ஏடது கைவிடேல்!

இந்தியாவில் முதன் முதலில் கையெழுத்துக்களை காகிதத்தில் அச்சு வடிவில் அரங்கேற்றியவர் சீகன்பால்கு என்ற அந்நிய நாட்டு கிறித்தவ மதபோதகர். ஆனால் பாரதத்தில் பல ஆயிரம் ஆண்டு காலமாக

இந்தியாவில் முதன் முதலில் கையெழுத்துக்களை காகிதத்தில் அச்சு வடிவில் அரங்கேற்றியவர் சீகன்பால்கு என்ற அந்நிய நாட்டு கிறித்தவ மதபோதகர். ஆனால் பாரதத்தில் பல ஆயிரம் ஆண்டு காலமாக வேதங்களை, உபநிடதங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை எல்லாம் 'வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்' என்ற வழி மனனம் செய்து பரம்பரை பரம்பரையாகக் காத்து நின்றனர். உலகின் எந்த ஒரு பகுதியிலும் இப்படி கணக்கற்ற இலக்கியங்களைக் காத்து நின்றார்களா என்பது ஐயமே!
வட மொழி வேத, உபநிடதங்களை 'எழுதாக்கிளவி' என்பர். காரணம், அவற்றை எழுதிப் பழகாமல் அவரவர் மனத்தின் கண்ணே வைத்துப் பிறர்க்கு மனனம் செய்யச் சொல்லினர் என்பதே இதன் பொருள். 
செவ்வியல் மொழியான தமிழில் முதலில் வாய்மொழி இலக்கியங்களாகவும், பின்னர் பனையோலைகளில் குடியேற்றம் பெற்றதும் கடந்த கால வரலாறு. இற்றை நாளில் நாம் எல்லாவற்றையும் போகிற போக்கில் அலைபேசியில் தொடுதிரையில், விரல் அசைவில் பார்த்து மகிழ்கிறோமா? படித்து மகிழ்கிறோமா? இறைவன்தான் அறிவார்!
ஆனால் நூலின் 'மூலம்' கீர்த்தியும் ஆழமும் மிக்கது என்பதை எவரும் மறவார்! நூலின் தன்மை குறித்து வாரியார் சொல்லுவார்: 'மனித குலத்தின் மானத்தைக் காக்க வல்லது நூல் (ஆடை), நிலத்தின் கோணல்களை சரி செய்ய வல்லது நூல் (கயிறு), மனித மனத்தின் விகாரங்களை நீக்கி செம்மைப்படுத்த வல்லது நூல் (புத்தகம்).'
என்னதான் விஞ்ஞானத்தின் வழி இணையதளத்தில் படித்தாலும் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியும், படித்து நிறுத்திய இடத்தில் அடையாளம் வைத்துப் பின்னர் மீண்டும் எடுத்துப் படிக்கத் தொடங்குவதும், இனிய அனுபவமே! அதற்கு இணையும் இல்லை. ஈடும் இல்லை.
ஒரு முறை ஒரு நூலைப் படித்தால் அதனை பக்கம், பக்கமாக மேற்கோள் காட்ட வல்ல ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். சிலருக்குப் படிப்பது என்பது தேனைச் சுவைப்பது போல! அண்ணாதுரை தனக்கு நடக்கவிருக்கும் அறுவைச் சிகிச்சையை 'ஒருநாள் தள்ளி வையுங்கள், நான் படித்துக் கொண்டிருக்கும் இந்த நூலை முழுவதுமாகப் படித்துவிடுகிறேன்' என்றாராம்!
வெஞ்சிறையில் வெந்து மடிந்த நிலையிலும் சிலர் புகழ் பெற்ற நூல்களை எழுதி உள்ளனர் என்பதை வரலாறு பேசும்.
பகவத் கீதை உரையான 'கீதா ரகசியம்' என்ற நூல் திலகர் சிறையில் இருந்தபோது எழுதியதுதான். 'டிஸ்கவரி ஆப் இந்தியா' நூலை நேரு எழுதியபோது சிறையில்தான் இருந்தார். மாவீரன் பகத் சிங் தனது இரண்டாண்டு சிறை காலத்தில் 53 நூல்களைப் படித்து முடித்தார். 403 பக்கங்களில் குறிப்பும் எழுதியிருந்தார். ஜேம்ஸ் ஆலனின் நூலைத் தமிழில் வ.உ.சி. சிறையில் இருந்தபோதுதான் மொழி பெயர்த்தார். அலெக்சாந்தர் தனக்குப் பரிசாகக் கிடைத்த தங்கப் பேழையில் ஹோமரின் பனுவலை பத்திரப்படுத்தி வைப்பேன் என்று சொன்னது வரலாறு.
