விடுதலைக்கு வித்திட்ட இதிகாசம்

அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் கூறுகளிலும் பிரபஞ்சப் பேரியக்கத்தின்
விடுதலைக்கு வித்திட்ட இதிகாசம்


அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் கூறுகளிலும் பிரபஞ்சப் பேரியக்கத்தின் ஒழுங்கியலை நிலைநிறுத்தத் தமிழர்கள் கண்டறிந்த கருத்துருவாக்கம் அறம். அதனை நிலைநிறுத்தக் காலந்தோறும் அவதரிக்கும் உன்னத சீலர்களின் வாழ்க்கை, வாழும் மக்களுக்கு வரலாறாகிறது. வாழ்வியல் பாடமாகத் திகழ்கிறது.
இந்தப் பணியைச் செய்வதில் கலையும் இலக்கியமும் ஒருங்கிணைந்து எந்தச் சமுதாயத்தில் களம் இறங்குகின்றனவோ, அந்தக் சமுதாயம் மேம்பட்டெழுவதை வரலாறு உறுதிபட நிறுவியிருக்கின்றது. 
இதற்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போராட்டமாக, இந்திய விடுதலைப் போராட்டம் பரிணமித்தது. இருவேறு துருவங்களாய் இருந்த கிழக்கு மேற்குச் சிந்தனைகளை ஒருமுகப்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை இந்தியா பெற்றது. குறிப்பாக, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில், மிதவாதம், தீவிரவாதம் என்னும் இருவேறு அரசியல் போக்குகள் எழுந்த காலத்தில் தீவிரவாத அரசியலை மேலெடுத்த திலகரின் தலைமையில் இளைஞர்கள் களம் இறங்கினர்.
வங்கத்தில் அரவிந்தரும் தமிழகத்தில் வ.உ.சியும் அப்பேரியக்கத்தின் தளபதிகளாக விளங்கிய காலத்தில் இவ்விருவருக்கும் மையமாக, பாரதியார் திகழ்ந்தார். இங்கே தீவிரவாதம் என்பது பயங்கரவாதம் இல்லை என்பது புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 
ஒரு கருத்தில், பணியில் மிதமாக இயங்குவது வேறு. தீவிரமாக முனைவது வேறு. அதனை எப்படியாவது செயல்படுத்தியே ஆகவேண்டும் என்கிற வெறியில் வெகுமூர்க்கமாக இயங்குகிற பயங்கரவாதம் வேறு.
மிதவாத, பயங்கரவாதப் போக்குகளுக்கு மத்தியில் தீவிரவாதத்தை வலுப்படுத்தக் களமிறங்கிய திலகர், விபின்சந்திரபாலர், சுரேந்திரநாத் ஆர்யா, பாரதியார், அரவிந்தர். வ.வே.சு. ஐயர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் களப்பணியில் அறம் பிறழாது இயங்குவதற்கும் மக்களிடையே தங்களது கருத்துகளை முன்வைப்பதற்கும், தங்களுக்கான வழிகாட்டிகளாய், இதிகாசங்களையும் இலக்கியங்களையும் முன்னெடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக, இந்நாட்டின் ஆன்மாவாக விளங்கிய மகாபாரதமும், இராமாயணமும் இவர்களின் தேசியத் திருப்பணிகளுக்கு உந்தாற்றல் தருகிற மகாசக்திகளாகத் திகழ்வதை உணர்ந்தார்கள். மக்களிடையே விடுதலைப் பேருணர்வை வித்திட்டு வளர்க்க, இந்தக் கதைகள் பெரிதும் உதவுவதைக் கண்டார்கள். 
துப்பாக்கிக்குப் பதிலாக, பேனாவையும் கேடயத்திற்கும் பதிலாக, இதழியல் ஊடகத்தையும் இவர்கள் எடுத்துக்கொண்ட வேளையில் எழுதும் பேனாவுக்கும் அச்சிடும் தாள்களுக்கும் மையென ஆகிவந்தது, இந்த இதிகாசக்களஞ்சியங்களில் இருந்து பெறப்பட்ட அறம்தான்.
இவற்றுக்குத் துணையான கலை, இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் கைக்கொண்டு எழுந்த பேரியக்கத்தில் நாடக, கூத்து வடிவங்கள் பெற்ற இடத்திற்கு நிகரான இடத்தைப் பொது அரங்க மேடைகள் பெற்றன.
சென்னையில் விபின்சந்திர பாலரை அழைத்து வந்து பேசவைத்த பாரதி, தன்னையும் ஒரு சொற்பொழிவாளராகக் கட்டமைத்துக் கொண்டதும் இந்தப் பின்புலத்தில்தான்.
