ஏன் இந்த அவநம்பிக்கை?

மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் . மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.


மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் . மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 2019 பொதுத்தேர்தலுக்கு வாக்குச்சீட்டு நடைமுறைதான் தேவை' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. 
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ள போதிலும், இதற்கு ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதமாக இல்லை என்ற காரணத்தைக் கூறாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதில் தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்கமுடியாது.
தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.மேலும், அதில் தில்லுமுல்லு செய்ய வேண்டும் எனில் மனிதர்களால்தான் அதைச் செய்யமுடியும். பலத்த பாதுகாப்புடன் அவை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நிச்சயமாக அதற்கு சாத்தியமில்லை.
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம் நாட்டிலேயே அரசு நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. மேலும், அவற்றில் அவ்வப்போது பாதுகாப்பு உபகரணங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் மாற்றியமைக்கப்படுகின்றன. தற்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தால் அதன் செயல்பாடே நின்றுவிடும். ப்ளூ டூத்' மற்றும் வைஃபை' மூலம் தில்லுமுல்லு செய்யலாம் என்பதும் தவறான குற்றச்சாட்டு ஆகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்வது என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு. எனவே, முன்கூட்டியே தில்லுமுல்லு செய்து வைத்து குறிப்பிட்ட இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்புவது என்பது இயலாது.
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கமே தில்லுமுல்லுகள் நடக்கக்கூடாது என்பதுதான். மேலும், தேர்தல் செலவினங்களைக் குறைப்பதும் மோசடிகளைத் தடுப்பதுமே இவற்றை அறிமுகப்படுத்தக் காரணங்களாகும்.
வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் இருந்தபோது கள்ள வோட்டுப் போடுதல், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் நடந்தன. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இவை முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டன. மேலும், இது எளிதான நடைமுறை என்பதால் அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களிக்க முடிந்தது. தேர்தலில் தோற்றுவிடுவோர் சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாகச் செயல்படவில்லை என்பது. 
இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளைப் பார்த்து வியந்துபோன வெளிநாடுகள் பலவும் நமது நாட்டின் மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பின்பற்றலாமா என்று ஆலோசனை செய்து வரும் நிலையில், மீண்டும் நாம் வாக்குச்சீட்டுமுறைக்கு மாற வேண்டும் என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் பழைய பல்லவியைப் பாடத்தொடங்கியுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்' என்று தேர்தல் ஆணையம் அறைகூவல் விடுத்தும் எந்த அரசியல் கட்சியும் அதனை ஏற்று நிரூபிக்க முன்வரவில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அத்தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. கூட்டணியே ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறை கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது மாநாட்டுக் கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்துகொள்ள வாக்கு ஒப்புகைச் சீட்டு' வசதி அறிமுகப்படுத்திய போதிலும் அது வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தாது என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
திரிணமூல், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், சிவசேனை, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவையும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், அ.இ.அ.தி.மு.க., தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம் ஆகியவை இந்தக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை.
தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை எழுப்புகின்றன என்பதுதான் உண்மை. தேர்தலில் தங்கள் கட்சி ஜெயித்துவிட்டால் யாரும் இதைப்பற்றி பேசுவதில்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஐயம் தெரிவித்துள்ளநிலையில் தேர்தல் ஆணையம் அதன் செயல்பாடு குறித்து தெளிவுபடுத்தி வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் நில்லாமல் அவ்வப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வேண்டும்.
அரசியல் கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கை கொள்ளாமல், நேர்மையான பிரசாரத்தின் மூலம் தேர்தலைச் சந்திக்க முன்வர வேண்டும். தங்களைத் துதி பாடுபவர்களுக்கும் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துவிட்டு, தேர்தலில் தோற்ற பிறகு இதுபோன்ற புகார்களை எழுப்புவது நியாயமல்ல. அரசியல் கட்சிகள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com