சும்மா வரவில்லை சுதந்திரம்

பாரதி' என்று கூறினால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் அன்றைய திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். அதே திருநெல்வேலி மாவட்டத்தில்

பாரதி' என்று கூறினால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் அன்றைய திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். அதே திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்து, மதுரை மாவட்டத்தில் சிறை சென்றவர் லெட்சுமி பாரதி. 
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகில் உள்ள நயினார் நகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி பாரதி. அவரது மனைவி லெட்சுமி பாரதி. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தலைவராக இருந்து, சிறை சென்று, சட்டமன்றம் கண்டு, இறுதியாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் (Constitution  Assembly) உறுப்பினராகி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழில் கையெழுத்திட்ட தியாகசீலர் ஆவார். 
லெட்சுமியின் தந்தை சோமசுந்தர பாரதியின் பூர்வீகம் எட்டயபுரம். தூத்துக்குடியில் வழக்குரைஞராகப் பணியாற்றி காந்தியடிகளை முதன் முறையாக தூத்துக்குடிக்கு அழைத்து வந்த பெருமை அவருக்கு உண்டு. அவர் வ.உ.சி.க்கு தொழில்முறையிலும் சுதந்திர போராட்ட இயக்க ரீதியிலும் தோழர். வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். 
அவருடைய கணவர் கிருஷ்ணசாமி பாரதி, மதுரையில் வழக்குரைஞர் தொழில் செய்து கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இவர்களுடைய குழந்தைகள் லெட்சுமிகாந்தன் பாரதி (ஐ.ஏ.எஸ் பணி ஓய்வு) மற்றும் மகாலெட்சுமி.
பிறந்த குடும்பமும், புகுந்த குடும்பமும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்த நிலையில், லெட்சுமியும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதில் வியப்பொன்றும் இல்லை. 
இந்தியாவிலேயே கணவனும் மனைவியும் மட்டுமல்லாமல் அனைவரும் மொத்தமாக சிறை சென்ற குடும்பம் கிருஷ்ணசாமி-லெட்சுமி பாரதியின் குடும்பம். இத்தம்பதியின் மூத்த மகன் லெட்சுமிகாந்தன் பாரதி (அப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவன்) கைவிலங்கிடப்பட்டு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக நெடிய படிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, மாவட்ட கலெக்டர் முன்னால் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
பின்னாளில் இதே லட்சுமிகாந்தன் பாரதி, மதுரை மாவட்ட கலெக்டராக அதே அலுவலகத்தில் அமர்ந்தது, அக்குடும்பத்தின் தியாகத்திற்கும் அவரின் திறமைக்கும் இந்த நாடு அளித்த பரிசு.
1938-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் போட்டியின்றி வெற்றி பெற்றார் லெட்சுமி பாரதி. அதே தேர்தலில், மதுரை மேலூரில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றவர் கிருஷ்ணசாமி பாரதி. அன்றிலிருந்து இன்று வரை சட்டப்பேரவையிலும் பாராளுமன்றத்திலும், தந்தையும் மகனும், தாயும் மகனும், சகோதரர்கள் என்று பல உறவுகள் ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 
சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, கணவன்-மனைவியாக சட்டப்பேரவை சென்ற தம்பதி, தென்னாட்டில் கிருஷ்ணசாமி பாரதி-லெட்சுமி பாரதி, வடநாட்டில் கிருபளானி-சுசேதா கிருபளானி.
1940 -ஆம் ஆண்டு தேச பக்தர் எல்.கிருஷ்ணசாமி பாரதி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து சிறைக்குச் சென்றார். அவரைப் போன்று அறப்போரில் பங்கு கொண்டு சிறைக்கு செல்ல வேண்டும் என அவருடைய மனைவி லெட்சுமி கிருஷ்ணசாமி பாரதி மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனாலும் அப்போது அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் சிறைக்குச் செல்வது நல்லதல்ல என்று அவருடைய உறவினர்களும் நண்பர்களும் கூறினார்கள். அவர் உடல்நிலையை சோதித்த டாக்டர்கள் அவர் சிறைக்கு சென்றால் உயிருடன் திரும்பி வருவது அரிது என்று கருத்து தெரிவித்தனர். 
அம்மையாரோ எப்படியும் சிறைக்கு சென்றே தீருவது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த நிலையில் அவரை சிறைக்கு செல்லாமல் தடுக்க முடிவெடுத்த காந்தி கிராம நிறுவனர் ஜி.இராமச்சந்திரன் காந்திஜிக்கு நிலைமையை விளக்கி ஒரு கடிதம் எழுதினார். காந்திஜியும் உடனே லெட்சுமிக்கு தன் கைப்பட பதில் எழுதினார். அதில், அன்புள்ள சகோதரி, உங்களுடைய உடல்நலத்தின் காரணமாக நீங்கள் சட்ட மறுப்பு கோரி ஈடுபடவேண்டியதில்லை. 
உங்களுடைய பாபு' 
- என்று எழுதியிருந்தார். ஆனால் காந்திஜியின் சொல்லையும் கூட மீறி அந்த அம்மையார் அறப்போரில் பங்கு கொண்டு சிறைக்கு சென்று விட்டார். இதை அறிந்த கிருஷ்ணசாமி பாரதி காந்திஜிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி, அதில் அண்ணலின் சொல்லையும் மீறி தம் மனைவி சிறைவாசம் ஏற்றதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். 
அதற்கு காந்திஜி எழுதிய பதில் மிகவும் உருக்கமானது. காந்திஜி தம் பதிலில், ஓர் இந்து மாது தம் கணவனின் அடிச்சுவற்றை பின்பற்றுவது சரியே. அதைத்தான் உங்கள் மனைவி செய்து இருக்கிறார். என்னுடைய உத்தரவை மீறியதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். 
ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்த மற்றொரு அழைப்பை- தேசத்தின் 
அழைப்பை- ஏற்று அவர் இவ்வாறு 
செய்துள்ளார். விரைவில் அவருடைய உடல்நலம் சரியாகி விடும். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று எழுதியிருந்தார். என்ன வியப்பு ! அவ்வளவு கடும் இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த லெட்சுமி பாரதி, குணமடைந்து வெளியே வந்தார். அண்ணலின் சத்திய வாக்கு பலித்தது. 
சும்மா வரவில்லை சுதந்திரம். லெட்சுமி பாரதி போன்றோரின் தியாகத்தால் நமக்கு கிடைத்தது என்பதை நாம் மறந்து விடலாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com