அந்த நேரத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தால், இந்த முற்போக்கு எழுச்சி முடக்கப்பட்டது. அரவிந்தர் சிறையில் அடைக்கப்பட்டார். தன்னை அதனில் இருந்து தப்புவித்து மறைமுக இயக்கம் நடத்தப் புதுவையில் வந்து அடைக்கலமான பாரதி, அதன்பின்னர் அலிப்பூர் சிறையில் இருந்து விடுதலை பெற்ற அரவிந்தரை புதுவைக்கு அழைத்து வருகிறார். வ.வே.சு. ஐயரும் வந்து சேர, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் உள்ளிட்ட பலரும் இணைகின்றனர். வ.உ.சி.யும் பின்னர் அங்கு வந்து திரும்புகிறார்.
இந்தச் சூழலில்தான் புதிய கோணத்தில், வேதங்களையும், உபநிடதங்களையும், இதிகாசங்களையும், இந்திய இலக்கியங்களையும் ஆழக்கற்கின்ற சூழல் ஏற்படுகிறது. பாரதியும், அரவிந்தரும் நிறைய எழுதவும் பயிலவும் முனைகின்றனர். கம்பனில் மூழ்கி, உலக இதிகாசங்களோடு ஒப்பிட்டு அதன் உன்னதத்தில் ஆழ்கிறார் வ.வே.சு.ஐயர்.
இதற்குப் பின்னர், மகாத்மா காந்தியின் அரசியல் பிரவேசத்தால், ராமராஜ்யக் கனவு முன்வைக்கப்படுகிறது. அது பதவிக்கானதன்று; பதவிகளைத் தாண்டிய பணிகளுக்கானது என்பதை விளக்க, இதிகாசக்கதைக்குள் இறங்கவேண்டிய நிலை எல்லாருக்கும் நேருகிறது.
தமிழில் அக்கதை நல்கிய கம்பன் கவனத்திற்கு வருகிறான். அதுவரை வழிபாட்டுக்கூடத்தில் இருந்த கம்பராமாயணம் வழிகாட்டும் தளத்திற்கு வந்து சேருகிறது.
காந்திய அரசியலில் களம் இறங்கிய கம்பனடிப் பொடி' சா.கணேசன், சொ.முருகப்பா, ராய.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கம்பனைக் கற்கக் தொடங்குகின்றனர். நாட்டு விடுதலைக்கு முன்னின்று வழிகாட்டும் இடத்தில் காந்தியையும், உள்நின்று வழிகாட்டும் தளத்தில் கம்பனையும் இருத்திக் கொள்கிறார்கள்.
அக்காலத்து அரசியல் சூழலால், முன்னர் சீதைக்கு நேர்ந்த அக்கினிப்பிரவேசம் பின்னர், கம்பனுக்கு நேர்ந்ததும், கம்பனின் மேதைமை அதனால் மிளிர்ந்ததும், மாற்றுக்கருத்தாளர்களும் ஏற்றுத் தமிழுக்கு ஏற்றந்தந்ததும் உலகறிந்த வரலாறு.
அதன் விளைவாய், புராண, இதிகாசப் பிரசங்கங்களில் எடுத்தோதப்பெற்ற இராமாயணக் கதை, கம்பன் கழகங்களால், வாழ்வியல் தளத்திற்கும் அரசியல் விழிப்புணர்வுக்கும் பயன்படுத்தப்பெற்றது.
அரசியல் பிரமுகர்களும், ஆன்மிகவாதிகளும், கலை, இலக்கியவாணர்களும், பேராசிரியர்களும், நீதியரசர்களும் களம் இறங்கினர். ஒரு சட்டப் புத்தகம்போல் கம்ப ராமாயணத்தைக் கையில் வைத்துக்கொண்டு பட்டிமண்டபங்களையும் வழக்காடு மன்றங்களையும் நடத்தி, வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகள் கண்டனர். ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார், ஜீவானந்தம், ம.பொ.சிவஞானம் என விரியும் பேரறிஞர் பட்டியலில் நீதியரசர் மகராஜனும் ஒருவர்.
எழுதியும் பேசியும் இயங்கியும் கம்பனுக்குத் தொண்டு செய்ய பலர் களமிறங்கிய அக்காலத்தில், பல ஆக்கப்பணிகள் நடந்தேறின. கம்பனும் மில்டனும்', கம்பனும் ஷேக்ஸ்பியரும் என்ற தலைப்புகளில், உலக இலக்கியவாதிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நிகழ்த்தி நூல்கள் சமைத்தார் எஸ்.இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.). இந்திய இலக்கியங்களுடன் ஒப்பிட்டும் கம்பராமாயணம் சிந்திக்கப்பெற்றது.
