தொண்டால் பொழுது அளந்த சூரியன் 

நினைத்து நினைத்துக் குமுறிக் கதற வேண்டிய நாட்கள் மனித வாழ்க்கையில் எத்தனையோ இருப்பதுண்டு. அதற்கு நான் விதிவிலக்கல்ல' என்று கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார் (நெஞ்சுக்குநீதி, முதல் பாகம் இரண்டாம்
தொண்டால் பொழுது அளந்த சூரியன் 

நினைத்து நினைத்துக் குமுறிக் கதற வேண்டிய நாட்கள் மனித வாழ்க்கையில் எத்தனையோ இருப்பதுண்டு. அதற்கு நான் விதிவிலக்கல்ல' என்று கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார் (நெஞ்சுக்குநீதி, முதல் பாகம் இரண்டாம் பதிப்பு,1986:15.) ஆகஸ்ட் 7, 8 நாட்களில் கதற வைத்துவிட்டார்.
முதல் உலகப் போர் முடிந்து, உலகம் களைத்துக் கிடந்த காலம். முழு விடுதலையா? கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுய ஆட்சியா என்ற குழப்பத்தில் இந்தியா இருந்த காலம். பவேரியா சிறைக்கோட்டத்தில் ஹிட்லர் மெயின் கேம்ப்' எழுதிக் கொண்டிருந்த காலம்.
1924 சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்டஆண்டு - மைசூருடன் காவிரி நதிநீர் ஒப்பந்தமான ஆண்டு- லெனின் மறைந்த ஆண்டு - டிராட்ஸ்கிய சித்தாந்தம் அடிபட்டு, அந்தந்த நாடுகளுக்கு ஏற்பப் புரட்சி' என்று கம்யூனிசம் மாறிய ஆண்டு - ஸ்டாலின் தலைவரான ஆண்டு - என்று 1924 -ஆம் ஆண்டின் வரலாற்றுப் பெருமைகளைக் கலைஞர் கருணாநிதி சொல்லியிருப்பார்.
அந்த 1924 -ஆம் ஆண்டுக்குக் கலைஞர் கருணாநிதி பிறந்த ஆண்டு என்ற பெருமையையும் சேர்த்திருக்கிறார்.
1938 பள்ளிகளில் கட்டாய இந்தி அறிமுகம். கலைஞர் கருணாநிதிக்கு 14 வயது. பள்ளி மாணவர். மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்துத் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வந்தவர். முழக்கமிட்டவர். வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!
வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'( நெ.நீதி, பக்.44) என்று இந்தி ஆசிரியரிடம் துண்டறிக்கை தந்தவர்.
கலைஞர் கருணாநிதியின் முதல் போராட்டமே வெற்றி பெற்றிருக்கிறது. கட்டாய இந்தியை அரசு, திரும்பப் பெற்றது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு விடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்று தந்தவர்; அவரின் மறைவுக்கு இந்தியா முழுதும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் திராவிட நாடு கேட்ட கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இப்போது இந்தியாவே துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியப் பிரதமரும் இந்திய அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். தேசத்துக்காகத் தி.மு.க. திராவிட நாடு பிரிவினையை கைவிட்டதற்குத் தேசம் மரியாதை செய்திருக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்க காலத்தில் அரசர்களில் சிலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் சங்க காலத்திற்குப் பிறகு ஆட்சித் திறமையும் படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட ஒரு தலைமையைக் கலைஞர் கருணாநிதியே தந்திருக்கிறார்.
கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து, தமிழுணர்வை வளர்த்தவர். தமிழின் தகுதிக்குரிய பெருமைக்காகப் பரிதிமாற் கலைஞர் தொடங்கிவைத்த போராட்டத்தை முடித்துவைத்துத் தமிழுக்குச் செம்மொழி அறிந்தேற்பினை இந்திய அரசிடம் பெற்றுத் தந்தவர். வடமொழி முதலாக மற்ற இந்திய மொழிகளில் சிலவும் செம்மொழி அறிந்தேற்புப் பெற வழி அமைத்தவர்.