'பாடை ஏறினும் ஏடது கைவிடேல்' என்ற பழமொழிக்கு ஏற்ப தங்கள் வாழ்நாள் இறுதி வரை படித்த பெரியோர் பலருண்டு. தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் தனது அகவை நூற்றாண்டைத் தொடவிருந்த நிலையிலும், செவிப்புலன் குறைவுற்றபோதிலும், உருப்பெருக்கு ஆடி கொண்டு படித்ததை நாம் மறக்கலாகாது. கி.வா.ஜகந்நாதனும் அப்படியே. படிப்பது ஒரு தவம் என்றார் திரு.வி.க. 
இளமையில் கல் என்பது படிப்பது பசுமரத்தாணிபோல மனதில் பதியும் என்பதால்தான். ஐந்தில்தான் வளையும். பின்னர் உடலும் முற்றிவிடும். மனமும் வற்றிவிடும். இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ, பிஞ்சு மனங்களில் நஞ்சு கலவாமல் இருக்க, நல்ல நூல்களைப் படிக்க வைக்க, உலக புத்தக தினம் கொண்டாடுகிறது. ஏறக்குறைய நூறு நாடுகளில் புத்தக தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிரிட்டனில் குழந்தைகட்கு வாசிப்பில் ஆர்வம் வர வேண்டும் என்று அரசு முடிவு செய்தது. புத்தக வெளியீட்டாளரும் விற்பனையாளருமான நேஷனல் புக் டோக்கன் நிறுவனத்தார் 18 வயதிற்கு உட்பட்ட ஒன்றரை கோடி நர்சரி குழந்தைகள் முதல் உயர்நிலை பள்ளி மாணவர்கள் வரை ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் சேரும் மாணவர்கட்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை உள்ளூர் புத்தக விற்பனை நிலையத்தில் கொடுத்து இலவசமாக ஒரு புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 2.99 யூரோ விலைக்கு மேல் உள்ள எந்தப் புத்தகத்துக்கும் 1 யூரோ கழிவு பெறலாம். 
ஏப்ரல் 23-ஆம் தேதியை உலக புத்தக தினமாக ஐ.நா. அறிவித்ததே ஒரு சுவையான வரலாறு. முதன்முதலில் 1923-இல் ஸ்பெயினின் கேடலோனியாவில் நூல் விற்பனையாளர்கள் காப்புரிமை தினமாக கொண்டாடினார்கள். புகழ் பெற்ற ஸ்பானிஷ் எழுத்தாளரான செர்வான்டிஸை சிறப்பிக்கும் விதமாக அவர் பிறந்த தினமான அக்டோபர் 7-ஆம் தேதியை புத்தக காப்புரிமை தினமாக கொண்டாடலாம் என்ற கருத்தை வின்சென்ட் டிகிளாவல் ஆன்ட்ரெஸ் முன்வைத்தார். செர்வான்டிஸ் இறந்த தினம் ஏப்ரல் 23.
1995-இல் யுனெஸ்கோ நிறுவனம் உலக புத்தக தினமாகவும் காப்புரிமை தினமாகவும் கொண்டாட முடிவு செய்த நாள் ஏப்ரல் 23. அன்றைய நாள் ஷேக்ஸ்பியர், கார்சிலசோ டிலாவேகா ஆகியோரின் நினைவு தினமாகவும் அமைந்திருந்தது. ஷேக்ஸ்பியர், செர்வான்டிஸ் இருவரும் மறைந்தது 1616 ஏப்ரல் 23-இல்தான். இது வரலாற்றில் அமையப் பெற்ற அரிய ஒற்றுமை. 
ஸ்பெயின் நாட்டு கிரிகோரியன் காலண்டர்படி, ஷேக்ஸ்பியர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக செர்வான்டிஸ் மறைந்தார் என்றாலும், இங்கிலாந்து பின்பற்றிய ஜூலியன் காலண்டர்படி, அது ஏப்ரல் 23தான். மேலும் ஷேக்ஸ்பியரின் அளவற்ற புகழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது. இதற்கு உலகின் பல பகுதிகளிலும் பிரிட்டன் ஆட்சி புரிந்ததும், அங்கெல்லாம் ஆங்கிலம் கோலோச்சியதும் உண்மையான காரணம் எனில் மிகையல்ல. 
பிரிட்டன் ஷேக்ஸ்பியரை மிகவும் சிறப்பித்துக் கொண்டாடியது, கொண்டாடி வருவதன் காரணம், ஆங்கில மொழிக்கு அவரின் அளப்பரிய பங்களிப்பே ஆகும். இங்கிலாந்தின் கடற்கரையோரங்களில் பேசப்பட்ட, செம்படவர்கள் மொழியென்று சொல்லப்பட்ட ஆங்கில மொழிக்கு செழுமை சேர்த்தவர் ஷேக்ஸ்பியர். ஆக்ஸ்போர்டு அகராதியின்படி இரண்டாயிரத்துக்கும் மேலான புதிய கலைச்சொற்களை ஆங்கில மொழிக்கு அளித்துச் செறிவூட்டினார்.