அதிலும் குறிப்பாக, மூலநூல் தந்த வான்மீகியோடு கம்பனும் ஒப்பிடப்பெறுகிறான். அதில் மூலங்கடந்த முழுமை நூலாகத் தனித்தன்மைக்குரிய காவியமாக இதனை அடையாளங்காணுகின்றனர் அறிஞர்கள். வாதப்பிரதிவாதங்களுக்கு இடையில் மொழியரசியலும் சூழ எழுகிறபோது, கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்க' கழகம் ஏறிய அறிஞர்கள் தம் கருத்துக்கு வலுச்சேர்க்கத் தம் முன்னோடிகள் தந்த பதிவுகளைத் தேடிப் படிக்கவும் பகிரவும் பதிவு செய்யவும் முனைந்தனர். 
அப்போது வ.வே.சு.ஐயரின் ஆக்கம் பேருதவி புரிகிறது. பாரதியின் வாக்கு ஊக்கம் தருகிறது. இவற்றுக்கு மத்தியில் அரவிந்தரின் ஆக்கமும் தேடப்படுகிறது. அதனைத் தமிழாக்கமும் செய்து பார்க்கிறார் நீதியரசர் மகராஜன். ஸ்ரீஅரவிந்தர்' என்று கையொப்பமிடும் மரபைத் தமிழாக்கி, திரு.அரவிந்தர்' என்று அவர் செய்த நேர்த்தி மிக அழகு. அந்த திரு அரவிந்த வாசகத்தைத் தன் கைப்படத் தனது எழுத்துத்தாளில் இரண்டுபக்கங்களில் பொறித்தும் வைக்கிறார்.
அவர் தம் கையெழுத்துப்பிரதியில் காணப்பெறும் வாசகங்கள் பின்வருமாறு: திரு அரவிந்தர் எழுதிய இந்தியப் பண்பாட்டின் அடிப்படை' என்ற நூலில் உள்ள சில வாசகங்களின் தமிழாக்கம். மகாபாரதக் கதைகளும் சிறப்பாக ராமாயணக் கதையும் நாடோடிப் பாடல்களாக இந்திய மொழிகளில் வெளிவந்துள்ளன. வங்காளத்தில் காசிராம் பாரத இதிகாசத்தை தெளிந்த உயர்ந்த நடையில் இயற்றியிருக்கிறார். கிருத்திபாஸ் ராமாயணத்தை உயிருள்ள வங்காளியில் படைத்திருக்கிறார். எளிமையான கவித்திறனோடும் வேகத்தோடும் இவ்விருவரும் எழுதியிருந்தபோதிலும், மூலத்திலுள்ள இதிகாச ஒய்யாரம் இவர்களுடைய நூல்களில் இல்லை. ஆனால், பிற்காலக் கவிஞர்கள் இருவர் மாத்திரம் உயிர்த்துடிப்புள்ள புதுப்படைப்புகளைப் படைத்து, மகோன்னதமான வெற்றி கண்டிருக்கிறார்கள். ராமாயணத்தை தமிழ்க்கவிஞர் கம்பர் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, சுயம்பான, சொந்தப் படைப்பாகப் படைத்திருக்கிறார். 
துளசிதாஸ் தன் புகழ்பெற்ற ராமாயணத்தின் மூலம் உணர்ச்சியும் வளமும் இதிகாசப் பெருமிதம் வாய்ந்த ஒரு பெருநூலைத் தந்திருக்கிறார் - எஸ்.மகராஜன்.
மகான் ஸ்ரீஅரவிந்தரால், The Foundations of Indian Culture  என்ற தலைப்பின் கீழ் எழுதப்பெற்ற கட்டுரையின் ஒரு மொழிபெயர்ப்பாக இது இருக்கக்கூடும். இறவாப்புகழுடைய இலக்கியம் தந்த கம்பன் எப்படியெல்லாம், யார் யாருக்குள்ளெல்லாம் புகுந்து இயங்கி எழுத வைத்திருக்கிறான், இயங்க வைத்திருக்கிறான் என்பதை எண்ணும்போது அவன் ஒரு யுகசந்தியாக ஒளிர்வதைத் தரிசிக்க முடிகிறது.
இந்தத் தேடலை இன்னும் தொடர்வோர்க்குக் காத்திருக்கிறாள் தமிழன்னை. அனைத்துத் தளைகளிலிருந்தும் மானுட ஆன்மா விடுதலை எய்தக் கம்பனையும் தமிழையும் துணைக்கொண்ட வரலாறு இன்றும் என்றும் நன்றியோடு நினைவுகூரத்தக்கதுதானே!
(ஆகஸ்ட் 15 - இந்திய 
விடுதலைத்திருநாள் மற்றும் 
ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com