சமஸ்கிருதம் முதலாக உலகச் செம்மொழிகள் அனைத்துக்குமான உலகச் செம்மொழிகள் உயராய்வு மையத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தவர்.
சென்னையில் வள்ளுவர் கோட்டம், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம், குமரியில் திருவள்ளுவர் சிலை என்று இலக்கிய நினைவுக்கான ஊற்றுக் கண்களைத் திறந்து வைத்தவர்.
அறிவியல் தமிழுக்குத் தமிழ் இணைய மாநாடுகளை நடத்திக் கணினித் தமிழின் இன்றைய வளர்ச்சிக்கு அடியெடுத்து வைத்தவர். ஆட்சித் தமிழுக்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கியவர். வழிபாட்டு மொழியாகத் தமிழைக் கோயிலுக்குள் கொண்டு சேர்த்தவர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் தமிழை அழைத்துச் சென்றவர்.
நீதிமன்ற மொழியாகத் தமிழைச் சேர்க்க முயன்றவர். இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தமிழையும் சேர்க்க இறுதிவரை போராடியவர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் அச்சில் கொண்டுவந்த தமிழ்க் கருவூலங்களை மேடையில் மட்டுமன்றி, நாடக, திரைப்பட உரையாடல்களின் வழியும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர்.
தமிழ் படிக்கிறவர்களும் தமிழாசிரியர்களும் மட்டும் போற்றி வந்த மரபுச் செல்வங்களான தொல்காப்பியப் பூங்கா', சங்கத் தமிழ்', குறளோவியம்', திருக்குறள் உரை' என்றெல்லாம் எழுதித் தம் வாழ் நாளைச் சேமித்து வைத்தவர்.
அவர், கடந்த கால இலக்கியங்களை நிகழ்காலம் பேசவைத்தவர். சமுதாய அமைப்பு, விழுமியங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகளில் மாற்றம் என்று நவீன அறிவியல் தொழில்நுட்ப அதிரடி விளைச்சலில் வாழும் சமகாலத் தலைமுறையோடு கூட உரையாட இயலாத காலத்தில் ஒரே காலத்தில் பல தலைமுறைகளோடும் உடன்பிறப்பே..' என அழைத்து உரையாடல் நடத்தியவர். 
கடந்த கால இலக்கியங்களின் பெயர்களையும் இலக்கிய மாந்தர்களின் பெயர்களையும் பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர்; அப்படி, காலங்களையும் தலைமுறைகளையும் இணைத்தவர். அந்த இணைப்புகளிலிருந்து புதுமையும் நம்பிக்கையும் பிறக்க விரும்பியவர். விளைவுகளைக் குறி வைத்து வினையாற்றியவர். 
இப்படியெல்லாம் தமிழ் மரபுக் கருவூலங்களைக் காப்பாற்றவும் போற்றவும் வரும் தலைமுறைகளுக்குக் கைமாற்றவுமான ஒரு தலைவராக இருந்தவர். அவர் இப்போது இல்லை.
1957 -லிருந்து சட்டமன்ற உறுப்பினர்; 50 ஆண்டுகளாகத் தி.மு.க. தலைவர். ஐந்துமுறை முதலமைச்சர் - இவை அரசியல். 
ஆனால், அரசியல் கொள்கை முழக்கம் என்பதற்காகவும் அவரது கலை இலக்கியப் பங்களிப்பைக் காலம் வாழ்த்தும். பாராட்டும் பழியும் கலந்த பதவிகளால் மட்டும் கலைஞர் கருணாநிதி பாராட்டப்படவில்லை. களத்தில் நின்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும் இருந்திருக்கிறார். 
