வகுப்பறையும், சமையலறையும்!

வகுப்பறையும், சமையல் அறையும் வேறு வேறு களங்கள் என்றாலும் இரண்டிற்கும் ஒற்றுமைகளும் உண்டு, நிறைய வேறுபாடுகளும் உண்டு.

வகுப்பறையும், சமையல் அறையும் வேறு வேறு களங்கள் என்றாலும் இரண்டிற்கும் ஒற்றுமைகளும் உண்டு, நிறைய வேறுபாடுகளும் உண்டு. வகுப்பறையில் மாணவர்களை உருவாக்குவதற்கும், சமையல் அறையில் உணவு தயாரிப்பதற்கும் திட்டமிடுதல் அவசியம். சமையல் அறையில் உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்படுவதுபோல் வகுப்பறையில் மாணவர்கள் வடிவமைக்கப்படுகிறார்கள்.
சமையல் அறையில் என்ன சமைப்பதாக இருந்தாலும் தேவையான பொருட்களைப் பற்றியும், செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க எந்தெந்த பொருட்களை, எந்த அளவில் சேர்க்க வேண்டும் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஏதோ ஒன்றைச் சமைத்தோம் என்றில்லாமல், ஆரோக்கியத்திற்கு அவசியமான உணவு வகைகளை பார்த்துப் பார்த்துச் செய்யும்பொழுது உடல் நலன் மேம்படும். நாள் முழுவதும் சமையல் அறையிலேயே கிடக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் கச்சிதமாக வேலைகளை முடித்துவிட வேண்டும்.
விருப்பத்துடனும், ரசனையுடனும் செய்யும் சமையலில் சாப்பாட்டின் ருசியே தனிதான்! அதுபோலவே ஈடுபாட்டுடனும், ரசனையுடனும் கற்பித்தல் இருந்தால் நல்ல இசைக்கு கட்டுப்படுவதைப் போல மாணவர்கள் கட்டுண்டு கிடப்பதுடன் மாணவர்களின் கற்கும் திறனும் கூடும். முப்பது நிமிடங்களில் கற்பித்தலை முடித்து, பத்து நிமிடங்களில் உரையாடல், விவாதம் போன்றவற்றை மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் சுவாரசியமாக முடித்து விட வேண்டும்.
முதன் முதலாக சமையல் செய்வதற்கும் நன்கு கற்றுத் தேர்ந்து சமையல் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சமைப்பவரின் அனுபவத்தை உணவின் ருசியில் உணர்ந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, சமையலை ரசனையுடனும் ஈடுபாட்டுடனும் செய்பவர்கள் நாளுக்கு நாள் புதுமையைப் புகுத்தி தேர்ந்த சமையல்காரர்களாக உருவெடுக்கிறார்கள். அது போலவே நல்ல ஆசிரியர்களும் கற்பித்தல் துறையில் அனுபவம் ஏற ஏற, காலத்திற்குத் தகுந்தவாறும், மாணவர்களைச் சுற்றியுள்ள, அவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்றவாறும், நாளுக்கு நாள் தங்கள் கற்பித்தல் திறனை மெருகேற்றிக் கொள்கிறார்கள்.
சமைக்கும் முன் திட்டமிடுதல் அவசியம் என்பதுபோல, கற்பித்தலுக்கு முன் பாட சம்பந்தமான எல்லா தகவல்களையும், ஆசிரியர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். கற்பித்தலினூடே பாடம் சாரா விஷயங்களான நல்ல பண்புகள், மற்றும் ஒழுக்க நெறிகளையும் நடத்தும் பாடத்துடன் தொடர்புபடுத்தி, மனதில் ஆழப் பதியுமாறு அவ்வப்பொழுது அல்லது பாடம் முடிந்த பிறகு சொல்ல வேண்டும். இதனால் குழந்தைகளின் உள்ளத்தின் ஆரோக்கியம் பலம் அடையும். ஒரு வகுப்பறையை நாற்பது நிமிடங்களும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறது. அப்படிப்பட்ட ஆசிரியரின் மாணவர்கள் அறிவுசார் விஷயங்களில் மட்டுமல்லாது, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலும் சிறந்து விளங்குவார்கள். சமையலில் அக்கறையும், கவனமும் எடுத்துக்கொண்டு செய்யும்போது உணவின் சுவை கூடுகிறது. ஆசிரியர்கள் தங்கள் பணியின் மூலம் எதிர்கால சமுதாயம் கட்டி அமைக்கப்படுகிறது என்பதை உணர்ந்து தங்கள் கற்பித்தல் பணியினை அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செய்ய வேண்டும். சமைத்து முடித்த பின் உணவின் சுவை சாப்பிட முடியாத அளவிற்கு இருக்குமேயானால் யோசிக்காமல் குப்பையில் போட்டுவிடலாம். அதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் வெளியுலகில் குப்பை போல சேர்ந்துள்ள கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபடக் கூடிய படித்த மேதாவிகளை(!) உருவாக்கியதில் பெரும் பங்கு ஆசிரியர்களையே சேரும். படிக்காதவர் திருடினால் சிறைச்சாலை வாசம். சமுதாயத்தில் அவர்களுக்கு மதிப்போ, மரியாதையோ கிடைக்காது. ஆனால் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சமூகத்தினால் புறக்கணிக்கப்படுவதில்லை. படித்து அரசுப் பதவியில் இருப்போர், தங்கள் உழைப்பிற்கு ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு மக்களிடம் கை நீட்டி இலஞ்சம் பெற்றுக் கொள்வது திருடுவதைவிட பெரிய குற்றம் என்பதை ஆணித்தரமாக சிறு வயதிலேயே ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்திருந்தால், படித்துப் பதவியில் இருக்கும் பல பேர் கூசாமல் கை நீட்டி இலஞ்சம் வாங்கவும் மாட்டார்கள், தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் மாட்டார்கள். 
'நான் மேற்கொண்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன், ஆனால் நோயாளிதான் உயிருடன் இல்லை' என்று ஒரு மருத்துவர் சொல்வது எப்படி ஏற்புடையதன்றோ, அதுபோலவே ஆசிரியர், 'என் மாணவனுக்கு புத்தகத்தில் உள்ளவை அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிட்டேன்' என்று சொல்வதும். அந்த மாணவனால் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பிரயோசனம் இல்லை. அத்துடன் அவனால் கேடுகள்தான் விளைகிறது எனும்போது, ஆசிரியரின் கற்பித்தல் பணிக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றாகிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவருக்கு பாடப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டவற்றுடன், வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளையும் போதிக்கத் தவறிய அவரின் பணி முழுமையாகத் தோல்வியடைந்தது என்றும் கூற வேண்டும். 
மாணவர்களின் நடத்தைப் பிறழ்வுகளுக்கு குடும்பச் சூழல், பொருளாதாரச் சிக்கல்கள், சமுதாயம் சார்ந்த காரணிகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பள்ளியில் ஆசிரியர்களால் மாணவர்கள் சீர்படுத்தப்படாததும் முக்கியக் காரணம் எனலாம். ஆசிரியர்களால் சரியாக 'சமைக்கப்படாத' மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாது, அவர்களின் சந்ததியினரும் பாதிக்கப்படுகின்றனர். சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் அப்படிப்பட்டவர்களின் கோபம் அந்த சமுதாயத்திற்கு எதிராகத் திரும்புகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது மாணவர்களை நன்மக்களாக உருவாக்குவதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com