போராடிப் பெற்ற நீரை வீணடிக்கலாமா?

தென்மேற்குப் பருவமழையால் காவிரியில் வரும் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 1934-ஆம் ஆண்டில் மேட்டூர் அணை கட்டப்பட்டது.

தென்மேற்குப் பருவமழையால் காவிரியில் வரும் வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 1934-ஆம் ஆண்டில் மேட்டூர் அணை கட்டப்பட்டது. வினாடிக்கு ஐந்து இலட்சத்து ஐம்பத்தேழாயிரம் கன அடி வெளியேற்றும் திறன் கொண்டதாக இந்த அணை அமைக்கப்பட்டது. பருவமழை தீவிரம் அடையும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது காவிரியில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பி மிகைநீர் வெளியேற்றப்படும்போது, பாசனத் தேவைகளுக்குப் போக சுமார் 60 முதல் 100 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும்போது பெருகிவரும் மிகைநீரைத் தக்க 
அளவில் பயன்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன.
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக நடுவர் மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நாம் போராடிப் பெற்ற காவிரி நீர் குறைவானதாகும். நமக்கு உரிமையான முழு அளவு நீர் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த குறைந்த அளவு நீரையும், வெள்ளத்தால் பெருகிவரும் நீரையும், நீர் மேலாண்மைத் திறமையின்மையின் காரணமாக நாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.
காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததால் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்று சேரவில்லை. இயற்கை அள்ளிக் கொடுத்தும் நமது திறமையின்மையால் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
ஒகேனக்கல்-தொப்பூர் கால்வாய், மேட்டூர் அணை-தொப்பையாறு கால்வாய், தங்கமாபுரிப் பட்டணம்-ஏற்காடு அடிவாரம் கால்வாய் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினால் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான சரபங்கா, மணிமுத்தாறு, வடவெள்ளாறு, தென்வெள்ளாறு ஆகிய நான்கு ஆறுகளும் அவற்றுக்கு இடையே குறுக்கிடும் எண்ணற்ற ஓடைகளும், ஏரிகளும், குளங்களும் இரு ஆண்டுகளுக்கொரு முறையாவது நிரம்பி வழியும். நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும். இத்திட்டங்களின் மூலம் சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் உள்ள மாயனூர் கதவணையில் இருந்து காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அறிக்கை, மத்திய-மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்ட மக்கள் பயனடைவார்கள். 
காவிரிக்கும் வைகை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அக்னி ஆறு, அம்புலி ஆறு, வெள்ளாறு, கொளுவனாறு, பாம்பனாறு, மணிமுத்தாறு, கொட்டக்கரையாறு ஆகியவை நீர் சேகரிப்பு ஆறுகளாக உள்ளன. இவற்றில் வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டும் முக்கிய ஆறுகளாகும். தேனி அருகே உற்பத்தியாகி மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கும் வைகை ஆற்றுடன் சுருளியாறு, வராகநதி, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய முக்கிய ஆறுகள் இணைகின்றன. வைகை-வைப்பாறுகளுக்கு இடையிலான பகுதியில் உத்தரகோசமங்கையாறு, வேம்பாறு ஆகியவை இணைகின்றன. 
இந்தத் திட்டத்தில் காவிரி ஆற்றுடன் இணைக்கப்படும் குண்டாறு மிக முக்கிய ஆறாகும். ஆண்டிப்பட்டி மலையில் உற்பத்தியாகும் குண்டாற்றுடன் தெற்கு ஆறு, கானல் ஓடை, கிருதமால் நதி மற்றும் பரலை ஆறு ஆகியவை இணைகின்றன. காவிரி-வைகை நதிகள் இணைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் இணைக்கப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை கால்வாய் அமைத்து, காவிரியைத் தென்பெண்ணை உள்ளிட்ட சில ஆறுகளுடன் இணைப்பதால் வட மாவட்டங்கள் பலவும் பயனடையும். மொத்தத்தில் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் மிகை நீர், தமிழகத்தில் உள்ள மற்ற ஆறுகளுக்குத் திருப்பிவிடப்படுவதால், மழைக்காலத்தில் கிடைக்கும் பல டி.எம்.சி. மழை நீர் வீணாகக் கடலில் கலப்பது தடுக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம் இணைப்புக் கால்வாய்கள் செல்லும் பகுதிகள் முழுவதும் சிறந்த பாசன வசதி பெறும்; இம்மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்னையும் தீரும். மேலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் காவிரிப் படுகைப் பகுதியில் இலட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிப் பாழாவதும் தவிர்க்கப்படும். 