திருக்குவளை கிராமத்தில் தொடங்கித் தில்லிக் கோட்டை வரையிலானஅதிகாரப் பயணத்தில் கலைஞரின் வாழ்க்கை இளைஞர்களின் நம்பிக்கை விளக்கு. இப்படியெல்லாம் வளர வாய்ப்பினைத் தந்திருக்கிறது இப்போதும் இந்தியச் சமூகம். பேச்சு, நாடகம், போராட்டம், எழுத்து என்று பள்ளிப் பருவத்தில் தொடங்கிய வாழ்க்கை நிறைவு பெற்றிருக்கிறது.
கையிடுக்கிலும் இடுப்பிலும் கட்டுப்பட்டுக் கிடந்த துண்டுகளுக்குத் தோளில் புரளும் உரிமை காட்டியவர். தனிமனித சடங்குகளிலும் சமுதாய வாழ்க்கையிலும் தமிழுக்குப் புதுவாழ்வு தந்தவர். பண்பாட்டு ஆதிக்கத்திற்குப் பணியாமல் மாற்றுப் பயன்பாட்டை முன்னிறுத்தியவர்.
இன்றைய ஊடகங்களும் நவீன கலை இலக்கியங்களுக்கும் பயணம் செய்யச் சாலை போட்டவர். திரைப்படத் தமிழுக்குத் திசை காட்டியவர்; பராசக்தி வழி திரைப்பட வரலாற்றைத் திருப்பி விட்டவர்.
இந்தி - எடுப்புச் சாப்பாடு; ஆங்கிலம் - ஆள்வைத்துச் சமைத்த சாப்பாடு; தமிழ் - தாய் வழங்கும் உணவு என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமை ஏற்றவர். 
பந்தை நாம்தான் உதைத்து விளையாட வேண்டும்; யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால் அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்' என்று கவனப்படுத்தியவர். பந்தையும் மைதானத்தையும் பார்வையாளர்களையும் கூடப் பக்குவப்படுத்திக் களத்தில் ஆடிக் கொண்டிருந்தவர். புதிது புதிதாக வருகிறவர்களோடும் போராடத் தயங்காதவர்.
இலக்கு இல்லாமல் திறமை காட்டிப் பயனில்லை. வெற்றியும் தோல்வியும் இயற்கைதான் எனினும், விடா முயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை' என்று சொல்வதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டவர்.
சலிப்பறியாத உழைப்புக்கும் எழுதுவதற்கும் படிப்பதற்கும் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கும் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தவர்.
நடை தள்ளாடலாம், தடைப்படலாம் - ஆனால் நான் பெற்றுள்ள தமிழ் உணர்வுக்குத் தள்ளாட்டமில்லை' என்று சொன்னார். அவர் இப்போது இல்லை . இனி அவர் பெயரே தமிழுணர்வின் தள்ளாட்டத்தைப் போக்க வேண்டும். 
அவர் பன்முகப் படைப்பாளுமையோடு அரசியல் தலைமைப்பண்பும் கொண்ட தலைவர். அவர் ஆற்றிய பணிகளில் அவர் ஆயுட்காலத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார். அடுத்துவரும் தலைமுறைகளின் மனத்திலும் அவர் சாதனைகளால் வாழ்வார்; நினைக்கப்படுவார். ஏனெனில் அவர், தொண்டால் பொழுது அளந்த சூரியன்!
இவரைப் போன்று, தொல்காப்பியம்', சங்க இலக்கியம்', திருக்குறள்' போன்ற தமிழ்க் களஞ்சியங்களைப் படிக்கவும் எடுத்துச் சொல்லவுமான தமிழ் ஆளுமை கொண்ட தலைவர் இனி எப்போது கிடைப்பார்?
இப்படியான ஒரு தலைமை எப்போவாவதுதான் கிடைக்கும் .
அது காலத்தின் தவம்.
காலம் தவம் இருக்கட்டும்!

கட்டுரையாளர்:
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com