல்லட் ரயிலை வரவேற்பார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com