காவிரியின் கிளை ஆறுகளில் முக்கியமானதாகவும், சமவெளியின் ஒட்டுமொத்த பாசன வடிகாலாகவும் விளங்குவது கொள்ளிடம் ஆறாகும். காவிரியில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் நீரை விரைந்து கடலில் வடியச் செய்யும் விதமாக திருச்சிக்கு மேற்கே முக்கொம்புக்கு அருகில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மேல் அணைக்கட்டிலிருந்து பிரிந்து உருவாகும் கொள்ளிடம் ஆறு, கல்லணையிலிருந்தும் இணைப்புப் பெற்று திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் எல்லை வழியாக 168 கி.மீ. தூரம் ஓடுகிறது. இறுதியாக, நாகை மாவட்டம் பழையாறு அருகே கடலில் கலக்கிறது. கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு 108-ஆவது கி.மீ. இல் அமைக்கப்பட்டிருக்கும் கீழணையில் (அணைக்கட்டு) தேக்கப்படும் நீரின் மூலம், கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1,34,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 
கீழணைக்குக் கீழே 60 கி.மீ. தூரத்திற்கு கொள்ளிடம் ஓடிக் கடலில் கலக்கிறது. ஆனால், இந்த இடைவெளியில் கதவணைகளோ, தடுப்பணைகளோ இல்லை. இதன் விளைவாக, வெள்ளம் ஏற்படும்போது கீழணையில் திறக்கப்படும் மிகைநீர் நேராகக் கடலுக்குச் சென்று வீணாகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய நீர் இந்த ஆற்றின் வழியாகச் செல்லாததால், உப்புநீர் ஊடுருவியதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் இடதுகரையில் அமைந்துள்ள நாகை மாவட்டத்தில் 40 கிராமங்களும், வலதுகரையில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் 55 கிராமங்களும் உப்புநீர் ஊடுருவலால் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலையும், குடிநீர் கிடைக்காத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழணைக்கு மேல் ஏழு இடங்களிலும், கீழணைக்குக் கீழ் மூன்று இடங்களிலும் தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
நீர் மேலாண்மை செவ்வனே வகுக்கப்படாததால், காவிரி நீர் வீணாவதும், மிகைநீரால் பயிர்கள் மூழ்குவதும், சமவெளிப் பகுதி போதுமான நீர் இல்லாமல் வாடுவதும் அடிக்கடி நிகழ்கின்றன. தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய சமவெளி மாவட்டங்களில் 2,517 கி.மீ. நீளத்திற்கு 36 கிளை ஆறுகளும், 6,900 கி.மீ. நீளத்திற்கு முக்கிய வாய்க்கால்களும், 28,500 சிறிய வாய்க்கால்களும் உள்ளன. ஆனால், இவற்றில் பல ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு, தூர்க்கப்பட்டுவிட்டன. இவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, நீரை சேமிக்க வகை செய்தால் பாசன வசதி பெருகும்; நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 
மேட்டூர் அணையில் நீர் நிரம்புவதற்கான மொத்தக் கொள்ளளவு 93.47 டி.எம்.சி.ஆகும். ஆனால், இந்த அணையின் கொள்ளளவு குறைந்திருப்பதாக நீரியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். அணையில் மணல் மேடிட்டு இருப்பதன் விளைவாக 25% முதல் 30% வரை நீர் கொள்ளளவு குறைந்திருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். அணையில் குவிந்திருக்கும் மணல், களிமண், கற்கள் ஆகியவற்றை அகற்றுவதில் அரசு கவனம் செலுத்தவில்லை. அதை அகற்றுவதற்குப் பெரும் செலவாகும் என கருதுகிறார்கள். ஆனால், கட்டடம் மற்றும் சாலைகளை அமைக்கும் குத்தகைதாரர்கள் இவற்றை அள்ளிக்கொள்ள அனுமதித்தால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் விரைவாக அகற்றுவார்கள். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அணையின் கொள்ளளவும் அதிகரிக்கும்.
ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ. மழை பொழியும் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதில் பாதியளவுக்கும் மழை பொழியும் இராஜஸ்தான் மாநிலத்தில் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது. வறண்டு கிடந்த ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றையெல்லாம் அம்மாநில மக்கள் சீர்திருத்தினார்கள். ஆறுகளிலும், ஓடைகளிலும் ஏறத்தாழ 4,500-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியுள்ளார்கள். ஒரு காலத்தில் மானாவாரி பயிர்கூட செய்யமுடியாமல் தவித்த கிராமங்களில் இப்போது அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பு பயிர் செய்கிறார்கள். 
ஆனால், தமிழ்நாட்டில் பக்கத்து மாநிலங்களுடன் உள்ள நீர்ப் பிரச்னைகளை சட்ட ரீதியாகத் தீர்த்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், அதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய தண்ணீர் வளத்தை முறையாகவும், முழுமையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் முயற்சிகளில் நாம் கவனம் செலுத்தவேண்டும். இம்முயற்சி மக்கள் இயக்கமாக மாறவேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் வளம் பெருகும்.
தமிழ்நாட்டில் ஆறுகளில் உள்ள மணல் சூறையாடப்படுகிறது; ஏரி, குளங்கள், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன; தொழிற்சாலைக் கழிவுநீரால் ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன; மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் தடுப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவே இல்லை. 
இயற்கையாக கிடைக்கும் நீர்வளத்தை நாம் அழித்தால் நமது எதிர்காலத் தலைமுறையினர் பாலைவனமான தமிழ்நாட்டில்தான் வாழவேண்டியிருக்கும் அல்லது வாழ முடியாத நிலையில் புலம் பெயர்ந்து வெளியேற வேண்டியிருக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com