தான் புனைந்த பத்து வரலாற்று நாடகங்களிலும், 10 சோக நாடகங்களிலும் 17 நகைச்சுவை நாடகங்களிலும் 5 கவிதைத் தொகுதிகளிலும் மொத்தம் 17,677 வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவற்றில் புதிய சொற்களை உருவாக்கிச் சேர்த்துப் பயன்படுத்தி மொழிக்கு சுவையூட்டினார். இவர் பிறந்ததும், இறந்ததும் ஏப்ரல் 23-ஆம் தேதி என்று கருதப்படுகிறது.
பொதுவாகவே, மேலைநாடுகளாகட்டும், கீழை நாடுகளாகட்டும், படிப்பதை சிறு வயது முதற்கொண்டே பழக்கப்படுத்திவிடுகின்றனர். ஜப்பானில் பேருந்து நிறுத்தங்களில் ஒரு சிறிய நூலகம் இருக்கிறது. நம் நாட்டில் முன்பெல்லாம் தொலைதூரத் தொடர்வண்டிகளில் நூலகம் அமையப் பெற்றிருந்தது.
புத்தபிரான் தங்கியிருந்து, தன் சீடர்க்கு போதனை செய்த இடம்தான் பிகாரில் உள்ள நாளந்தா. அந்நாளில் 1400 ஏக்கர் நிலப்பரப்பில் ஓங்கி உயர்ந்து இருந்த உலகின் புகழ் பெற்ற முதல் பல்கலைக்கழகம். எண்ணூறு ஆண்டுகள் தன்னிகரற்ற கல்விப் பணியாற்றியது. பத்தாயிரம் மாணவர்கள், இரண்டாயிரம் ஆசிரியர்கள் இருந்தனர். சீனா, திபெத், இலங்கை, துருக்கி, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து வந்து தங்கிப் படித்தனர். ஒன்பது மாடிக் கட்டடங்கள், 11,500 அறைகள், 11 மாணவர் விடுதிகள், 10 கோயில்கள், தியானக் கூடங்கள் ஆகியன இருந்தன. இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன.
'தர்மகஞ்ச்' என்று சொல்லப்படுகின்ற தர்மத்தின் புதையல், பெளத்தம், இந்து சமய நூல்கள், அறிவியல், வானவியல், மருத்துவவியல், தத்துவம், தர்க்கவியல், மனோதத்துவம், சாங்கியம், யோகவியல், வேதங்கள், இலக்கியங்கள் இவைகளை உள்ளடக்கிய பல லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் நூலகத்தை அலங்கரித்தன. யுவான் சுவாங் என்ற சீனப் பயணி இங்கே பன்னிரண்டு ஆண்டுகள் தங்கிப் பயின்றார். படிப்பு முடிந்து தாய்நாடு திரும்பியபோது தன்னோடு 600 நூல்களைக் கொண்டு சென்றார். பின்னர் அவற்றை சீன மொழிமாற்றம் செய்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்த தர்மபாலர் சில காலம் துணைவேந்தராகப் பணிபுரிந்தார். நாளந்தாவின் கட்டடச் சுவர்கள் 3 அடி முதல் 12 அடி வரை அகலம் உடையதாக இருந்தன. சுண்ணாம்பு, வெல்லம், வில்வபழம், உளுத்தம் பருப்பு கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்கள். 
ஆனால் நம் நாட்டில் ஒற்றுமையின்மையால் துருக்கி நாட்டிலிருந்து பக்தியார் கில்ஜி என்ற ஆக்கிரமிப்பாளன் இங்கே வந்து நாளந்தாவை இடித்து தரைமட்டமாக்கினான். ஆயிரக்கணக்கிலான புத்த மதத் துறவிகளின் தலைகளைக் கொய்தான். நூலகத்தைத் தீக்கிரையாக்கினான். நூலகம் 3 மாத காலம் எரிந்து கொண்டிருந்தது. 
இந்த அவலங்களை எல்லாம் பாரசீக நாட்டு வரலாற்று அறிஞர் மின்கா-இ-சிராஜ் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கையில் யாழ் நூலகத்தையும் இப்படித்தான் சிங்கள வெறியர்கள் முற்றிலுமாக அழித்தொழித்தார்கள். இப்போது நாளந்தாவும் யாழ் நூலகமும் புதுப்பிக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளன.
ஒரு நாட்டைப் பகைவன் தாக்கும்போது, அந்நாட்டின் நூல்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் நூலகங்கள் தீக்கிரையாவதும் மானுட வரலாற்றில் தொடர் நிகழ்வுகளாக இருந்து வந்துள்ளன. அந்த நாட்டின் ஞானக் கருவூலத்தைச் சகியாத பகைவரின் சினமும் செருக்குமே தீயாய்ச் சுடுகிறது! ஆனால் ஞானம் அழிவதில்லை. அழிவற்ற ஞானத்தால் மானுடம் மீண்டும் மேன்மையை நோக்கி நிமிர்ந்து நடைபோடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com